Friday, December 12, 2025

CROCODILE KINGDOM(2025)-ஆங்கிலம்/தமிழ் - சினிமா விமர்சனம் (ட்ரெண்டிங் அட்வென்ச்சர் திரில்லர்)@யூ ட்யூப்

                             

போஸ்டர் டிசைன் ,பிரமோஷன் எல்லாம் பார்த்தா ராஜ்மவுலி ,ஷங்கர் படம் மாதிரி பிரம்மாண்டமா இருக்கு,உள்ளே போய் பார்த்தா இராமநாராயணன் படம் மாதிரி இருக்கு.

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி பெரிய கோடீஸ்வரி.அவளுக்கு ஒரு தம்பி.அவன் சும்மா இருக்க மாட்டாம ஆராய்ச்சி பண்றேன் ,சாகசம்  பண்றேன் என சொல்லி நரகத்தீவு என்று அழைக்கப்படும் முதலைகள் நிறைந்த தீவுக்குப்போறான்.ஆள் போனது போனதுதான்.அட்ரசையே காணோம்.எந்தத்தகவலும் இல்லை.நான்கு பேர் கொண்ட குழுவுடன் அவனைத்தேடி நாயகி கிளம்பறா.


வில்லன் ஒரு விஞ்ஞானி.முதலைகளின் ரத்தத்தில் இருந்து புற்று நோய்க்கான மருந்து கண்டு பிடிக்க ஒரு தீவில் ஆராய்ச்சிக்கூடம் அமைக்கிறான்.பிரம்மாண்டமான முதலைகளை உருவாக்குகிறான்.பெரிய தாதா வந்ததும் சின்னச்சின்ன ரவுடிகள் எல்லாம் அப்ஸ்கேண்ட் ஆவது போல அந்த ஏரியாவில் இருந்த மற்ற முதலைகள் எல்லாம் வேற ஏரியாவுக்குக்கிளம்புதுஙக.


நாயகன் பயாலஜி படித்தவன்.அந்த நரகத்தீவில் பயணம் செய்யும்போது தன் காதலியை இழந்தவன்.அந்தத்தீவில் இருக்கும் ஆபத்துக்கள் ,சூட்சுமஙகள் எல்லாம் அவனுக்கு அத்துபடி.


நாயகனைத்தன் டீமில் சேர்த்துக்கொண்டால் தன் தம்பியைக்கண்டுபிடிக்க உதவியாக இருக்கும் என நாயகி நினைக்கிறாள்.நாயகனிடம் உதவி கேட்கிறாள்.ஆரம்பத்தில் பிகு செய்த நாயகன் பின் நாயகியுடன் வர ஒத்துக்கொள்கிறான்

இப்போ நாயகன்,நாயகி ,நாயகியின் டீம் ஆட்கள் 4 பேர் ஆக மொத்தம் 6 பேர் அந்தத்தீவுக்குக்கிளம்பறாஙக


அந்தத்தீவில் அவஙக சந்தித்த ஆபத்துக்கள் ,சிரமஙகள் தான் மொத்தக்கதையுமே.நாயகியின் தம்பி ,வில்லன் இருவரையும் சந்திக்கும் அந்த டீம் இறுதியில் உயிருடன் மீண்டார்களா?என்பதை யூ ட்யூபில் காண்க.

நாயகன் ஆக நடித்தவர் ஓவர் பில்டப் செய்தாலும் போகப்போக அடக்கி வாசிக்கிறார்.அனைவரையும் காப்பாற்றுகிறார்.

நாயகி ஆக வருபவர் கொள்ளை அழகு என்று சொல்ல முடியாவிட்டாலும் படத்தில் இருக்கும் ஒரே பெண் அவர் தான் என்பதால் வேறு வழி இல்லாமல் ரசிக்க வேண்டியதாய்ப்போய் விட்டது.

வில்லனாக வருபவர்  சின்னப்பையன் மாதிரி இருக்கிறார்.பயமும் வரவில்லை.பரிதவிப்பும் வரவில்லை.

இந்த மாதிரி அட்வென்ச்சர் கதையில் பயந்த சுபாவம் கொண்ட காமெடியன் நிச்சயம் இருப்பான்.மொக்கைக்காமெடி செய்கிறான்



சபாஷ்  டைரக்டர்

1 ஒரு காடு ,ஒரு செட்டிங் லேப், 10 பேர் அவ்ளோ தான் ஒரு படம் .வெரி லோ பட்ஜெட்

2  அட்டைப்பூச்சிகள் மனிதன் உடம்பில் ஊடுருவுவது, மிஷின் கன்னை விழுங்கும் செடிகள் என குழந்தைகள் ரசிக்கும் அம்புலிமாமா சீன்கள் தேவலை


  ரசித்த  வசனங்கள் 

1 எல்லா ஆராய்ச்சிகளிலும் விலஙகுகளுக்கு அநீதி இழைக்கப்பட்டுதான் வருகிறது

2 கேன்சர் மெடிசனை நீ பணக்காரஙகளுக்கு மட்டும் தானே விற்பே? ஏழைகளுக்கு உதவ மாட்டியே?

ஒரு பிஸ்னெஸ்மேன் போட்ட முதலீட்டுக்கு லாபம் பார்க்க விரும்புவானா? தான தர்மம் செய்வானா?



 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 என்னதான் லோ பட்ஜெட் படமா இருக்கட்டும்.அவ்ளோ பெரிய ஆராய்ச்சிக்கூடத்தில் ஒரே ஒரு ஆள் மட்டும் தான் இருப்பானா?

2 முதலையின் பலம் நீர்நிலையில் ,யானையின் பலம் நிலத்தில் என பழமொழியே உண்டு.ஆனால் இதில் நிலத்தில் பல்லி மாதிரி சர்வ சாதாரணமாக முதலைகள் வாக்கிங் போகுதுங்க

3 மனிதனை விட விலங்குகளுக்கு மோப்ப சக்தி அதிகம்.இறந்தவளைப்போல நாயகி நடித்து முதலையை ஏமாற்றுவது காதில் பூ.



 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - க்ளீன் யு



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - .குழந்தைகள் பார்க்க வேண்டிய அம்புலிமாமா,பாலமித் ரா ,கதைப்படம்.75 நிமிச சின்னப்படம் தான்.ரேட்டிங்க் 2/5

0 comments: