Thursday, September 03, 2015

சாமியாரின் ஆள்மாறாட்ட வழக்கும், லீலைகளும் -பட்டுக்கோட்டை பிரபாகர்

வழக்கமாக ஒருவர் இன்னொரு வராக நடித்து ஆள் மாறாட்டம் செய்வார். பல ஆண்டுக்கு முன்பு இந்தியாவில் ஒரு வழக்கில் குமார் என்கிற ஒருவர் ‘நான்தான் குமார்’ என்று நிரூபிக்க பல வருடங்கள் நீதிமன்றங்களில் போராடினார்.
1909-ம் வருடம் அந்த சம்பவம் நடந்தது. அப்போது இந்தியாவுடன் சேர்ந்திருந்த பங்களாதேஷில் டாக்கா நகரத்துக்கு அருகே 2,300 கிராமங்களை உள்ளடக்கிய பாவல் என்கிற ஜமீன் இருந்தது. அதன் தலைநகர் ஜெய்தேப்பூர்.
3 ராஜகுமாரர்கள் அந்த ஜமீனை நிர்வகித்தார்கள். அதில் மோஜோ குமார் என்று அழைக்கப்பட்ட இரண்டாவது ராஜகுமாரன்தான் நம் கதாநாயகன். குமாருக்கு மிருகங்களை வேட்டையாடுவதும், பெண்களோடு உல்லாசமா க இருப்பதும்தான் வேலை. பிபாவதியை திருமணம் செய்தபிறகும் ஆட்டம் குறையவில்லை.
மலைவாசஸ்தலமான டார்ஜி லிங்கில் ஓய்வெடுக்க குமாரை அழைத்தான் பிபாவதியின் அண்ணன் சத்யன். அங்கு சென்ற ஓரிரு நாள் கழித்து குமார் இறந்துவிட்டதாக பாவல் ஜமீனுக்கு தகவல் வந்தது. மறுநாள் காலை டார்ஜிலிங்கில் குமாரின் உடலை சுடுகாட்டில் எரித்தார்கள். பிபாவதி அரண்மனையை விட்டு வெளியேறி தன் அண்ணனுடன் சென்றாள்.
அடுத்த சில வருடங்களில் மற்ற ராஜகுமாரர்களும் இறந்து போனார்கள். 3 பேருக்குமே வாரிசு இல்லாததால் பாவல் ஜமீனின் நிர்வாகப் பொறுப்பை பிரிட்டிஷ் அரசாங்கம் எடுத்துக் கொண்டது.
12 வருடங்கள் கழித்து 1920-ம் வருடம் டாக்காவுக்கு ஒரு சாமியார் வந்தார். அவர் இறந்துபோன ராஜகுமாரன் குமார் சாயலில் இருப்பதாக மக்கள் பேசிக் கொண்டார்கள். இதைக் கேள்விப்பட்ட குமாரின் சகோதரி ஜோதிர்மயி சாமியாரை தன் வீட்டுக்கு அழைத்தாள்.
நடை, உடல் மொழி, பேச்சு எல் லாமே குமாருடைய சாயலோடு ஒத்திருந்தது. சாமியாரிடம் அவரைப் பற்றி கேட்டதற்கு, ‘‘டார்ஜிலிங் அருகில் ஒரு காட்டில் நினைவில்லாமல் கிடந்த என்னை தரம்தாஸ் என்கிற சாது காப்பாற்றி தன் சீடராக்கிக் கொண்டார், அதற்கு முன்பான என் வாழ்க்கை நினைவில் இல்லை. கடந்த 12 வருடங் களாக குருவோடு பல ஊர்களுக்கு போய்வந்தேன்’’ என்றார்.
இறந்துபோனதாக நம்பப்பட்ட குமார்தான் அந்த சாமியார் என்று ஜோதிர்மயியும், ஊர் மக்களும் நம்பி னார்கள். டாக்காவுக்குத் திரும்பிய சாமியாருக்குக் கொஞ்சம் கொஞ்ச மாக பழைய நினைவுகள் வரத் தொடங்கின.
சாமியார் மீண்டும் ஜெய்தேப்பூருக்கு அழைக்கப்பட்டார். மக்கள் கூட்டத்தின் முன் நிறுத்தப்பட்ட சாமியாரை பலரும் கேள்விகள் கேட்டார்கள். சின்ன வயதில் தன்னை வளர்த்த தாதி, அரண்மனை பணியாளர்களின் பெயர்களை எல்லாம் சரியாக சொன்னார்.
எல்லோரும் சாமியார்தான் ராஜ குமாரன் என்று நம்பினார்கள். ஆனால், அராசாங்கத்திடம் இருந்து சொத்துக்களை அடைய சாமியார் நடத்தும் நாடகம் என்றார்கள் குமாரின் மனைவி பிபாவதியும், சத்யனும்.
மாவட்ட கலெக்டர் சாமியாரிடம் விசாரணை நடத்தி, குமாரின் உடல் எரிக்கப்பட்டதற்கு சரியான சாட்சிகள் இருப்பதால் ‘இவர் ராஜகுமாரன் இல்லை’ என தீர்ப்பு வழங்கினார்.
சாமியார் நம்பிக்கை இழந்து கொல்கத்தா சென்று தொழில் செய்ய ஆரம்பித்துவிட்டார். தாரா தேவி என்கிற பெண்ணை திருமணமும் செய்துகொண்டார். ஆனால் அவர் மேல் நம்பிக்கை கொண்ட ஆதர வாளர்கள் சேர்ந்து நிதி திரட்டி, பெரிய வக்கீல் மூலமாக கோர்ட்டுக்குப் போனார்கள்.
டாக்கா நீதி மன்றத்தில் 1933-ம் வருடம் இந்த வழக்கின் விசாரணை தொடங்கியது. வழக்கு 3 ஆண்டுகள் நடந்தது. நிறைய சாட்சிகள் விசாரிக் கப்பட்டனர். மருத்துவர்கள் சாமியாரைப் பரிசோதித்தார்கள். புகைப்பட நிபுணர் கள், சிலை வடிப்பவர்கள் என்று பலரும் குமாரின் பழைய புகைப்படங்களை வைத்து சாமியாருடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்தார்கள்.
குமாரின் ஆசை நாயகியாக இருந்த எலோகேஷி நீதிபதியிடம் குமாரின் அந்தரங்க உறுப்பில் இருந்த மச்சம் பற்றி சொன்னாள். சாமியாரை நீதிபதி சோதித்ததில் அந்தக் குறிப்பு சரியாக இருந்தது.
குமார் எப்படி யானை மேல் ஏறு வார்? எப்படி உண்பார் போன்ற கேள்விகளுக்கு சாமியார் சரியான பதில்களைச் சொன்னார். பிபாவதியும் சத்யனும் குமார் ஆங்கிலத்தில் எழுதத் தெரிந்தவர் என்று சில கடிதங்களை சமர்ப்பித்தனர். சாமியார் அதை மறுத் தார். பிறகு அந்தக் கடிதங்கள் போலி யாகத் தயாரிக்கப்பட்டவை என்று கண்டுபிடிக்கப்பட்டது. சாமியாரின் குருவும், மற்ற சீடர்களும் விசாரிக்கப் பட்டனர். டார்ஜிலிங் அருகே ஒரு காட்டில் நினைவு தவறிய நபரை கண்டெடுத்த நிகழ்வை அவர்கள் ஒரே மாதிரி சொன்னார்கள்.
குமார் இறந்த மறுநாள் சுடுகாட்டில் எரிக்கப்பட்டபோது முகத்தை யாரும் பார்க்கவில்லை என்றும், அது துணி யால் மூடப்பட்டிருந்தது என்றும் பலர் சாட்சி சொன்னார்கள்.
நீதிபதி தன் இறுதித் தீர்ப்பில் சாமியார் தான் ராஜகுமாரன் என்று சொன்னார். கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் பிபாவதி அப்பீல் செய்தார். 3 நீதிபதி களைக் கொண்ட பெஞ்ச் விசாரித்தது. ஒரு நீதிபதி சாதகமாகவும், ஒரு நீதிபதி பாதகமாகவும் தீர்ப்பு சொல்ல.. தலைமை நீதிபதி இங்கிலாந்தில் இருந்து தபாலில் அனுப்பிய தீர்ப்பு மக்கள் முன்னிலையில் படிக்கப்பட்டது. அவர் சாமியாருக்கு ஆதரவாக தீர்ப்பு தந்திருந்தார்.
அப்போது இந்தியாவில் சுப்ரீம் கோர்ட் இல்லாததால் வழக்கு லண்டனில் இயங்கிய பிரிவி கவுன்சிலுக்குச் சென்றது. அங்கே அப்பீல் தள்ளுபடி செய்யப்பட்டது.
தீர்ப்பு வந்த தினம் குமார் கோயி லுக்குச் சென்றார். அங்கே திடீரென்று அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. அடுத்த 2 நாட்களில் இறந்து போனார்.
குமாரின் சொத்துக்களுக்கு பிபாவதி சொந்தம் கொண்டாட முடியாது என்று, குமாரின் 2-வது மனைவி தாரா தேவி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் சொத்துக்கள் இரண்டு மனைவிகளுக்கும் சரிசமமாக ஒப்படைக் கப்பட வேண்டும் என்று தீர்ப்பானது. ஆனால் பிபாவதி தன் பங்காக வந்த சொத்துக்களை வேண்டாம் என்று சொல்லிவிட்டார். பிபாவதி சாகும் வரை சாமியாரை குமாராக ஏற்கவேயில்லை.
சரி, டார்ஜிலிங்கில் குமார் இறந்த இரவில் என்னதான் நடந்தது?
அப்போது சத்யனுடன் இருந்தவர்கள் பிறகு சொன்ன சம்பவம் இதுதான்: குமாரின் சொத்துக்கு சத்யன் ஆசைப் பட்டு உணவில் விஷம் கலந்து குமாருக்குக் கொடுத்தார்கள். அவசர மாக அன்றிரவே உடலை மயானத் துக்கு எடுத்துச் சென்றார்கள். திடீ ரென்று புயலுடன் கூடிய மழை வர, பாடையை கீழே வைத்துவிட்டு அருகில் இருந்த குடில்களில் ஒதுங்கி னார்கள். மழை நின்றதும் வந்து பார்த்தால் குமாரின் உடலை அங்கு காணவில்லை.
இரவோடு இரவாக வேறு ஒரு உடலைத் தேடிப் பிடித்து முகம் தெரியாமல் துணியைச் சுற்றி அதுதான் குமாரின் உடல் என்று சொல்லி மறுநாள் சுடுகாட்டில் எரித்துவிட்டார்கள்.
கொடுக்கப்பட்ட விஷத்தால் நினைவு தப்பிய குமார் மழையில் எங்கோ அடித்துச் செல்லப்பட்டு தரம்தாஸ் என்ற சாதுவிடம் கிடைத்திருக்கிறார்.
தன்னை கொலை செய்ய முயன்றதாக குமார் ஒரு புகார் கொடுத்திருந்தால், தனியாக ஒரு குற்ற வழக்கு நடந்து குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டிருப்பார்கள். ஜமீன் சொத்துக்களை அனுபவிக்காமல் தன் 63-வது வயதில் குமார் இறந்துவிட்டாலும், ஜமீனின் ராஜா நானே என்று போராடி உலகத்துக்கு நிரூபித்துவிட்டார்.
- வழக்குகள் தொடரும்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: [email protected]


நன்றி - த இந்து

1 comments:

P.A.A.PRAGASAM said...

இது உண்மை கதை....