Sunday, September 06, 2015

பாயும் புலி (2015) - சினிமா விமர்சனம்

நடிகர் : விஷால்
நடிகை :காஜல் அகர்வால்
இயக்குனர் :சுசீந்திரன்
இசை :டி.இமான்
ஓளிப்பதிவு :வேல்ராஜ்
மதுரையில் பெரிய பெரிய தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்து வரும் கும்பலுக்கு தலைவனாக பவானி என்பவன் செயல்படுகிறான். ஒருநாள் இந்த கும்பலை ஆனந்த் ராஜ் தலைமையிலான போலீசார் சுற்றி வளைக்கின்றனர். அப்போது நடக்கும் துப்பாக்கி சூட்டில் பவானி கும்பலை சேர்ந்த ஒருவன் கொல்லப்படுகிறான். அவனை கொன்ற எஸ்.ஐ., ஹரிஷ் உத்தமனை அடையாளம் கண்டு அவரை நடு ரோட்டில் தீர்த்துக் கட்டுகிறார் பவானி. பின்னர், அவரோகவே போலீசில் சென்று சரணடைகிறார்.  
போலீஸ் மீது ரவுடி கும்பல் தனது கொலை வெறி தாக்குதலை நடத்தியதையடுத்து, அந்த கும்பலை ஒழிக்க திருச்சியில் பணியாற்றும் விஷால் நியமிக்கப்படுகிறார். இந்த ஸ்பெஷல் ஆபரேஷனுக்காக தனது சொந்த ஊரான மதுரைக்கு வருகிறார் விஷால். மதுரையில் விஷால் குடும்பம் அப்பா, அம்மா, அண்ணன் சமுத்திரகனி என சந்தோஷமாக வாழ்ந்து வருகிறது. 

மதுரை வரும் விஷால், ரொம்பவும் பயந்த சுபாவம் கொண்ட காஜல் அகர்வாலை கண்டதும் காதல் வயப்படுகிறார். ஒருமுறை காஜல் அகர்வால் மூலமாக பவானி கும்பலை சேர்ந்த ஒருவனை விஷால் என்கவுன்டர் செய்கிறார். விஷால் போலீஸ் அதிகாரி என்பது தெரியாத காஜல் அகர்வால், விஷால் ஒருவனை கொலை செய்துவிட்டதாக இன்ஸ்பெக்டரான ஆனந்த்ராஜிடம் புகார் கொடுக்கிறார்.

அதேநேரத்தில், போலீஸ் நிலையத்திலிருந்து விடுதலையாகி வரும் பவானி, தனது கூட்டாளிகளை என்கவுன்டர் செய்த விஷாலை பழிவாங்க திட்டமிடுகிறார். அதன்படி, விஷாலுடன் சுற்றிக் கொண்டிருக்கும் காஜல் அகர்வாலை கடத்தி வைத்துக்கொண்டு, தன்னுடைய இடத்துக்கு விஷாலை வரவழைக்கிறார் பவானி. அங்கு வரும் விஷால் பவானி கும்பலில் உள்ள அனைவரையும் அடித்து துவம்சம் செய்து என்கவுன்டரும் செய்கிறார். 

கடைசியில் பவானியையும் கொன்று மதுரையில் நடக்கும் கடத்தல் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க எண்ணுகிறார். அப்போது, பவானி தன்னை கொன்றுவிட்டால் மட்டும் ரவுடித்தனம் நின்றுவிடாது. எனக்கும் மேல் ஒருத்தன் இருக்கிறான் என்று சொல்கிறார். அவன் பயத்தில் உளறுகிறான் என்று அப்போது எண்ணி அவனை சுட்டு கொன்று விடுகிறார் விஷால்.

ஆனால், மறுநாளே ஒரு தொழிலதிபர் கொலை செய்யப்படுகிறார். அப்போது, பவானி சொன்னது விஷாலுக்கு நினைவு வருகிறது. அதுவரை பணியில் பொறுப்பேற்காமல் இருக்கும் விஷாலை, அசிஸ்டெண்ட் கமிஷனராக பொறுப்பேற்று, அந்த கும்பலுக்கு தலைவன் யார் என்பதை கண்டறிய மேலிடம் உத்தரவிடுகிறது. பின்னர், விஷால் அந்த பொறுப்பை ஏற்று, அந்த கும்பலை ஒழிக்க முனைப்புடன் இறங்குகிறார். இறுதியில் அந்த கும்பலுக்கு யார் தலைவன் என்பதை விஷால் கண்டுபிடித்து ரவுடியிசத்தை ஒழித்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை. 

விஷால் இரண்டாவது முறையாக போலீஸ் வேடம் ஏற்று நடித்திருக்கும் படம் இது. ஆக்ஷன் ஹீரோவாக இவர் சண்டை போடும் காட்சிகள் எல்லாம் மிரட்டலாக இருக்கிறது. போலீஸ் வேடம் என்றாலும், இவர் நிறைய காட்சிகளில் சாதாரண உடையிலேயே வலம் வந்திருக்கிறார். மற்றபடி, போலீஸுக்குண்டான மிடுக்குடன் கம்பீரமாக இருக்கிறார். காஜல் அகர்வாலுடனான ரொமான்ஸ் காட்சியிலும் அசர வைக்கிறார்.

காஜல் அகர்வால் ரொம்பவும் பயந்த சுபாவம் கொண்டவராக நடித்திருக்கிறார். அவருக்கு இந்த கதாபாத்திரம் ரொம்பவுமே பொருந்தியிருக்கிறது. சாலையை கடக்கும்போதுகூட பயத்தில் யாரையாவது துணைக்கு அழைத்துச் செல்லும் அளவுக்கு பயந்து நடுங்கும் இவரது நடிப்பு பலே. 

விஷாலின் அண்ணனாக வரும் சமுத்திரகனி, சாந்தமானவராகவும், ஆக்ரோஷமானவராகவும் வருகிறார். பிற்பாதியில் இவரை வைத்துத்தான் படத்தின் கதை முழுவதும் நகர்கிறது. இவருடைய கதாபாத்திரத்தில் இயக்குனர் ஒரு டுவிஸ்ட் வைத்திருப்பதும் சிறப்பு. கான்ஸ்டபிளாக வரும் சூரி வரும் காட்சிகளில் கலகலப்பு. இவருக்கான காட்சிகள் குறைவு என்பது மட்டும் வருத்தம். ஹரிஷ் உத்தமன், ஆனந்த்ராஜ், ஜெயப்பிரகாஷ், முரளி சர்மா என படத்தில் நிறைய பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் தங்கள் கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார்கள். 

போலீஸ் மீது கை வைத்தால், ஒருவன் என்ன நிலைமைக்கு ஆளாவான் என்பதை மையப்படுத்தி இப்படத்தை இயக்கியிருக்கிறார் சுசீந்திரன். படத்திற்கு படம் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து இயக்கி வரும் சுசீந்திரன், இந்த படத்திலும் ஒரு புதுமையை புகுத்தியிருக்கிறார். சுசீந்திரனுக்கு போலீஸ் ஸ்டோரி கதை பண்ணுவது இதுதான் முதல்முறை என்றாலும், தனது முதல் முயற்சியிலேயே வெற்றி கண்டிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.

டி.இமான் இசையில் ‘சிலுக்கு மரமே’ பாடல் துள்ளல் போட வைக்கிறது. மற்ற பாடல்களும் கேட்கும் ரகம்தான். பின்னணி இசை மிரட்டலாக இருக்கிறது. வேல்ராஜ் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம். சண்டைக் காட்சிகளில் இவரது கேமரா சுழன்று சுழன்று விளையாடியிருக்கிறது. 

மொத்தத்தில் ‘பாயும் புலி’ அசுர பாய்ச்சல்.

நன்றி = மாலைமலர்

0 comments: