Friday, September 25, 2015

ஜிப்பா ஜிமிக்கி (2015)-சினிமாவிமர்சனம்

நடிகர் : கிரிஷிக் திவாகர்
நடிகை :குஷ்பு பிரசாத்
இயக்குனர் :ராஜசேகர் இரா
இசை :ரனிப்
ஓளிப்பதிவு :சரவண நடராஜன்
நாயகன் கிரிஷ்க் திவாகரும் நாயகி குஷ்பு பிரசாத்தும் ஒரே கம்பெனியில் வேலை செய்து வருகிறார்கள். கிரிஷ்கின் அப்பா நரேனும், குஷ்புவின் அப்பா மதியும் சிறுவயதிலிருந்தே நண்பர்கள். பெற்றோர்கள் நண்பர்களாக இருந்தாலும் இவர்களின் பிள்ளைகள் கிரிஷ்க் மற்றும் குஷ்பு இருவரும் எலியும் பூனையுமாக இருந்து வருகிறார்கள்.

இந்நிலையில் நாயகன், நாயகியின் பெற்றோர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்கள். ஆனால் கிரிஷ்க் மற்றும் குஷ்புவிற்கு இதில் விருப்பம் இல்லை. இருந்தாலும் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடக்கிறது. அப்பாவின் கட்டளையின்படி கிரிஷ்க் திருமணத்திற்கு சம்மதிக்கிறார். ஆனால், குஷ்பு சம்மதித்தாலும் விருப்பம் இல்லாமல் இருக்கிறார்.

இந்த சமயம் இவர்கள் வேலை பார்க்கும் இடத்தில் நண்பர் ஒருவருக்கு திருமணம் நடக்க இருக்கிறது. அதற்கு இருவரையும் மைசூருக்கு அழைக்கிறார். ஆனால் இருவரும் அங்கு சென்றால் சந்திக்க நேரிடும், சண்டை வரும் என்று செல்ல மறுக்கிறார்கள். கிரிஷ்க் மற்றும் குஷ்புவின் உடன்பிறந்தவர்கள், அங்கு சென்றால் இருவரும் சண்டைப் போடுவீர்கள். இதனை காரணமாக வைத்து திருமணத்தை நிறுத்தி விடலாம் என்று ஆலோசனை கூறுகிறார்கள்.

அதன்படி இருவரும் மைசூருக்கு செல்கிறார்கள். எதிர்பாராத விதமாக இருவரும் ஒரே பேருந்தில் பக்கத்து பக்கத்து சீட்டில் பயணம் செய்யும் சூழ்நிலை ஏற்படுகிறது. பேருந்தில் இருந்து இருவருக்கும் சண்டை ஏற்படுகிறது. செல்லும் வழியிலும் பல பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். இந்த சண்டை இருவருக்குள்ளும் காதலாக மாறுகிறது.

இந்நிலையில், குஷ்புவின் தாய்மாமன் இவர்கள் இருவரையும் சொத்துக்காக கொல்ல நினைக்கிறார். இறுதியில் தாய்மாமனிடம் இருந்து இருவரும் தப்பித்தார்களா? காதலில் சேர்ந்தார்களா? என்பதே மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் கிரிஷ்க் புதுமுகம் என்பதால் நடிக்க மிகவும் சிரமப்பட்டிருக்கிறார். ஆக்‌ஷன் ஹீரோவுக்குண்டான உடற்கட்டை பெற்று ஆக்‌ஷன் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் குஷ்பு பிரசாத் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார். நாயகனுடன் சண்டையிடும் காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கிறது. இன்னும் நடிப்பில் வலிமை படுத்திக் கொண்டால் தமிழ் சினிமாவில் நீடிக்கலாம்.

நாயகன் அப்பாவாக நடித்திருக்கும் ஆடுகளம் நரேன், பாசமான அப்பாவாக மனதில் பதிக்கிறார். படத்தில் சிறிதளவே வந்தாலும் சிறப்பாக நடித்திருக்கிறார் நான் கடவுள் ராஜேந்திரன். இவருக்கு கொடுக்கப்பட்டுள்ள பாடல் காட்சியும் சிறப்பாக இருக்கிறது.

நாயகன், நாயகிக்கும் உள்ள மோதலை ஒரு பயணமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் ராஜசேகர். படத்தில் சில காட்சிகள் ரசிக்கும்படியாக இருந்தாலும் சில காட்சிகள் சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

ரனிப் இசையில் பாடல் அனைத்தும் கேட்கும் படியாக உள்ளது. சரவண நட்ராஜின் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.

மொத்தத்தில் ‘ஜிப்பா ஜிமிக்கி’ பொலிவு குறைவு.

நன்றி-மாலைமலர்

0 comments: