Sunday, September 20, 2015

மண்ணுளி முதல் ஈமு வரை...!- மிரள வைக்கும் கொங்கு மோசடிகள் -4

ஆன்லைன் மோசடிகள்

யாருமே கண்டுகொள்ளாத மண்ணுளி பாம்பில் துவங்கி, நாக மாணிக்க கல், ரைஸ் புல்லிங் போன்ற மோசடிகளில் மட்டுமல்ல. ஆன்லைன் மோசடிகளின் துவக்கமும் கொங்கு மண்டலம்தான். "இந்த வாரம்... மோசடி வாரம்" எனச்சொல்லி விளம்பரம் செய்யும் அளவுக்கு மோசடிகள் அடுத்தடுத்து அரங்கேறி வந்தது கொங்கு மண்டலத்தில்தான். இதில் குறிப்பிட்டு சொல்லவேண்டியது ஆன் லைன் மோசடி. 

வேறு எந்த மோசடிகளும் சாதிக்காததை ஆன்லைன் மோசடி சாதித்தன. பல ஆயிரம் கோடி ரூபாயை ஆன்லைன் நிறுவனங்கள் மோசடி செய்திருப்பதாக காவல்துறை பகிரங்கமாகவே அறிவித்துவிட்டது. எப்படி பல ஆயிரம் கோடியை ஏமாற்ற முடியும் என்கிறீர்களா? சில ஆயிரங்களில் துவங்கி, பல ஆயிரம் கோடி வரை மக்களின் பணத்தை ஏப்பம் விட்ட ஆன்லைன் மோசடியைப் பற்றிதான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.

5 கேள்வி... 2 ஆயிரம்.... ஆன் லைன் மோசடியின் துவக்கம்

மிகப்பெரிய விருட்சம் சிறிய விதையில் இருந்து துவங்கி, மெல்ல மெல்ல செடியாக, மரமாக வளர்வதை போலத்தான் ஆன் லைன் மோசடியும். இமெயில் என்பது அனைவரிடமும் அறிமுகமாயிராத காலகட்டம் அது. 10 ல் ஒருவரிடம் இமெயில் கணக்கு இருக்கலாம். அப்போது அந்த இமெயில்களுக்கு 'கேள்விக்கு பதில் சொன்னால் பரிசு' என்ற அறிவிப்போடு ஒரு மெயில் வரும். 

உங்களுக்கு 5 கேள்வி கேட்கப்படும். அதற்கு நீங்கள் சரியான பதில் சொன்னீர்கள் என்றால் உங்களுக்கு 2 ஆயிரம் பரிசு. ஆனால் அதற்கு முன்னர் 10 ஆயிரம் ரூபாய் டெபாசிட் கட்ட வேண்டும்' என அழைத்தது அந்த இமெயில். டெல்லியில் தலைமை அலுவலகம் இருப்பதாக  சொல்லி, கோவையில் அலுவலகத்தை துவக்கியது அந்த ஆன்லைன் நிறுவனம். 

மெயிலை பார்த்து ஏமாந்த சிலர் மட்டும், அங்கு சென்று டெபாசிட் கட்டினர். அவர்களுக்கு கேள்விகள் அனுப்பப்பட்டன. அந்த கேள்விகளுக்கு குழந்தைகள் கூட எளிதில் பதில் சொல்லிவிடலாம்; அவ்வளவு எளிதானவை. பதில் அனுப்பிய உடன், அவர்கள் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டது. இது போதாதா... டெபாசிட் பணம் குவிந்தது. பலர் பல முறை வெவ்வேறு பெயர்களில் 10 ஆயிரம் கட்டி கேள்விகளை வரவழைத்துக்கொண்டனர். ஓரிரு வாரங்களில் பணம் வருவது முற்றிலுமாய் நின்று போய் விட்டது. 

கோவையில் இருந்த அலுவலகம் மூடப்பட்டது. அப்புறம் என்ன 'பணம் ஸ்வாகா' தான். இந்த மோசடியில் மட்டும் 4 ஆயிரம் பேர் 4 கோடியை ஏமாந்ததாக சொல்கிறது போலீஸ் புள்ளிவிவரம். வழக்கில் சிக்கியதென்னமோ ஏஜென்டுகள்தான். 'பாஸ் எங்கே...?'  என போலீஸ் அவர்களிடம் விசாரித்தால், டெல்லியிலோ, கொல்கத்தாவிலோ இருப்பதாக சொன்னார்கள். அந்த 'பாஸ்' களை இன்றுவரை தேடிக்கொண்டிருக்கிறது காவல்துறை. 

வீட்டில் இருந்தபடி சம்பாதிக்கலாம் - இது அடுத்த மோசடி...!

'உங்கள் வீட்டில் கம்ப்யூட்டர் இருக்கா? அப்போ நீங்க வீட்டில இருந்தே மாசம் 30 ஆயிரம் சம்பாதிக்கலாம்' என வீட்டு வாசலை தட்டிய டேட்டா என்ட்ரி விளம்பரம்தான் அடுத்த ஆன்லைன் மோசடி. நாங்க கொடுக்குற டேட்டாவை டைப் பண்ணி தரணும். ஒரு வரிக்கு இத்தனை ரூபாய். மாசம் இவ்வளவு சம்பாதிக்கலாம்'னு சொல்ல ஏகப்பட்டவங்க விண்ணப்பிச்சாங்க. இதுக்காக கடனை வாங்கி கம்யூட்டர் வாங்கினவங்க எல்லாம் உண்டு. 'முதல்ல ரெண்டு மாசம் டிரெய்னிங், அதுக்கு அப்புறம் உங்களுக்கு வேலை' எனச்சொல்லி சில ஆயிரங்களை வாங்கி பயிற்சி கொடுப்பாங்க. டெபாசிட்டா சில ஆயிரங்களை வாங்கிக்குவாங்க. 

அதுக்கு அப்புறம் உங்களுக்கு சில காகிதங்கள்ல இருக்குறதை டைப் பண்ணி ப்ளாப்பியில் போட்டு கொடுக்கச்சொல்வாங்க. முதல்ல பணம் கட்டுனவங்களுக்கு சில வாரங்கள், சில ஆயிரங்கள் பணம் வர ஆரம்பிக்கும். அதுதான் அவங்க முதலீடு. அதுக்கு அப்புறம் நினைச்சு பாக்க முடியாத அளவுக்கு டெபாசிட் தொகை அவங்களுக்கு குவிஞ்சது. பலர் கடனில் கம்ப்யூட்டர் வாங்கி, டெபாசிட் கட்டி வேலை பார்க்க ஆரம்பிச்சாங்க.

ஆனா கொஞ்ச நாள்ல அவங்க கொடுத்த வேலைகளுக்கு பணம் ஏதும் வரலை. ஆனாலும் வேலை மட்டும் வந்துட்டே இருந்துச்சு. 'நம்ம பணம் எங்கேயும் போகாது.. அதுதான் வேலை வருதே.. மொத்தமா வாங்கிக்கலாம்!' என தொடர்ச்சியாக வேலை செய்தார்கள். ஆனால் பணம் வராமல் போகவே...  சிலர் கேள்வி கேட்க ஆரம்பிச்சாங்க.

கேள்வி கேட்டவங்களுக்கு 'உங்கள் வேலை சரியில்லை. நீங்க சென்னை ஆபீஸ் வந்து பாருங்க' என்று மட்டும் பதில் வரும். படிப்படியாக எல்லோருக்கும் வேலை நிறுத்தப்படும்போதுதான் எல்லோரும் ஏமாற்றப்பட்டதே தெரியவந்தது. அப்புறம் என்ன பலகோடி ரூபாய் அம்போதான்.

இதில் வேலை தேடியவர்கள் மட்டுமல்ல. நல்ல வேலையில் இருந்தவர்கள் கூட,  'வீட்டில் இருந்தே பணம் சம்பாதிக்கலாங்கறப்ப  எதுக்கு ஆபீஸ் போயிட்டு..?' என வேலையை விட்டு ஏமாந்தவர்கள் எல்லாம் உண்டு. இதில் டெபாசிட் தொகையாக ஒரு லட்சம் வரை கட்டியவர்களும் இருக்கிறார்கள்.

விளம்பரத்தை க்ளிக் செய்தால் பணம்?

ஆன்லைன் மோசடியின் அடுத்த கட்டம்தான் இது. குறிப்பிட்ட இணைய தளத்தில் உள்ள விளம்பரங்களை க்ளிக் செய்து பார்த்தால் உங்களுக்கு ஒவ்வொரு முறையும் பணம் வரும் என சொல்லப்பட்டது. 'இன்டர்நெட்ல ஒரு மணி நேரம் வேலை செஞ்சா போதும்.. மாசம் 6,000 ரூபாய் சம்பாதிக்கலாம்'னு கவர்ச்சிகரமான விளம்பரம் மூலம் இது அறிமுகமாச்சு. 

இதை நம்பி அந்த வெப் சைட்டுக்கு போனா, இவ்ளோ பணம் கட்டுங்கனு சொல்லி சிரிக்கும் அந்த சைட். அதுக்கு அப்புறம் அது வேற வெப்சைட் லிங்குக்கு போகும். அங்கேயும் கொஞ்சம் பணம் கட்டணும். 20 ஆயிரம் வரைக்கு நீங்க கட்டுனா, உங்களுக்கு தனி பேஜ் கிரியேட் பண்ணிக்கொடுப்பாங்க. அதுல வர்ற விளம்பரங்களை க்ளிக் பண்ணா. பணம் தருவோம்னு சொன்னாங்க. 

முதலில் மாசம் சில ஆயிரங்கள் வந்துச்சு. இதை நம்பி நிறைய பேர் டெபாசிட் பண்ண, அவ்வளவுதான் அந்த வெப்சைட் நிரந்தரமாக மூடப்பட்டது.

'டெபாசிட் கட்டு... கடனை வாங்கு!'

தொழில் அபிவிருத்திக்கு கடன் வேண்டுமா? குறைந்த வட்டியில் கடன் தருகிறோம் எனச்சொல்லி மோசடி செய்வது அடுத்த ஆன்லைன் மோசடி. உங்களுக்கு கடன் தேவை என்பதை அறிந்தால் யாராவது மூலம் ஒருவர் உங்களிடம் அறிமுகமாவார். உங்களுக்கு என்ன தேவை? அதன் விவரம் உள்ளிட்டவற்றை எல்லாம் தெரிந்து கொள்வார்கள். தொழில் சார்ந்த ஆவணங்களையும் அந்த நபர் சரிபார்ப்பார். வங்கி கணக்கு விவரங்களையும் கேட்டு பெற்றுக்கொள்வார். 

ஓரிரு வாரங்களுக்கு பின்னர் தொடர்பு கொள்வார். உங்களுக்கு 50 லட்ச ரூபாய் கடன் தொகை ஓகே ஆகியுள்ளது. 10 சதவீதம் அதாவது ரூ. 5 லட்சத்தை செலுத்தி கடன் தொகைக்கான செக்கை பெற்றுச்செல்லலாம் என்பார்கள். 5 லட்சம் டெபாசிட் செலுத்தினால், உங்களுக்கு செக் கிடைக்கும். ஆனால் அந்த செக் போலியானதாக இருக்கும். இப்படி பலரிடம் மோசடி நடக்க, மக்கள் உஷாராகி  விட்டனர். இதையடுத்து இதில் ப்ளான் பி'யை செயல்படுத்தியது மோசடி கும்பல்.

அதாவது, முன்னரைப்போலவே உங்களுக்கு 50 லட்சம் கடன் ஓகே ஆகியுள்ளது என்பார்கள். அப்போது உங்கள் கணக்கில் சில லட்சங்கள் வந்து விழும். 'உங்கள் கணக்கில் ரூ.4.40 லட்சம் அனுப்பியிருக்கிறேன். அதை எடுத்து வையுங்கள். நான் வந்து உங்கள் கடன் பணம் தருகிறேன்' என்பார்கள். அந்த பணத்தை நீங்கள் எடுத்து வைத்திருந்தால் அதை வாங்கிக்கொண்டு, 1.50 கோடிக்கான செக்கை கொடுப்பார்கள். 'நான் 50 லட்சம் தானே கேட்டேன். 1.50 கோடிக்கு கொடுத்திருக்கிறீர்களே...?' என கேட்டால், 'உங்கள் தொகையை எடுத்துக்கொண்டு மீத தொகையை என்னிடம் கொடுத்து விடுங்கள். இப்போதைக்கு எனக்கு சில லட்சம் தேவை' எனச்சொல்லி' அதை வாங்கி சென்று விடுவார்கள். 

அந்த செக்கை வங்கியில் செலுத்தினால்தான் அது போலி என்பதே தெரியவரும். முதலில் கணக்கில் செலுத்தப்பட்ட 4.40 லட்சமும் வேறு யார் கணக்கில் இருந்தோ உங்கள் கணக்குக்கு மோசடியாய் மாற்றப்பட்டிருக்கும். இப்போது பல லட்சங்களை இழந்து, மோசடி வழக்கில் நீங்கள் குற்றவாளியாகியிருப்பீர்கள். இது தான் அந்த மோசடி.

அரிசி, புளியும் ஆன்லைன்ல மோசடி செய்யலாம்

ஆன் லைன் மூலம் அரிசி, புளி, வேர்கடலை வாங்கி ஏமாற்றிய கதைதான் இது. பொள்ளாச்சியில் ஒரு மிகப்பெரிய குடோன் ஒன்று, பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்திடம், உங்களின் புளி, வேர்கடலை எங்களுக்கு தேவை. நாங்கள் கோவை அருகே உள்ள பொள்ளாச்சியில் மிகப்பெரிய விற்பனையாளர் எனச்சொல்லி, நிறுவனம், குடோன்களின் விவரம், படத்தை அனுப்பி வைத்தார்கள். முதலில் சிறிய ஆர்டர்களுக்கு பணம் சரியான நேரத்தில் சென்று விடும். 

நல்ல வாடிக்கையாளர் என்ற பெயரை எடுத்த பின்னர், பெரிய ஆர்டர் ஒன்றை கொடுத்தார்கள். நீங்கள் எங்கள் நிறுவனத்தை பார்த்து விட்டு, நம்பிக்கை இருந்தால் பொருட்களை அனுப்புங்கள் என வலை விரிப்பார்கள். அடுத்த ஓரிரு தினங்களில் பெங்களூரு நிறுவனத்தினர் இங்கு வந்து,  நிறுவனத்தை நேரில் வந்து பார்த்து, அதன் உரிமையாளரிடம் பேசி விட்டு செல்வார். 

நிறுவனத்தை பார்த்து விட்டு நம்பி, பெரிய அளவில் லோடு வந்து இறங்கும். ஆனால் அந்த நிறுவனத்துக்கு பணம் மட்டும் வந்து சேராது. அதுவரை தொடர்பு கொண்ட தொலைபேசி எண்கள் செயலிழந்திருக்கும். அந்த இடத்துக்கு போனால் அங்கு வேறு நபர் வேறு டீலிங் பேசிக்கொண்டிருப்பார். அவரிடம் விசாரித்தால் இந்த கம்பெனிக்கு நான்தான் ஓனர். உங்களை யாரோ ஏமாத்திட்டாங்க போல என்பார்கள். 

அடுத்த ஓரிருவாரங்களில் இன்னொரு நிறுவனம் வரும். பொருட்களை தரும். பின்னர் வேறு ஓனர் மாறி இருப்பார். இப்படி அரிசியையும், புளியையும் வாங்கி பல கோடி மோசடி செய்த வரலாறும் கொங்கு மண்டலத்துக்கு உண்டு. 

சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிப்பதுதான் இந்த மோசடி கும்பலின் கேப்டன் பாணி. பினாமி பெயரில் கம்பெனியை பதிவு செய்வர். ஆபீஸ் பிடித்து, போலி வங்கிக் கணக்குகளை துவங்கி, கம்ப்யூட்டர் தெரிந்த ஆளை பணிக்கு அமர்த்தி, கம்பெனியின் எம்.டி. என்கிற அந்தஸ்தில் பணக்கார நபரை நியமித்து, 'நீங்கள் ஆபீஸை பார்த்துகோங்க. மத்த வேலைகளை எல்லாம் (?) நான் பாத்துக்கிறேன்' என்பார். எந்த ஆவணங்களிலும் மோசடி செய்பவரின் பெயர் இருக்காது. 

மகாநதி படத்தின் கமல் கேரக்டர் மாதிரி ஒன்றுமே செய்யாமல் எம்.டி.யாக நியமிக்கப்பட்டவர் சிக்குவார். அல்லது தலைமறைவாகி வாழ வேண்டி வரும்.

பல ஆயிரம் கோடியை எட்டிய ஆன் லைன் மோசடி

அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ஃபைனான்ஸ் கம்பெனியில் பணத்தை போட்டு ஏமாந்த காலம் மலையேறிவிட்டது. இப்போது புதிது புதிதாக முதலீடுகளைப் பெற்று ஏமாற்றுகின்றனர். கோவை, திருப்பூர், கரூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்ட மக்களை குறிவைத்து நடைபெறும் இந்த மோசடியில் சுருட்டப்படுவது  பல ஆயிரம் கோடி ரூபாய்கள். 

அதில் சமீபத்தில் மிகப்பெரிய அளவில் ஏமாற்றப்பட்டது பாசி போரெக்ஸ் மற்றும் பைன் பியூச்சர் மோசடிகள்தான். உங்கள் முதலீடு வெளிநாட்டில் முதலீடு செய்யப்பட்டு, அதில் கிடைக்கும் லாபத்தில் ஒரு பங்கு உங்களுக்கு தரப்படுகிறது என்ற கணக்கில்,  நீங்கள் ஒரு லட்சம் கட்டினால், மாதம் 8,500 வீடு தேடி வரும். உங்களின் ஒரு லட்சம் பணம் அப்படியே இருக்கும். எப்போது வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம் எனச்சொல்லி,  பல ஆயிரம் கோடி முதலீடாக பெறப்பட்டது. 

முதலில் மாதா மாதம் கிடைக்கும் தொகை சரியாக வழங்கப்பட்டு வந்தது. முதலீடு பெருமளவில் சேர்ந்த பின்னர், அந்த தொகை நிறுத்தப்பட்டது. சில மாதங்களுக்கு பின்னர்தான், நம் பணம் அம்போ என்பது மக்களுக்கு தெரிந்தது. இன்றும் அந்த மோசடியில் ஏமாந்தவர்கள் போலீஸ் ஸ்டேஷனுக்கும் நீதிமன்றத்துக்கு நடந்து கொண்டிருக்கிறார்கள். முதலீட்டாளர்களும் கைதாகியிருக்கிறார்கள். ஆனால் மோசடி பணம்தான் என்ன ஆனது என்பதே தெரியவில்லை.

எந்த ஆவணத்திலும் உரிமையாளர்கள் விவரம் இல்லை. நாங்க பணம் வாங்கினோம்னு ஆதாரம் இருக்கா? என தில்லாக கேட்கிறார்கள் இவர்கள். பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் பாவமாய் முடங்கி கிடக்கிறார்கள். என்னமோ போங்க பாஸ்.

பாசி, பைன் பியூச்சர் மோசடி நடந்த பின்னராவது மக்கள் விழித்திருக்கலாம். ஆனா எங்கே விடுறாங்க. புதுசு புதுசா அறிமுகப்படுத்திடுறாங்களே... அடுத்தது விவசாயிகளுக்காக போடப்பட்ட பிரத்யேக ப்ளான். பருவமழை பொய்த்துப்போய் காடு கழனிகளை விற்றுவிடலாமா என்று விவசாயிகள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரம். அப்பொழுது அதிரடியாக கவர்ச்சிகரமாய் அறிமுகப்படுத்தப்பட்டது அந்த மோசடி. என்னானு கேட்கறீங்களா? அதை அடுத்த வாரம் பார்க்கலாம்.

- ச.ஜெ.ரவி

நன்றி-விகடன்

0 comments: