Monday, September 14, 2015

ஸ்ட்ராபெர்ரி - சினிமா விமர்சனம்

நடிகர் : பா.விஜய்
நடிகை :ஆவ்னி மோடி
இயக்குனர் :பா.விஜய்
இசை :தாஜ்நூர்
ஓளிப்பதிவு :மாறவர்மன்
ஆவிகளை பற்றி ஆராய்ச்சி செய்வது, நிறைவேறாத ஆசைகளுடன் இறந்துபோனவர்களின் ஆவிகளோடு பேசி, அவர்களது ஆசையை நிறைவேற்றி, அதன்மூலம் சம்பாதிப்பது போன்ற வேலைகளை செய்து வருகிறார் ஜோ மல்லூரி. இவருடைய ஆராய்ச்சிக்கு உறுதுணையாக இவரது மகளான நாயகி ஆவ்னி இருந்து வருகிறார். 

இந்நிலையில், அனு என்கிற ஆவி, ஒரு கால் டாக்சி டிரைவரிடம் தன்னை பழக்கப்படுத்தி விடுமாறு ஜோ மல்லூரியிடம் கேட்கிறது. அதன்படி, அந்த ஆவி சொல்லும் கால்டாக்சி நம்பரை குறித்து, அவரை தேடிப் பிடிக்கிறார். அவர்தான் நாயகன் பா.விஜய். 

பா.விஜய் கொஞ்சம் பயந்த சுபாவம் உள்ளவர் என்பதால், இவரை அந்த ஆவி நெருங்க பயப்படுகிறது. எனவே, அவருடன் நெருங்கி பழகி, அவருக்கு ஆவி பயத்தை போக்க நாயகி ஆவ்னியை அனுப்பி வைக்கிறார் ஜோ மல்லூரி. 

பா.விஜய்க்கு இந்த விஷயத்தை சொல்லாமலேயே அவருடன் நெருங்கி பழக ஆரம்பிக்கிறார் ஆவ்னி. பா.விஜய்யும் அவள் மீதான கிறக்கத்திலேயே அவள் சொல்வதையெல்லாம் செய்கிறார். ஒருகட்டத்தில் ஆவியுடன் பேசத் தயாராகிவிட்ட விஜய்யிடம், அந்த ஆவி நெருங்கி வருகிறது. 

அப்போதுதான் விஜய்க்கு, தான் நேரில் கண்ட ஒரு விபத்தில் இறந்துபோன ஒரு குழந்தையின் ஆவி என்பது தெரிய வருகிறது. அந்த ஆவி எதற்காக இவரை தேடி வந்தது? அந்த ஆவியின் ஆசையை பா.விஜய், தீர்த்து வைத்தாரா? அந்த குழந்தை எப்படி இறந்தது? என்பதை இறுதியில் திகிலுடன் சொல்லியிருக்கிறார்கள். 

பா.விஜய் பாடலாசிரியராக அறிமுகமாகி, பின்னர் நடிகராகி, இப்போது இயக்குனர், தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்திருக்கும் படம் இது. இயக்கத்தில் கவனம் செலுத்திய அளவுக்கு கொஞ்சம் நடிப்பிலும் கவனம் செலுத்தியிருக்கலாம். 

குறிப்பாக, ஆவிகளை பற்றி படம் எடுக்கும்போது, பயந்த சுபாவம் கொண்டவர்களின் நடிப்பு அற்புதமாக இருக்கவேண்டும். ஆனால், இதில் இவர் பயப்படும் காட்சிகள் எல்லாமே செயற்கையாக இருக்கிறது. மேலும், இவருடைய வசனங்களில் ஆங்காங்கே கவிதை சாரலும் அடிக்கிறது. இவற்றை கொஞ்சம் சரிசெய்திருந்தால் ரசித்திருக்கலாம். 

நாயகி ஆவ்னிக்கு இப்படத்தில் பெரிதாக வேலை இல்லை. இருப்பினும், இவர் வரும் காட்சிகள் எல்லாம் கவர்ச்சி மழையாய் பொழிந்திருக்கிறது. ஆவிகளோடு பேசும் மந்திரவாதியாக ஜோ மல்லூரி, பேச்சில் பயத்தை வரவழைத்தாலும், இவர் செய்யும் செய்கைகள் எல்லாம் பயத்திற்கு பதிலாக சிரிப்பையே வரவழைக்கிறது. 

பிற்பாதிக்கு பிறகு வரும், சமுத்திரகனி, தேவயானி ஆகியோர் அனுபவ நடிப்பால் கவர்கிறார்கள். ஒரு குழந்தையை பறிகொடுத்த வேதனையை இருவரும் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். சமூகத்திற்கு கருத்துக்களை கூறும் காட்சிகளில், சமுத்திரகனியின் ஆவேச பேச்சு ரசிக்க வைக்கிறது. ஆவியாக வரும் குழந்தை மிகவும் அழகாக இருக்கிறது. நடிப்பிலும் ஓகேதான். 

கிராபிக்சில் வரும் ஸ்ட்ராபெரி பட்டாம்பூச்சியும் இக்கதையில் ஒரு முக்கிய அங்கம் வகித்திருக்கிறது. இதுதான் படத்தின் திருப்புமுனைக்கே உறுதுணையாக இருந்துள்ளது என்று கூறலாம். பள்ளி நிர்வாகியாக நடித்திருப்பவர் படம் முழுவதும் ஏதோ டென்ஷனில் அலைபவர் போலவே காட்டியிருக்கிறார்கள். கோபத்தில் பேசும்போது கொஞ்சம் முகபாவணையை மாற்றி நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். 

இயக்குனராக பா.விஜய் இந்த படத்தில் வென்றிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். நாம் அன்றாடம் செய்தித்தாள்களில் படித்து, மறந்து போன ஒரு கதையை இப்படத்தில் இயக்குனர் சொல்ல முடிவெடுத்திருப்பது பாராட்டுக்குரியது. 

கல்வியை வியாபரமாக்கி, கல்வி மீதும், குழந்தைகள் மீதும் அக்கறை எடுத்துக்கொள்ளாத ஒரு சில பள்ளி நிர்வாகத்தை இப்படத்தில் அப்பட்டமாக தோலுரித்துக் காட்டியிருக்கிறார் இயக்குனர். இதை சொல்ல நினைத்த இயக்குனரின் தைரியத்தை பாராட்டியே தீரவேண்டும். ஆனால், ஒரு சில காட்சிகளை புரியாதது போல் படமாக்கியிருப்பதை மட்டும் தவிர்த்திருக்கலாம். 

படத்தில் இடம்பெற்ற கிராபிக்ஸ் காட்சிகள் எல்லாம் பிரம்மாண்டமாக இருக்கிறது. குறிப்பாக, ஸ்ட்ராபெரி பட்டாம் பூச்சி மனதை ரொம்பவும் கொள்ளை கொள்கிறது. 

மாறவர்மனின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம். ஆகாயத்தில் இருந்து கடற்கரையை இவரது கேமரா படம்பிடிக்கும் காட்சிகள் எல்லாம் பிரம்மாண்டமாக இருக்கிறது. இவருக்கு தாஜ்நூரின் இசையும் கைகொடுத்திருக்கிறது. பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார் தாஜ் நூர். பாடல்களில் உத்ரா உண்ணிகிருஷ்ன் பாடிய ‘கைவீசும்’ பாடல் மனதை தொட்டு செல்கிறது. மற்ற பாடல்கள் கேட்கும் ரகம்தான். 

மொத்தத்தில் ‘ஸ்ட்ராபெரி’ சற்று புளிக்கிறது.  

நன்றி-மாலைமலர்

0 comments: