Sunday, September 20, 2015

மண்ணுளி முதல் ஈமு வரை...!- மிரள வைக்கும் கொங்கு மோசடிகள் -2

கொண்டாட்டங்கள், சடங்குகள் மற்றும் வழிபாடுகளையும் மட்டுமே சொல்லி வந்த ஆன்மீகம், காலப்போக்கில் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டும் என சொல்லப்பட்டது. அந்த நேரத்தில், மக்களின் பிரச்னைகளையும், அவர்களின் ஆசையையும் கணக்கில் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டது தான் நாக மாணிக்க கல். நாக மாணிக்க கல் என்றால் என்ன? எப்படியெல்லாம் இதில் மோசடி நடக்கிறது? உண்மையில் நாக மாணிக்க கல் என்பது உண்மையா என்பதை பார்க்கலாம்...

எவர்கிரீன் மோசடி

கொங்கு மண்டலத்தில் நடக்காத மோசடிகளே இல்லை. அந்தளவுக்கு இப்படியெல்லாம் ஏமாற்ற முடியுமா? என நாம் யோசிக்கவே முடியாத அளவுக்கான மோசடிகள் எல்லாம் சர்வசாதாரணமாய் நடந்த பகுதி கொங்கு மண்டலம். அதில் எவர்கிரீன் மோசடி என்றால் அது நாக மாணிக்க கல்தான். 'வாழ்க்கையில் உள்ள பிரச்னைகள் அத்தனைக்கும் ஒரே தீர்வு இருக்கிறது. அது உங்களின் அத்தனை பிரச்னைகளையும் தீர்த்து விடும்' என ஒருவரை நம்ப வைத்த மோசடி என்றால் அது நாக மாணிக்க கல் மோசடிதான். இதில் ஆன்மிகத்தின் பங்கு மிக அதிகம். ஆன்மீகத்தில் திளைப்பவர்களை குறிவைத்து நடத்தப்பட்டதுதான் இந்த மோசடி. 

இந்த மோசடி என்பது சர்வ சாதாரணமானது அல்ல. அது எப்படி என்கிறீர்களா? அதற்கான பதில் இந்த கட்டுரையின் இறுதியில் உள்ளது. முதலில் நாக மாணிக்க கல் என்றால் என்ன என பார்ப்போம். 

சில மோசடி செய்திகளிலோ அல்லது ஆன்மீகம் சார்ந்த கட்டுரைகளிலோ இதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். 

மாணிக்கம்,  மரகதம், கனகபுஷ்பராகம், வைரம், வைடூரியம், முத்து,  பவழம்,  நீலக்கல்,  கோமேதகம் என 9 வகை நவரத்தின கற்களை கேள்விப்பட்டிருப்போம்.  அதென்ன நாக மாணிக்கம்னு கேட்கறீங்களா? மற்ற எல்லா நவரத்தினமும் பூமியில இருந்தும், கடலில் இருந்தும் கிடைக்குது. ஆனா நாக மாணிக்கங்கறது நாகப்பாம்பு வாயில இருந்து வருமாம். இதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்ற போதிலும், செவி வழி செய்தியாய் நீண்ட நாட்களாய் வழக்கத்தில் உள்ளது நாக மாணிக்க கல்லும், அதைப்பற்றிய கதையும்.
நாக மாணிக்கம் என்பது ஆன்மீகத்தில் கூறப்பட்ட ஒன்று. 

அதனாலேயே பலராலும் நம்பப்பட்டு வருகிறது. நாக மாணிக்க கல் பற்றி  என்ன சொல்லப்படுகிறது என்பதை முதலில் பார்ப்போம். "100 ஆண்டுகள் கடந்து வாழும் நாகம், தன் வாழ்நாளில் எந்த மனிதரையும், கீரியையும் தன் விஷத்தை பயன்படுத்தி கடிக்காமல் இருந்தால், 100 ஆண்டுகளில் அந்த விஷம் பாம்பின் கடைவாயில் இறுகிப்போய் ஒளி வீசும் மாணிக்கமாய் மாறிவிடும். ஒரு லட்சம் பாம்புகளில் ஒரு பாம்பு இப்படி நாக மாணிக்கத்தை உருவாக்கும். இப்படிப்பட்ட பாம்புகள் இளமையை பாதுகாத்துக்கொள்ளும். 200 ஆண்டுகள் வரை கூட இந்த நாகங்கள் வாழும். நாகமாணிக்கத்தை உருவாக்கும் நாகங்கள், இறக்கைகள் முளைத்து பறக்கும் வல்லமை பெறும். ஆனால் கண் பார்வை மட்டும் இந்த நாகங்களுக்கு மங்கி இருக்கும். 

அமாவாசை தினத்தில் பார்வை குறைபாடால் இரைதேட சிரமப்படும்போது, தன் கடைவாயில் உள்ள நாக மாணிக்கத்தை வெளியில் கக்கி, அதன் ஒளியில் இந்த நாகம் இரைதேடும். நாக மாணிக்கம் மிகுந்த பிரகாசமானது. இரை தேடி முடிந்த பின் மீண்டும் நாக மாணிக்கத்தை அந்த நாகம் உள்ளெடுத்துக் கொள்ளும். 100 வருடங்கள் சேமித்த இந்த நாக மாணிக்க கல் மிகக் கொடிய விஷத்தன்மை கொண்டது. 

இந்த நாக மாணிக்கம் தங்கம், வெள்ளியுடன் சேர்ந்தே இருக்க வேண்டும் இல்லாவிட்டால் பாலில் மூழ்கிய நிலையில் இருக்க வேண்டும். அவற்றை நம்புவதும் நம்பாததும் அவரவர் இஷ்டம்" என பொதுவாக சொல்லி, கடவுள் நம்பிக்கைகொண்டவர்களால் நம்பப்பட்டும் வருகிறது. கிட்டத்தட்ட சினிமா கதை போன்றதுதான் இது.

ஏமாற்றுவது இப்படித்தான்...

இந்த ஆன்மீக கதைதான் மோசடியாளர்களின் மூலதனம். "நாக மாணிக்கம் என்பது சாதாரணமானது அல்ல. அது மிகப்பெரிய பொக்கிஷம். நாகரத்தினத்தை அணிந்தால் அவர்களுக்கு எந்த ஆபத்தும் வராது. எதிரிகள் இருக்க மாட்டார்கள். வளமான வாழ்க்கை இருக்கும். செல்வம் கொழிக்கும். மகத்தான சக்தி கிடைக்கும். அதனால் மன்னர்கள் இந்த நாக மாணிக்கத்துக்காக அலைந்து திரிந்த வரலாறுகள் எல்லாம் உண்டு. இது போன்ற அற்புத சக்தி வாய்ந்த நாகங்கள் அதிகம் உள்ளது நாம் வெள்ளியங்கிரி மலையில்தான்.." என துவங்கும், மோசடியாளர்களின் உரையாடல்கள். 

அரசியலில் எழுச்சிக்காக காத்திருப்பவர்கள், மிகப்பெரிய தொழிலதிபர்கள் போன்றவர்கள்தான் இவர்களின் முக்கிய டார்கெட். வைர நகைகள் விற்கும் கடையில் வெள்ளி ஸ்பூனும் விற்பது போன்று, அவ்வப்போது சிறிய தொழிலதிபர்களிடமும் இந்த மோசடி நடக்கும்.

அரசியலிலோ, தொழிலிலோ அடுத்தடுத்து சரிவை சந்திப்பவர்கள் அல்லது மிகப்பெரிய எழுச்சிக்காக காத்திருப்பவர்கள், அதற்காக ஆசைப்படுபவர்கள்தான் இவர்களின் டார்கெட். அவர்களுக்கு நெருக்கமானவர்களை முதலில் ஏமாற்ற வேண்டும். எத்தகைய பிரச்னையாக இருந்தாலும் நாக மாணிக்கம் வைத்திருந்தால் அந்த சக்தியால் முழுமையாக தீரும். நாக மாணிக்க கல் வைத்திருந்த மன்னன்தான் தன் எல்லையை விரிவுபடுத்தி, எவ்வித பிரச்னையும் இல்லாமல் நாடாளுவதை உறுதி செய்தது. அதுபோல் அண்ணனும் நாக மாணிக்க கல் வைச்சிருந்தா பிரச்னை தீரும்" என முதலில் அவருக்கு நெருக்கமானவர்களை நம்ப வைப்பார்கள். அதன் பின்னர் அந்த முக்கிய பிரமுகருடன் சந்திப்பு நடக்கும்.

கதையாய்.. கதையாய் காரணங்கள்

மிக ரகசியமாக நடக்கும் அந்த சந்திப்பு. வாட்டசாட்டமான புரோக்கர் ஒருவர், அவருடன் பணம் படைத்த சிலர் மட்டுமே அந்த அறையில் இருப்பார்கள். சின்ன நகைப்பெட்டி ஒன்றை எடுத்து காட்டுவார் புரோக்கர். அறையின் விளக்குகள் அணைக்கப்படும். சின்னப்பெட்டியை திறந்து உள்ளே நிரப்பி வைக்கப்பட்ட பஞ்சை சற்று விளக்கினால், உள்ளே இருந்து பளீரென வெளிச்சம் அறை முழுவதுவம் பாயும். அவசரமாய் அந்த பெட்டியை மூடிவிட்டு, அறையின் விளக்குகள் போடப்படும். "இங்கே எதுவும் பேச வேண்டாம். அப்புறம் பேசிக்கலாம். முதல்ல இங்க இருந்து கிளம்புங்க" என முடியும் அந்த சந்திப்பு.

அடுத்த சந்திப்பில் நாக மாணிக்க கல்லின் பெருமைகள் பற்றி மட்டும் பேசப்படும். நாக மாணிக்கம் வைத்திருந்தால் கிடைக்கும் நன்மை என சில நிமிடங்கள் இடைவிடாது உரையாற்றுவார் அவர். நாக மாணிக்க கல் குறித்து ஆன்மீகத்தில் சொல்லப்பட்டதை விளக்குவார். சில கதைகளையும் அவரே புனைவார். சமீபத்தில் மிக வேகமாய் வளர்ந்த அரசியல் பிரமுகரோ, தொழிலதிபரோ நாக மாணிக்க கல்லால் தான் வளர்ச்சி பெற்றார் என சொல்லுவார். அதற்கான ஆதாரங்கள் என சிலவற்றையும் காட்டுவார். எல்லாமே அவரால் கிரியேட் செய்யப்பட்டதாக இருக்கும். 

இப்படி ஓரிரு மணி நேரம் நாக மாணிக்க கல்லின் புராணங்கள் மட்டுமே இருக்கும். நாகமாணிக்கக் கல்லை ஷேக்ஸ்பியர் கூட சொல்லியிருக்கிறார். இங்க பாருங்க இந்த வெப்சைட்டை என வெளிநாட்டினர் நாக மாணிக்க கல் பற்றி எழுதி இருப்பதாக சொல்லி, இவர்களால் எழுதப்பட்ட சில இணைய பக்கங்களை காட்டுவார்.

நீலவேணு நாகம்

கொங்கு மண்டலத்தில் நடக்கும் இந்த மோசடியின்போது மோசடியாளர்கள் அடிக்கடி உச்சரிக்கும் நாகத்தின் பெயர் நீலவேணு நாகம். "உலகத்துல சில இடத்துலதான் நீலவேணு நாகம் இருக்கு. அதுல ஒண்ணு நம்ம வெள்ளியங்கிரி. ஆதிசேஷனின் பரம்பரையில் வந்தது இந்த நீல வேணு நாகங்கள். ஒவ்வொரு நாகமும் குறைஞ்சது 20 அடி நீளம் இருக்கும். இது நாக தேவதை இனத்தைச் சேர்ந்தவை.

இந்த நாகங்கள், யாரையும் தீண்டாமல் இருந்தால் 100 வருடத்துக்கு ஒரு அடி குறையும். இது 600 ஆண்டுகள் வரை வாழும். 600 ஆண்டுக்கு பின்னர் அது பறக்கும் சக்தியை பெறும். இந்த நாகத்தின் மாணிக்கத்துக்கு ரொம்ப சக்தி அதிகம். எல்லோரின் தேவையையும் இந்த மாணிக்கம் நிறைவேற்றும்." என வெள்ளியங்கிரி மலையை மையப்படுத்தி கதை கதையாய் சொல்கிறார்கள் மோசடியாளர்கள். 

அப்போது உங்கள் உடல் சிலிர்த்துவிடும்.

தொட்டா நிச்சயம் சாவு தான்...

சம்பந்தப்பட்ட தொழிலதிபரோ, அரசியல் பிரமுகரோ அதை முழுமையாக நம்பி விட்டார் என அந்த பிரமுகர் நினைத்தால், அடுத்த சந்திப்பு ஒரு வனப்பகுதியில் நடக்கும். சக்தி வாய்ந்த நாக மாணிக்கம் என ஒன்று மீண்டும் காட்டப்படும். '150 வருஷத்துக்கு மேல உயிர் வாழ்ற பாம்போட நாக மாணிக்கம் இது. அந்த பாம்புக்கு தெரியாம பசுஞ் சாணத்தால கல்லை மூடித்தான் கொண்டு வந்திருக்கோம். கையில காயம் இருக்கிறவங்க கல்லைத் தொட்டா உடனே செத்துருவாங்க. பார்த்துத் தொடணும். கல்லை எப்பவும் பால்லதான் போட்டு வைக்கணும்’ என டெரர் 'பில்ட்-அப்’ கொடுப்பார்கள். 

'கொடிய விஷத்தை கொண்டது இந்த நாக மாணிக்கம். கையில் காயத்தோட தொட்டா நிச்சயம் சாவுதான். பாத்து தொடுங்க. உங்க கையில காயம் எதுவும் இல்லையே?' என உங்களிடம் கேட்டால், உங்கள் கையில் காயம் எதுவும் இல்லை என்றாலும் நீங்கள் நிச்சயம் அதை தொட மாட்டீர்கள்தானே?. ஆம் தொடமாட்டீர்கள். அப்படித்தான் அவரும் அதை தொட்டுக் கூட பார்க்க மாட்டார். 

நாக மாணிக்க கல் அடங்கிய சிறிய பெட்டியும், பணக்கட்டுகள் அடங்கிய பெரிய பெட்டியும் கைமாறிக்கொள்ளும். உண்மையில் அந்த சிறிய பெட்டியில் இருப்பது எந்த மாணிக்கமும் கிடையாது. அது ஒரு சாதாரண கல். எல்.இ.டி. விளக்கு உபயத்தால் பளீரென்ற வெளிச்சத்தை தரும். பலர் இந்த எல்.இ.டி லைட்டை இன்னும் நாக மாணிக்கமாக நினைத்து வைத்திருப்பவர்கள் உண்டு. உண்மை தெரிந்து 'குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டலை' எனும் கதையாக அதை தூக்கி எறிந்து விட்டு, வழக்கம் போல் தங்கள் வேலையை பார்க்கிறவர்களும் உண்டு.

'ப்ளான் ஏ' தோல்வியடைந்தால் 'ப்ளான் பி'

வனத்தில் நடக்கும் சந்திப்பில், திட்டமிட்டு நாக மாணிக்க கல் என ஒன்றை கொடுத்து ஏமாற்றுவது பிளான் ஏ. அப்போது அவர் சுதாரித்து விட்டால், அப்போதும் பணத்தை நூதனமாக பறிப்பதுதான் ப்ளான் பி. வனத்தில் நடக்கும் சந்திப்பில் எப்போதும் போல் அவர்கள் உணவில் உப்பை சேர்ப்பது போல், ஏராளமான ஆசைகளோடு லேசான பயத்தையும் சேர்த்துக்கொண்டே இருப்பார்கள். இதை நீங்கள் நம்புகிறீர்களா என்பதையும் சோதித்துக்கொண்டே இருப்பார்கள். உங்களுக்கு திடீரென சந்தேகம் வருகிறது. இப்போது இது வேண்டாம் என நீங்கள் நினைக்கிறீர்கள் என்றால், ப்ளான் ஏ'வை கை கழுவி விடுவார்கள் மோசடியாளர்கள்.

அப்போது ப்ளான் பி செயல்பாட்டுக்கு வந்து விடும். அதென்ன ப்ளான் பி என கேட்கிறீர்களா? அதே வனப்பகுதி.. பஞ்சு நிரப்பிய பெட்டியில் எல்.இ.டி விளக்கு உபயத்தால் எரியும் சிவப்பு நிறக்கல். மற்றொருவரிடம் பணப்பெட்டி. இப்போது வேண்டாம். இன்னொருமுறை பார்த்துக்கொள்ளலாம் எனும் மன நிலைக்கு அந்த தொழிலதிபரோ, பிரமுகரோ வந்து விட்டால் அப்போது  சைரன் ஒலியுடன் போலீஸ் வரும். அந்தப் பதற்றத்தில் பிரமுகரிடம் கல் திணிக்கப்பட்டு, பணம் கைமாற்றப்பட்டு விடும். அந்த பிரமுகரும் போலீசுக்கு பயந்து அங்கிருந்து ஓடி விடுவார். அந்த போலீசும் அவர்களின் செட்டப் தான். ஆக... எப்படியும் பணம் கைமாறி விடும் இந்த மோசடியில்.

நாகமாணிக்கம் என்பது உண்மை தானா?

நாக மாணிக்க கல் என்பது உண்மை தானா? அந்த கேள்வியை முன்வைத்து சில நிபுணர்களிடம் நாம் பேசினோம்.

உண்மையில் நாக மாணிக்க கல் என்பதை  அடையாளம் காட்ட கூட எந்த வழியும் இல்லை என்பதுதான் உண்மை. மாணிக்க கற்களில் பல வகை உள்ளது. அதில் ஒன்றுதான் இந்த நாக மாணிக்கம் என ஏமாற்றுகிறார்கள். நாக மாணிக்கம் என்பது உண்மை என பலரால் நம்பப்பட்டு வருவது ஆச்சரியமளிக்கிறது. பாம்பின் விஷம் ஒளிவீசும் நாகமாணிக்கமாய் மாறும் என்பதும், அது தங்கள் பிரச்னைகளை எல்லாம் தீர்க்கும் முழுக்க முழுக்க பொய். உண்மையில் நாகத்தில் எந்த கற்களும் உருவாவதில்லை.

ஆனால் பாம்பு கற்களை துப்புவது போன்ற வீடியோ காட்சிகளை காட்டி, உண்மை என நம்ப வைக்கப்படுகிறார்கள். பாம்பு தான் விழுங்கிய பொருட்களில் தேவையில்லாதவற்றை வெளியே கக்கி விடும். உதாரணமாக பாம்பு முட்டையை விழுங்கினால், முட்டையில் ஓட்டை மட்டும் வெளியே துப்பி விடும். அப்படி பாம்பு முட்டை என நினைத்து விழுங்கும் பறவையின் எச்சத்தின் மூலம் சில கற்களை பாம்பு வெளியே துப்பும். அந்த காட்சிகளைதான் நாம் வீடியோவில் பார்க்கிறோம். 

இதை பார்ப்பவர்கள் பாம்பு நாக மாணிக்கம் வைத்திருப்பதாகவும், அதில் இருந்து வரும் ஒளியினால் இரவில் இரை தேடுவதாகவும் கதை கட்டுகிறார்கள். எந்தவித உயர்ந்த கற்களுக்கும் சுயமாக ஒளிவீசும் தன்மை கிடையாது என்பதை படித்தவர்களும் மறந்துவிட்டு, கற்களை தேடி அலைவதுதான் பரிதாபமாய் இருக்கிறது. தன்னை பிரதிபலித்து கற்கள் காட்டிக்கொள்ளும். ஆனால் அதில் இருந்து ஒளி கிடைக்கவே கிடைக்காது. எனவே இதெல்லாம் சுத்தப்பொய்" என்றனர்.

100 வருஷத்துக்கு மேல உயிர் வாழ்ற..

இந்த மோசடி சாதாரணமானது இல்லை. நாகமாணிக்கம் என ஒரு கல்லே இல்லாத நிலையில், அது தான் இது எனச்சொல்லி ஏமாற்றுவது என்பது நிச்சயம் சாதாரணமானது விஷயமில்லை. அப்படி இல்லாத ஒரு கல்லுக்கு உருவகம் கொடுத்து, அடையாளங்கள் கொடுத்து கோடிகளில் விற்பது என்றால் சாதாரணமானதா என்ன?

இப்போது கூட இன்னோர் ஊரில் இன்னொருவரிடம், '100 வருஷத்துக்கு மேல உயிர் வாழ்ற...’ என்று கதைசொல்ல ஆரம்பித்து மோசடி செய்ய ஆட்கள் இருக்கிறார்கள். ஏமாறவும் கூட. முட்டாள்கள் மட்டுமே இதுபோன்ற மோசடி வியாபாரத்தின் வாடிக்கையாளர்கள். ஆனால் புத்திசாலிகளையும் முட்டாள்களாக்கி விடும் கலையை அறிந்து வைத்திருக்கிறார்கள் மோசடியாளர்கள். 

ஒரு மோசடியில் சிக்காமல் தப்பித்து விட்டால், அவர்களுக்கு இன்னொரு வலை விரிக்கப்படுகிறது. நாக மாணிக்க கல்லில் சிக்காமல் தப்பியவர்கள், ரைஸ் புல்லிங் மோசடியில் சிக்கிய சம்பவங்களும் உண்டு. பீரோ புல்லிங், ஆயில் புல்லிங் கேள்விப்பட்டிருக்கிறேன். அதென்ன ரைஸ் புல்லிங் என்கிறீர்களா? அது தான் மிகப்பெரிய நூதன மோசடி அதை அடுத்த வாரம் பார்க்கலாம்.

- ச.ஜெ.ரவி

நன்றி-விகடன்

0 comments: