Saturday, September 26, 2015

திருட்டு விசிடி (2015)- சினிமா விமர்சனம்

நடிகர் : பிரபா
நடிகை :சாக்ஷி அகர்வால்
இயக்குனர் :சுகுமார்
இசை :ஜித்தின் ரோஷன்
ஓளிப்பதிவு :ஜெகதீஷ்
நாயகன் பிரபா தவறான வழிகளில் பணம் சம்பாதித்து வருகிறார். பிரபாவின் காதலியான சாக்ஷி அகர்வாலோ தன்னுடைய காதலன் நேர்மையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறாள். தனக்கு ஒரு பெரிய தொகை கிடைத்துவிட்டால், இந்த தொழிலை விட்டுவிடுவதாக கூறி அவளை சமாதானப்படுத்தி வருகிறான் நாயகன்.

இந்நிலையில், ஒருநாள் நாகர்கோவிலில் ஒரு வேனில் இருக்கும் சிலையை சென்னைக்கு கொண்டு வந்து சேர்த்தால் ரூ.30 லட்சம் தருவதாக கூறி, ரூ.5 லட்சத்தை அட்வான்ஸாகவும் கொடுக்கிறது ஒரு கும்பல். கையில் பணத்தை பார்த்ததும், பிரபாவுக்கு ஆசை துளிர் விடுகிறது. அந்த கும்பல் சொன்ன வேலையை முடிக்க திட்டமிடுகிறான்.

தனியாக சென்று அதை கடத்தி கொண்டு வந்தால் போலீசிடம் சிக்க வேண்டியது வரும். எனவே, 2 டிவி நடிகைகள் மற்றும் தனது நண்பர்களையும் சேர்த்துக் கொண்டு, தனது குடும்பத்தினர் போல் நடிப்பதற்கு அழைத்து செல்கிறான். ஆனால், அங்கு சென்ற பிறகுதான், இவர்கள் கடத்தப்போவது சிலையில்லை, போதை பொருள் என்று. வேறு வழியில்லாமல் அதை சென்னைக்கு கொண்டு வரப்பார்க்கிறான். வரும் வழியில் போலீஸ் கெடுபிடி, எதிரிகளின் இடையூறு என பல தடைகள் ஏற்படுகிறது. 

இறுதியில் அதையெல்லாம் மீறி அந்த போதை பொருளை கொண்டு வந்து சென்னையில் சேர்த்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை. 

வேன் டிரைவராக வரும் நாயகன் பிரபா, போலீசாரிடமும், வழிமறிக்கும் வில்லனிடமும் அவர் சமாளிப்பது ரசிக்க வைக்கிறது. இடையிடையே காதலியை நினைத்து டூயட் பாடும் காட்சிகளிலும் சபாஷ் போட வைக்கிறார். இவரது காதலியாக வரும் சாக்ஷி அகர்வாலுக்கு நாயகனுடன் டூயட் பாடுவதை தவிர, வேறு வேலை இல்லை. 

படத்திலும் நடிகையாக வரும் தேவதர்ஷினி நடிப்பில் அமர்க்களப்படுத்தியிருக்கிறார். வேனில் செல்லும் போதும், கீழே இறங்கும்போதும் அவர் செய்யும் அட்டகாசம் சிரிப்பை வரவழைக்கிறது. தன் சக நடிகைகளை குறை சொல்பவர்கள் மீது சீறிப் பாயும்போது ரசிக்க வைக்கிறார். 

தப்பு செய்ய பயப்படுபவராக சுகுமார் வரும் காட்சிகள் செண்டிமென்டாகவும், கலகலப்பாகவும் நகர்கிறது. காமெடி நடிகர் செந்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படத்தில் ஒரேயொரு காட்சியில் மட்டும் வந்து போயிருக்கிறார். அவர் வரும் காட்சியும் ரசிக்க வைக்கிறது. 

இதுவரை காமெடி வேடங்களில் நடித்து வந்த காதல் சுகுமார் இந்த படத்தின் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார். படம் முழுக்க ஒரு பயணத்தை மையப்படுத்தியே படமாக்கியிருக்கிறார். ஆங்காங்கே நகைச்சுவையையும் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார். அழுத்தம் இல்லாத சாதாரண கதை என்றாலும், ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார். இதை இன்னும் கொஞ்சம் ஆழமாக சொல்லி இருந்தால் மேலும் சுவை கூடியிருக்கும். 

ஜிதின் ரோஷன் இசையில் பாடல்களை ரசிக்கலாம். ஜெகதீஷின் ஒளிப்பதிவு ரொம்பவும் தெளிவாக இருக்கிறது. 

மொத்தத்தில் ‘திருட்டு விசிடி’ கலகலப்பு காமெடி.

thanx-maalaimalar

0 comments: