Wednesday, September 30, 2015

'புலி' -20 ரகசியங்கள்

'புலி' படத்தில் விஜய்

'புலி' படத்தில் விஜய்
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், பிரபு, விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'புலி'. தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருக்கும் இப்படத்துக்கு நட்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பி.டி.செல்வகுமார் மற்றும் ஷிபு தமீன்ஸ் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். அக்டோபர் 1ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது.
படத்தைப் பற்றிய விஷயங்களை மிகவும் ரகசியமாக வைத்திருக்கும் படக்குழு கூறிய 20 விஷயங்கள் இதோ..
* இக்கதையை எழுதும் போதே, நாயகனாக விஜய்யை மனதில் வைத்து எழுதியிருக்கிறார் இயக்குநர் சிம்புதேவன். கதையை விஜய் கேட்டவுடன், "சூப்பராக இருக்கிறது. கண்டிப்பாக பண்றேன். இதை முழுமையாக அப்படியே பண்ணிவிடுங்கள். அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கக் கூடிய கதையாக இருப்பதால் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள்" என்று தெரிவித்திருக்கிறார்.
* ஆதித்யா ராம் ஸ்டூடியோவில் முதலில் பெரிய இடத்தில் இரண்டு ஸ்டூடியோ அமைத்து, அதற்குள் அரங்குகள் அமைத்திருக்கிறார்கள். ஏனென்றால் இவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு அரங்குகள் அமைக்கும் பெரிய ஸ்டூடியோ சென்னை, ஹைதராபாத் எங்குமே இல்லை.
* கலை இயக்குநர் முத்துராஜ் இப்படத்தில் தயாரிப்பு வடிவமைப்பில் முழுக்க பணியாற்றி இருக்கிறார். படத்தின் துவக்கத்தில் இருந்து, இறுதி வரை இப்படம் எப்படி தயாரிக்கலாம் என்பதில் தொடங்கி உடைகள், அரங்குகள் என அனைத்துமே முத்துராஜின் கைவண்ணம் தான்.
* 'இங்கிலிஷ் விங்கிலிஷ்' படத்தைத் தொடர்ந்து நிறைய கதைகள் கேட்டேன், எதுவுமே எனக்கு பிடிக்கவில்லை. எனக்கு பிடித்திருந்தால் பண்ணுகிறேன் என்று கூறிவிட்டு தான் சிம்புதேவனிடம் கதையைக் கேட்டிருக்கிறார் ஸ்ரீதேவி. 'புலி' கதையைக் கேட்டவுடன் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார்.
* ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் இருவருமே நாயகிகளாக நடித்திருந்தாலும் முதன்மை நாயகி ஸ்ருதிஹாசன் தான். காட்டுக்குள் படப்பிடிப்பு நடந்த போது உடல்நிலை சரியில்லாமல், மலை மீது ஏறி படப்பிடிப்பில் பங்கேற்று படக்குழுவை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறார்.
* ஹன்சிகா ஒரு இளவரசி பாத்திரத்தில் நடித்திருக்கிறார். படப்பிடிப்பு 9 மணிக்கு என்றால், இளவரசிக்கான மேக்கப் போட மூன்று மணி நேரம் ஆகும். ஆகையால் 6 மணிக்கே படப்பிடிப்பு வந்து மேக்கப் பணிகள் எல்லாம் முடித்து 9 மணிக்கு படப்பிடிப்பு தயாராக இருப்பாராம் ஹன்சிகா.
* தம்பி ராமையா, சத்யன், ரோபோ சங்கர், வித்யூ, இமான் அண்ணாச்சி என காமெடி கூட்டணிகள் விஜய்யோடு இணைந்து பண்ணியிருக்கும் காமெடி கண்டிப்பாக ரசிகர்கள் பிடிக்கும் என்கிறது படக்குழு
* 'பாகுபலி' படத்தோடு 'புலி'யை ஒப்பிட வேண்டாம். ஏனென்றால் இப்படத்தில் போர் காட்சிகள் எல்லாம் கிடையாது. அப்படத்தின் கதைக்களம் வேறு, 'புலி'யின் கதைக்களம் வேறு என்கிறது படக்குழு
* தன்னுடைய அடுத்த நாள் காட்சிக்கான வசனங்களை முந்தைய நாளே வாங்கி சென்று விடுவாராம் விஜய். நிறைய நடிகர்களுடன் நடிப்பதால், தன்னால் எதுவும் தாமதமாகி விடக்கூடாது என்பது தான் இதற்கு காரணம் என்கிறார்கள்.
* இப்படத்தின் சண்டைக் காட்சிகளுக்காக பிரத்யேகமாக வாள் பயிற்சியை கற்று நடித்துக் கொடுத்திருக்கிறார் விஜய்.
* வில்லன் வேடங்கள் நடிப்பதில்லை, கதையைக் கேட்டுவிட்டு சொல்கிறேன் என்று கதையைக் கேட்டிருக்கிறார் சுதீப். கதையைக் கேட்டுவிட்டு சம்மதம் தெரிவித்திருக்கிறார். மேலும், இப்படத்தில் சுதீப்புக்கு உலோகத்தால் உருவான உடையை அணிந்து நடித்திருக்கிறார். அந்த உடை அணிந்தால் அவரால் படப்பிடிப்பில் உட்கார முடியாது. காலையில் படப்பிடிப்பு தொடங்கினால், படப்பிடிப்பு முடியும் வரை நின்றுக் கொண்டே நடித்துக் கொடுத்திருக்கிறார்.
* விஜய், ஸ்ருதிஹாசன் பாடியிருக்கும் 'ஏண்டி ஏண்டி' என்ற பாடலை தாய்லாந்து மற்றும் கேரளா ஆகிய இரண்டு இடங்களில் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.
* கலை இயக்குநர் முத்துராஜ் மற்றும் கிராபிக்ஸ் தொழில்நுட்ப வல்லுநர் கமலக்கண்ணன் இருவருமே இணைந்து இப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு பணியாற்றி இருக்கிறார்கள். கிராபிக்ஸ் காட்சிகளுக்காக சில படப்பிடிப்பு என்று முன்பே சரியாக திட்டமிட்டு இருக்கிறார்கள். அதுமட்டுமன்றி கமலக்கண்ணன் இப்படத்திற்கான பணிகளைப் படப்பிடிப்பு துவங்குவதற்கு 8 மாதங்களுக்கு முன்பே ஆரம்பித்துவிட்டார்கள்.
* 'புலி' படத்தில் மொத்தம் 2400 கிராபிக்ஸ் ஷாட்ஸ் இருக்கிறது என்கிறார் கமலக்கண்ணன். 'நான் ஈ' படத்தில் 1200, 'மஹாதீரா' படத்தில் 1400, 'பாகுபலி' படத்தில் 2000 கிராபிக்ஸ் ஷாட்ஸ் தான். அப்படங்களோடு ஒப்பிட்டால் 'புலி'யில் கிராபிக்ஸ் ஷாட்ஸ் அதிகம்.
* இப்படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகளில் ஸ்ரீதேவி மட்டுமே தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் சொந்த குரலில் டப்பிங் பேசியிருக்கிறார்.
* சித்தரக்குள்ளனாக விஜய் நடித்திருக்கிறாரா போன்ற விஷயங்கள் எல்லாம் சஸ்பென்ஸ். நீங்கள் படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என்கிறார் இயக்குநர் சிம்புதேவன்.
* 'ஜிங்கிலியா' பாடலை ஆதித்யாராம் ஸ்டூடியோவில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைத்து படமாக்கி இருக்கிறார்கள். அப்பாடலை நீங்கள் திரையில் பார்க்கும் போது, அரங்கின் பிரம்மாண்டம் தெரியும் என்கிறார்கள்.
* விஜய் ரசிகர்கள் விரும்பும் வண்ணம் கதையோட்டத்துடன் பன்ச் வசனங்கள் இருக்கிறது என்கிறார் இயக்குநர் சிம்புதேவன்.
* தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளையும் இணைத்து சுமார் 3000 திரையரங்குகளுக்கும் அதிகமாக வெளியிட இருக்கிறது. ஜப்பான் மற்றும் சீனாவில் இப்படத்தை வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
* 'துப்பாக்கி' படத்தில் இருந்தே தனது படங்களைப் பற்றியே பேட்டி அளிக்காத விஜய், இப்படத்துக்கும் அந்த திட்டத்தில் தான் இருக்கிறார். பட வெளியீட்டுக்கு முன்பு ட்விட்டர் தளத்தில் ரசிகர்களோடு கலந்துரையாடும் திட்டம் இருக்கிறது என்கிறார்கள்


thanx-thehindhu

0 comments: