Thursday, September 24, 2015

குற்றம் கடிதல்-சினிமாவிமர்சனம்

தேசிய விருது பெற்ற படம், ஜிம்பாப்வே, மும்பை, கோவா, புனே, பெங்களூரு உள்ளிட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடத் தேர்வான படம் என்ற இந்தக் காரணங்களே 'குற்றம் கடிதல்' மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தின.
பொதுவாக விருதுகளை வென்ற படங்கள் படைப்பாளியின் சினிமாவாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அது பெரும்பாலும் பார்வையாளனுக்கான சினிமாவாக இருப்பது அரிதாகவே நிகழ்கிறது.
'குற்றம் கடிதல்' கவனத்துக்குரிய படைப்பு என்று சொல்லப்பட்ட நிலையில், தியேட்டருக்கு நுழைந்தேன். உண்மையில் இது பார்வையாளனுக்கான சினிமாவா? படைப்பாளியின் சினிமாவா?
ஒரு நல்ல சினிமா இன்னதென்று பிரித்தறிய முடியாததாக இரண்டும் இணைந்தே இருக்க வேண்டும் என்று 'குற்றம் கடிதல்' நமக்கு உணர்த்துகிறது.
'குற்றம் கடிதல்' கதை: பதிவுத் திருமணம் செய்து கொண்ட ஆசிரியை, முதல் நாள் பள்ளிக்கூடத்துக்கு வருகிறார். இன்னொரு ஆசிரியை கேட்டுக்கொண்டதற்கிணங்க 5-ம் வகுப்புக்கு பாடம் எடுக்க செல்கிறார். வகுப்பறையில் ஒரு மாணவனின் நடவடிக்கையைக் கேள்விப்பட்டு தண்டிக்கிறார். அந்த தண்டனை எதிர்பாராத விபரீதத்தில் முடிகிறது. இதனால் அந்த மாணவனும், ஆசிரியையும், சுற்றியுள்ளவர்களும் என்ன ஆகிறார்கள்? என்பதே எல்லாம்.
பாலியல் கல்வி, ஆசிரியர் - மாணவர் உறவு, தவறு செய்யும் மாணவனை கண்டிப்பதா? திருத்துவதா? எப்படி மாணவனை வளர்த்தெடுப்பது என்பதை எந்த சமரசமும் இல்லாமல் சமூகத்துக்கு அழுத்தமாய் முதல் படத்திலேயே சொன்ன விதத்தில் அறிமுக இயக்குநர் பிரம்மாவுக்கு பல்லாயிரம் லைக்ஸ் கொடுக்கலாம்.
10 வயது சிறுவனுக்கே உரிய சேட்டை, துள்ளல், உற்சாகத்தோடு இயங்கும் மாஸ்டர் அஜய் இயல்பாகவே ஈர்க்கிறார். ஆட்டோ ஓட்டும் லாவகமும், அம்மாவின் அடிக்குப் பயந்து ஓடும்போதும் அருகில் இருப்பவர்களிடம் விளையாட்டாய் பேச்சு கொடுப்பதும், வகுப்பறையில் அமரும் தோரணையும் என துறுதுறு சிறுவனாக கவர்கிறார்.
திருமணம் ஆன முதல் நாள் கனவுகளோடு பள்ளிக்கு வரும் போது புன்னகையும், பூரிப்புமாக இருக்கும் ராதிகா பிரஷித்தா அசம்பாவிதம் நடந்த பிறகு காட்டும் ரியாக்‌ஷன்கள் மூலம் ஃபெர்பாமன்ஸில் பின்னி எடுக்கிறார். அதிர்ச்சி, பயம், வெறுமை, குற்ற உணர்வு, நடுக்கம், சோகம், அழுகை, தவிப்பு என அத்தனை உணர்வையும் வெளிப்படுத்தி மனதில் நிறைகிறார். தமிழ் சினிமாவுக்கு நேரடியாக கிடைத்த ராதிகா ஆப்தே என்றே சொல்லலாம்.
மாஸ்டர் அஜய்யின் அம்மாவாக நடித்திருக்கும் சத்யா அதிகம் பேசாமல் மௌனத்தால் அதிகம் தொந்தரவு செய்கிறார்.
''தப்பை சரி செய்ய்ய தப்பு செஞ்சவங்கதான் வரணும். ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டணும் நீங்க நினைக்கலாம், நாங்க அப்படி அல்ல'' என்று கோபமுகம் காட்டும் பாவல் நவகீதன் நடிப்பும் கவனிக்கத்தக்கது.
ராதிகா பிரஷித்தாவின் கணவராக நடித்திருக்கும் சாய் ராஜ்குமார், பிரின்சிபாலாக வரும் குலோத்துங்கன் உதயகுமார், அவர் மனைவியாக நடித்திருக்கும் துர்கா வேணுகோபால் ஆகியோர் பொருத்தமான தேர்வு.
''குழந்தைகளோட படிப்பு, டிசிப்லின் இதெல்லாம் விட உயிர் முக்கியம்.''
''இருக்கற புள்ளையோட அருமைதான் உனக்குத் தெரியும், இல்லாத புள்ளையோட வலி என்னன்னு எங்களுக்குத் தெரியும் போப்பா. விட்ற மாட்டோம்'' போன்ற பளிச் வசனங்கள் மனசுக்குள் பதியமிடுகின்றன.
மணிகண்டன் ஒளிப்பதிவில் இரவு நேரப் பயணத்தையும், வகுப்பறை சூழலையும், மருத்துவமனை திகில் நிமிடங்களையும் கண் முன் கொண்டு வந்திருக்கிறார்.
ஷங்கர் ரங்கராஜன் இசையில் காலை நிலா பாடல் உற்சாகம் கொடுக்கிறது. சின்னஞ்சிறு கிளியே பாடலில் எமோஷன் உணர்வை சரியாக பயன்படுத்திய விதத்தில் ஷங்கர் ரசிக்க வைக்கிறார். பரபரப்புடன் கதையை நகர்த்த பெரும்பங்காற்றிய எடிட்டர் பிரேம், வகுப்பறை பாடலில் மட்டும் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம்.
தப்பு செய்த ஆசிரியையே பின் தொடரும் பாலித்தீன் பை, தப்பை விவரிக்கும்பொழுது ஒரு நபர் தன்னையே தண்டித்துக் கொள்ளும் சவுக்கடி, பைக் கண்ணாடியில் தெரியும் பிம்பம், தப்பு பண்ணவன் என்னெல்லாம் பாடுபட்டான் என்பதை கூத்து மூலம் சொல்வது என்று பல குறியீடுகள் மூலம் இயக்குநர் பிரம்மா காட்சிப்படுத்தி இருப்பது சிறப்பு.
காரில் விபத்து செய்யும் நபரின் மனவோட்டம், லாரி டிரைவரின் பண்பு, லிஃப்ட் கொடுக்கும் பால்காரன், பெண் போலீஸ் விசாரணை என்று போகிற போக்கில் அத்தனை பேரின் இயல்புகளைப் பதிவு செய்துவிட்டுப் போகிற பிரம்மாவின் துணிச்சலைப் பாராட்டியே ஆக வேண்டும்.
நிச்சயம் நீங்கள் திரும்பவும் விரும்பிப் பார்க்கும் அனுபவத்தை 'குற்றம் கடிதல்' எனும் சோஷியல் த்ரில்லர் திரைப்படம் தருவது உறுதி!


நன்றி-தஹிந்து

0 comments: