Saturday, September 19, 2015

மண்ணுளி முதல் ஈமு வரை...!- மிரள வைக்கும் கொங்கு மண்டலமோசடிகள் - 9

மாற வாய்ப்புகள் இங்கே ஏராளம்' என விளம்பரம் செய்யாதது ஒன்றுதான் குறை. அப்படி ஏமாற அதிக வாய்ப்புகளை உருவாக்கி தந்த பெருமை(?) கொங்கு மண்டலத்துக்கு உண்டு. "நான் யாரையும் ஏமாத்தலை. அவங்க ஏமாற ஒரு வாய்ப்பு கொடுத்தேன்..." என சதுரங்க வேட்டை படத்தில் கதாநாயகன் பேசுவாரே... அப்படி நித்தமும் ஏமாற வாய்ப்புகளை அள்ளிக்கொடுத்து, பணத்தை அள்ளி எடுத்துக் கொண்டனர் மோசடியாளர்கள். மக்களும் சளைக்காமல் பணத்தை இழந்தனர். கொங்கு மண்டலத்தில் நடந்த இந்த பிரம்மாண்ட மோசடிகளை கணக்கு போட்டால், இத்தனை மோசடிகளா என வியப்புதான் மிஞ்சும்.

கடந்த 8 வாரங்களாய் நாமும் ஏராளமான மோசடியை பார்த்து விட்டோம். ஆனால் பாதியைக்கூட நாம் சொல்லிவிட முடியவில்லை என்பதுதான் உண்மை. மீதமிருக்கும் மோசடிகளையும் பார்த்து விடுவோம்.

தங்கப்புதையல் மோசடி...

ஏமாற்றுவதில் இது ஆதிகால டெக்னிக். "எங்ககிட்ட தங்கப்புதையல் இருக்கு. எப்படி விக்குறதுனு தெரியலை. ஒரு கிராமுக்கு ஆயிரம் ரூபாய் தந்தா கூடபோதும். நீங்க வித்து தர முடியுமா?"னு ஆரம்பிச்சு, போலி நகையை தலையில கட்டி, லட்சக்கணக்கான பணத்தை அபேஸ் பண்றது. இந்த தங்கப்புதையல் மோசடி, ஆதிகால டெக்னிக் என்றாலும் இதில் ஏமாந்தவர்களும் ஏராளம். சும்மா இப்படி சொன்னா நம்பிடுவாங்களா என்ன? என்கிறீர்களா. இவங்க பில்டப்களை எல்லாம் கேட்டா இதை படிச்சுட்டே இருந்தாலும் நீங்க ஏமாந்துடுவீங்க. எப்படி ஏமாத்துனாங்கங்கறதை இந்த மோசடியில சில லட்சங்களை இழந்த மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த விவசாயிக்கிட்ட பேசினோம்.

அவர் சொன்னது...
"கொஞ்ச மாசம் முன்னாடி இங்கதான் அந்த ஆளு சுத்திக்கிட்டு இருந்தான். கட்டட வேலை பாக்குறதா சொன்னான். கோழி கூப்பிட வந்துட்டு, பொழுதோட போயிடுவான். தினமும் எங்கிட்ட வந்து பேசுவான். இதுக்கு முதல்ல மைசூருல வேலை பாத்துட்டு இருந்ததா சொன்னான். ஒரு நாள்,  'உங்ககிட்ட ஒரு உதவி கேக்கணும்'னு சொன்னான். என்னானு கேட்டேன்.

'மைசூர்ல நாங்க கட்டட வேலை பாக்குறப்போ. ஒரு குழி தோண்ட வேண்டி இருந்துச்சு. அப்போ ஒரு தங்கப்புதையல் கிடைச்சுது. அதை வித்து தர முடியுமா?'னு கேட்டான். முதல்ல நான் நம்பலை. தங்கப்புதையாலா?னு கேலியா சிரிச்சேன். அதெல்லாம் மைசூர் மகாராஜா வசிச்ச பகுதி. அங்கெல்லாம் இது சாதாரணம். ஏற்கனவே இப்படித்தான் ஒரு புதையல் கிடைச்சதுனு ஒரு கதையை சொன்னான். நம்பலைனா இந்த செய்தியை பாருங்கனு பேப்பர்ல தங்கப்புதையல் சம்பந்தமா வந்தா செய்தியை, பாக்கெட்டில இருந்து எடுத்து காட்டினான். (மோசடி சம்பந்தமா தானே அதிகம் செய்தி வருது அதெல்லாம் பார்க்க மாட்டீங்களே?) 'நாளைக்கு புதையல்ல இருந்து ஒரு காசு கொண்டு வர்றேன். நீங்க பாத்துட்டு சொல்லுங்க'னு சொன்னான்.

ரெண்டு நாளைக்கு பொறவு தங்க காசு ஒண்ணை கொண்டு வந்தான். அதை நானும், என் சினேகிதன் ஒருத்தணும் போய் நகைப்பட்டறையில கொடுத்து பாத்தோம். சொக்கத்தங்கம்னு சொன்னாங்க. அப்போ தான் ஏன் இந்த நகையை நாமளே வாங்கிக்க கூடாதுனு தோணுச்சு. "எங்கிட்ட ரெண்டு கிலோ நகை இருக்கு. உங்களுக்குனா கிராமுக்கு 750 கொடுத்தா போதும். 15 லட்சம் மட்டும் கொடுங்க.னு  கேட்டான். கடைசியா 10 லட்சம் கொடுக்கறதா சொல்லி முதல்ல ரூ.3 லட்சம் கொடுத்தேன். அதுக்கு அப்புறம் அவனும் வரலை. நகையும் வரலை. இதே மாதிரி சத்தியமங்கலம், கோபிச்செட்டிபாளையம் ஏரியால இன்னும் கொஞ்ச பேரிடம் கூட ஏமாத்தியிருக்கான்.

'தங்கத்தை கொடுத்தாதான் பணம்'னு சொன்னவங்ககிட்ட போலி தங்க காசுகளை கொடுத்து கூட லட்சக்கணக்குல பணத்தை அபேஸ் பண்ணியிருக்காங்க. இதுல கொஞ்ச பேர் போலீஸ்ல கேஸ் கொடுத்திருக்காங்க. நான்தான் இதை எப்படி போய் போலீஸ்ல சொல்றதுனு தெரியாமவிட்டுட்டேன். நான் ரொம்ப உஷாரா இருப்பேன். என்னையே ஏமாத்திட்டானுங்க படுபாவிங்க," என்றார் அப்பாவியாக.

இந்த மோசடியில் ஈடுபடுபவர்கள் குழுக்களாக அல்ல. ஒன்று அல்லது இரண்டு பேர்தான் இருப்பார்கள். முதலில் எந்த ஊரில் யாரை ஏமாற்றுவது என்பதை தீர்மானிப்பார்கள். ஆளை குறித்துவிட்டால், அவரிடம் ஏதோ ஒரு வகையில் நெருங்கி பழகுவார்கள். டீ குடிக்க, டிபன் சாப்பிட என அழைத்து சென்று உங்களுக்கும் சேர்த்து காசு கொடுப்பார்கள். அட எவ்வளவு நல்லவனா இருக்கான் என பழகிய ஓரிரு தினங்களில் யோசிக்க வைத்து விடுவார்கள். அதன்பின்னர் தங்க நகை எனச்சொல்லி உங்கள் ஆசையை தூண்டி, உங்களுக்கு  எழும் சந்தேகங்களுக்கு சாமர்த்தியமாய் பதிலளித்து, அவர்கள் பக்கம் சாய வைத்து விடுவார்கள். அதிக பட்சமாய் உங்களை யோசிக்க விடமாட்டார்கள். இல்லாவிட்டால் உங்களது சந்தேகங்களுக்கு மிக சாமர்த்தியமாய் பதிலளித்து ஏமாற்றுவார்கள்.

மைசூர் அரண்மனைகிட்ட கிடைச்சது. புதையல்தான். அதுல ராஜாவோட சின்னம் கூட இருக்கு. இப்படி இவர்கள் சொல்லும் தகவல்களை நீங்கள் அப்படியே நம்புவீர்கள். ஏனென்றால் உங்கள் சந்தேகத்தைவிட தங்கம்தான் உங்கள் மனதில் இருக்கும். மலிவாய் கிடைக்கும் தங்கத்தை கடன் வாங்கியாவது வாங்கினால் என்ன என நினைப்பீர்கள். அதுதான் மோசடியாளர்களின் வெற்றி. அதன் பின்னர் சர்வசாதாரணமாய் உங்களை ஏமாற்றி பணத்தை பிடுங்கி எஸ்கேப் ஆகிவிடுவார்கள். மிகவும் பழசு என்றாலும் இப்போது நடக்கும் மோசடி தான் இது.

நிதி  நிறுவன மோசடி...

இன்னுமொரு ஆதிகாலத்து டெக்னிக்தான் நிதி நிறுவன மோசடி. ஆனால் இன்றும் எவர்கிரீன் மோசடி இது தான். இன்று வரையில் 'அதிக வட்டி தருவதாக மோசடி' என இடைவிடாமல் செய்தியில் இடம்பிடிக்கும் அளவுக்கு இந்த மோசடி மிக பிரபலம். ஆனால் இதில் தான் மிக அதிக பணம், அதாவது பல்லாயிரம் கோடிகளை கொங்கு பகுதி மக்கள் இழந்திருக்கின்றனர்.

மோசடியில ரொம்ப ஈசியான வழி நிதி நிறுவன மோசடிதான். அதிக வட்டி கொடுக்குறோம்னு சொல்லி, கொஞ்ச பேருக்கு அவங்க கொடுக்குற பணத்துல இருந்து கொஞ்சம் கொடுத்தா போதும், ஊரே கொண்டு வந்து பணத்தை கொட்டும். கோவை, திருப்பூரில், 90கள்ல துவங்குன இந்த மோசடி, மக்களுக்கு அறிமுகமாகி 20 வருஷம் ஆனாலும், இன்னைக்கும் இதுல ஏமாறுபவர்களின் எண்ணிக்கை மட்டும் குறையவே இல்லை. என்ன முதல்ல நேரடியா பணத்தை வாங்கி ஏமாத்துனாங்க. இப்போ ஏஜென்ட் மூலமாவும், ஆன்லைன் மூலமாவும் பணத்தை வாங்கி ஏமாத்துறாங்க அவ்வளவுதான் வித்தியாசம். மத்தபடி ஏமாத்தறது மட்டும் நிக்கவே இல்லை.

"ஒரு லட்ச ரூபாய் போட்ட மாசம் ரூ.12 ஆயிரம் உங்களுக்கு கிடைக்கும். 12 மாசம் கழிச்சு உங்க ஒரு லட்சம் உங்களுக்கே கிடைச்சுடும்"னு முதலில் சிலரிடம் அறிமுகமாகும் திட்டம்தான் பின்னர் விஸ்வரூபமெடுக்கிறது. முதல்ல பணத்தை போடறவங்களுக்கு, கவர்மென்ட் சம்பளம் மாதிரி தேதி தவறாம வட்டிக்கான செக் வந்துடும். இதுதான், இது போன்ற நிதி நிறுவனத்துக்கு விளம்பரம்.

'நம்ம சுரேஷ் வேலைக்கு போறதில்லையா? எப்ப பாரு வீட்டுலயே இருக்கான்' 'அவன் ஏதோ பைனான்ஸ் கம்பெனியில பணம் போட்டிருக்கானாம். மாசமானா பணம் வீட்டுக்கே வந்துடுதே. அப்புறம் ஏன் வேலைக்கு எல்லாம் போகணும்' என்பன போன்ற உரையாடல்கள்தான், பேராசையை தூண்டி நிதி நிறுவனத்தில முதலீடு செய்ய தூண்டுகிறது.

"பணத்தை போடணும்னு ஏஜென்ட்டுக்கு ஒரு போன் பண்ணினா போதும். நேரா வந்து பணத்தை வாங்கிக்குறாங்க. லேப்டாப்புல சில வெப்சைட்டை ஓபன் பண்ணி காட்டி, 'இங்கே தான் உங்க பணத்தை இன்வெஸ்ட் பண்ணப்போறோம். இதுல எங்களுக்கு நிறைய லாபம் கிடைக்கும். நிர்வாக செலவுக்கு கொஞ்ச நாங்க எடுத்துக்குவோம். அதுல ஒரு பகுதி உங்களுக்கு. மாசமான 7 ஆம் தேதி ரூ.12 ஆயிரத்துக்கான செக் வீடு வந்து சேந்துடும்'னு சொன்னாங்க. (ஒரு லட்ச ரூபாய் முதலீடுக்கு 20 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்குற அளவுக்கு, அம்பானிக்கும், டாடாவுக்கும் தெரியாத என்ன பிசினஸ் நீங்க பண்றீங்க'னு கூட கேக்க தோணலையா பாஸ்) அதே மாதிரி 3 மாசம் செக் வந்துச்சு. 4வது மாசம் வந்த செக் பணம் இல்லாம திரும்பிடுச்சு. அங்கே போய் பாத்தா கம்பெனியை மூடிட்டாங்க," என புலம்புகின்றனர் முதலீட்டாளார்கள்.

"கோவை, திருப்பூர், ஈரோட்டுல இது ரொம்ப சகஜம். இங்கே ரெண்டு மூணு வருஷத்துல மட்டும் பைனான்ஸ் கம்பெனியில பணத்தை போட்டு ஏமாந்தவங்க லட்சக்கணக்கானவங்க இருக்காங்க. சில ஆயிரம் கோடிகளை பைனான்ஸ் கம்பெனிகள் ஏப்பம் விட்டிருக்கு" என ஏதோ இன்னைக்கு வியாழக்கிழமை என்பது போல் சர்வசாதாரணமாக சொல்கிறது போலீஸ். ஏக்கர் கணக்குல நிலத்தை வைச்சு விவசாயம் செஞ்சவங்களை, பெட்டிக்கடை வைக்குற நிலைமைக்கும், கம்பெனி நடத்திக்கொண்டிருந்தவர்களை  வேலைக்கு போக வைக்கற நிலைமைக்கும் தள்ளியது உட்பட ஃபைனான்ஸ் கம்பெனிக்கு ஏகப்பட்ட பெருமைகள் இருக்கு. ஆனா மக்கள் இன்னும் இந்த மோசடிக்கு முற்றும் போடமால், ஏன் தொடரும் போடறாங்கனுதான் புரியவேமாட்டேங்குது.

மெழுகுவர்த்தி பிசினஸ் மோசடி...

கொங்கு மண்டலத்தில் கொடி கட்டி பறந்த மோசடிகளில் ஒன்று. பெண்களை குறி வைத்து நடத்தப்பட்ட மோசடிகளில் இதுவும் ஒன்று. வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம். மெழுகுவர்த்தி செய்து கொடுத்தால் மாதம் பல ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம் என்ற ஆசையை தூண்டி அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மெழுகுவர்த்தி பிசினஸில் பணத்தை கட்டி ஏமாந்தவர்களின் எண்ணிக்கையும் மிக அதிகம். சில ஆயிரம் சம்பளம் என்பதே மதிப்பிற்குரியதாய் பார்க்கப்பட்ட அந்த நேரத்தில், வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாமாமே... அதுவும் 10 ஆயிரத்துக்கு மேல..' என பெண்களை ஏங்க வைத்தது இந்த மோசடி.

மோசடி எப்படி நடந்தது என்கிறீர்களா? இதற்கும் முதலில் நீங்கள் டெபாசிட் தொகை கட்ட வேண்டும். அதுவும் 10 ஆயிரம். இது தவிர மெழுகு உபகரணங்களுக்கு தனியாக 2 ஆயிரம் பெறப்பட்டது. மெழுகு செய்து கொடுத்தால் 'தொழிலாளிகள் செலவோடு பெற்றுக்கொள்வோம். முதலீடும் திரும்ப கிடைக்கும்' என்பதுதான் இந்த மோசடி. சிலருக்கு பணம் கிடைத்தது. மற்றவர்கள் மெழுகு சரியாக தயாரிக்கவில்லை. இன்னும் சரியாக முயற்சியுங்கள் என பதில் வந்தது. 'அட நாம பண்றதுதான் தப்பு போல. அடுத்த முறை சரியா பண்ணிடனும்' என மீண்டும் மீண்டும் முயற்சித்து கொண்டிருந்தனர். மறுபுறம் ஏராளமான பெண்கள் இந்த பிசினஸில் முதலீடு செய்து கொண்டிருந்தனர்.

ஒரு கட்டத்தில் நம்பி பணம் போட்டவர்களுக்கு எல்லாம் பட்டை நாமத்தை போட்டு எஸ்கேப் ஆனார்கள் மோசடியாளர்கள். திருப்பூரில் மூடிவிட்டு கோவையில், ஈரோட்டில் என இவர்கள் அடுத்தடுத்து தங்கள் மோசடியைவிடாமல் செய்து வந்தனர். ஆனால்,. காவல்துறைதான் இவர்களை ஏன் என்று கூட கேள்வி கேட்கவில்லை. அதுவே இவர்களுக்கு வசதியாய் போனது. இதையெல்லாம் கொஞ்சமும் கவனிக்காமல் பணத்தை இழந்து கொண்டே இருந்தனர் மக்கள்.

அட கொடுமையே, இத்தோடு முடிந்ததா என்றால் அதுதான் இல்லை. புதுசு புதுசாய், தினுசு தினுசாய் மோசடிகள் நடந்து கொண்டே இருந்தது கொங்கு மண்டலத்தில். அவற்றை பற்றியும் தெரிந்து கொள்வோம். அதை அடுத்தவாரம் பார்க்கலாம்.

ச.ஜெ.ரவி

நன்றி-விகடன்

0 comments: