Tuesday, September 22, 2015

‘‘இந்தப் படம் ஓடினால் நான் மன்னன். ஓடாவிட்டால் நாடோடி-எம்.ஜி.ஆர்.

‘அன்பே வா’ படத்தில் சரோஜாதேவி கல்லூரி மாணவர் களுடன் சேர்ந்து எம்.ஜி.ஆரைக் கேலி செய்து நடனம் ஆடுவது போல் ஒரு காட்சி. உதவி நடன இயக்குநர் ரத்தன்குமார் தலைமையில் மாணவர் குழு நடனமாட இருந்தனர். ரத்தன்குமாருக்கு இணையாக எம்.ஜி.ஆரால் ஆட முடியுமா என்று படக்குழு எதிர்பார்ப்பில் இருந்தது.
போட்டி என்றாலே விறுவிறுப்புத் தானே. படப்பிடிப்பில் எம்.ஜி.ஆர். அவர்கள் வெகு இலகுவாக ட்விஸ்ட் நடனம் ஆடியபோது கைதட்டல் ஷூட்டிங் அரங்கத்தை அதிர வைத்தது. படம் வெளியானதும் தியேட்டர்களில் ரசிகர்கள் அந்தப் பாடலைத் திரும்பத் திரும்பப் பார்த்து ரசித்தனர்.
சிம்லாவுக்குப் படப்பிடிப்புக்காக போயிருந்தோம். சிம்லாவின் மேல்பகுதி முழுதும் பனி படர்ந்த மலைச் சிகரங்கள். அங்குதான் சீனாவின் எல்லைக் கோடு இருந்தது. அந்தப் பகுதியில் நமது ராணுவ வீரர்கள் நம் நாட்டை பாதுகாப்பதற்காக காவல் இருந்தார்கள். அங்கிருந்த பனியும் மிகையான குளிரும் நம் ராணுவ வீரர்களை பாதித்து, அவர்களில் சிலருக்கு கால்கள் மிகவும் மோசமான நிலையில் சிகிச்சைக்காக அங்குள்ள மருத்துவமனையில் இருந்தார்கள்.
அத்தகைய ராணுவ வீர்ர்களைப் பார்க்க எம்.ஜி.ஆர் தலைமையில் சரவணன் சார், திருலோகசந்தர் சார் மற்றும் சிலரும் புறப்பட்டோம். அந்த வீரர்களைப் பார்த்து எம்.ஜி.ஆர் கண் கலங்கினார். ‘‘நாட்டில் உள்ள எங்கள் உயிரைக் காக்க, உங்கள் உயிரைப் பணயம் வைக்கும் உங்களைப் பார்க்க வந்திருக்கிறோம்’’ என்று இரு கை தூக்கி அவர்களை வணங்கினார் எம்.ஜி.ஆர். அந்த வீரர்களுக்கு ஹார்லிக்ஸ், ரொட்டி, பழங்கள் எல்லாம் கொடுத்து அவர்களுடைய கைகளைப் பிடித்துக்கொண்டு வாழ்த்தினார்.
எப்போதுமே எம்.ஜிஆருக்கு ஏவி.எம்.சரவணன் சார் மீது தனிப்பட்ட பிரியம் உண்டு. அந்தப் பிரியத்தின் வெளிப்பாடுதான் 86 மற்றும் 87-ம் ஆண்டுகளில் ‘சென்னை செரிஃப்’ஆக சரவணன் சாரை நியமித்து பெருமைப் படுத்தினார் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆர் மிகுந்த பொருட்செலவில் தயாரித்து, இயக்கிய படம் ‘நாடோடி மன்னன்’. இந்தப் படத்தைப் பற்றி எம்.ஜி.ஆரிடம் பத்திரிகையாளர் கள் கேட்டபோது, ‘‘இந்தப் படம் ஓடினால் நான் மன்னன். ஓடாவிட்டால் நாடோடி’’ என்றார். அந்தச் சூழ்நிலையில் ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் ஏவி.எம்.செட்டியாரைப் பார்க்க வந்தார். ‘‘நாடோடி மன்னன் படத்தின் இறுதிகட்ட வேலைகளை முடிக்க கொஞ்சம் பணம் வேண்டும்’’ என்றார். செட்டியாருடைய சட்ட ஆலோசகர் எம்.கே.எஸ், ‘‘பணம் கொடுப்பதாக இருந்தால் எம்.ஜி.ஆரின் கையெழுத்து வேண்டுமே’’ என்றார்.
அதற்கு ‘‘நான் எம்.ஜி.ஆர் பிக்சர்ஸின் நிர்வாகி. நான் கையெழுத்துப் போடுகிறேன். என் மேல் நம்பிக்கை வைத்துக் கொடுங்கள்’’ என்றார் ஆர்.எம்.வீரப்பன். அவருடைய அணுகுமுறை செட்டியாருக்கு பிடித்துவிட்டது. கேட்ட பணத்தைக் கொடுத்தார். படம் ரிலீஸான உடனேயே வாங்கிய பணத்தைத் திரும்பக் கொண்டுவந்து கொடுத்தார் ஆர்,எம்.வீ. அவருடைய நாணயம் செட்டியாருக்குப் பிடித்துப்போய் ‘‘நீங்கள் படம் எடுத்தால், நான் பண உதவி செய்கிறேன்’’ என்றார். ஆர்.எம்.வீ ‘தெய்வத்தாய்’படத்தை சொந்தமாக தயாரித்தபோது, தான் சொன்னதைப் போலவே ஆர்.எம்.வீ அவர்களுக்கு செட்டியார் பணம் கொடுத்தார்.
என்னுடைய தந்தை காரைக்குடி இராம.சுப்பையாவிடம் சுயமரியாதை கொள்கைகளில் ஈடுபாடு கொண்ட ஓர் இளைஞராக அந்நாட்களில் அறிமுகமானார் ஆர்.எம்.வீ. தந்தை பெரியார் ஒருமுறை காரைக்குடி பகுதிக்கு சுற்றுப்பயணம் வந்தபோது, பெரியாருக்கு துணையாக ஆர்.எம்.வீ அவர்களைத்தான் என் தந்தை அனுப்பி வைத்தார். 4 நாட்கள் பெரியாருக்கு எல்லா உதவிகளையும் செய்தார் ஆர்.எம்.வீ. திருச்சியில் பெரியாரை ரயில் ஏற்றிவிடும்போது 4 நாட்களுக்கான செலவு கணக்கை எழுதி, மீதி பணத்தையும் அவரிடம் கொடுத்திருக்கிறார்.
ஆர்.எம்.வீயின் பொறுப்புணர்ச்சியையும், நேர்மையையும் கண்ட பெரியார் ‘‘குடியரசு பத்திரிகையில் வேலை செய்ய வர்றீயா?’’ என்று கேட்டிருக்கிறார். உடனே ஆர்.எம்.வி. சம்மதம் என்று கூறியிருக்கிறார். இதுதான் ஆர்.எம்.வீ அவர்கள் அரசியலுக்கு வருவதற்கான முதல் படி. அதன் பிறகு அரசியல் தலைவர்களின் பழக்கம், நாடக கம்பெனி நிர்வாகி, சத்யா பிலிம்ஸ் நிர்வாகி, எம்.ஜி.ஆரின் வலது கரம், அமைச்சர் என வளர்ந்தார். இன்று அருளாளர் ஆர்.எம்.வீ அவர்கள் கம்பன் கழகத்தின் தலைவர்.
ஆர்.எம்.வீ அவர்களுக்கு இன்று 90-வது பிறந்த நாள். இலக்கிய மங்கள விழாவாக கொண்டாடப்படும் இந்த இனிய விழாவில் என் தந்தை இராம.சுப்பையா அவர்களின் பெயரில் ஒரு விருதினை உருவாக்கியிருக்கிறார். அந்த விருதை அவர் மகனான எனக்கு வழங்குகிறார். இதில் ஆர்.எம்.வீ அவர்களின் நன்றி உணர்வு தெரிகிறது.
அந்த நன்றிக்கு என் தந்தை இராம.சுப்பையா குடும்பத்தின் சார்பில் உளம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். ஆர்.எம்.வீ அவர்கள் எனக்கு அண்ணன் மட்டுமல்ல; எனது தயாரிப்பாளரும்கூட. ஆம், அவர் தயாரிப்பில் நான் இயக்கிய அந்தப் படத்தில் ரஜினிகாந்த் நடித்தார். என்ன படம் அது?
- அடுத்த வாரம் பார்ப்போம்…
நன்றி-தஹிந்து

0 comments: