Monday, September 07, 2015

தீர்ப்பு வெளிவந்த நாளில் நேரடி ஒளிபரப்பை 10 கோடி பேர் பார்த்தகொலை வழக்கு -பட்டுக்கோட்டை பிரபாகர்

1994-ம்
ஆண்டு. அமெரிக்காவில் நடந்த ஒரு வழக்கின் தீர்ப்பு வெளிவந்த நாளில், அதன் நேரடி ஒளிபரப்பை 10 கோடி பேர் பார்த் தார்கள். நியூயார்க் பங்குச் சந்தையில் அன்று வர்த்தகம் 41 சதவிகிதம் குறைந் தது. நாட்டின் மொத்த உற்பத்தியில் 48 கோடி டாலர்கள் பாதிப்படைந்தது. அப்படி என்ன வழக்கு அது?
ஓ.ஜே.சிம்சன் புகழ்மிக்க கால்பந் தாட்ட வீரர். நடிகர். தொலைக்காட்சித் தொகுப்பாளர். முதல் மனைவியின் விவாகரத்துக்குப் பிறகு, நிகோல் பிரவுன் என்பவரை மணந்தார். ஆனால், அடிக்கடி சண்டை. பிரவுனை சிம்சன் திட்டியும் அடித்தும் இருக்கிறார்.
ஒரு கட்டத்தில் பிரவுன் சிம்சனை விட்டு விலகி தனியாக வாழ ஆரம்பித்தார். விவாகரத்து வழக்கும் தொடுத்தார். 1994-ம் ஆண்டு ஜூன் 13-ம் தேதி இரவு. பிரவுன் தன் வீட்டு வாசலில் கத்திக் குத்துப்பட்டு இறந்து கிடக்க, அருகில் ரொனால்ட் கோல்ட்மேன் என்கிற பிரவுனின் நண்பரும் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். போலீஸ் விசா ரணையில் இந்தக் கொலைகளில் சிம்ச னைத் தொடர்புப்படுத்தும் சில தடயங்கள் கிடைத்தன. பிரவுன் வீட்டுக்கு அருகில் இருந்து சிம்சனின் கார் புறப்பட்டுச் சென்றதைப் பார்த்ததாக பக்கத்து வீட்டுப் பெண் சொன்னாள். தடயங்களை ஆராய்ந்ததில் சந்தேகம் வலுத்ததால் சிம்சனை விசாரணைக்கு அழைத் தார்கள்.
ஜூன் 17-ம் தேதி சிம்சன் காவல் நிலை யத்துக்கு வரப் போவதை அறிந்து பத் திரிகையாளர்கள் எல்லாம் காத்திருக்க, சிம்சன் வரவில்லை. அவருடைய வக்கீல் சிம்சன் கொடுத்ததாக ஒரு கடிதத்தைப் பத்திரிகையாளர்களிடம் கொடுத்தார். அதில் சிம்சன் தனக்கும் அந்தக் கொலைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், மனம்வெறுத்து எங்கோ போவதாகவும், கிட்டத்தட்ட தற்கொலை கடிதம் போல எழுதியிருந்தார்.
அன்று மாலை 6.20 மணியளவில், நண்பர் ஒருவர் கார் ஓட்ட பின் சீட்டில் அமர்ந்து சிம்சன் காரில் செல்வதைப் பார்த்து ஒருவர் தகவல் சொல்ல, அடுத்த நொடியே ஏராளமான போலீஸ் கார்கள் சிம்சனைத் துரத்தத் தொடங்கின. சிம்சன் துப்பாக்கியை தன் நெற்றியில் வைத்து காரை நிறுத்தாமல் ஓட்டச் சொல்லி நண்பருக்கு வெறித்தனமாக கட்டளை யிட்டார். செல்போனில் ஒரு போலீஸ் அதிகாரி பேசினார். துப்பாக்கியை ஜன்னல் வழியாக வீசிவிட்டு சரணடையச் சொன்னார். சிம்சன் கேட்கவில்லை. 20 தொலைக்காட்சி நிறுவனங்களின் ஹெலிகாப்டர்கள் வானில் பறந்து வந்து இந்தத் துரத்தலைப் பதிவு செய்தன. சிஎன்என், ஏபிசி நியூஸ் போன்ற பெரிய தொலைக்காட்சிகளில் மற்ற நிகழ்ச்சிகளை நிறுத்திவிட்டு இதை நேரடி ஒளிபரப்பு செய்தார்கள். (இதை யூ டியூபில் காணலாம்)
இரவு 8 மணி வரை 80 கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்தத் துரத்தல் தொடர்ந்து, ஒருவழியாக சிம்சன் சரணடைய சம்மதித்தார். தன் வீட்டு வாசலில் காரை நிறுத்தி இறங்கி, வழக்கை முறைப்படி சந்திக்கிறேன் என்று கைதானார்.
340 நபர்களைப் பரிசீலித்து 12 ஜூரி களைத் தேர்வு செய்தார் நீதிபதி. தினமும் தொலைக்காட்சிகள் படம் பிடிக்க, விசாரணை தொடங்கியது. அரசுத் தரப்பின் குற்றச்சாட்டின்படி, சம்பவம் நடந்த அன்றிரவு சிம்சன் தன் காரில் பிரவுன் வீட்டுக்குச் சென்று கதவைத் தட்டினார். கதவைத் திறந்த பிரவுனை கத்தியால் குத்தினார். அப்போது அங்கு வந்த ரொனால்ட் கோல்ட்மேன் சிம்ச னைத் தடுக்க முயல, அவருக்கும் குத்துக் கள் விழுந்தன. இருவரும் இறந்ததும் காரில் ஏறிச் சென்றுவிட்டார் சிம்சன்.
கொலைகள் நிகழ்ந்த இடத்தில் சிம்ச னுக்குச் சொந்தமான ஒரு கையுறையும், பிரவுனின் ரத்தச் சுவடுகளுடன் கூடிய சிம்சனின் எண் 12 சைஸில் இருந்த ஷூ தடயங்களும், சிம்சனின் காரைப் பார்த்த சாட்சியும், சிம்சனுக்கு கத்தி விற்ற நபரின் சாட்சியும், சிம்சனுக்கும் அவர் மனைவிக்கும் அடிக்கடி சண்டை நடந்ததற்கான சாட்சிகளும் அவருக்கு எதிராக வைக்கப்பட்டன.
சிம்சன் தரப்பு எல்லாவற்றையும் மறுத்தது. அந்த ஷூவின் அளவு சரிதான். ஆனால் அது சிம்சனுடையது அல்ல என்றது. அந்தக் கையுறையை கோர்ட்டிலேயே அணிந்து பார்க்க, அது அவருக்கு சேரவேயில்லை. அதற்கு அரசுத் தரப்பு, இடைப்பட்ட காலத்தில் சிம்சன் வழக்கமாக எடுக்கும் மூட்டு வலிக்கான மருந்தை எடுக்காததால் கை வீங்கியிருக்கிறது என்று கொடுத்த விளக்கத்தை சிம்சன் தரப்பு ஏற்கவில்லை.
காரை அந்த நேரத்தில் அங்கு பார்த்ததாகச் சொன்ன சாட்சியும், கத்தி விற்றதாக சொன்ன சாட்சியும் தனியார் தொலைக்காட்சிகளுக்கு பணம் வாங்கிக்கொண்டு பேட்டிகள் அளித்ததால், அவர் கள் இருவரையும் அரசுத் தரப்பு கோர்ட்டில் ஆஜர் படுத்தவில்லை.
பிரவுனுடன் தங்கியிருந்த ஒரு தோழி போதை மருந்துக்கு அடிமை என்றும், அவள் மருந்து வாங்கி பாக்கி வைத்த தொகையை வசூலிக்க வந்த போதை மருந்து விற்ற ஆசாமியிடம் தோழிக்காக பிரவுன் வாதம் செய்ததால் கத்தியால் குத்திவிட்டு, தடுக்க வந்த ரொனால்டையும் கொன்றுவிட்டுப் போய்விட்டார்கள் என்பது சிம்சன் தரப்பு வாதமாக இருந்தது.
கொலைக்குப் பயன்படுத்திய கத்தியை அரசுத் தரப்பால் கைப் பற்ற முடியவில்லை. ஆனால் அவர்கள் குறிப்பிட்ட சிம்சன் விலைக்கு வாங்கிய கத்தியை சிம்சன் தரப்பு சமர்ப்பித்தது. அந்தக் கத்தி இன்னும் பயன்படுத்தப் படாமல் புதிதாக இருந்ததை நிரூபித் தார்கள்.
விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கிய நாளில் நாடு முழுதும் தொலைக்காட்சிப் பெட்டிகளின் முன்பாக மக்கள் அமர்ந்து விட்டார்கள். அலுவலகங்களில் எல்லா அலுவல்களும் ஒத்தி வைக்கப்பட்டன. பத்திரிகையாளர்கள் குவிந்தார்கள். சிம்சனை குற்றவாளி என்று சொல்ல போதுமான ஆதாரங்கள் இல்லை என்று ஜூரிகள் தீர்ப்பளித்தார்கள்.
இந்த வழக்கு பற்றி அத்தனை பத்திரிகைகளும் தொடர்ந்து எழுதின. அத்தனை தொலைக்காட்சிகளும் தொடர்ந்து காட்டின. பல புத்தகங்கள் எழுதப்பட்டன. இந்த வழக்கில் இனப் பிரச்சினையின் தாக்கம் பெரிதும் இருந்த தாக பலர் கருத்து சொன்னார்கள். ஜூரி களில் 8 பேர் கருப்பினத்தவரைச் சேர்ந்தவர்களாக இருந்ததும், நாடு முழு வதும் இதனை சிறுபான்மை இனத்தவருக்கு எதிரான வழக்காக மீடியா பிரச்சாரம் செய்ததும், இனக் கலவரம் வந்துவிடக்கூடாது என்கிற எச்சரிக்கையும் தீர்ப்பை பாதித்ததாக எழுதினார்கள். கொலைகளால் பாதிக்கப் பட்ட இரண்டு குடும்பத்தினரும் நஷ்ட ஈடு கேட்டு தனியாக வழக்கு தொடர்ந் தார்கள். அந்த வழக்கில் அவர்களுக்கு சிம்சன் 3 கோடியே 30 லட்சம் டாலர்கள் தர வேண்டும் என்று தீர்ப்பானது. அதை அவர் சரியாக செலுத்தாததால் சிம்சனுக் குச் சொந்தமான பல சொத்துக்களை அரசு கைப்பற்றி ஏலத்தில் விட்டு தொகையை அவர்களுக்குக் கொடுத்தது.
சிம்சன் லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்தை விட்டு வெளியேறி லாஸ் வேகாஸ் நகரத்துக்கு வந்து குடியேறினார். 2007-ம் வருடம் ஒரு உணவு விடுதியில் சிம்சனுக் குச் சொந்தமான பல கப்புகளும், மெடல்களும் இருப்பதை அறிந்து அவற்றைக் கைப்பற்ற 3 நண்பர்களோடு சிம்சன் சென்றார். தகராறு ஆனது. துப்பாக்கியைக் காட்டி மிரட்டினார். பொருட்களைக் கைப்பற்றினார். ஒரு ஆசாமியைக் கடத்தி வந்தார்.
போலீஸ் அவரைக் கைது செய்து விசாரித்தபோது, ‘‘அமைதியாகதான் கேட்டேன். துப்பாக்கி எடுத்துச் செல்ல வில்லை’’ என்று மறுத்தார். ஆனால், உடன் சென்ற நண்பர்கள் தன்டனைக்கு பயந்து அப்ரூவர்களாக மாறி உண்மையைச் சொல்லிவிட்டார்கள். அந்த வழக்கில் 33 வருடங்கள் சிறைத் தண்டனை கிடைத்து, இப்போதும் சிம்சன் சிறையில் இருக்கிறார்.
பெரிய வழக்கில் கோட்டைவிட்டதால் இந்த வழக்கில் காவல்துறை வசமாக அவரைச் சிக்க வைத்துவிட்டதாக எழுதி னார்கள். அந்த இரண்டு கொலைகளை யும் செய்தது யார் என்கிற கேள்விக்கு இன்றுவரை பதில் இல்லை.
- வழக்குகள் தொடரும்…

நன்றி - த இந்து

0 comments: