Monday, September 07, 2015

வா டீல் -வில்லன்களை விரும்புகிறார்கள் இன்றைய பெண்கள்! - நடிகர் அருண் விஜய் சந்திப்பு

அஜித் - கவுதம் மேனன் கூட்டணியில் உருவான ‘என்னை அறிந்தால்’ படத்தில் வில்லன் வேடம் ஏற்ற அருண்விஜய்க்குத் தற்போது தெலுங்கு கன்னடத்தில் அதிரடி வரவேற்பு. புனித் ராஜ்குமார், ராம்சரன் தேஜா என்று முன்னணி கதாநாயகர்களுடன் சவால்விடும் கதாபாத்திரங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். தமிழில் அடுத்து கவுதம் மேனன் இயக்கத்தில் தனது ஆக்‌ஷன் ஆட்டத்தைத் தொடங்க இருக்கும் அருண் விஜய் படத்தயாரிப்பிலும் குதித்திருக்கிறார். அவர் நமக்களித்த பேட்டி…
நாயகனாக நடிக்க வாய்ப்பு இல்லையென்றால் வில்லனாக நடிக்க வருவதுண்டு. ஆனால் ஹீரோவாக ஜெயித்துவிட்டு வில்லனாக நடித்தது ஏன்?
கவுதம் மேனனும் அஜித்தும்தான் இதற்குக் காரணம். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு ‘தடையறத் தாக்க’ படம் என்னை ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்த்தியது. நல்ல நடிகன் என்ற பெயரும் கிடைத்திருக்கிறது. உண்மையில் நானொரு ஹீரோ மெட்டீரியல்தானே தவிர, வில்லன் வேடங்கள் ஏற்பதற்கான தன்மைகள் என்னிடம் கிடையாது. எனது முரட்டுத்தனத்தை திரையில் பார்க்கும் ரசிகர்கள் “நீங்க முறைச்சாலே பயமா இருக்கு சார். ஹீரோன்னா இப்படித்தான் இருக்கணும்” என்கிறார்கள்.
நிஜத்தில் நான் மென்மையானவன். என்னை எப்படி பி.ஆர் செய்துகொள்வது என்பதுகூடத் தெரியாதவன். அப்பாவின் புகழ் வெளிச்சத்தில் சினிமாவில் நுழைவது ஈஸியாக இருந்தது. ஆனால் இந்த இடத்துக்கு வந்துசேர ரொம்ப கஷ்டப்பட்டுவிட்டேன். இதன் பிறகு நல்ல இயக்குநர்களுடன் அதிகம் வேலை செய்ய வேண்டும் என்று நினைத்தபோதுதான் கவுதம் அழைத்தார். “ எனது கேரக்டருக்கு என்ன முக்கியத்துவம் கதையில் இருக்கிறதோ அதில் ஒருதுளி கூட அருண் கேரக்டருக்கு குறைவிருக்கக் கூடாது” என்று ஒரு சகோதரனைப் போல அஜித் இட்ட கட்டளை. இவை இரண்டும்தான் ‘என்னை அறிந்தால்’ படத்தில் வில்லனாக நடிக்க காரணங்கள்.
விக்டர் கதாபாத்திரத்துக்குப் பிறகு வெளியே சென்றால் ரசிகர்கள் உங்களை எப்படி எதிர்கொள்கிறார்கள்?
சொன்னால் நம்ப மாட்டீர்கள். இளம் பெண் ரசிகைகள் என்னைக் கண்டால் “ரொம்ப க்யூட்டான வில்லன்” என்று சொன்னது எனக்கு கொஞ்சம் அதிர்ச்சி கலந்த ஆச்சரியமாக இருந்தது. வில்லன்களை இன்றைய பெண்கள் வெறுப்பதில்லை. அவர்களுக்கு வில்லன்களைப் பிடித்திருக்கிறது என்பதை விக்டர் எனக்கு உணர்த்திவிட்டான். இது எனக்குக் கிடைத்த பாராட்டு என்பதைவிட என் கேரக்டரை உருவாக்கிய கவுதம் மேனன் எனும் இயக்குநருக்குக் கிடைத்த பாராட்டாக நினைக்கிறேன்.
என்னால் வில்லனாகவும் நடிக்க முடியும் என்பதை நிரூபிக்கக் கிடைத்த வாய்ப்பாகவே இதை எடுத்துக்கொள்கிறேன். ஆனால், இனி வில்லனாக நடிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. காரணம் ‘என்னை அறிந்தால்’ படத்துக்குப் பிறகு எனக்குப் பெண் ரசிகர்கள் அதிகமாகிவிட்டார்கள். அவர்களிடம் நான் வெறுப்பைச் சம்பாதித்துக்கொள்ள விரும்பவில்லை.
தற்போது கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்துக்கொண்டிருக்கும் இரண்டு படங்களிலுமே நீங்கள் வில்லன் வேடம்தான் ஏற்றிருக்கிறீர்கள் என்று செய்திகள் வெளியானதே?
அது முழுமையான உண்மையல்ல. எதிர்மறை வேடங்கள் ஏற்றிருப்பது உண்மை. ஆனால் வில்லன் வேடங்கள் அல்ல. கன்னடத்தில் புனித்ராஜ்குமாரும் நானும் சரிசமமான கேரக்டர்களில் நடிக்கிறோம். இரண்டு கேரக்டர்களுக்கு இடையிலும் நடக்கும் போராட்டம்தான் கதை. படத்தின் தலைப்பு ’ சக்ர வியூகம்’. என் ஹீரோ இமேஜுக்கு சேதம் ஏற்படுத்தாத கேரக்டர் என்று உறுதியாகச் சொல்ல முடியும்.
அதே போல இந்தப் படத்தை இயக்குபவர் ’ எங்கேயும் எப்போதும்’ பட இயக்குநர் சரவணன். அவர் எதிர்மறை கதாபாத்திரங்களுக்குத் தரும் கலரே தணியாக இருக்கும். அதனால்தான் ஒப்புக்கொண்டேன்.
தெலுங்கில் ராம்சரண் தேஜாவின் படத்தில் அவருக்கு இணையான எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இதுவும் வில்லன் வேடம் அல்ல. இந்த இரண்டு வாய்ப்புகளுமே எனக்கு ஸ்டைலிஷாக அமைந்துவிட்டன. எதிர்மறை வேடங்கள் என்றாலும் நான் ஏற்றுக்கொண்டதற்குக் காரணம் அடுத்து தெலுங்கிலும் கன்னடத்திலும் நான் ஹீரோவாக நடிக்க நல்ல அறிமுகமாக அமையும் இல்லையா? இந்த இரண்டு ஸ்டார்களுமே மிகப் பெரிய ரசிகர் வட்டத்தைக் கொண்டவர்கள். இதைவிடச் சிறந்த லாஞ்ச் பேட் எனக்குக் கிடைக்காது.
இந்திப் படத்தில் நடிக்கப்போவது உண்மையா?
ஆமாம்! ஆனால், இது கேரக்டர் ரோல் கிடையாது. நான்தான் லீட் ரோல் செய்ய இருக்கிறேன். நான் எதிர்பார்க்காத வாய்ப்பு இது. இதுவும் வில்லன் ரோல் அல்ல என்பதைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். தமிழ்நாட்டிலிருந்து நிறைய பேர் இந்திக்குச் சென்று சாதித்திருக்கிறார்கள். அந்த வரிசையில் கண்டிப்பாக நானும் இடம்பிடிப்பேன். இயக்குநர், தயாரிப்பு நிறுவனம் முடிவானதும் கண்டிப்பாகத் தெரிவிப்பேன்.
கதாநாயகர்கள் அனைவரும் சொந்தத் தயாரிப்பு நிறுவனம் தொடங்குவது வாடிக்கையாகிவிட்டது. நீங்கள் தொடங்கியிருப்பதில் சிறப்புக் காரணம் உண்டா?
எனது மாமனாரின் தயாரிப்பு நிறுவனத்தில்தான் நான் நடித்துவந்தேன். அதில் நான் ஒரு நடிகன் மட்டும்தான். புதிய திறமையாளர்களை அறிமுகப்படுத்த ஒரு தயாரிப்பு நிறுவனம் தொடங்க வேண்டும் என்பது என் நீண்டநாள் கனவு. புதிய இயக்குநர்கள், புதிய நடிகர்கள் என்று சரியான வாய்ப்புக்காக அலைந்துகொண்டிருப்பவர்களுக்கு சுதந்திரமான ஒரு இடமாக என் தயாரிப்பு நிறுவனம் இருக்கும். இதில் தரமான பொழுதுபோக்குப் படங்களைத் தயாரிக்க வேண்டும் என்பதுதான் திட்டம். இப்போதே கதைகளைக் கேட்க ஆரம்பித்திருக்கிறோம். கதைகளைப் பொறுத்து ‘சின்ன, பெரிய’ என்ற பாகுபாடு இல்லாமல் படங்களைத் தயாரிக்கப்போகிறேன். எனது மனைவி ஆர்த்தி கற்பனை வளம் மிக்கவர். தயாரிப்பு நிறுவனத்தில் முக்கிய நிர்வாகப் பொறுப்பைக் கவனித்துக்கொள்வார்.
அடுத்து தமிழில்?
எனது ‘வா டீல்’ படம் வெளியாக இருக்கிறது. அந்தப் படத்துக்குப் பிறகு தமிழில் நான் எந்தப் படத்தையும் ஒப்புக்கொள்ளவில்லை. காரணம் சிம்பு படத்தை முடித்துவிட்டு கவுதம் மேனன் வந்ததும் அவரது இயக்கத்தில் நடிக்கும் திட்டம் இருக்கிறது. அவரும் ஒகே சொல்லியிருக்கிறார். எனவே அவருக்காகக் காத்திருக்கிறேன்.


நன்றி - த இந்து

0 comments: