Monday, September 21, 2015

ட்விட்டர் தளத்தில் தற்போது இருக்கும் நடிகைகளில் மிகவும் தீவிரமாக இயங்க காரணம் என்ன?-நடிகை ராய் லட்சுமி பேட்டி

தமிழில் 'சவுகார்பேட்டை', தெலுங்கில் 'கபார் சிங்' இரண்டாம் பாகம், இந்தியில் இரண்டு படங்கள் என மிகவும் மும்முரமாகப் பணியாற்றிவருகிறார் ராய் லட்சுமி. சென்னை, ஹைதராபாத், மும்பை என மாறி மாறிப் பறந்துகொண்டிருந்தவரைச் சந்தித்ததிலிருந்து...
‘சவுகார்பேட்டை' படத்தில் பேயாக நடிக்கிறீர்கள் போல?
என்னுடைய தமிழ் சினிமா வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படமாக 'சவுகார்பேட்டை' படத்தைப் பார்க்கிறேன். வீட்டில் ரொம்ப அடக்கமான, கல்யாணம் ஆகப்போகிற பெண் எப்படிப் பேயாக மாறுகிறாள் என்பதுதான் கதை. முழுக்க பயம் கலந்த காமெடிதான். நான் இதுவரை பண்ணிய படங்களின் வேடங்களைவிட இந்தப் படத்தில் நான் நடித்திருக்கும் வேடம் மிகவும் கடினமானது. நடனம், சண்டை, பேயாகக் கத்துவது இப்படி என்னுடைய நடிப்புக்கு நிறைய தீனி போட்டிருக்கிறது இந்தப் படம்.
முதன்முறையாக தெலுங்கில் பவன் கல்யாணோடு நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறீர்களே?
பவன் கல்யாணுடன் நடிக்கும் படத்தில் நான், பவன் கல்யாண் மற்றும் காமெடியன்கள் வருவது போல் தனியாக ஒரு ட்ராக் இருக்கிறது. அதில் ஒரு பாடலும் இருக்கிறது. வித்தியாசமான வேறு ஒரு கலரில் எனக்கு அந்தப் படம் அமையும்.
நீங்கள் நடிக்கவிருக்கும் ‘ஜூலி-2' உங்களது 50-வது படமா?
இந்தியில் ‘ஜூலி-2' என்பது ஒரு பெரிய பிராண்ட். அதில் நான் ஒப்பந்தமாகியிருக்கிறேன். எனது 50-வது படம் நல்ல கதையாக அமைந்துவிட வேண்டும் என்று தமிழிலும் தெலுங்கிலும் கதைகள் கேட்டுவந்தேன். ஆனால், எனக்கு இந்தியில் அந்த மாதிரி ஒரு நல்ல கதை அமைந்தது சந்தோஷம்.
‘ஜூலி-2'க்கு முன்பாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சோனாக்‌ஷி சின்ஹாவுடனும் அனுராக் காஷ்யப்புட னும் ‘அகிரா'வில் நடித்துவருகிறேன். அந்தப் படத்திலும் எனது பாத்திரம் கண்டிப்பாகப் பேசப்படும்.
தொடர்ச்சியாக கிளாமர் வேடங்களில் நடித்துவருகிறீர்களே?
இப்போது மக்கள் எந்த மாதிரியான படங்களைப் பார்ப்பார்கள் என்பதை உறுதியாகக் கணிக்க முடியவில்லை. வெற்றி கொடுத்தே ஆக வேண்டிய சூழல். கிளாமர் என்பது படத்துக்குத் தேவைப்பட்டால் பண்ணுகிறேன், அதை மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். பாவாடை கட்டிக்கொண்டு ஒரு படத்தில் நடித்தாலும், அது கிளாமராகத்தான் இருக்கும். ஏனென்றால், எனது உடல்வாகு அப்படி அமைந்துவிட்டது. பிகினி உடை அணிந்துகொண்டெல்லாம் நான் அதிகம் நடிக்கவில்லையே. இப்போது ‘ஜூலி-2' கதைக்காக ஒரே ஒரு காட்சியில் பிகினி உடையில் தோன்றப்போகிறேன்.
ட்விட்டர் தளத்தில் தற்போது இருக்கும் நடிகைகளில் மிகவும் தீவிரமாக இயங்குவது நீங்கள்தான். காரணம் என்ன?
என்னுடைய புகழ்ச்சிக்காக நான் ட்விட்டர் தளத்தைப் பயன்படுத்துவது கிடையாது. நான் பண்ணும் படங்களை ட்விட்டர் தளத்தில் விளம்பரப்படுத்துவது கிடையாது. ட்விட்டர் தளத்தை நான் ரசிகர்களிடம் கலந்துரையாடும் ஒரு தளமாக உபயோகப்படுத்திவருகிறேன். அவ்வளவுதான். பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டால், ரசிகர்கள் “ஹாய்” என்பார்கள். அவர்கள் என்ன கேள்வி கேட்டாலும், நேரடியாக பதில் சொல்லிவிடுகிறேன். என்னைப் பற்றி வரும் வதந்திகள் அனைத்துமே உண்மையா என்று கேட்கிறார்கள், அதற்கு பதிலளிக்கிறேன். முன்பு ஒரு வதந்தி வந்தால், போன் பண்ணி இது தவறு என்று அனைவரிடமும் சொல்ல வேண்டும். இப்போது அந்த சூழ்நிலை இல்லை. ட்விட்டர் தளத்தில் வதந்திக்கு விளக்கம் அளித்தால் சரியாகிவிடுகிறது.
இப்போதும் அஜித் ரசிகர்கள் ‘மங்காத்தா- 2' படத்தை வெங்கட் பிரபு இயக்க வேண்டும் என்று கூறிவருகிறார்கள். அதில் நடிக்க வாய்ப்பு வந்தால்?
கண்டிப்பாகப் பண்ணுவேன். அந்தப் படத்தில் எனக்கு நல்ல வேடம் கொடுத்தார் வெங்கட் பிரபு. ஆனால், படத்தின் இறுதியில் என்னைக் கொன்றுவிட்டார். ‘மங்காத்தா-2'வில் நல்ல பாத்திரம் அமைந்தால் உறுதியாகப் பண்ணுவேன்.
திருட்டுத்தனமாக வீடியோ எடுத்து வெளியிடுவது அதிகரித்துவரும் சூழலில், அதிலிருந்து உங்களை எப்படித் தற்காத்துக்கொள்கிறீர்கள்?
பெண்களுக்குத் தனியுரிமை என்பது இல்லாமல் போய்விட்டது. மக்களுக்குத் தெரிந்த முகமாக இருந்தால் சிலர் அதைத் தவறாக உபயோகிக்கிறார்கள். இன்றைய சூழலில் பெண்களுக்குப் பாதுகாப்பு குறைந்துவருகிறது. சின்னச் சின்ன கிராமங்களிலெல்லாம் உதவி செய்யக்கூட ஆள் இல்லாமல் பெண்கள் தவிக்கிறார்கள். ஆனால், நகரங்கள் கொஞ்சம் மாறியிருக்கின்றன. பெண்களுக்குத் துணிச்சல், கல்வி உள்ளிட்ட விஷயங்கள் அவசியம் என்று உணர்ந்திருக்கிறார்கள். பெண்களுக்குப் பாதுகாப்பு என்பது ஒருத்தருடைய கையில் கிடையாது. ஒரு பெண்ணுக்குப் பிரச்சினை என்றால் அனைவரும் ஒன்றுகூட வேண்டும்.
எப்போது திருமணம் செய்துகொள்ளத் திட்டம்?
எனது திரையுலக வாழ்க்கை இப்போதுதான் நல்ல வழியில் போய்க்கொண்டிருக்கிறது. அது உங்களுக்குப் பிடிக்கவில்லையா! திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்று சொல்லவில்லை; செய்துகொள்வேன். ஆனால், இப்போது அதற்கான சூழ்நிலையோ எண்ணமோ இல்லை. இப்போது நான் சிங்கிளாகத்தான் இருக்கிறேன், யாரையும் காதலிக்கவில்லை. அதற்கான நேரமும் இல்லை. படப்பிடிப்பு, உடல் குறைப்பு என ஒரு நாள் முழுக்க மும்முரமாகப் பணியாற்றும்போது காதலுக்கு என்று தனியாக நேரம் ஒதுக்க முடியாது. காதலுக்கு நேரம் ஒதுக்கினால் மட்டுமே, அதற்கு நம்பிக்கையோடு இருக்க முடியும். மும்முரமாகப் பணிகளில் இருக்கும்போது காதலித்தால், அந்தக் காதல் தோல்வியில்தான் முடியும் என்பது என் கருத்து.
உங்களின் கனவுப் பாத்திரம் எது?
என்னுடைய கனவுப் பாத்திரம் எனக்குக் கிடைத்துவிட்டது. ‘ஜூலி-2'-ல் நான் பண்ணவிருக்கும் பாத்திரமே என் கனவுப் பாத்திரம்.

0 comments: