Sunday, September 20, 2015

மண்ணுளி முதல் ஈமு வரை...!- மிரள வைக்கும் கொங்கு மோசடிகள் -3

ரைஸ் புல்லிங்

'இந்த கல் மோதிரத்தை போட்டா உங்க பிரச்னை எல்லாம் தீர்ந்துடும். இந்த உலோகத்தை வீட்டு பீரோவுல வைச்சிருந்தா உங்களுக்கு பணப்பிரச்னையே வராது' என்பன போன்ற சாதாரண டெக்னிக்தான் ரைஸ் புல்லிங். ஆனால் அவ்வளவு சாதாரணமாக இல்லாமல் இதை பிரம்மாண்டப்படுத்தியதில்தான் இவை மோசடிகளில் அசைக்க முடியாத இடத்தை பிடித்துக்கொண்டன.  'உங்களை யாராலும் அசைக்க முடியாத சக்ரவர்த்தியாக இந்த பொருள் மாற்றும்' என யாரையாவது நம்ப வைத்து, அதை அவர்களிடம் பல கோடிக்கு விற்க முடியுமா? முடியும் என்றால் அது நிச்சயம் ரைஸ் புல்லிங் மட்டும்தான். ஆன்மீகத்தை கலந்து அரங்கேற்றப்படும் இந்த மோசடி, கொங்கு மண்டல மோசடிகளில் மிக மிக பிரசித்தி பெற்றது.

ரைஸ் புல்லிங் மோசடி என்றால்?

கோவிலில் உள்ள கோபுர கலசத்தில் உள்ள இரிடியம் எனும் உலோகம், இடி தாக்குவதால் சக்தி வாய்ந்த உலோகமாக மாறிவிடும் என்றும், அதை நீங்கள் வைத்திருந்தால் எந்த கொம்பனாலும் உங்களை அசைக்க முடியாது என்பதும்தான் இந்த மோசடி. அப்படி இந்த மோசடியை நடத்தும்போது, கோபுர கலசத்தில் உள்ள இரிடியத்தின் சக்தியை விவரிக்க மோசடியாளர்கள் செய்யும் ஹைடெக் சோதனைக்கு (?) பெயர்தான் ரைஸ் புல்லிங். 

அதாவது சக்திவாய்ந்த இரிடியத்தை கொண்ட கோபுர கலசம் என்றால், சுற்றிலும் அரிசியை போட்டால் இழுத்துக்கொள்ளும் சக்திவாய்ந்ததாக சொல்லப்படும். கலசத்தில் சக்தி வாய்ந்த இரிடியம் இருக்கா என சோதிக்கும் முறைதான் இது. 

அரிசியை இழுத்துக்கொள்ளும் சக்தி வாய்ந்தது என்பதால் இது ரைஸ் புல்லிங் அதாவது அரிசியை இழுப்பது என்ற பெயர் பெற்றுள்ளது. 

இரிடியத்தின் பெயரால்...

ரைஸ் புல்லிங் என அழைக்கப்பட்டாலும், இந்த மோசடியின் மூலமாக இருப்பது இரிடியம்தான். இரிடியம் என்பது கெட்டியான, அடர்த்தியான ஒரு உலோகம். இதன் உருகுநிலை என்பது மிக அதிகம் என்பதால், உயர் வெப்ப நிலைகளில் இந்த உலோகம் பயன்படும். மேலும் இடி விழுந்தாலும் இது தாங்கும் என்பதால் கோவில்களில் கடவுள் சிலையை பாதுகாக்க, பொக்கிஷங்களை பாதுகாக்க இரிடியம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பழமையான கோவில் கலசங்களில் இந்த இரிடியம் பயன்படுத்தப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. 

இந்த இரிடியம் இடி தாக்கப்பட்டால் அது சக்தி மிக்கதாய் மாறி விடும் என்றும், அதை வைத்திருப்பவர்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றிதான் எனச்சொல்லி இரிடியத்தின் பெயரால்தான் இந்த மோசடி நடத்தப்படுகிறது.

மோசடி நடப்பது எப்படி?

வெறுமனே கோபுர கலசம், இடி, இரிடியம் எனச்சொல்லி யாரையும் நம்ப வைக்க முடியாதல்லவா? அதனால் இதற்கு மிகப்பெரிய ஆன்மீக பின்புலத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். "கோவில்ல தீர்த்தமா கொடுக்கறது வெறும் தண்ணீர்தான். ஆனா அது எப்படி நம் நோயை தீர்க்குது. பிரச்னையை தீர்க்குது? ஏன்னா கோவில்ல கிடைக்குற பாசிட்டிவ் வைப்பரேசன். மந்திரங்கள் சக்தியா மாறி தீர்த்தம் நோய் தீர்க்குற, பிரச்னை தீர்க்குற மருந்தா மாறுது. அது மாதிரிதான் கோவில்ல ஆயிரக்கணக்கான முறை உச்சரிக்கிற மந்திரங்கள் மிகப்பெரிய சக்தியாக மாறி கோவில் கலசத்தை அடையும். 

அதுல இடி, மின்னல் தாக்கும் போது அதன் சக்தி உச்சம் பெறும். அப்படி சக்தி மிக்க கலசத்தை வைச்சிருக்குறவங்கதான் ராஜா. அவங்களுக்கு ஒரு பிரச்னையும் வராது" என்று ஆன்மீக காரணத்தைச் சொல்லிதான் இந்த மோசடி அரங்கேறுகிறது.

ஏமாற்றுவது யாரை?
மற்ற மோசடிகளை போல் இதில் சாதாரணமானவர்கள் குறிவைக்கப்படுவதில்லை. ஆனால் பயன்படுத்தப்படுவார்கள். இந்த மோசடியின் டார்கெட். ஆன்மீக நம்பிக்கை கொண்ட மிகப்பெரிய செல்வந்தர்களும், தொழிலதிபர்களும், அரசியல் பிரமுகர்களும்தான். அவர்களை நம்ப வைக்க சாதாரண மக்கள் பயன்படுத்தப்படுவார்கள். 'ரைஸ் புல்லிங் கலசம் ரொம்ப சக்தி வாய்ந்தது. அது கிடைச்சா கோடியில் பணம் கிடைக்கும். சக்தி வாய்ந்த கோவில் கலசங்கள் பற்றி தகவல் சொன்னாக்கூட பல லட்சம் கிடைக்கும். 

அப்படி சக்தி வாய்ந்த கோபுர கலசத்துக்குப் பக்கத்தில் அரிசியைக் கொண்டு போனால், அது மெரூன் கலராகி கலசத்துல ஒட்டிக்கும். டார்ச் லைட் அடிச்சா பல்ப் ஃப்யூஸ் ஆகிடும். கலசத்துக்கு மேல் ஊசியைப் போட்டா அந்தரத்தில் நிற்கும்...'' என ஏராளமான கதைகளை அள்ளிவிட்டு, வேலையே செய்யாம பணக்காரர்களாகணும்னு இருக்குற சாதாரணமானவர்களை டார்ச் லைட்டும் கையுமா, கோவில் கோவிலா சுத்த வைச்சுருவாங்க. அதுக்கு அப்புறம் இது உண்மைதான்னு நம்ப வைக்குற மாதிரி சில புத்தகங்களை இவங்களே பிரிண்ட் பண்ணுவாங்க. 

டார்கெட் பண்ற ஆட்கள் கிட்ட இந்த பேச்சு, புக், செய்தி எல்லாம் போய் சேர்ற மாதிரியான வேலைகளை செய்வாங்க. இதுக்கு அப்புறம் அதுக்கு அவ்வளவு சக்தியா?னு ஆர்வம் ஆயிட்டா அவ்வளவுதான். அடுத்த ஓரிரு சந்திப்புல கோபுர கலசமும், பல கோடி பணமும் கை மாறி இருக்கும்.

ஏமாறுவதை தவிர வேறு வழியே இல்லை?

அட போங்க பாஸ். இதுக்கெல்லாம் ஏமாறுவாங்காளா?னு தானே கேட்கறீங்க. நிச்சயம் ஏமாறுவாங்க. ஏன்னா அவங்க சொல்ற முறையும், தேர்வு செய்யுற ஆளும் அப்படி. அரசியல்ல அல்லது தொழில்ல நல்ல வளர்ச்சி கண்டு சமீபத்துல கொஞ்சம் இறங்கு முகத்துல இருக்குறவங்க, இல்லை பெரிய வளர்ச்சியை எதிர்பார்த்துட்டு இருக்குறவங்க கிட்ட, ஆன்மீகம் கலந்து சொல்லும்போது, அதுவும் இவங்க ஸ்டைல்ல சொல்லும் போது ஏமாற்றதை தவிர வேறு வழி இல்லைங்கற மாதிரிதான்  தோணும். அப்படி ஏமாத்துவாங்க.

கோவில், மந்திரங்கள், பாசிட்டிவ், நெகட்டிவ் வைப்பரேசன், கலசம், இடி என இவர்கள் அடுக்கடுக்காய் சொல்லும் விஷயங்கள் உங்களை கொஞ்ச நேரம் சிலிர்க்க வைத்து, அப்படியே நம்ப வைத்துவிடும். 

இதற்காக மோசடியாளர்கள் பின்பற்றும் டெக்னிக் மிக நுட்பமானது. கோவில் மந்திரங்களையும், கலசத்தையும், இடியையும் வைத்து இவர்கள் விளையாடும் வார்த்தை விளையாட்டில் நிச்சயம் மயங்கி விடுவீர்கள். அந்தளவுக்கு பேசி ஆளை மயக்குவதில் சிறந்து விளங்குவார்கள் இவர்கள்.

யாகம் நடத்தி ஏமாற்றும் கும்பல்

நீங்கள் ஏமாறத் தயாராகிவிட்டீர்கள் என்பதை உங்கள் செயல்பாட்டில் இருந்து அறிந்து கொள்ளும் அவர்கள், அடுத்து சமீபத்தில் கோவில் கோபுர கலசம் திருடப்பட்ட ஒரு செய்தியை காட்டுவார்கள். 'இந்த கலசம் ரொம்ப சக்தி வாய்ந்தது. 5 மாசமா பத்திரமா இருக்கு. இதன் சக்தியை கூட்ட தொடர்ச்சியா மந்திரங்கள் ஓதிட்டு வர்றோம். இது மட்டும் உங்க கிட்ட இருந்தா அவ்வளவுதான் நீங்க எங்கேயே போய்டுவீங்க' என உங்களின் ஆசையை தூண்டுவார்கள். 

சமீபத்தில் அரசியலில் பெரும் எழுச்சி பெற்றவரை சுட்டிக்காட்டி, "அவர்கிட்ட  இந்த கலசம் இருக்கு. இந்த கலசம் வந்த பின்னாடிதான் எல்லா பிரச்னைகள்ல இருந்து வெளியே வந்தார். கலசம் இருக்குற வரை அவருக்கு இறங்கு முகங்கறதே இல்லை," என நீங்கள் சர்வசாதாரணமாய் தொடர்பு கொள்ள முடியாத ஒருவரைப்பற்றி தத்ரூபமாய் கதை சொல்வார். 

'நீங்க வேணா அந்த கலசத்தோட சக்தியை பாருங்க. அப்போ தெரியும் அதோட சக்தி' என அடுத்த மீட்டிங்கான நாள் குறிக்கப்படும். நடுநிசி ஒன்றில் யாகம் நடத்தப்படுவதைப்போன்று அந்த சோதனை நடக்கும். அரசியல் பிரமுகரோ, தொழிலதிபரோ கோவில் கருவறையில் அமரவைக்கப்படுவதை போல சட்டையில்லாமல், மாலை அணிவித்து அமர வைக்கப்படுவார்கள். சிறிய யாகம் வளர்த்து, பட்டுத் துணியால் போர்த்தப்பட்ட கலசம் கொண்டு வரப்படும். பின்னர் கலசத்தை வைத்து சுற்றிலும் அரிசியை கொட்ட அரிசியை வேகமாக உள்ளிழுத்துக்கொள்ளும் கலசம். அந்த நேரம் கடவுளை நேரில் காணும் காட்சி போல அந்த காட்சி மிகப்பெரியதாய் உருவகப்படுத்தப்படும்.

இதை பார்த்தவர் கோடிகள் அடங்கிய பெட்டியை கொடுத்து விட்டு, பணத்தை பெற்றுச்செல்வது நிச்சயம்.

ஏமாற்றுவது எப்படி?

எப்படி அரிசி, கலசத்தை நோக்கி இழுக்கப்படும் என கேட்கிறீர்கள் தானே. அது ரொம்ப சிம்பிள் டெக்னிக் தான். கலசத்தில் காந்தம் பொருத்தப்பட்டிருக்கும். அரிசியில் இரும்பு துகள் இருக்கும். இரும்பு துகள் இருக்கும் அரிசியை காந்தம் கவர்ந்திழுப்பது அதிசயமா என்ன? இதைத்தான் ஏதோ மிகப்பெரிய அதிசயம் நடந்ததாக சொல்லி ஏமாற்றப்படுகிறார்கள். அரிசி முழுவதும் இரும்பு துகளாய் இருந்தால் வேகமாக இழுத்துக்கொள்ளும். வேகமாக இழுத்துக்கொண்டால் இதன் சக்தி மிகவும் அதிகம் என்பார்கள். ' ஏ.. அப்பா... 20 செ.மீ தூரம் அரிசியை இழுத்திருக்கு. இது மாதிரி எந்த கலசமும் இழுத்ததில்லை. ரொம்ப சக்தி வாய்ந்த கலசம்!"  என்பார்கள். உண்மையில் அவை டுபாக்கூர் கலசங்கள். 

இதை தயாரிப்பதற்கென்றே சில இடங்கள் இருக்கிறது. காந்தம் வைத்து தயாரிக்கப்பட்ட இந்த சாதாரண கலசம், சில கோடிகளுக்கு கைமாற்றப்பட்டிருக்கும். அதை இன்னும் சக்திவாய்ந்தது என பலர் வீட்டில் வைத்திருக்க கூடும். உண்மை தெரிந்து திருடனுக்கு தேள் கொட்டிய கதையாக அதை தூர எரிந்து விட்டு அடுத்த வேலையை பார்த்துக்கொண்டிருக்க கூடும்.

இதிலும் உண்டு 'ப்ளான் பி'

கடந்த வாரம் நாக மாணிக்க கல் மோசடியில் சொல்லப்பட்டதைபோல, இதிலும் ப்ளான் பி உண்டு. கலசத்தை சுற்றி அரிசியை கொட்டி, அரிசியை இழுப்பதை எல்லாம் காட்டிய பின்னர்,  அதாவது கடைசி நேரத்தில் நீங்கள் இந்த டீலுக்கு ஒத்து வரவில்லை என்றால், நீங்கள் அங்கிருந்து நிச்சயம் பணத்துடன் திரும்ப முடியாது. அதுதான் ப்ளான் பி. 

நீங்கள் இந்த டீலுக்கு ஒத்துவரமாட்டீர்கள் என தெரிந்தால், உடனே அங்கு போலீஸ் வரும்.  போலீஸ் என சத்தமிட்டு, அந்த கும்பல் கலசங்களோடு உங்கள் பணத்தையும் பறித்துக்கொண்டு செல்லும். எல்லாவற்றையும் பின்னர் பேசலாம் என்பார்கள். அதன் பின்னர் அவர்களுக்கு அழைப்பே வராது. கலசத்தை மையப்படுத்தி அதுவரை பேசி வந்தவர்கள் எல்லாம் திடீரென காணாமல் போவார்கள். அப்படி நடக்கும் போது அவர் முழுமையாக ஏமாற்றப்பட்டிருப்பார். 

இரிடியம் சக்தி வாய்ந்ததா?

இது தொடர்பாக மின்னியல் துறை சார்ந்த சிலரிடம் கேட்டோம். "இரிடியம் ரொம்ப காஸ்ட்லியான உலோகம். இது, எரிமலைக் குழம்புகளில் இருந்து உருவாகிறது. இந்தியாவில் உற்பத்தியாகறது இல்லை. ஒரு கிராம் இரிடியம் எப்படியும் 3 ஆயிரத்துல இருந்து 7 ஆயிரம் வரை கிடைக்குது. இரிடியம் வெப்பத்தை தாங்கும், அரிமானத்தைத் தடுக்கும் அப்படீங்கறதால ராக்கெட்டுகளில் கோட்டிங் மெட்டீரியலாகப் பயன்படுத்துகிறார்கள். கோபுரக் கலசங்களிலும் இதை கோட்டிங் கொடுத்து இருக்கலாம். இரிடியத்துக்கு வேற எந்த விதமான விசேஷ குணமும் கிடையாது. இது எல்லாம் சுத்தப்பொய். காசு பிடுங்கற வேலை," என்றார்.

யார் சொன்னா கேக்குறாங்க? நீங்க இந்த கட்டுரையை படிச்சுகிட்டு இருக்கறப்போ கூட ஏதோ ஒரு இடத்தில், யாரோ ஒருவர் கோபுர கலசத்துல டார்ச் அடிச்சு பாத்துட்டு இருப்பார். இன்னொரு இடத்தில் கலசத்தை சுத்தி அரிசியை கொட்டி இன்னொரு கும்பல் பேச்சு நடத்திட்டு இருக்கலாம்.

மண்ணுளி, நாக மாணிக்கம், ரைஸ் புல்லிங்னு கொங்கு மண்டலத்துல ஆன்மீகத்தை வைத்துதான் இவ்வளவு மோசடியும் நடக்குது என நினைத்து விட வேண்டாம். ஆன்லைன் மோசடிகளிலும் கொங்கு மண்டலம்தான் நம்பர் ஒன். மோசடி நிறுவனங்களில் இழந்த தொகை மட்டும் பல ஆயிரம் கோடி. அப்படி ஆன் லைனில்  எப்படி மோசடி பண்ணுனாங்கனு கேட்கறீங்களா? 

அவசரப்பட்டால் எப்படி, அடுத்த வாரம் பார்ப்போம்...

- ச.ஜெ.ரவி

நன்றி-விகடன்

0 comments: