Tuesday, September 15, 2015

பானு -சினிமாவிமர்சனம்

நடிகர் : ஜி.வி.சீனு
நடிகை :ஐஸ்வர்யா சான்ட்
இயக்குனர் :ஜி.வி.சீனு
இசை :உதயராஜ்
ஓளிப்பதிவு :அப்துல் ரகுமான்
நாயகன் சீனு ரொம்பவும் நேர்மையானவர், அதே நேரத்தில் ஒழுக்கமானவரும்கூட. அப்பா இல்லாத சீனு, தனது அம்மாவின் அரவணைப்பிலேயே வாழ்ந்து வருகிறார். இவருக்கு ஒரு டூவீலர் ஷோ ரூமில் லோன் அதிகாரியாக வேலை கிடைக்கிறது. அந்த வேலைக்கு செல்லும் நேரத்தில் வழியில் நாயகி ஐஸ்வர்யாவை பார்க்கிறார். பார்த்தவுடன் அவள்மீதான ஈர்ப்பால் அவள் பின்னாலேயே சுற்றி வருகிறார். இறுதியில், அவள் திடீரென காணாமல் போகவும், வேலைக்கு செல்கிறார்.

இவர் வேலைக்கு சேர்ந்த ஷோரூமிலேயே நாயகி ஐஸ்வர்யா அக்கவுண்ட்ஸ் பிரிவில் வேலை பார்க்கிறார். இதை அறிந்ததும் நாயகனுக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது. இந்நிலையில், அந்த அலுவலகத்தில் பணிபுரியும் அனைவரும் ரொம்ப ஜாலியாகவும், அரட்டையடித்துக் கொண்டும் வேலை பார்க்க, இவர் மட்டும் வேலையிலேயே தனது முழு கவனத்தையும் செலுத்துகிறார்.

இது அங்கு வேலை செய்யும் மற்றொரு பெண்ணுக்கு பிடித்துப்போக, நாயகனை காதலிப்பதாக கூறி நாயகியை தூது அனுப்புகிறாள். நாயகனிடம் சென்று அவளுடைய காதலை சொல்லும் நாயகியிடம், அந்த மாதிரியான எண்ணங்கள் தன் மனதில் இல்லை என்று சொல்லி அவளை திருப்பி அனுப்புகிறான். இந்நிலையில், ஒருநாள் இரவில் தனிமையில் செல்லும் நாயகியை இரண்டு ரவுடிகள் வழிமறிக்கின்றனர். அப்போது, அங்கு வரும் நாயகன் அவர்களிடமிருந்து நாயகியை காப்பாற்றுகிறார்.

தன்னை காப்பாற்றிய நாயகன் மீது நாயகிக்கு காதல் ஏற்படுகிறது. அவன் நினைவாகவே இருந்து வருகிறாள். ஆனால், நாயகியின் குடும்பம் ரொம்ப கண்டிப்பான முஸ்லீம் குடும்பம். இருப்பினும், தனது குடும்பத்தை பற்றி கவலைப்படாமல் நாயகனிடம் தனது காதலை சொல்கிறாள். ஏற்கெனவே, நாயகி மீது ஆசை கொண்ட நாயகன் அவளது காதலை ஏற்றுக் கொள்ள, இருவரும் நெருங்கிப் பழக ஆரம்பிக்கிறார்கள்.

ஒருகட்டத்தில் இவர்களுடைய காதல் நாயகியின் வீட்டுக்கு தெரிய வர, அவர்கள் நாயகனிடமிருந்து நாயகியை பிரித்து, நாயகனுக்கு தெரியாமல் வேறு ஊருக்கு அனுப்பி வைக்கிறார்கள். ஆனால், நாயகனோ, நாயகி தன்னை ஏமாற்றிவிட்டு சென்றுவிட்டாள் என்று நினைக்கிறார். இறுதியில், நாயகியின் உண்மை நிலையை நாயகன் அறிந்தாரா? அவளை மீட்டு, வாழ்க்கையில் ஒன்று சேர்ந்தாரா? என்பதே மீதிக்கதை. 

நாயகன் சீனு, இவரே இயக்கி, தயாரித்து நடித்துள்ள படம். நாயகனுக்குண்டான தோற்றம் இல்லாவிட்டாலும், ஓரளவுக்கு முகத்தில் நடிப்பை வரவழைக்க முயற்சி செய்திருக்கிறார். தன்னுடைய கதாபாத்திரம் ஆர்ப்பாட்டம், அலட்டல் இல்லாமல் இருந்தால், நடிப்பதற்கு நிறைய முயற்சி எடுக்க வேண்டியதில்லை என்பதுபோலவே இவருடைய கதாபாத்திரத்தை படைத்திருக்கிறார் சீனு.

நாயகி ஐஸ்வர்யா சந்த், கவர்ச்சியில்லாத, குடும்ப பாங்கான தோற்றத்தில் கவர்கிறார். நடிப்பிலும் தேறியிருக்கிறார். மனோகர், போண்டா மணி என படத்தில் சில தெரிந்த முகங்களும் இருக்கின்றனர். மனோகர், போண்டா மணி செய்யும் காமெடி கலாட்டாக்கள் சிரிப்பை வரவழைக்கவில்லை. கவுண்டமணி வசனத்தை பேசிக்கொண்டு நடித்திருப்பவர், ரொம்பவும் கடுப்பேற்றியிருக்கிறார். நாயகனின் தாய்மாமாவாக வரும் செல்வரகு, சில காட்சிகளே வந்தாலும் அனுபவ நடிப்பால் அனைவரையும் கவர்கிறார். 

தமிழ் சினிமாவுக்கு அதர பழசான ஒரு கதையை மீண்டும் தூசி தட்டி எடுத்திருக்கிறார் சீனு. சிறிய பட்ஜெட்டில் ஒரு படத்தை எடுக்கவேண்டும் என்று முடிவு செய்து எடுத்திருக்கிறார். படத்தில் எந்தவொரு இடத்திலும் ஆபாசம் இல்லாமல் எடுத்திருப்பதால் இயக்குனரை பாராட்டலாம். ஆனால், எந்தவொரு காட்சியையும் வலுவானதாக அமைக்காததால் படத்தை ரசிக்க முடியவில்லை. 

உதயராஜ் இசையில் பாடல்கள் எதுவும் மனதில் பதியவில்லை. பின்னணி இசையும் சுமார் ரகம்தான். அப்துல் ரகுமான் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு இன்னும் வலு சேர்த்திருக்கலாம். 

மொத்தத்தில் ‘பானு’ சுமார்தான். 


நன்றி =மாலைமலர்

0 comments: