Wednesday, September 02, 2015

அதிரடி - வில்லன் மன்சூர் அலிகான் ராதாரவிக்கு வில்லன் ஆன கதை -மன்சூர் அலிகான் சிறப்பு பேட்டி

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும் பெப்சி திரைப்படத் தொழிலாளர்கள் சங்கத்துக்கும் கடந்த பல ஆண்டுகளால் நீடித்து வந்த சம்பளச் பிரச்சினை பேசித் தீர்க்கப்பட்டுவிட்டது. ஆனால் “சிறு முதலீட்டுப் படங்களுக்கு பெப்சியின் சம்பள விகிதங்கள் கட்டுப்படியாகாது; அதனால்தான் டாப்சி என்ற புதிய திரைப்படத் தொழிலாளர்கள் சங்கத்தைத் தொடங்கியிருக்கிறேன். சினிமாவின் 24 பிரிவுகளுக்கும் வேலை செய்ய எங்கள் சங்கத்தில் 400 உறுப்பினர்கள் இணைந்திருக்கிறார்கள்” என்று கூறி அதிரடி கிளப்புகிறார் நடிகர் மன்சூர் அலிகான். ‘அதிரடி’ என்ற படத்தை தயாரித்து, இயக்கி நடித்திருக்கும் அவரைச் சந்தித்துப் பேசியதிலிருந்து:
நீங்கள் நடிக்க வந்து 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது எப்படி உணர்கிறீர்கள்?
சினிமா வழியாகப் பல துணிச்சலான கருத்துகளை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்திருக்கிறேன் என்பதில் எனக்குப் பெருமை உண்டு. இதுவரை 200 படங்களில் நடித்திருக்கிறேன். அவற்றில் ஐந்து படங்கள் வெள்ளி விழா கண்டிருக் கின்றன. 90 படங்கள் நூறு நாட்கள் ஓடியிருக்கின்றன. என்னைத் தேடி வந்த படங்களில் மட்டுமே நடித்திருக்கிறேன். அதேபோல மலிவான விலைக்கு நான் நடித்ததில்லை.11 படங்களை இயக்கி, நடித்து, தயாரித்திருக்கிறேன்.
நான் இயக்குநர், தயாரிப்பாளரின் நடிகன்.படப்பிடிப்பில் வசதி வேண்டும் என்று கேட்டு அடம்பிடித்ததில்லை. நான் நடிக்கும் ஒரு காட்சியை ஒரே ஷாட்டாக எடுத்தாலும் அதை ஓகே செய்துவிடுவேன். என்னால் ரீடேக் என்ற தலைவலியே இருந்ததில்லை. சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கிய ’நானும் ரவுடிதான்’ படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடந்தது. அதில் ஒரு காட்சி. தலையால் முட்டி உடைத்து கதவைத் திறந்துகொண்டு போய் நடித்தேன். ஒரே ஷாட்தான். பெப்சி ஆட்களே கை தட்டினார்கள். எதற்கும் தயங்கிக்கொண்டிருந்தால் நடிகனாக இருக்க முடியாது.
சினிமாவில் நீங்கள் எதற்குமே தயங்கியதில்லையா?
கொள்கைக்கு ஆபத்து வரும்போது தயங்கியிருக்கிறேன். ஒரு படத்தில் சோற்றுப் பானையைக் காலால் உதைக்கச் சொன்னார்கள். முடியாது என்று அந்தப் படத்திலிருந்தே வெளியேறினேன். அதேபோல் அம்மாவை அடிப்பதுபோல் ஒரு காட்சி. வில்லன் வேஷம் என்றாலும் அந்தக் காட்சியில் நடிக்க மறுத்ததால் வில்லனாக வேறொரு நடிகரைப் போட்டு எடுத்தார்கள்.
இப்படி எனக்கென்று இருக்கும் கொள்கைகளை வாய்ப்புக்காக நான் விட்டுக்கொடுத்ததில்லை. என்னைத் தேடி நல்ல வேஷங்கள் வரவில்லையே என்ற மனக்குறை என்னை இன்றும் வாட்டிக் கொண்டுதான் இருக்கிறது. வணங்காமுடியாக இருப்பதால் வாழ்வில் இழப்புகள் இருந்தாலும் சுயமரியாதை மிச்சமிருப்பதுதான் ஒரே லாபம்.
நீங்கள் சினிமாவுக்கு வர யார் காரணம்?
எனது அண்ணன் முகமது அலிதான் காரணம். அவர் ஒரு கலை வித்தகர். எனது சொந்த ஊரான பள்ளப்பட்டியில் தற்போது வசித்துவருகிறார். அவர்தான் நான் சினிமாவுக்கு வருவதற்கு இன்ஸ்பிரேஷன். எனது அண்ணன்கள் மகாராஷ்டிராவில் வியாபாரம் செய்துகொண்டிருந்தபோது பாலிவுட்டில் நடிக்க வேண்டும் என்று விரும்பினார். அவர் பத்தாம் வகுப்பு படித்தபோது நான் ஆறாம் வகுப்பு படித்தேன். அவர் பேச்சுப் போட்டி, மோனோ ஆக்டிங். கட்டுரைப் போட்டி எல்லாவற்றிலும் முதல் பரிசு வாங்குவார். அவரைப் பார்த்து நானும் முதல் பரிசுகளை வாங்குவேன். ஸ்கூல் நாடகத்தில் தங்கப் பதக்கம் சிவாஜியாக நடிப்பார். சினிமாவில் நடிக்க முயற்சித்தது அவருக்குக் கைகூடாமல் போய்விட்டது. நான் முயற்சித்தேன். எனக்கு வாய்ப்பு அமைந்துவிட்டது.
முன்புபோல போராட்டம், அரசியல் என்று இறங்குவதில்லையே?
சமூக நலன் பற்றி நான் பேசினால் அல்லது தெருவில் இறங்கிப் போராடினால் ஆட்சியதிகாரத்தில் யார் இருந்தாலும் பொத்துக்கொண்டு வந்துவிடுகிறது. இவனை உள்ளே தூக்கிப் போடலாம், யாரும் கேட்கமாட்டார்கள் என்று வந்துவிடுகிறார்கள். இதனாலேயே நான் போராடுவதையும் அரசியல் ஈடுபாட்டையும் நிறுத்திக்கொண்டுவிட்டேன். கடைசியாக என் மீது நில மோசடி வழக்கு ஒன்றைப் போட்டார்கள். அதில் இதுவரை என் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? நானும் அந்த வழக்கை விடுகிறமாதிரி இல்லை.
டாப்சி என்ற பெயரில் தனியாகச் சங்கம் தொடங்குகிற அளவுக்கு அப்படி என்ன நடந்தது?
டாப்சி தொடங்கியது காலத்தின் கட்டாயம் என்று சொல்ல வேண்டும். எங்கள் சங்கத்தின் பெயர் தமிழ்நாடு திரைப்பட படைப்பாளிகளின் ஒருங்கிணைந்த இந்தியக் கூட்டமைப்பு. இதன் சுருக்கம்தான் டாப்சி. அடிப்படையில் நான் பெப்சி உறுப்பினர். இசைக் கலைஞர்கள் சங்கம், டான்ஸர்ஸ் யூனியன் என்று பெப்சியுடன் இணைந்திருக்கும் பல சங்கங்களில் நான் பத்து ஆண்டுகளுக்கும் அதிகமாக உறுப்பினர். அப்படியிருந்தும் பெப்சியின் மீது எனக்குக் கோபம் வரக் காரணம் ஒரு சிறு முதலீட்டுத் தயாரிப்பாளரின் வலியை பெப்சி புரிந்துகொள்ளாததுதான் காரணம்.
நான் தற்போது ‘அதிரடி’ என்ற படத்தை தயாரித்து இயக்கி வருகிறேன் இந்தப் படத்தில் ராதாரவியை வில்லனாக நடிக்க அழைத்திருந்தேன். அவரும் வந்து நடித்துக் கொடுத்தார். ஆனால் இரண்டாவது நாள் சில பிரச்சினைகள் வந்தன. “எனது காஸ்டுயூமருக்கும் மேக் அப் மேனுக்கும் தனித்தனியே கார் வேண்டும்” என்று கேட்டார். நான் முடியாது என்றேன். அதில் ஆரம்பித்தது பிரச்சினை. எத்தனை பேருக்கு வேலை கொடுக்க வேண்டுமோ அதற்குக் குறைவான ஆட்களைப் பயன்படுத்துகிறீர்கள். உங்கள் அலுவலக ஆட்களை எக்காரணம் கொண்டும் பயன்படுத்தக் கூடாது என்றார்கள். நான் பத்துக் கோடியில் படமெடுப்பவன் இல்லை என்று வாக்குவாதம் செய்தேன்.
ஆனால் அவர்கள் அதையெல்லாம் ஏற்றுக்கொள்வதாக இல்லை. நான் இரண்டுமாத இடைவெளிக்குப் பிறகு பெப்சி ஊழியர்களை அழைத்து, திரும்பவும் படப்பிடிப்பைத் தொடங்கினேன். ஆனால் நான் படப்பிடிப்பில் ஊழியர்களைத் திட்டியதாகவும் அதற்கு மன்னிப்புக் கேட்டால்தான் வருவோம் என்று படப்பிடிப்புக்கே வராமல் போய்விட்டார்கள். ஒரு சிறு தயாரிப்பாளரின் வலி அவர்களைப் பொருத்தவரை வசையாகத் தெரிகிறது.
நான் எவ்வளவோ சமாதானதுக்கு முயன்றேன். அவர்கள் யாரும் காதுகொடுக்கிற மாதிரி தெரியவில்லை. இவர்களோடு இனியும் வேலை செய்ய முடியாது என்றுதான் சொசைட்டி ஆக்டில் தனியே தொழிலாளர் சங்கம் தொடங்கினேன். எங்களது டாப்சி சங்கத்திலிருந்து தற்போது சிறு படங்களுக்கு நிறைய தொழிலாளர்கள் சென்று வேலை செய்கிறார்கள். எனது படத்தையும் வெற்றிகரமாக முடித்துவிட்டேன்.
அதிரடி படத்தைப் பற்றிக் கூறுங்கள்?
சொன்னால் நம்ப மாட்டீர்கள். இந்தப் படத்துக்கு கடந்த 2013-ல் திரைக்கதை எழுதினேன். கடந்த பல ஆண்டுகளாக நாம் கண்களில் பார்க்கும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களில் சிரிப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் மதுவுக்கு அடிமையாகி உயிரை விட்டவர்கள். இந்த உண்மையை போஸ்டருக்கு உரியவரின் வீடு தேடிப் போனால் நீங்கள் உணர்வீர்கள். இதை வைத்துத்தான் அதிரடி படத்தின் கதையை எழுதினேன். இது மதுவுக்கு எதிரான படம். இதில் நாயகன் என்ன மாதிரியான அதிரடிகளைச் செய்கிறான் என்பதைப் படம் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.


நன்றி - த இந்து

0 comments: