Showing posts with label திரும்பிப் பார்த்தல். Show all posts
Showing posts with label திரும்பிப் பார்த்தல். Show all posts

Sunday, December 27, 2015

சினிமா எடுத்துப் பார் 37: காலங்களில் அவள் வசந்தம்-எஸ்பி.முத்துராமன்

 • சண்டைக் காட்சியில் அர்ஜுனுடன் மோதும் அழகு
  சண்டைக் காட்சியில் அர்ஜுனுடன் மோதும் அழகு
 • ‘காலங்களில் அவள் வசந்தம்’ படத்தில் ஸ்ரீவித்யா, சந்திரகலா | படம் உதவி: ஞானம்
  ‘காலங்களில் அவள் வசந்தம்’ படத்தில் ஸ்ரீவித்யா, சந்திரகலா | படம் உதவி: ஞானம்
‘துணிவே துணை’ படத்தில் அபர்ணா நடிக்கும் ‘ஆகாயத்தில் தொட்டில் கட்டும்’ என்ற பாடல் மிகவும் வித்தியாசமாக அமைந்தது. அந்தப் படத்தில் நடன அமைப்பாளர் புலியூர் சரோஜாவின் உதவியாளராக கலா பணியாற்றினார். மிகவும் சுறுசுறுப்பு. நடிகர், நடிகைகளுக்கு நடனம் சொல்லிக்கொடுப்பதில் அவ்வளவு ஆர்வம் காட்டுவார். அவர் தான் இன்றைக்கு உலகப் புகழ் பெற்ற ‘மானாட மயிலாட’நிகழ்ச்சியை நடத்தி வருபவர் என்பது எங்களுக்குப் பெருமை.
திரையுலக முன்னோடி இயக்குநர் கே.சுப்ரமணியம் அவர்களின் வழித் தோன்றல் ரகுராம் மாஸ்டர், அவர் மனைவி கிரிஜா, அவருடைய தங்கைகள் கலா, பிருந்தா ஆகியோரும் நடனக் கலைக்காக சேவை செய்தவர்கள், செய்கிறவர்கள். அந்தக் கலை குடும்பத்தை மனமாறப் பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்.
இன்று சின்னத்திரையில் குணச்சித்திர நடிகராக அசத்தி வரும் அழகு, நான் இயக்கிய ‘துணிவே துணை’ படத்தில் அறிமுகமானவர். அப்போது அவரை சண்டைக் காட்சிகளில் பங்குபெற வைத்தோம். சிறந்த சண்டை வீரராக பல படங்களில் பங்கு பெற்றார். உள்ளுக்குள் இருந்த திறமை ஒரு நாள் வெளியே வந்தே தீரும் என்று சொல்வதைப் போல இன்றைக்கு சின்னத்திரையில் குணச்சித்திர வேடங்களில் சிறப்பாக நடித்துவருகிறார். அதற்குக் காரணம் முயற்சி திருவினையாக்கும் என்பதே. நடிக்க வருகிறவர்கள் சின்ன வேஷம், பேரிய வேஷம் என்று பார்க்காமல் கிடைத்த வேடத்தில் திறமையைக் காட்டி முன்னேற வேண்டும். துணை நடிகராக இருந்த எம்.ஜி.ஆர் அவர்கள் பின்னாளில் உலகம் புகழும் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் ஆகவில்லையா?
 - அழகு
‘துணிவே துணை’ படத்தில் அசோகன் காமெடி கலந்த வில்லன் கதாபாத்திரத் தில் நடித்தார். கிளைமாக்ஸ் காட்சியில் அசோகனையும், வில்லன்களையும் ஹெலிகாப்டர் துரத்துகிற மாதிரி காட்சி. அப்போது அசோகன், ‘ஹெலிகாப்டர் கீழே வரும்போது எனக்கு கைக்கு எட்டும் தூரத்தில்தான் வருகிறது. நான் பிடித்து விடட்டுமா? என்றார். ‘ஐயையோ… அப்படியெல்லாம் செய்துவிடாதீர்கள். ஹெலிகாப்டர் கவிழ்ந்துவிடும்’ என்று நான் கத்தினேன். ஹெலிகாப்டரை, கார் மீது இடிக்க வைத்து ரிஸ்க்காக பல ஷாட்களை எடுத்து ஒருவித த்ரில்லோடு படமாக்கினோம்.
அந்தப் படம் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. மஞ்சப் பையுடன் வந்த துளசிராம் தயாரிப்பாளர் ஆனார். அடுத்தப் படத்தையும் தயாரிக்க முன் வந்தார். நாங்களும் ஒப்புக்கொண்டோம். அப்போது துளசிராம் தயாரிப்பாளர் என்ற கிரீடத்தை தலையில் வைத்துக்கொண்டு, சில நிபந்தனைகள் போட்டுக்கொள்ளலாம் என்றார். ‘முதல் படம் எப்படி எடுத்தோமோ, அப்படியே எடுப்போம். நிபந்தனைகள் என்றால் எங்களை விட்டுவிடுங்கள்’ என்று நங்கள் ஒதுங்கிக்கொண்டோம். சினிமா என்பது கடல். ஒரு படத்திலேயே எல்லாவற்றையும் கற்றுக்கொண்டுவிட முடியுமா?நடிகர்கள் முத்துராமன், ஜெய்சங்கர் இருவரும் நட்பு அடிப்படையில் எங்கள் படங்களில் எப்போதும் நடிக்கத் தயாராகவே இருந்தார்கள். தயாரிப்பாளர் யார்? கதை என்ன என்று கேட்கவே மாட் டார்கள். அட்வான்ஸ் என்பது பணமாக இல்லை, வாய் வார்த்தையில் மட்டும் தான். அவர்களது டைரியை எடுத்து, ‘10 நாட்கள் எஸ்பி.எம் படம்’ என்று தேதி குறித்து வைத்துவிட்டு வந்துவிடுவேன். நான் குறிப்பிட்ட தேதிகளை யாருக்கும் ஒதுக்க மாட்டார்கள். அவர்கள் இருவரும் இப்படி ஒரு புரிதலோடு இருந்தது எங்களுக்குப் பெரிய பலமாக இருந்தது. இதெல்லாம் வியாபார நோக்கம் எதுவும் இல்லாமல் ஒருவருக்கொருவர் இருக்கும் நட்பு அடிப்படையில் செய்தது.


அடுத்து நாங்கள் எடுத்தப்படம் விஜய பாஸ்கர் தயாரித்த ‘காலங்களில் அவள் வசந்தம்’. முத்துராமன், ஸ்ரீவித்யா, சந்திர கலா, தேங்காய் சீனிவாசன் ஆகியோர் நடித்தனர். ஒரு பெண், தன்னைவிட படிப் பில், அந்தஸ்தில், அழகில் பெரிய இடத்து மாப்பிள்ளைதான் வேண்டும் என்று தட்டிக்கழித்து முதிர்கன்னியாகி விடுவார். அந்தக் கதாபாத்திரத்தில் ஸ்ரீவித்யா நடித்தார். ஸ்ரீவித்யா எந்தக் கதாபாத்திரத்தையும் சிறப்பாக நடிக்கக்கூடிய நல்ல நடிகை. எங்கள் குழுவில் நட்போடு பழகினார்.
என் மனைவி இறந்தபோது எனக்கு ஆறுதல் கூறும்போது அவர் அழுத அழுகைக்கு, நான் ஆறுதல் கூற வேண்டியதாயிற்று. அவர் உடல் நலமில்லாமல் கேரளாவில் இருக்கும்போது அவரை நான் பார்க்க விரும்பினேன். கமல் பார்த்துவிட்டு வந்த தாக செய்தி வந்தது. கமலிடம் போய் நான் பார்க்க வேண்டும் என்று கூறினேன். கமல், ‘வித்யா யாரையுமே பார்க்க விரும்பவில்லை. நீங்கள் போய் பார்த்தால் அவர் வேதனை அதிகமாகுமே தவிர உடல்நலம் குணமாகாது’ என்று கூறினார். சில நாட்களிலேயே அவர் இறந்த செய்தி வந்தது. அவர் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள், துன்பங்கள் எல்லாவற்றையும் அறிந்த எனக்குக் கண் கலங்கியது. அவரை பார்க்கக்கூட முடியவில்லையே என்ற ஏக்கம் இன்றைக்கும் இருக்கிறது.‘காலங்களில் அவள் வசந்தம்’ படத்தில் ஸ்ரீவித்யாவுக்குத் தங்கையாக சந்திர கலா நடித்தார். அவருக்கும் முத்து ராமனுக்கும் திருமணம் நடக்கும். முதிர் கன்னியான ஸ்ரீவித்யா தன் நிலையை நினைத்து மனநிலை பாதிப்புக்குள்ளாவார். அதைக் கண்ட தங்கை சந்திரகலா தன் அக்கா குணமடைய தன் கணவனையே அவருக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்வார்.திருமணம் நடந்து முதலிரவு ஏற்பாடு செய்யும் நேரத்தில் மீண்டும் அக்காவுக்கு மனநிலை பாதிக்கப்படும். தந்தை அசோகன் மகள் ஸ்ரீவித்யாவை ஊருக்கு அழைத்துச் செல்வார். தன்னைப் பார்த்து அழும் அசோகனிடம் ஸ்ரீவித்யா, ‘தங்கை தனது கணவரைத்தான் எனக்குக் கணவராக்கியிருக்கிறார் என்பது எனக்குத் தெரிந்துவிட்டது. தங்கையின் வாழ்க்கையைக் கெடுக்க விரும்பாமல்தான் பைத்தியமாக நடித்தேன்’ என்று கூறுவார்.இளம்பெண்கள் ‘தனக்கு வரும் கணவன் இப்படி இருக்க வேண்டும்? அப்படி இருக்க வேண்டும்’ என்று கனவு கண்டு, வரும் எல்லா மாப்பிள்ளைகளை யும் ஒதுக்கினால் முதிர்கன்னிகளாக ஆக வேண்டியிருக்கும் என்பதை இந்தக்கதையின் மூலம் உணர்த்தினோம். இந்தப் படம் நாங்கள் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. இந்தக் கதையை எங்களிடம் உரிமை வாங்காமலேயே ஹிந்தியில் எடுத்து அந்தப் படம் வெற்றி பெற்றது. அந்த விஷயமே எங்களுக்குக் காலம் கடந்துதான் தெரிந்தது. அதனால் அவர்களோடு போராட முடியவில்லை. கதையின் உரிமையை வாங்காமல் மற்ற மொழியில் படம் எடுப்பது தவறு. அது படைப்பாளிகளின் உழைப்பை ஏமாற்றுவதாகும். உரியவர்கள் சிந்திக்க வேண்டும்.அன்று ஏரியில் வீடு கட்டினோம். இன்று வீட்டுக்குள் ஏரி. இது நம் எல்லோருக்கும் ஒரு பாடம். இந்த வெள்ளத்தில் இளைஞர்கள் மழையில் நின்று கொண்டு மக்களுக்கு வழிகாட்டியது, உதவிகள் செய்தது வருங்காலத்தில் அவர்கள் நாட்டை காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையைத் தந்தது.பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்த மனிதநேயமுள்ள அனைவரையும் வணங்குவோம். வேற்றுமையில் ஒற்றுமை காண்போம் என்பதற்கு இந்த நிகழ்வுகள் உதாரணம். வடியும் கண் ணீரைத் துடைத்துக்கொண்டு அடுத்த வாரம் நான் தூக்கி வளர்த்த உலக நாயகன் கமல் பற்றி எழுதப் போகிறேன். அது எந்தப் படம்? எந்த சூழலில் அமைந்தது? அடுத்த வாரம் பார்ப்போம்.
இன்னும் படம் பார்ப்போம்...

தஹிந்து

Thursday, October 29, 2015

சினிமா எடுத்துப் பார் 32: ரஜினி சொன்ன பதில்!=எஸ்பி.முத்துராமன்

அண்ணன் சிவாஜிகணேசனை வைத்து மூன்றாவது முறை யாக படத்தை இயக்க எனக்கு வாய்ப்பு கொடுத்த அந்தத் தயாரிப் பாளர் அருப்புக்கோட்டை எஸ்.எஸ்.கருப்பசாமி. அந்தப் படம் ‘ரிஷிமூலம்’. சிவாஜிகணேசனுடன் கே.ஆர்.விஜயா, மேஜர் சுந்தர்ராஜன், சுருளிராஜன் உள் ளிட்டவர்கள் இதில் நடித்தார்கள். இயக்குநர் மகேந்திரன் சார் படத்துக்கு கதை - வசனம் எழுதினார்.
என்னுடன் கொண்ட நட்பு முறையில் நான் இயக்கிய கமல், ரஜினி நடித்த ‘ஆடுபுலி ஆட்டம்’, கமல் நடித்த ‘மோகம் முப்பது வருஷம்’, பார்த்திபன் நடித்த ‘தையல்காரன்’ போன்ற படங்களுக்கு திரைக்கதை - வசனம் எழுதி தந்தவர் மகேந்திரன். ரஜினிகாந்துக்கு ‘முள்ளும் மலரும்’ என்ற வித்தியாசமான படத்தை கொடுத்தவர். சிறந்த இயக்குநர், சிறந்த எழுத்தாளர். நான் இயக்கிய வெற்றிப் படங்களில் அவருடைய பங்களிப்பும் உண்டு.
இயக்குநர்கள் சங்கம் நடத்திய ‘டி40’ என்ற நட்சத்திர இரவு நிகழ்ச்சியில் இயக்குநர் சிகரம் பாலசந்தரும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் கேள்வி - பதில் நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்கள். அப் போது கே.பாலசந்தர் சார் ரஜினிகாந்திடம் ‘‘உனக்குப் பிடித்த இயக்குநர் யார்?’’ என்று கேட்டார். ரஜினி சொன்ன பதில்: இயக்குநர் மகேந்திரன். இது மகேந்திர னுக்கு ரஜினிகாந்த் கொடுத்த சிறப்பு.
கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுக்கும் குணம் இல்லாததால் ஏற் படும் கருத்து வேறுபாட்டை மையமாக வைத்து நகரும் கதைக்களம்தான் ‘ரிஷி மூலம்’. கணவன்- மனைவி கதாபாத் திரங்களில் சிவாஜியும் கே.ஆர்.விஜயா வும் நடித்திருப்பார்கள். அவர்களுக்கு ஒரு மகன். படத்தில் கே.ஆர்.விஜயா தன் பிடிவாதத்தால் கணவனிடம் கோபித் துக்கொண்டு 15 ஆண்டுகள் பிரிந்து வாழ்வார்.
அத்தனை ஆண்டுகால இடைவெளிக் குப் பிறகு மீண்டும் அவர்கள் சந்தித்துக் கொள்ளும் இடத்தை செண்டிமெண்டாக நெகிழ்ச்சியோடு படமாக்க திட்டமிட் டோம். அண்ணன் சிவாஜியிடம், ‘‘நீங்கள் இருவரும் சந்திக்கும்போது வசனமே இருக்காது. முக பாவனையை மட்டும் குளோஸ் அப் காட்சிகளில் எடுக்கப் போகி றேன். ஒருவரது கண்களை இன்னொரு வரது கண்கள் பார்க்க வேண்டும். இருவரது கண்களை மட்டும் குளோஸ் அப்பில் எடுப்பேன். நீங்கள் சொல்ல வரும்போது வாய் பேசத் துடிக்கும். விஜயா அவர்களின் காதுகள் கேட்க காத்திருக்கும். உங்கள் முகத்தில் பேசும் பாவனை, விஜயா முகத்தில் பேசுங்கள் என்ற பாவனை… இப்படி குளோஸ்அப் பாவனைகளில் காட்சியைச் சொன் னேன். சிவாஜிக்கும், புன்னகை அரசிக்கும் நடிக்க சொல்லியா கொடுக்க வேண்டும்! கண்கள் பேசின… உதடுகள் துடித்தன… முக பாவத்திலேயே நடித் தார்கள். வசனமே இல்லாமல் மூன்று, நான்கு நிமிடங்கள் நகரும் அந்தக் காட்சி பாராட்டுகளைப் பெற்றது.
சிவாஜிகணேசன், கே.ஆர்.விஜயா இருவரும் சமாதானம் ஆன பிறகு ஒரு பாடல் வைக்க வேண்டும் என்று முடிவெடுத்தோம். இளையராஜாவின் துள்ளல் இசை; ‘ஐம்பதிலும் ஆசை வரும்’ என்ற கவியரசு கண்ணதாசனின் பாடல் வரிகள்… சிவாஜியும், விஜயாவும் வெளுத்துக் கட்டினார்கள். அவர்களைப் போல காதலர்கள், திருமண தம்பதிகள்கூட அப்படி ஓர் உணர்வை காட்ட முடியாது.
அந்தப் பாடலை கே.ஆர்.விஜயா கணவர் வேலாயுதத்தின் ஊரான கேரளாவில் உள்ள கள்ளிக்கோட்டையில் எடுத்தோம். பசுமை சூழ்ந்த அந்த மலைப் பகுதிகளில் படமாக்க திட்ட மிட்டு நானும், ஒளிப்பதிவாளர் பாபுவும் இடங்களைத் தேர்வு செய்தோம். அதை சிவாஜி அவர்களிடம் சொன்னபோது ‘‘முத்து… அண்ணனை ரொம்ப அலைய விடாதீங்க. நான் என்ன உங்கள மாதிரி ஓடி ஆடுறவனா? மலை மேல எல்லாம் ஏறாம கீழேயே எடுத்து முடிப்பா…’’ என்றார்.
அந்தப் பாடலை படமாக்க தொடங் கினோம். முதலில் கீழே இரண்டு, மூன்று ஷாட்களை எடுப்பது, அப்படியே 10 அடி தள்ளிப்போய் அங்கே சில ஷாட்களை எடுப்போம். இந்த இடத்தில், அந்த இடத் தில் என்று மெல்ல மெல்ல ஏறிக் கொண்டே போய் மலை ஏறிய களைப்பே தெரியாமல் மலை உச்சிக்கு அண்ணனை அழைத்துப் போய்விட்டோம். மலை உச்சியில் இருந்து அந்த இடத்தை பார்த் தவர், ‘‘அருமையான இடம். எப்படியோ என்னை மலை உச்சிக்குக் கொண்டு வந்து, நீ எடுக்க நினைச்ச காட்சியை எடுத்து சாதிச்சுட்டே’’ என்றார். இதுதான் கதாநாயகன் போக்கில் போய் சாதித்துக்கொள்வது என்பதாகும்.
அப்பா, அம்மா, மகன் சென்டிமெண்ட் காட்சிகள், சிவாஜிகணேசன், கே.ஆர்.விஜயா, சக்ரவர்த்தி நடிப்பு, மகேந்திரன் சார் வசனம், இளையராஜா இசை, கவியரசர் பாடல் இப்படி எல்லாம் இணைந்து அந்தப் படம் வெற்றி அடைந்தது. படத்தின் 100-வது நாள் விழாவை சிறப்பாக கொண்டாடினோம். விழா மேடையில் தயாரிப்பாளர் கருப்பசாமி, அண்ணன் சிவாஜிக்கு வைர மோதிரம் அணிவித்தார். ‘‘ஒரு நல்ல படம் கொடுத்துட்டே’’ என்ற தோரணையில் அண்ணன் சிவாஜி என்னைப் பார்த்தார். அந்தப் பார்வையே எனக்கு வாழ்த்தாக இருந்தது.
படத்தின் தயாரிப்பாளர் எஸ்.எஸ். கருப்பசாமியைப் பற்றி இங்கே சொல்லியே ஆக வேண்டும். சரியாக திட்டமிட்டு ஒரு வேலையை முடிக்க வேண்டும் என்பதில் அவர் தெளிவாக இருப்பவர். படத்தில் ஒரு செட்யூல் படப்பிடிப்பு முடிந்த உடனே என்னிடம் வந்து, ‘‘இதுவரைக்கும் இத்தனை லட்சம் செலவு’’ என்று எழுத்துபூர்வமான கணக்கை காட்டுவார். ‘‘ஒவ்வொரு செட்யூலுக்கும் என்ன செலவாகிறது என்பது ஒரு இயக்குநருக்கு தெரிய வேண்டும்’’ என்பார். இது அவசியமான ஒன்று. சினிமா எடுக்கும்போது செலவை முழுமையாக தெரிந்து வைத்துக்கொண்டு எடுத்தால் நிச்சயம் நஷ்டம் வராது. நாங்கள் சின்ன பட்ஜெட் படங்களும் எடுத்தோம், பெரிய பட்ஜெட் படங்களும் எடுத்தோம். எல்லாவற்றுக்கும் சரியான திட்டமிடல் இருந்ததால் படம் பட்ஜெட்டுகளுக்குத் தகுந்த மாதிரி எடுக்க முடிந்தது.
நடிப்புக்கு இலக்கணமான அண்ணன் சிவாஜிகணேசன் அவர்களுக்கு தன் வரவு- செலவு பற்றி ஒன்றும் தெரியாது. நடிப்பு… நடிப்பு… நடிப்பு… இதுதான் அவரது சுவாசம். அவர் நடித்து சம்பாதித்த பணத்தை எல்லாம் அவரது சகோதரர் வி.சி.சண்முகம்தான் முறையே சேமித்து முதலீடு செய்து வைத்தார். அண்ணன், தம்பி இருவரும் அப்படி ஒற்றுமையாக வாழ்ந்தார்கள். இன்றைக்கும் சிவாஜிகணேசன் குடும் பத்தைச் சேர்ந்த ராம்குமார், பிரபு, சாந்தி, தேன்மொழி, துஷ்யந்த், விக்ரம்பிரபு, ஹரிசண்முகம் எல்லோரும் ஒற்றுமை யுடன் இருக்கிறார்கள். இதை பார்க்கும் போது மனதுக்கு நிறைவாக உள்ளது. கூட்டுக்குடும்ப பெருமையை உணர சிவாஜி குடும்பத்தைப் பாருங்கள்.
இனி, நீங்கள் ஆர்வத்தோடு எதிர் பார்க்கும் கட்டத்துக்கு வரவிருக்கிறேன். என் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்படி நடிக்க வந்தார்? அவரை வைத்து 25 படங்கள் இயக்கியது எப்படி? உலகநாயகனுக்கு 10 படங்கள் இயக் கிய அனுபவங்கள் என்னென்ன? அவர்கள் இருவருக்கும் எனக்கும் உள்ள உறவு முறைகள்? நான் இயக்கிய 45 படங் களுக்கு இசையமைத்த இசையமைப் பாளர் இளையராஜாவின் இணைப்பு என்ன? பஞ்சு அருணாச்சலத்தின் பங்கு? என் தாய் வீடான ஏவி.எம்மில் எனக்கு கிடைத்த மரியாதை என்ன… என்பதைப் பற்றியெல்லாம் சுவையாக சொல்லப் போகிறேன்.
படிக்கத் தயாராகுங்கள்.
- இன்னும் படம் பார்ப்போம்…

த்ஹிந்து

Tuesday, September 22, 2015

‘‘இந்தப் படம் ஓடினால் நான் மன்னன். ஓடாவிட்டால் நாடோடி-எம்.ஜி.ஆர்.

‘அன்பே வா’ படத்தில் சரோஜாதேவி கல்லூரி மாணவர் களுடன் சேர்ந்து எம்.ஜி.ஆரைக் கேலி செய்து நடனம் ஆடுவது போல் ஒரு காட்சி. உதவி நடன இயக்குநர் ரத்தன்குமார் தலைமையில் மாணவர் குழு நடனமாட இருந்தனர். ரத்தன்குமாருக்கு இணையாக எம்.ஜி.ஆரால் ஆட முடியுமா என்று படக்குழு எதிர்பார்ப்பில் இருந்தது.
போட்டி என்றாலே விறுவிறுப்புத் தானே. படப்பிடிப்பில் எம்.ஜி.ஆர். அவர்கள் வெகு இலகுவாக ட்விஸ்ட் நடனம் ஆடியபோது கைதட்டல் ஷூட்டிங் அரங்கத்தை அதிர வைத்தது. படம் வெளியானதும் தியேட்டர்களில் ரசிகர்கள் அந்தப் பாடலைத் திரும்பத் திரும்பப் பார்த்து ரசித்தனர்.
சிம்லாவுக்குப் படப்பிடிப்புக்காக போயிருந்தோம். சிம்லாவின் மேல்பகுதி முழுதும் பனி படர்ந்த மலைச் சிகரங்கள். அங்குதான் சீனாவின் எல்லைக் கோடு இருந்தது. அந்தப் பகுதியில் நமது ராணுவ வீரர்கள் நம் நாட்டை பாதுகாப்பதற்காக காவல் இருந்தார்கள். அங்கிருந்த பனியும் மிகையான குளிரும் நம் ராணுவ வீரர்களை பாதித்து, அவர்களில் சிலருக்கு கால்கள் மிகவும் மோசமான நிலையில் சிகிச்சைக்காக அங்குள்ள மருத்துவமனையில் இருந்தார்கள்.
அத்தகைய ராணுவ வீர்ர்களைப் பார்க்க எம்.ஜி.ஆர் தலைமையில் சரவணன் சார், திருலோகசந்தர் சார் மற்றும் சிலரும் புறப்பட்டோம். அந்த வீரர்களைப் பார்த்து எம்.ஜி.ஆர் கண் கலங்கினார். ‘‘நாட்டில் உள்ள எங்கள் உயிரைக் காக்க, உங்கள் உயிரைப் பணயம் வைக்கும் உங்களைப் பார்க்க வந்திருக்கிறோம்’’ என்று இரு கை தூக்கி அவர்களை வணங்கினார் எம்.ஜி.ஆர். அந்த வீரர்களுக்கு ஹார்லிக்ஸ், ரொட்டி, பழங்கள் எல்லாம் கொடுத்து அவர்களுடைய கைகளைப் பிடித்துக்கொண்டு வாழ்த்தினார்.
எப்போதுமே எம்.ஜிஆருக்கு ஏவி.எம்.சரவணன் சார் மீது தனிப்பட்ட பிரியம் உண்டு. அந்தப் பிரியத்தின் வெளிப்பாடுதான் 86 மற்றும் 87-ம் ஆண்டுகளில் ‘சென்னை செரிஃப்’ஆக சரவணன் சாரை நியமித்து பெருமைப் படுத்தினார் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆர் மிகுந்த பொருட்செலவில் தயாரித்து, இயக்கிய படம் ‘நாடோடி மன்னன்’. இந்தப் படத்தைப் பற்றி எம்.ஜி.ஆரிடம் பத்திரிகையாளர் கள் கேட்டபோது, ‘‘இந்தப் படம் ஓடினால் நான் மன்னன். ஓடாவிட்டால் நாடோடி’’ என்றார். அந்தச் சூழ்நிலையில் ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் ஏவி.எம்.செட்டியாரைப் பார்க்க வந்தார். ‘‘நாடோடி மன்னன் படத்தின் இறுதிகட்ட வேலைகளை முடிக்க கொஞ்சம் பணம் வேண்டும்’’ என்றார். செட்டியாருடைய சட்ட ஆலோசகர் எம்.கே.எஸ், ‘‘பணம் கொடுப்பதாக இருந்தால் எம்.ஜி.ஆரின் கையெழுத்து வேண்டுமே’’ என்றார்.
அதற்கு ‘‘நான் எம்.ஜி.ஆர் பிக்சர்ஸின் நிர்வாகி. நான் கையெழுத்துப் போடுகிறேன். என் மேல் நம்பிக்கை வைத்துக் கொடுங்கள்’’ என்றார் ஆர்.எம்.வீரப்பன். அவருடைய அணுகுமுறை செட்டியாருக்கு பிடித்துவிட்டது. கேட்ட பணத்தைக் கொடுத்தார். படம் ரிலீஸான உடனேயே வாங்கிய பணத்தைத் திரும்பக் கொண்டுவந்து கொடுத்தார் ஆர்,எம்.வீ. அவருடைய நாணயம் செட்டியாருக்குப் பிடித்துப்போய் ‘‘நீங்கள் படம் எடுத்தால், நான் பண உதவி செய்கிறேன்’’ என்றார். ஆர்.எம்.வீ ‘தெய்வத்தாய்’படத்தை சொந்தமாக தயாரித்தபோது, தான் சொன்னதைப் போலவே ஆர்.எம்.வீ அவர்களுக்கு செட்டியார் பணம் கொடுத்தார்.
என்னுடைய தந்தை காரைக்குடி இராம.சுப்பையாவிடம் சுயமரியாதை கொள்கைகளில் ஈடுபாடு கொண்ட ஓர் இளைஞராக அந்நாட்களில் அறிமுகமானார் ஆர்.எம்.வீ. தந்தை பெரியார் ஒருமுறை காரைக்குடி பகுதிக்கு சுற்றுப்பயணம் வந்தபோது, பெரியாருக்கு துணையாக ஆர்.எம்.வீ அவர்களைத்தான் என் தந்தை அனுப்பி வைத்தார். 4 நாட்கள் பெரியாருக்கு எல்லா உதவிகளையும் செய்தார் ஆர்.எம்.வீ. திருச்சியில் பெரியாரை ரயில் ஏற்றிவிடும்போது 4 நாட்களுக்கான செலவு கணக்கை எழுதி, மீதி பணத்தையும் அவரிடம் கொடுத்திருக்கிறார்.
ஆர்.எம்.வீயின் பொறுப்புணர்ச்சியையும், நேர்மையையும் கண்ட பெரியார் ‘‘குடியரசு பத்திரிகையில் வேலை செய்ய வர்றீயா?’’ என்று கேட்டிருக்கிறார். உடனே ஆர்.எம்.வி. சம்மதம் என்று கூறியிருக்கிறார். இதுதான் ஆர்.எம்.வீ அவர்கள் அரசியலுக்கு வருவதற்கான முதல் படி. அதன் பிறகு அரசியல் தலைவர்களின் பழக்கம், நாடக கம்பெனி நிர்வாகி, சத்யா பிலிம்ஸ் நிர்வாகி, எம்.ஜி.ஆரின் வலது கரம், அமைச்சர் என வளர்ந்தார். இன்று அருளாளர் ஆர்.எம்.வீ அவர்கள் கம்பன் கழகத்தின் தலைவர்.
ஆர்.எம்.வீ அவர்களுக்கு இன்று 90-வது பிறந்த நாள். இலக்கிய மங்கள விழாவாக கொண்டாடப்படும் இந்த இனிய விழாவில் என் தந்தை இராம.சுப்பையா அவர்களின் பெயரில் ஒரு விருதினை உருவாக்கியிருக்கிறார். அந்த விருதை அவர் மகனான எனக்கு வழங்குகிறார். இதில் ஆர்.எம்.வீ அவர்களின் நன்றி உணர்வு தெரிகிறது.
அந்த நன்றிக்கு என் தந்தை இராம.சுப்பையா குடும்பத்தின் சார்பில் உளம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். ஆர்.எம்.வீ அவர்கள் எனக்கு அண்ணன் மட்டுமல்ல; எனது தயாரிப்பாளரும்கூட. ஆம், அவர் தயாரிப்பில் நான் இயக்கிய அந்தப் படத்தில் ரஜினிகாந்த் நடித்தார். என்ன படம் அது?
- அடுத்த வாரம் பார்ப்போம்…
நன்றி-தஹிந்து

Tuesday, September 08, 2015

அன்பே வா-எம்ஜிஆர் உதய சூரியனின் பார்வையிலே பாடல் வரி சென்சார் சிக்கல்-எஸ்பி.முத்துராமன்

 • ‘அன்பே வா’ படத்தில் குன்றின் உச்சியில் எம்.ஜி.ஆர்.
  ‘அன்பே வா’ படத்தில் குன்றின் உச்சியில் எம்.ஜி.ஆர்.
‘அன்பே வா’ படத் தில் எம்.ஜி.ஆர் பெரிய பணக் காரர். வெவ்வேறு நாடு களுக்குப் பயணித்துக் கொண்டே இருப்பது என்று பிஸியாகவே இருப்பார். தொடர்ந்து வேலை செய்து களைத்துப்போனதால் சிம்லாவில் ஜே.பி. பங்களா என்கிற பெயரில் இருக்கும் தனது பங்களாவுக்கு ஓய்வு எடுக்கச் செல்வார். அந்த பங்களாவில் வேலை பார்க்கும் நாகேஷ், அவரது மனைவி மனோரமா, மாமனார் பி.டி.சம்பந்தத்துடன் சேர்ந்து அந்த பங்களாவை டி.ஆர்.ராமசந்திரன், முத்துலட்சுமி, சரோஜாதேவிக்கு வாடகைக்கு விட்டிருப்பார்கள்.
இந்த விஷயம் எம்.ஜிஆருக்குத் தெரிய வரும். எம்.ஜி.ஆரின் காலில் மனோரமா விழுந்து, ‘‘முதலாளி மன்னிச்சிருங்க’’ என்று மன்னிப்பு கேட்பார். ‘‘சரி, நான்தான் இந்த பங்களாவுக்கு முதலாளி என்று யாரிடமும் சொல்லக் கூடாது’’ என்று மனோரமாவிடம் சத்தியம் வாங்கிக்கொள்வதுடன், நாகேஷிடம் பணத்தைக் கொடுத்து தானும் அங்கே தங்குவதற்கு சம்மதம் வாங்கியிருப்பார் எம்.ஜி.ஆர். சரோஜா தேவி மேல் எம்.ஜி.ஆருக்கு ஒரு கண் விழுந்ததுதான் இதற்குக் காரணம். எம்.ஜி.ஆரும் நாகேஷும் சந்தித்துப் பேசும்போதெல்லாம் மனோரமா பதறு வார். அந்தப் படத்தில் நகைச்சுவை காட்சி அனைத்தும் சிறப்பாக அமைந்திருக்கும்.
படத்தில் எம்.ஜி.ஆருக்கும் சரோஜாதேவிக்கும் இடையில் ‘சண்டையில்தான்’ காதல் பூக்கும். ‘லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ்’ பாடலின்போது மூன்று, நான்கு லவ் பேர்ட்ஸ் களைக் கூண்டில் வைத்து ஷூட் செய்தோம். அந்தப் பாட்டுக்கு சரோஜாதேவி ஆடும்போது எம்.ஜி.ஆர் மறைந்திருந்து கேலி செய்து அபிநயித்து ஆடுவார். அந்த ஷூட்டிங் சமயத்தில் மூர் மார்க்கெட்டுக்குச் சென்று லவ் பேர்ட்ஸ் வாங்கி வருவதற்கு அண்ணாமலை என்ற உதவியாளரை நியமித்திருந்தோம். அவருடைய வேலையே லவ் பேர்ட்ஸ் வாங்கி வருவதுதான். அதனால் அவர் பெயரே ‘லவ் பேர்ட்ஸ்’ அண்ணாமலை என்றாகிவிட்டது.
சரோஜாதேவிக்கு அப்பாவாக நடித்த டி.ஆர்.ராமசந்திரன் நிஜத்தில் சைவக் காரர். ஒரு காட்சியில் சிக்கன் ரோஸ்ட் சாப்பிடுவதுபோல காட்சி எடுக்க வேண் டும். சிக்கனை பார்த்தாலே அவருக்கு வாந்தி வந்தது. இந்த செய்தி ஏவி.எம் செட்டியாருடைய காதுக்குப் போயிற்று. அதற்கு அவர் ‘‘பேக்கரியில் சிக்கன் மாதிரி கேக் செய்யச் சொல்லி, அதை சாப்பிட வைத்து எடுக்கலாமே?’’ என்றார். சிக்கன்ரோஸ்ட் போலவே கேக் செய்து அவரை சாப்பிட வைத்தோம்.
எம்.ஜி.ஆர். அவர்கள் சிம்லாவைப் பார்த்து ரசித்து பாடும் விதமாக உரு வானதுதான் ‘புதிய வானம் புதிய பூமி’ பாடல். இந்தப் பாட்டில் கவிஞர் வாலி, ‘உதய சூரியனின் பார்வையிலே…’ என்று ஒரு இடத்தில் எழுதியிருந்தார். அதை பார்த்த செட்டியார், ‘‘சென்சாரில் வெட்டி விடுவார்களே?’’ என்றார். எம்.ஜி.ஆர் அவர்கள் இப்படி பாடினால்தான் கைதட் டல் விழும்’’ என்று சமாதானம் செய்தார் வாலி. அப்படியே படமாக்கப்பட்டது.
ஆனால். செட்டியார் சொன்னது போலவே சென்சாரில் அந்த வரியை நீக்க வேண்டும் என்று கூறிவிட்டார்கள். அதன் பிறகு ‘உதய சூரியனின் பார்வை யிலே’ என்ற வார்த்தைக்கு பதிலாக ‘புதிய சூரியனின் பார்வையிலே’ என்று வார்த்தையை மாற்றினோம். படத்தில் மட்டும் ‘புதிய சூரியனின் பார்வையிலே’ என்றுதான் இருக்கும். ஆடியோவில்தான் ‘உதய சூரியனின் பார்வையிலே’ என்று இருக்கும். இதெல்லாம் சென்சார் லீலைகள்.
‘‘உதய சூரியன் என்று வரும் இடத்தில் எம்.ஜி.ஆரை குன்றின் உச்சியில் ஏறி நிற்க வைத்து சூரியனையும் எம்.ஜி.ஆரை யும் இணைத்து ஷாட் எடுத்தால் நன்றாக இருக்கும்’’ என்று இயக்குநர் திருலோக சந்தர், பி.என்.சுந்தரத்திடம் சொல்ல, ‘‘எம்.ஜி.ஆரால் ஏற முடியுமா?’’ என்று யோசித்துக் கொண்டிருந்தார்கள்.
கொஞ்ச நேரத்தில் ‘‘டைரக்டர் சார்..!’’ என்று எங்கிருந்தோ ஒரு குரல் கேட்டது. எல்லோரும் குரல் வந்த திசையில் பார்த்தோம். குன்று உச்சியில் எம்.ஜி.ஆர் அவர்கள் நின்றுகொண்டிருந்தார். படக் குழுவே அவரைப் பார்த்து திகைக்க ‘‘மலை மேல என்னால ஏற முடியுமான்னு நீங்க பேசிட்டிருந்தீங்க… நான் ஏறியே வந்துட்டேன்’’ என்றார் எம்.ஜி.ஆர் புன் சிரிப்போடு. அதுதான் எம்.ஜி.ஆர்!
இயக்குநர் நினைத்தது போலவே அந்தக் காட்சியை படமாக்கினோம். துள்ளல் இசையாக அமைந்த அந்தப் பாடல் முழுக்க எம்.ஜி.ஆர் அவர்கள் ஓடிக் கொண்டே இருப்பார். டி.என்.சுந்தரத்தின் ஒளிப்பதிவில் சிம்லாவின் அந்த அழகும், அந்த மனிதர்களும், அந்தக் குழந்தைகளும் அந்த பாட்டில் வலம் வருவார்கள்.
‘புதிய வானம் புதிய பூமி…. எங்கும் பனி மழை பொழிகிறது’என்ற வரிகள் வரும் இடத்தில் பனி மழையோடு காட்சி எடுக்க வேண்டும் என்று விரும்பினோம். அப்படி ஒரு தருணம் வாய்க்க இரண்டு நாட்கள் காத்திருந்தோம். பனி மழை பெய்யவே இல்லை. சிம்லாவில் இருந்து டெல்லி வந்து விமானத்தில் சென்னைக் குப் புறப்பட்டோம்.
விமானம் பறந்தது. எம்.ஜி.ஆர் அவர்கள் அங்கு கொடுக்கப் பட்ட ஆங்கில செய்தித்தாளை படித்து விட்டு, ‘‘மிஸ் பண்ணிட்டோம். ஸ்நோ பால்ஸ் இன் சிம்லானு செய்தி வந் திருக்கு’’ என்று பத்திரிகையைக் காட்டி யவர், ‘‘டெல்லியில் விமானம் ஏறுவதற்கு முன்பு இந்த நாளிதழ் கையில் கிடைத் திருந்தால், சிம்லாவுக்குத் திரும்பிப் போய் பனி மழையில் அந்தப் பாட்டை எடுத்திருக்கலாம்’’ என்றார். எம்.ஜி.ஆரின் ஆர்வமும், ஆதங்கமும் அதில் தெரிந்தது.
படத்தில் எம்.ஜி.ஆர்- சரோஜாதேவி ‘காதல் சண்டை’ உச்ச கட்டத்தை எட்டும். சரோஜாதேவி அங்கு வந்த கல்லூரி மாணவ-மாணவிகளுடன் சேர்ந்துக் கொண்டு எம்.ஜி.ஆரை கேலி செய்து நடனம் ஆடுவார். அதற்கு எம்.ஜி.ஆர் அவர்கள் சரியான பதிலடி கொடுக்க வேண்டும். சரோஜாதேவியின் மாணவக் குழுவுக்குத் தலைமை வகித்தவர் நடன இயக்குநர் சோப்ராவின் உதவியாளர் ரத்தன்குமார். அவர் நடனம் ஆடுவதில் புலி. அந்த ‘புலி’ ஆட்டத்துக்கு சவால்விட்டு எம்.ஜி.ஆரால் எப்படி ஆட முடிந்தது?
- இன்னும் படம் பார்ப்போம்.

Monday, August 24, 2015

அன்பே வா -(1966) - எம் ஜி ஆர் ஏ வி எம்மை டார்ச்சர் செய்தாரா? -எஸ்பி.முத்துராமன்

 • ஏவி.எம் எடுக்கத் திட்டமிட்ட அந்த பிரம்மாண்டமான படம் ‘அன்பே வா’. அந்தப் படத்தில் நடித்த பிரபல கதாநாயகர் என்றும் புரட்சி தலைவராக திகழும் எம்.ஜி.ஆர் அவர்கள். திரை உலகம் மட்டுமல்லாமல் அரசியல் வாழ்க்கையிலும் புகழோங்கி முதலமைச் சராக அரசாண்டவர். திரைப்படங்களில் கதையிலும், காட்சியிலும், பாடல்களிலும் மக்களுக்கு நல்ல கருத்துகளை சொன் னவர். பிறருக்கு உதவிகளைச் செய்து மனித நேயத்தோடு வாழ்ந்து காட்டியவர்.
  இப்படி படங்களில் நடித்ததோடு வாழ்க்கையிலும் வாழ்ந்து காட்டியவர். அதனால் மக்களுக்கு குறிப்பாக பெண் களுக்கு அவர் மீது அன்பும், பாசமும் ஏற்பட்டது. உண்மையாக வாழ்ந்து மக் களின் உள்ளங்களில் இடம் பிடித்தவர். அவர் நம்மை விட்டுச் சென்று பல ஆண்டு கள் ஆனாலும், அவர் பெயரைச் சொல் லித்தான் இன்னும் ஓட்டுக் கேட்கிறார் கள். ஏவி.எம் நிறுவனத்தில் எம்.ஜி.ஆர் அவர்கள் நடிக்க ஒப்பந்தமானது எல்லோ ருக்கும் மிக மகிழ்ச்சியைத் தந்தது.
  எம்.ஜிஆரின் சில படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியவர் திரு லோகசந்தர். ‘அன்பே வா’ திரைக் கதையை எம்.ஜி.ஆரை மனதில் வைத்து திருலோகசந்தர் எழுதியிருந்தார். திரைத் துறைக்குப் பெருமை சேர்த்த பல படங் களுக்கு வசனம் எழுதிய ஆரூர்தாஸ் இந்தப் படத்தின் வசனகர்த்தா. கதையை எம்.ஜி.ஆரிடம் சொல்வதற்காக அவரு டைய ராமாவரம் தோட்டத்துக்கு ஏவி.எம். சரவணன் சார் தலைமையில் இயக்குநர் திருலோகசந்தரோடு புறப்பட்டோம்.
  எங்களைப் பார்த்ததும் எம்.ஜி.ஆர் அவர்கள், ‘‘முதலில் சாப்பிட்டுட்டு வாங்க பேசலாம்’’ என்றார். அது அவரின் விருந் தோம்பல். உணவு உபசரிப்புக்குப் பிறகு, திருலோகசந்தர் திரைக்கதையைக் கூற எம்.ஜி.ஆர் அவர்கள் ஆர்வமாகக் கேட்டார். ‘‘இதுவரை நான் நடித்து வந்த பார்முலாவுக்குள் இந்தக் கதையை அடக்க முடியாது. வித்தியாசமாக இருக் கிறது. மாறுபட்ட கதைக் களம்.
  என்னை யூத்ஃபுல் கதாபாத்திரமாக உருவாக்கி இருக்கிறீர்கள். இது வழக்கமான எம்.ஜி.ஆர் படம் அல்ல; இயக்குநர் திருலோகசந்தர் படம்’’ பெருமையோடு சொன்ன எம்.ஜி.ஆர், ’’படத்தை திரு லோகசந்தர் இயக்கும் விதத்தில்தான் இந்தப் படத்தின் வெற்றி அமையும். ஏவி.எம்மின் ‘அன்பே வா’படத்தில் நடிப் பதைப் பெருமையாக கருதுகிறேன்’’ என்று முழு மனதுடன் ஒப்புக்கொண்டார்.
  படத்தின் ஒருங்கிணைப்பு வேலை களை ஏவி.எம்.சரவணன் சார் கவனித்துக்கொண்டார். சரவணன் சார் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். அவர் நடிக்கும் படப்பிடிப்புகளுக்குப் போய் எம்.ஜி.ஆரை சந்தித்துப் பேசுவது அவர் பழக்கம். சரவணன் சாரை அவரது வீட்டில் சரவன் என்றே அழைப்பார்கள். எம்.ஜி.ஆரும் சரவன் என்றே அழைப் பார். ‘அன்பே வா’ படத்தில் நடிக்க வந்ததும் சரவணன் சாரை எம்.ஜி.ஆர் செல்லமாக ‘முதலாளி’ என்றழைக்க ஆரம்பித்தார்.
  ‘அன்பே வா’ படத்துக்குத் தொடக்க விழா செப்டம்பர் மாதத்தில் நடந்தது. சரவணன் சார் படத்தை பொங்கல் பண்டிகை அன்று வெளியிட வேண்டும் என ஆசைப்பட்டார். இதை இயக்குநர் திருலோகசந்தரிடம் கூறியதும், ‘‘கதை, திரைக்கதை, வசனம் எல்லாம் முழு ஸ்கிரிப்டாக தயாராக இருக்கிறது. அத னால் படப்பிடிப்பை விரைவாக முடிக் கலாம்’’ என்று நம்பிக்கைக் கொடுத்தார். சரவணன் சார் தன் விருப்பத்தை அப்புச்சியிடம் சொன்னதும் அவருக்கும் ஆர்வம் அதிகமானது. ‘‘ஆனால் எம்.ஜி.ஆர் கால்ஷீட்டை எப்படி நமக்கு மொத்தமாக ஒதுக்கித் தருவார்?’’ என்று கேட்டார். சரவணன் சார், ‘‘எம்.ஜி.ஆர் அவர்களிடமே கேட்டுப் பார்த்துவிடுகிறேன்’’ என்று கூறினார்.
  என்னிடம் ராமாவரம் தோட்டத்துக்கு போன் போட்டு, எம்.ஜி.ஆர் அவர் களிடம் ‘தான் அவரை நேரில் சந்திக்க விரும்புவதாகவும் எப்போது வரலாம்' என்றும் கேட்கச் சொன்னார் சரவணன் சார். நான் கேட்டேன். அதற்கு எம்.ஜி.ஆர் அவர்கள் ‘‘கால்ஷீட் தேதி விஷயங்கள் என்றால் நீங்கள் மட்டும் வாங்க. வேறு முக்கியமான விஷயம் என்றால் முதலாளியைக் கூட்டிட்டு வாங்க’’ என்றார். தோட்டத்துக்குப் புறப் பட்டோம். சரவணன் சார், எம்.ஜி.ஆரிடம் ‘‘ஒரு முக்கியமான விஷயம். நீங்கள்தான் முடிவு சொல்ல வேண்டும். அது முடிந் தால் சந்தோஷம். உங்களுக்கு சிரமமாக இருந்தாலும் வருத்தப்பட மாட்டோம்’’ என்றார்.
  ‘‘பில்டப் எதுக்கு முதலாளி. என்ன விஷயம்னு சொல்லுங்க’’ என்றார் எம்.ஜி.ஆர்.
  ‘‘அன்பே வா படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்யலாம்னு ஒரு ஆசை.’’
  ‘‘அப்படி ஒரு ஆசையா? சத்யா மூவிஸ்ல சாணக்கியா இயக்கத்தில் ‘நான் ஆணையிட்டால்’ படத்தின் வேலைகள் நடந்துட்டிருக்கு. அதைப் பொங்கலுக்கு வெளியிடலாம்னு திட்டமிட்டிருக்காங்க’’ என்று சொல்லிவிட்டு, ஆர்.எம்.வீரப்பன் அவர்களை அழைத்து சரவணன் சாருடைய விருப்பத்தைக் கூறினார். ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் செட்டியார் மீதும், சரவணன் சார் மீதும் தனி பிரியம் கொண்டவர். அதனால் அவருடைய படத்தை தள்ளி வைத்துக்கொள்ள சம் மதித்தார். சரவணன் சார் மகிழ்ச்சியோடு அவர்களுக்கு நன்றி கூறினார்.
  சரவணன் சார் என்னிடம் ‘‘முத்துராமன் மொத்தமா எவ்வளவு நாட்கள் கால்ஷீட் தேவைப்படும்னு சொல்லுங்க?’’ என்றார். நான் ‘’70 முதல் 80 நாட்கள் தேவைப்படும்’’ என்றேன். உடனே எம்.ஜி.ஆர் அவர்கள், ‘‘முதலாளி அதெல்லாம் விடுங்க. உங்க ஆசைப்படி ‘அன்பே வா’ பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும்’’ என்றார். அப்படி சொன்னதோடு மட்டுமின்றி விரைந்து படத்தை முடிக்க பேருதவியாக இருந்தார். எங்கள் பணிகளையும் வேகப்படுத்தினார். இரவு, பகலாக வேலை பார்த்து படத்தின் நிர்வாக இயக்குநராகவே எம்.ஜி.ஆர். மாறிவிட்டார். பட வேலைகளில் அப்படி ஓர் ஈடுபாட்டுடன் உழைத்தார்.
  ‘அன்பே வா’ படத்தில் எம்.ஜி.ஆர்., சரோஜாதேவி, அசோகன், நாகேஷ், மனோரமா டி.ஆர்.ராமசந்திரன், முத்துலட்சுமி, இப்படி ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே பணிபுரிந்தது. ஏவி.எம் ஸ்டுடியோவில் எல்லா அரங்குகளிலும் பெரிய பெரிய செட்டுகள் போடப்பட்டன. அவுட்டோர் ஷூட்டிங் ஊட்டி, சிம்லா என முடிவானது. ஆகமொத்தத்தில் ‘அன்பே வா’ படத்தின் படப்பிடிப்பு நிகழ்வுகள் அனைத்தும் தமிழ் சினிமாவில் ஒரு தனி வரலாறு.
  - இன்னும் படம் பார்ப்போம்...
  Govind  
  மாபெரும் சபைதனில் " நீ ". நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும் . ஒரு மாற்று குறையாத மன்னவன் M.G.R மட்டும்தான் என்று மக்கள் போற்றி புகழ்கிறார்கள்
  Points
  110
  3 days ago
   (1) ·  (0)
   
  govind Up Voted
  • RS
   இன்றும் இளமை மாறா புதுப்படம்
   3 days ago
    (0) ·  (0)
    
   • A
    Anandan  
    ரொம்ப முக்கியம். மிகைப்படுத்தி சொல்லப்பட்ட ஒன்று.
    Points
    7640
    3 days ago
     (1) ·  (0)
     
    RBALAKRISHNAN Up Voted
    • R
     ஏ.வி.எம். நிறுவனம் எம்.ஜி.ஆரை வைத்து எடுத்த ஒரே படம் இதுதான். மிகப்பெரிய வெற்றிப்படம் என்றாலும் இந்த படத்தில் நடிக்கும்போது எம்.ஜி.ஆர் கொடுத்த தொந்தரவுகளை தாங்கமுடியாத மெய்யப்ப செட்டியார் அவர்கள் 'இனிமேல் இந்த ஆளை வைத்து படமே எடுக்க மாட்டேன்' என்று கூறியதாக பல ஆண்டுகளுக்கு முன் ஒரு பத்திரிக்கையில் படித்தது இன்றும் நினைவில் உள்ளது.
     Points
     22395
     3 days ago
      (1) ·  (0)
      
     mohan Up Voted
     • G
      Govind  
      மாபெரும் சபைதனில் நி நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும் . ஒரு மாற்று குறையாத மன்னவன் M.G.R மட்டும்தான் என்று இன்றும் மக்கள் புகழ்கிறார்கள்