Thursday, July 23, 2015

மதுவிலக்கு ரத்துக்கு எதிராக ராஜாஜி மன்றாடியபோது...கலைஞர் என்ன செய்தார்? ஒரு ஃபிளாஸ்பேக்

திமுக தலைவர் கருணாநிதியுடன் ராஜாஜி | கோப்புப் படம்.
திமுக தலைவர் கருணாநிதியுடன் ராஜாஜி | கோப்புப் படம்.
அது 1971-ம் வருடம். கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்த ராஜாஜி, மதுவிலக்கை ரத்து செய்தால் எதிர்கால சந்ததிகள் பாதிக்கப்படும் என கடுமையாக வாதாடினார்.
திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கும் என கருணாநிதி கூறியபோது, அவர் மதுவிலக்கு கொள்கையில் அந்தர் பல்டி அடித்திருக்கிறார் என்றே பெரும்பாலானோர் விமர்சனத்தை முன்வைத்தனர்.
1971 ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் தமிழக அரசியல் என்ன நடந்தது. மாநிலத்தில் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டது எப்படி என்பதை பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட பலரும் நினைவு கூர்ந்துள்ளனர்.
அந்த வருடம்தான் (1971), மாநிலத்தின் பொருளாதார சூழலை காரணம் காட்டி அப்போதைய முதல்வர் கருணாநிதி மதுவிலக்கை ரத்து செய்ய முடிவு செய்தார். அப்போது நாடு முழுவதிலும் குஜராத், தமிழகம் என இரு மாநிலங்களில் மட்டுமே மதுவிலக்கு அமலில் இருந்தது.
மதுவிலக்கை ரத்து செய்ய முடிவு செய்த போது கருணாநிதி, "நாடு முழுவதும் மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம். ஆனால், அது சாத்தியப்படாத சூழலில், தமிழக அரசு இந்த முடிவுக்கு வருகிறது. அதுவும் வருவாய் இழப்பை சரிகட்டுவதற்காகவே. மாநிலத்தின் வருவாய் இழப்பை மத்திய அரசு இழப்பீடு மூலம் சமன் செய்யாதபோது இதைத்தவிர வேறு வழி அரசுக்கு இல்லை" என்ற வாதத்தை முன்வைத்தார்.
கருணாநிதியின் முடிவு திமுக பொதுக்குழுவின் மூலம் நிறைவேற்றப்பட்டது. இருந்தாலும், திமுக அரசுக்கு பலத்த எதிர்ப்பு இருந்தது. காங்கிரஸ் மற்றும் ராஜகோபாலச்சாரியின் சுவதந்தரா கட்சிகள் கருணாநிதியின் முடிவை வலுவாக எதிர்த்தன. (1937-ல் சேலத்தில் மதுவிலக்கை அமல்படுத்தியதே ராஜாஜிதான் என்பதை யாரும் மறந்திருக்க முடியாது.)
இந்தச் சூழ்நிலையில்தான், 1971 ஜூலை 20 செவ்வாய்க்கிழமை மாலை கொட்டும் மழையில் கையில் ஒரு குடையை எடுத்துக் கொண்டு ராஜாஜி கருணாநிதி இல்லத்துக்குச் சென்றார். அப்போது, மதுவிலக்கை ரத்து செய்வது எதிர்கால சந்ததியினரை வெகுவாக பாதிக்கும் என கருணாநிதியிடம் மன்றாடியிருக்கிறார்.
இது குறித்து அப்போது செய்தி வெளியிட்ட தி இந்து, "கருணாநிதி - ராஜாஜி சந்திப்பு 20 நிமிடங்கள் நீடித்தது. ஆனால், என்ன நடந்தது என்பதை இரு தலைவர்களுமே செய்தியாளர்களுக்கு தெரிவிக்கவில்லை" எனக் குறிப்பிட்டது.
மதுவிலக்கு ரத்தானது. அடுத்தடுத்த வாரங்களில் திமுக அதிகமாக விமர்சிக்கப்பட்டது. கட்சியின் நிறுவனர் அண்ணாதுரையின் அசைக்கமுடியாத மதுவிலக்கு கொள்கையை கருணாநிதி நசுக்கிவிட்டார் எனக் கூறப்பட்டது. இதற்க்கு சட்டப் பேரவையில் பதிலளித்த கருணாநிதியோ, "காங்கிரஸ் ஆளும் பல்வேறு மாநிலங்களில் மதுவிலக்கு அமலில் இல்லை. அப்படியென்றால் காங்கிரஸ்காரர்கள் காந்திய கொள்கையை கைவிட்டுவிட்டார்கள் என்று அர்த்தமா" என வினவினார்.
அதேபோல், காங்கிரஸ் தலைவர் காமராஜர், கருணாநிதியின் முடிவை 'பாசிஸ கொள்கை' என சாடியபோது, காமராஜர் ஏன் மைசூர், ஆந்திராவில் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டபோது எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.
கறுப்பு தினம்:
ஆகஸ்ட் 30, மதுவிலக்கு ரத்து செய்யப்பட்ட தினத்தை தமிழ்நாடு மதுவிலக்கு செயலாக்க குழு கறுப்பு தினமாக அறிவித்தது. காங்கிரஸ், சுவதந்தரா கட்சிகள் கள்ளுக்கடைகளை சூறையாட முடிவு செய்தன. இதன் எதிர்வினையாக, 1973 இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் களமிறங்கிய எம்.ஜி.ஆருக்கு ராஜாஜியின் "நல்லாசி" கிடைத்தது.
ஆனால், பின்நாளில் முதல்வராக பதவியேற்ற பிறகு எம்.ஜி.ஆர். மது விற்பனையை அனுமதித்தார்.


நன்றி - த இந்து

 • Vikram.L  
  கற்றறிந்த ராஜாஜி -அடிப்படை கல்வி கூட இல்லாத கருணாநிதி அன்று . அதே இடத்தில இன்று டாக்டர் அன்புமணி -டாஸ்மார்க் ஸ்டாலின் . தமிழ்நாடு எப்படி வாழும் ?
  Points
  120
  7 minutes ago
   (0) ·  (0)
   
  • Ghanesun P  
   எது எப்படியோ, மது விலக்கை அமல் படுத்தினால் சரி. பா. ம. க. வும் இதை உணர்ந்து கொள்ள வேண்டும். இதைஏ அவர்களது வெற்றியாகக் கொள்ள வேண்டும்.
   Points
   685
   about an hour ago
    (0) ·  (0)
    
   • KKannan  
    இன்று ஆயிரமாயிரம் கருத்துக்கள் தெரிவிக்கப் பட்டாலும் நடப்பதென்னவோ தினந்தோறும் லட்சக்கணக்கான மதுபாட்டில்கள் மக்களால் காலியாகிக் கொண்டிருக்கின்றன. பின் காலியான மதுபாட்டில்களின் விளைவாக மக்கள் காலியாகப் போவது நிிச்சயம்
    Points
    180
    about 3 hours ago
     (0) ·  (0)
     
    • Venkat Khan Swaminathan  
     No need DMK ADMK only pmk
     Points
     4000
     about 6 hours ago
      (0) ·  (0)
      
     • S.V. Ramaswamy  
      தமிழ் தமிழ் என்று சொல்லியே தமிழனை போதையில் சாலை யோரங்களில் புரளவிட்டு தேர்தலுக்கு தேர்தல் இலவசங்களையும் தந்து மழுங்கடிதால்தான் இங்கே பிழைக்கமுடியும் என்று தி மு க எ டி யம் கே வும் நன்றாக தெரிந்து கொண்டன. இதிலிருந்து தமிழகத்தை இந்த இரண்டு கட்சிகளுமே மீட்காது ,
      Points
      330
      about 7 hours ago
       (0) ·  (0)
       
      • சிவாஜி.என்.ஆர்.  
       கமா குறியை , போட்டுக்கொண்டே ஆட்சி நடத்தியதை, மக்கள் மறக்க மாட்டார்கள். மன்னிக்கவும் மாட்டார்கள். இளைஞர்கள், வரலாற்றைப் படிப்பார்கள், தமிழகத்தில் புதிய வரலாற்றைப் படைப்பார்கள்.
       Points
       165
       about 8 hours ago
        (0) ·  (0)
        
       • PRPugazhendhi Rehman  
        RAJAJI ASKED KALAIGNAR OK, BUT NOW THE WHOLE TAMIL NADU PEOPLE ASKING OUR CM, WILL SHE LISTEN TO OUR PEOPLE'S WORD.

       0 comments: