Tuesday, July 21, 2015

The Tracker - சினிமா விமர்சனம் ( உலக சினிமா- ஆஸ்திரேலியா)

பூட்டப்பட்ட கழுத்துச் சங்கிலியோடு ஒரு பூர்வகுடியின மனிதன் நடத்திச் செல்லப்படும் The Tracker எனும் ஆஸ்திரேலிய நாட்டுத் திரைப்படத்தின் ஆரம்பமே நம்மை அச்சுறுத்துகிறது. இந்த முதல் காட்சி இது ஒரு மாறுபட்ட சினிமா என்பதை நமக்குக் காட்டிவிடுகிறது.
ஆஸ்திரேலிய பாலைவன பொட்டல்காடுதான் படத்தின் களம். ஏகாதிபத்திய காகசிய (whites) இனத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் மூவர் ஆளுக்கொரு குதிரையில் வருகின்றனர். முதல் குதிரையில் வரும் போலீஸ் உயரதிகாரியின் கையில் பூர்வகுடி வழிகாட்டியின் கழுத்தில் கட்டப்பட்ட சங்கிலியின் மறுமுனை.
உயர் போலீஸ் அதிகாரி அடிக்கடி துப்பாக்கியெடுத்து அவனை உருட்டி மிரட்டுகிறார். அவருக்குப் பின்னால் இரண்டு குதிரைகளிலும் இரண்டு இளம் போலீஸ்காரர்கள்.
வழிகாட்டிச் செல்லும் பூர்வகுடியின பாத்திரத்தை ஏற்று நடித்த டேவிட் குப்லீல் முகத்தில் காணப்படும் ஒருவிதமான இறுக்கமே படத்தின் முதுகெலும்பு. அதிகார வன்முறையை எதிர்த்து தன் கோபத்தை வெளிப்படுத்த வழியில்லாத தன்மையை, குப்லீல் தன் முன்னோர்களின் வலியை உணர்ந்து உட்பொருளாக வெளிப்படுத்தியுள்ளவிதம் நம்மை மிரள வைக்கிறது.
முன் நடந்து செல்லும் பழங்குடியின பிணைக்கைதியைத் தொடர்ந்து குதிரையில் பின்வரும் மூன்றுபேர் கொண்ட போலீஸ்படையில் முதல்குதிரையில் வரும் மூத்த போலீஸ் உயரதிகாரியாக கேரி ஸ்வீட் நடித்துள்ளார்.
'அப்பிராணி'யை கொத்தி எடுக்கும் வெள்ளையின ஆதிக்க வல்லூறின் கோர அலகுகளின் துடிப்பை அவரது நடிப்பில் காணமுடிகிறது. இந்த இருவரின் நடிப்பை வெளிப்படுத்தும்விதமாக மிகச்சரியான கட்டுமானத்தில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய பூர்வகுடிகளின் கிராமத்துக்கு வந்த ஒரு வெள்ளையினப் பெண்மணி கொலை செய்யப்பட்டுவிட்டாள். அதற்குக் காரணமான குற்றவாளியைத் தேடித்தான் இந்த பயணம். வாழ்வா சாவா என்கிற அளவுக்கு குப்லீல் பாத்திரத்துக்கும் மற்ற மூவருக்கும் இடையே எழும் சண்டை வலுக்கிற இடங்களும் இப்படத்தில் அதிகம்.
அடிக்கடி எதிராளியின் தன்மானத்தின்மீது விழும் சவுக்கடி தன்மீதே ஒருமுறை திரும்பிவிடும் என்று உயர் போலீஸ் அதிகாரி எதிர்பார்க்காததே அதற்குக் காரணம்.
வழிகாட்டி உண்மையாக இருப்பான் என்று அந்த உயர் போலீஸ் அதிகாரி நம்பவில்லை. அவர் எதைச் சொன்னாலும் ''சரிங்க எசமான்'' என்று கூறும் பூர்வகுடியின பிணையக் கைதி ''அவனை என்னால பிடிக்க முடியலன்னா உன்னுடைய காதுகளை அறுத்து என்னோட எடுத்துகிட்டு போயிடுவேன்.'' என்று அவர் கூறும்போதும் ''சரிங்க எசமான்'' என்கிறான்.
ஒருமுறை ஏதோ ஒரு கேள்விக்கு அவனிடமிருந்து சரியான பதில் வராதபோது உயர் போலீஸ் அதிகாரி துப்பாக்கியெடுத்து இவனைக் கொல்ல முயல்கிறார். அப்போதும்கூட, ''கோவப்படாதீங்க எசமான்.'' என்கிறான்.
ஆனால் ஓர் இடத்தில் கதையே மாறுகிறது. இவர்கள் பயணம் குவாரிப் பள்ளத்தின்அருகே செல்லும்போது எதிர்பாராமல் சங்கிலியைப் பிடித்திருப்பவரும் சங்கிலியில் பிணைக்கப்பட்டுள்ளவரும் அகன்ற படுஆழமான தண்ணீரில் வந்து விழுகிறார்கள். அங்கே ஒரு மோதலும் வலுக்கிறது.
யார் யாரை அடிக்கிறார்கள் என்று முதலில் குழப்பமாக இருக்கிறது நமக்கு. பின்னர் அந்த மோதலில் பூர்வகுடியின் கை ஓங்குவதாகவே காட்டப்படுகிறது. போலீஸ் அதிகாரிக்கும் பிணையக் கைதிக்கும் தண்ணீரில் நடக்கும் சண்டையில் உயர் போலீஸ் அதிகாரியை மூழ்கடிக்க எவ்வளவோ முயல்கிறான் பூர்வகுடி. கடைசியில் அதிகாரி தப்பித்துக் கரையேறிவிடுகிறார்.
மீண்டும் சங்கிலி பிணைப்பு நடை பயணம்... அதிகார அடுக்குமுறைக்கேற்ப வரிசையாக பின்தொடர்ந்துவரும் மூன்று போலீஸ் அதிகாரிகளும் குதிரைகளில்.
குவாரி தண்ணீரில் நடக்கும் சண்டை ஆஸ்திரேலிய வரலாற்றில் ஆங்கிலேய அதிகாரமும் பூர்வகுடிகளின் கலாச்சாரமும் மோதிக்கொண்ட நிகழ்வுகளின் குறியீடாகவே அமைந்துள்ளது.
வழக்கம்போல மூவரும் குதிரைகளில் வர அவன் அவர்களுக்கு முன்பாக பழைய மாதிரியே உயரதிகாரியின் பிடியில் சங்கிலியோடு நடந்து வருகிறான்...
திடீரென யாரும் எதிர்பார்க்காத வேளையில் போலீஸ்களுக்குள்ளேயே சிறு சலசலப்பு ஏற்படுகிறது. இந்த பூர்வகுடி மனிதனை இவ்வளவு கொடுமை செய்யத்தான் வேண்டுமா என்பதுதான் சலசலப்புக்குக் காரணம்.
இதில் இளம் போலீஸ் அதிகாரிக்கும் உயர் போலீஸ் அதிகாரிக்கும் மோதல் வலுக்க, கடைசியில் இளம் போலீஸ் அதிகாரி மூத்த போலீஸ் அதிகாரியை சுட்டுக்கொன்று விடுகிறான்.
2002 வெனிஸ் உலகத் திரைப்பட விழா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் உலக திரைவிழாக்களில கலந்துகொண்டு பல விருதுகளைகளையும் பாராட்டுகளையும் அள்ளிவந்த படம் இது.
பிறப்பால் வெள்ளையினத்தவராக இருந்தாலும் தன்னுடைய படைப்பில் நிறபேதமின்றி மனிதர்களை நடத்தவேண்டும் என்பதை இப்படத்தில் அழுத்தமாக பதிவுசெய்துள்ளார் இயக்குநர்.
பூர்வகுடி கறுப்பினத்தவர்களை சக மனிதர்களாக அங்கீகரிப்பதுதான் மறுமலர்ச்சி யுகத்துக்கான அடையாளம் என்பதில் துளியும் பிசகிவிடாமல் இன மனப்பான்மையின்றி இயக்கியிருப்பதே ரோல்ஃப் டீ ஹீர் சிறந்த இயக்குநர் என்பதை வரலாற்றின் மைல்கல்லாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது..


நன்றி - த இந்து

0 comments: