Thursday, July 16, 2015

மனுசங்க.. 10: காக்காய்கள் கூட்டம்-கி.ராஜநாராயணன்

ஓவியம்: மனோகர்
ஓவியம்: மனோகர்
வாழை இலையோடு சோற்றை எடுத் துக் கொண்டு போனார் உண்டிவில்காரர். அதைப் பார்த்ததும் மணியக்கார நாயக்கருக்கு சிரிப்பு வந்துவிட்டது.
“டேய் டேய்… இவனா கொண்டு போறான்? காக்காய் கிட்டவே வராது டேய்; அவன் தம்பியக் கொண்டு போகச் சொல்லு…” என்றார்.
“அவருதாம் மூத்தவர்; அவருதாம் வைக்கணும்’’ என்றார்கள்.
“அது நமக்குத் தெரியும்; காக்காய்க் குத் தெரியுமா?’’ என்று கேட்டார்.
ஞாயம்தான். இந்த ஊர்க் காக்காய் கள் எல்லாத்துக்கும் இவரை நல்லாவே அடையாளம் தெரியும். இப்போது அவருடைய மடிக்குள் ரப்பர் உண்டி வில் இல்லை என்பதும் காக்காய்களுக்குத் தெரியும். என்றாலும், இவரை நம்ப அவை தயாரில்லை.
மனிதக் கூட்டத்துக்கு என்ன செய்ய என்று தெரியவில்லை. காக்காய்கள் சோறு எடுத்தால்தான் பந்தி; வந்தவர் களுக்கும் சோறு கிடைக்கும். நேரம் மதியத்துக்கும் மேலாகிவிட்டது. நல்ல பசி.
இறந்து போன அம்மாவின் பெண் பிள்ளைகள் அழத் தொடங்கினார்கள். “போக்காளியான அம்மாவுக்கு என்ன மனக்குறை ஏற்பட்டதோ தெரிய லையே’’ என்று தங்களுக்குள் கேட்டுக் கொண்டார்கள்.
காக்காய்களுக்கும் பசிதான். என்றா லும் அவை சோத்துப் பக்கம் வரத் தயாரில்லை.
சிலர் காக்காய் போலக் கத்திப் பார்த்தார்கள். இவர்களின் விளங்காத குரல்களைக் கேட்டுக் காக்காய்கள் அது களுக்குள் சிரித்துக் கொண்டிருக்கும்!
மரங்களில் காக்காய்கள் நிறைந்திருப் பது தெரிந்தது.
‘இறங்கி வர மாட்டேங்குதே சனியன். வேற இடத்தில் வெச்சிப் பாக்கலாமே. இடத்தை மாத்திப் பிரயோசனம் இல்லை. ஆளை மாத்துங்க. அவரோட தம்பிய வைக்கச் சொல்லுங்கப்பா…’
அப்படியே செய்தார்கள்.
மொலேரென்று காக்காய்கள் பறந்து வந்து சோறெடுத்தன. அப்பாடா!
அங்கே உண்டிவில் நாயக்கரின் பேரன் அஞ்சு வயசிருக்கும்; அவனைப் பார்த்து மணியம் நாயக்கர், ‘‘லேய் குட்டிப் பயலே… ஒன்னோட தாத்தன் நாளைக்கு செத்தாலும் காக்காயி வந்து சோறு எடுக்காதுடா…!” என்றதும் அங்கே இருந்த மற்றவர்களோடு உண்டிவில் நாயக்கரும் சேர்ந்து சிரித்தார்.
இதுக்கும் அவர் காக்காய் கறி சாப்பிட மாட்டார். யாராவது தொந்தரவு பண்ணி, ‘பிள்ளைக்கு உடல்நிலை சரியில்லை; மருந்துக்குக் காக்காய் கறி வேணும்’ என்று கேட்டால் காக்காயைக் குறி வைப்பார்.
அவர் உண்டி வில்லை கையில் எடுத் ததே குயில் கறிக்கும், காட்டுப் புறாக்கள், முயல்களுக்கும்தான். இப்படி எதையா வது வீட்டுக்குக் கொண்டுவராமல் இருக்க மாட்டார். குயில் கறிதான் அவருக்கு உயிர்!
நடிகர் சிவாஜிகணேசன் வீட்டுக்கு பாடகி லதா மங்கேஷ்கர் வந்திருந்தாராம். அங்கே ஒரு கூண்டு நிறைய குயில்கள் அடைக்கப்பட்டு இருந்ததைப் பார்த்து, ‘இது என்ன கொடுமை!’ என்று பதறிப் போய்க் கேட்டாராம். ’எல்லாம் உங்களுக்கு விருந்து தரத்தான்’ என்றாராம் சிவாஜிகணேசன்.
‘இது பூராவும் எனக்கே எனக் குத்தானே?’ என்று கேட்டதும், ‘அவ் வளவும் உங்களுக்குத்தான்’ என்றதும் அவர், கூண்டை திறந்து அத்தனை குயில்களையும் விடுவித்து, பறக்க விட்டுவிட்டாராம். குயில் கறி என்றால் லதா மங்கேஷ்கருக்குப் பிரியம். அதைத் தின்றதுனாலேதான், அவர் குரல் குயில் போல் இருக்கிறது என்று யாராவது சொல்லியிருப்பார்களோ என்னவோ!
பாடகரின் குரல் தேனாக இனித் தால்… ‘சங்கீத தேவதைக்கு இவர் போன ஜென்மத்தில் தேனாபிஷேகம் செய்திருப்பார்’ என்றெல்லாம் நம்மவர் கள் சொல்லக் கேட்டிருக்கிறோமே.
ஊரில், எங்கள் வீட்டு மேல்வாசல் திறந்தவெளி முற்றத்தில் எனது காலை நேர உணவின்போது, ஒன்றிரண்டு காக்கைகள் கூப்பிடாமலேயே வந்து ஓட்டுச் சாய்ப்பில் உட்கார்ந்து கொண்டு தலையைச் சாய்த்துப் பார்த்துக் கொண்டே இருக்கும்.
கட்டிப் போட்டிருக்கும் பால் மாடுகள், கன்றுக் குட்டிகள் இவைகளின் உடம்பில் காகங்களுக்கு மேய என்னவாவது இருக் கும். மாடுகள் காட்டில் மேயும்போது கறிச்சா பறவைகள் வந்து அதுகளின் மேலேயும், கொம்புகளிலும் வந்து உட் கார்ந்து கொண்டு பரிபாலனம் பண்ணும். வீட்டு மாடுகளில் காக்காய்கள் வந்து உட்கார்ந்து சட்ட மணியம் பண்ணிக் கொண்டிருக்கும். வீட்டடி நிழலும் கோடைகாலத்துக் காலை நேரமும் சொகமாக இருக்கும். பனை நார்க் கட்டிலின் மேலே உட்கார்ந்தபடியே காலை நேர ஆகாரம் தொடங்கும்.
தட்டில் தோசையைக் கண்டதும் காக்காய், ‘அப்படியா சங்கதி' என்று கேட் பதைப் போலப் பார்க்கும். அந்நேரத்தில் அங்கே நாயும் இருந்தால் காக்காயைப் பார்த்து ஒரு சிறிய்ய ‘லொள்' விடும்.
நாய் வெளியே போயிருந்தால் காக்காய் நெருக்கமாக வந்து அமர்ந்து கொள்ளும். தோசையின் விளிம்பில் சிறிதாகப் பிய்த்து பிஞ்சு சுண்டைக்காய் அளவு உருட்டி, காக்காயை நோக்கி வீசுவது போல் முதலில் பாவலா செய்த வுடன் உஷாராகிவிடும். மேல்நோக்கி வீசுவேன். அது தரையில் விழுவதற்குள் காக்காய் குறுக்கே பாய்ந்து அலகினால் கவ்விப் பிடித்துக் கொள்ளும். இப்படி மூன்று நான்கு வீச்சுதான் போட முடியும். அதுக்குள், ‘என்ன நடக்கு இங்கே' என்பதுபோல எனது சின்னம்மா வந்துவிடுவாள். காக்காயும் ஓட்டம் பிடித்துவிடும். எப்படித்தான் இந்த சின்னம்மாவுக்கும் காக்காய்க்கும் தெரியுமோ!
சின்னம்மாவுக்கு அடுப்பில் ஒரு கண் இருக்கும்; அடுத்தது மாட்டுத் தொழுவத்தை ஒட்டியுள்ள கோழிப் பஞ்சாரத்தின் மேலும் ஒரு கண் இருக்கும். பஞ்சாரத்துக்குள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் அப்போதுதான் பொரித்த பச்சைக் கோழிக் குஞ்சுகள் தனது தாயுடன் இருக்கும். அந்த சின்னக் கோழிக் குஞ்சுகளில் சொன்ன பேச்சைக் கேட்காத குஞ்சுகளும் உண்டு. எப்படித்தான் அதுகள் பஞ்சாரத்தில் இருந்து தப்பி வெளியே வருமோ தெரியாது. நெமை தட்டுவதற்குள் காக்காய்கள் பாய்ந்து வந்து அந்தக் குஞ்சுகளைக் கவ்விக்கொண்டு பறந்தோடிப் போய்விடும். கூட்டுக்குள் அமைந்த தாய்க் கோழி கொடுக்கும் சத்தம் நமக்கு ‘அய்யோ… அய்யோ…’ என்று கேட்கும்.
சின்னம்மாவுக்கு இந்தக் காக்காய்கள் பேரில் ஏன் இவ்வளவு வெறுப்பு என்பது அப்போதுதான் புரியும்.
- வருவாங்க…
முந்தைய அத்தியாயம்- மனுசங்க.. 9: காக்கை ரகசியம்

நன்றி - த இந்து

0 comments: