Thursday, July 16, 2015

புரட்சித்தலைவியும் , புரட்சிக்கலைஞரும் அரசியலில் இணைகிறார்களா? - ஜூ வி ரிப்போர்ட்

மிஸ்டர் கழுகு : மெடிக்கல் !
நினைப்பதற்கு முன்பே வந்து அமர்ந்தார் கழுகார்.
‘‘போயஸ் தோட்டத்துப் பக்கம் இருந்து வருகிறேன். ஆனால், வரவில்லை!’’ என்று ஆரம்பித்தார்.
‘‘என்னாச்சு?” நாம் கேட்டோம்.
‘‘சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு உயர் நீதிமன்றம் விடுதலை செய்த பிறகு, 23.5.2015 அன்று முதலமைச்சராக ஜெயலலிதா பதவி ஏற்றார். மறுநாள் கோட்டைக்கு வந்து சிந்தாமணி அங்காடியில் மலிவு விலையில் துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு விற்பனையைத் தொடங்கி வைத்தார். பிறகு மே 29, ஜூன் 2, 8, 12, 16, 18, 25 ஆகிய நாட்களில் கோட்டைக்கு வந்தார். அங்கு இருந்தபடியே வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் சில திட்டங்களைத் தொடங்கினார்.
ஜூன் 29-ம் தேதி மெட்ரோ ரயிலுக்கும் கோட்டையில் இருந்தபடியே கொடியசைத்தார். ஜூலை 4-ம் தேதி அதானி குழுமத்துடன் தமிழக மின்வாரியம் செய்துகொண்ட சூரிய மின் ஒளி திட்டம் ஒப்பந்தம் நடந்தது. கோட்டையில் நடந்த அந்த நிகழ்வில் பங்கேற்றார். அன்றைய தினமே ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினராக உறுதிமொழி எடுத்துக்கொண்டார். ஐந்தாவது முறையாக முதல்வராகப் பதவியேற்ற பிறகு கடந்த 51 நாட்களில் 10 நாட்கள் மட்டுமே கோட்டைக்கு வந்திருக்கிறார் ஜெயலலிதா!’’
‘‘அவ்வளவுதானா?”
‘‘ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து பல்வேறு தகவல்கள் வந்தபடி இருக்க... கடந்த 13-ம் தேதி ஜெயலலிதா கோட்டைக்குச் செல்கிறார் என்ற தகவல் பரவியது. பள்ளி மாணவ - மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை முதல்வர் 
ஜெய​லலிதா வழங்குகிறார் என்று சொன்னார்கள். ஜெயலலிதாவை வரவேற்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் வீரமணி, ‘கருணைக் கடலே வருக! வருக!’ என்று போஸ்டர்களும் ஃப்ளெக்ஸ்களும் வைத்து அமர்க்களப்படுத்தி இருந்தார். ஆனால், அவர் வரவில்லை!’’

‘‘சொல்லும்!’’
‘‘ஜெயலலிதாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று எதிர்க் கட்சியினர்தான் சொல்லி வருகின்றனர். கருணாநிதி, இளங்கோவன் என்று தலைவர்கள் பலரும் அறிக்கை விட்டபடி இருக்கிறார்கள். முதல்வர் தரப்பில் இருந்து எந்த விளக்கமும் வரவில்லை. அதிகமான குழப்பத்தில் இருப்பவர்கள் அ.தி.மு.க தொண்டர்கள்தான்.  அமைச்சர்களுக்கு போன் செய்தால், ‘இந்த மாதிரியான சந்தேகங்களை எல்லாம் போனில் கேட்கக் கூடாது’ என்று சொல்லி டக்கென்று வைத்து விடுகிறார்களாம்.’’
‘‘மருத்துவர்கள் வட்டாரத்தில் என்ன சொல்​கிறார்கள்?”
‘‘கல்லீரல் மாற்று அறுவைச்சிகிச்சை துறையில்  உலக அளவில் பிரபலமாகத் திகழ்கிறவர் டாக்டர்.முகமது ரிலா. லண்டன் மருத்துவக் கல்லூரியில் வேலை பார்த்தவர். மக்கள் மத்தியில் கல்லீரல் பற்றி விழிப்பு உணர்வை உண்டாக்கும் விதமாக, தேசிய கல்லீரல் ஆராய்ச்சி ஃபவுண்டேஷன் சார்பில் கார்டனுக்குள் போயிருக்கிறார் இந்த டாக்டர். ஜெயலலிதாவையும் அவர் சந்தித்தாராம். கடந்த சில நாட்களாக யாரையும் சந்திக்காத ஜெயலலிதா, டாக்டர் முகமது ரிலாவை மட்டும் ஏன் வீட்டில் சந்தித்தார் என்பதுதான் மருத்துவ வட்டாரத்தில் பரபரப்பு பேச்சாக இருக்கிறது. சென்னையிலோ, இந்தியாவின் வேறு ஏதாவது மாநிலத்திலோ போய் உடல் பரிசோதனை செய்துகொண்டால், அதை மீடியாக்கள் பெரிய விஷயமாக ஃபோக்கஸ் செய்யும். அதை ஜெயலலிதா விரும்பவில்லை என்று சொல்கிறார்கள். அதைத் தவிர்க்க வெளிநாட்டுக்குச் செல்வதுதான் நல்லது என்று குடும்ப மருத்துவர்கள் ஆலோசனை சொல்லியிருக்கிறார்கள்!’’
‘‘வெளிநாடு போவாரா ஜெயலலிதா!’’
‘‘மருத்துவர்கள் மட்டுமின்றி ஜோதிடர்கள் சிலரிடமும் இதுபற்றி ஆலோசனை நடந்து வருவதாகச் சொல்கிறார்கள். ஜூலை 15-ம் தேதி இந்த விஷயத்தில் முக்கிய முடிவை எடுப்பார் என்று சொல்கிறார்கள். ஏற்கெனவே இதுபற்றி 08-07-15 இதழில் விரிவாகச் சொல்லி இருந்தேன். ‘இப்போது கொடநாடு; அப்புறம் வெளிநாடு’ என்று நீரே தலைப்பு போட்டு இருந்தீர். கொடநாடு அல்லது வெளிநாடு செல்லும் அளவுக்கு உடல் நிலை இடம் கொடுக்கிறதா என்றும் சில சோதனைகள் செய்யப்பட்டு உள்ளன. ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அக்கறையுடன் கவர்னர் விசாரித்துள்ளார். டெல்லியில் இருந்து மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி பேசி இருக்கிறார். அவர் பேசிய சில நிமிடங்களில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பேசியதாகவும் சொல்கிறார்கள்.மருத்துவ சிகிச்சைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று அக்கறையுடன் தெரிவித்துள்ளனர். வீட்டைவிட்டு வெளியேறாமல் சிகிச்சை செய்ய முடியுமா என்று பார்க்கிறார்கள். அடுத்தடுத்த நாட்களில் விறுவிறு நகர்வுகள் இருக்கும்!”
‘‘ஓ.பன்னீர்செல்வத்தின் டெல்லி பயணமும் திடீர் பரபரப்பை உருவாக்கிவிட்டதே!”
‘‘நதி நீர் இணைப்பு குறித்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அவர் டெல்லி சென்றிருப்பதாக அரசுத் தரப்பில் சொல்லப்​பட்டிருக்​கிறது. ஆனால், இன்னொரு காரணமும் சொல்கிறார்கள்.”
‘‘அது என்ன?”
‘‘ஜெயலலிதா வெளிநாடு செல்ல வேண்டுமானால் மத்திய அரசிடம் க்ளியரன்ஸ் வாங்க வேண்டும். அந்த அனுமதியைப் பெறுவதற்காகத்தான் டெல்லி சென்றிருப்பதாக ஒரு சாரார் சொல்ல ஆரம்பித்துள்ளனர்’’ என்று நிறுத்திய கழுகார்... டாப்பிக்கை மாற்றினார்.
‘‘பி.ஜே.பி தனது முஸ்தீபுகளை காட்டித் தேர்தலுக்குத் தயாராக ஆரம்பித்துவிட்டது! மாநிலம், வட்டாரத்துக்குத் தகுந்தாற்போல் பிற்பட்ட சமூகத்தைக் கவரும் வகையில், ‘உங்கள் சமூகத்தை பி.சி-யாக்குகிறோம், ஓ.பி.சி-யாக்குகிறோம், வருகிற தேர்தலில் எங்களுக்கு ஆதரவுகொடுங்கள்’ என்று கூவிக்கூவி சாதி அமைப்புகளை அழைக்கவும் ஆரம்பித்துள்ளது. சாதி அமைப்புகளை 
பி.ஜே.பி ஒருங்கிணைக்கும் வேலையை சுதேசி ஜாக்ரன் மஞ்சின் தலைவர் ஆடிட்டர் குருமூர்த்தி செய்து வருகிறார்!”

‘‘அப்படியா?”
‘‘வருகிற 15-ம் தேதி விருதுநகரில் நாடார் சங்கம் நடத்தும் காமராசர் விழாவில் கலந்துகொள்ள பி.ஜே.பி-யின் அகில இந்தியத் தலைவர் அமித் ஷா வருகிறார். அப்போது மதுரையில் தேவேந்திரர் அமைப்பு நடத்தும் விழாவிலும் கலந்துகொள்கிறார். 17-ம் தேதி வரும் நிதின் கட்கரியும் குமரி, நெல்லை மாவட்டங்களில் சில சாதி அமைப்புகளைச் சந்திக்கிறார். இதற்கு முன்னோட்டமாக கடந்த 
11-ம் தேதி மதுரையில் ராஜா முத்தையா மன்றத்தில் நடந்த ரெட்டி நலச்சங்கத்தின் ஓ.பி.சி உரிமை கோரும் மாநாடு நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் தி.மு.க மாவட்டச் செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனும் கலந்துகொண்டனர்!”

‘‘பொன்.ராதாகிருஷ்ணன் என்ன பேசினார்?”
‘‘நன்றாகவே ஐஸ் வைத்தார்.  இனி நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம். ஓ.பி.சி சலுகை பெற முயற்சிக்கும் பணிக்கு எப்போது வேண்டுமானாலும் என்னைத் தொடர்புகொள்ளலாம். என்னை உங்களில் ஒருவனாகப் பாருங்கள். டெல்லியில் எனக்கு வழங்கப்பட்ட வீட்டை உங்கள் அலுவலகமாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். பெரிய பெரிய பணக்காரர்கள் உங்களிடம் இருக்கிறார்கள். இருந்தாலும், உங்களிடம் சல்லிக்காசுகூட கேட்க​மாட்டேன். என்னை ஏணியாகப் பயன்படுத்தி மிதித்து மேலே ஏறிச் செல்லுங்கள்’ என்று டச்சிங்காகப் பேசினார் பொன்.ராதாகிருஷ்ணன்.”
‘‘ஓஹோ!”
‘‘அன்றைய தினமே மருத்துவ சமூக பிரமுகர்கள், செளராஷ்டிரா, தேவர் அமைப்பினர், 
எஸ்.சி அமைப்பினர் ஆகியோர் பொன்.ராதா​கிருஷ்ணனைச் சந்தித்து சில கோரிக்கைகளை வைத்துவிட்டுச் சென்றுள்ளனர். இன்னும் ஆறு மாதங்களுக்கு பல்வேறு சாதி அமைப்புகளை சந்தித்து அவர்களை தங்களுக்கு ஆதரவாக மாற்ற தமிழக பி.ஜே.பி திட்டமிட்டிருக்கிறது!”

‘‘விஜயகாந்த்தும் ராமநாதபுரம் பக்கம் போய்​விட்டார்போல!’’
‘‘பெரிய கட்சிகள் எல்லாம் இஃப்தார் விருந்தை சென்னையில் நடத்தி முடித்த நிலையில், விஜயகாந்த் ராமநாதபுரத்தில் வைத்து விருந்து வைத்திருக்கிறார். விஜயகாந்த்துக்கு அவரது கட்சியினர், புதிய பட்டத்தைக் கொடுத்து வரவேற்றார்கள். மேடை ஏறிய விஜயகாந்த்தைக் கண்ட அவரது தொண்டர்கள் ஆரவாரத்துடன் கோஷமிட எல்லோரையும் அமைதியாக அமரும்படி ‘சைகை’ மூலம் சொல்லிவிட்டு தலையில் இஸ்லாமியர்கள் அணியும் குல்லாவை அணிந்தவாறு அமர்ந்தார். குல்லா இல்லாமல் இருந்த நிர்வாகிகளை அழைத்து குல்லா போடச் சொன்னார் விஜயகாந்த். நிகழ்ச்சியில் பேசிய விஜயகாந்த்தின் நண்பரும் வழக்கறிஞருமான மதுரை பிஸ்மில்லாகான், ‘சதா சர்வ காலமும் எங்களுடனேயே இருப்பவர். இறைவனுக்கு மட்டுமே பயப்படுபவர் விஜயகாந்த். நேர்மையின் சின்னமான அவரைப் பற்றி கொஞ்சம் மனம் திறந்து பேசுவோம். கொஞ்சம் கோபப்படுபவர் விஜயகாந்த்’ என்றார். உடனே உற்சாக மூடுக்கு வந்த விஜய்காந்த், ‘கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும்’ என்பதை ‘மோனோ’ ஆக்டிங்கில் சொன்னார். விஜய்காந்த்தின் செயலை கவனிக்காமல் பேசிக்கொண்டிருந்த பிஸ்மில்லாகானை அழைத்த விஜயகாந்த் தான் சொன்ன 
‘கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும்’ மோனோ ஆக்டிங்கின் அர்த்தத்தை  மைக்கில் சொல்லச் சொல்லி ரசித்தார்!”

‘‘அடுத்த கூட்டத்தில், ‘தலைவருக்குக் குழந்தை மனசு’ என்று யாராவது சொல்வார்கள்!”
‘‘விஜயகாந்த் பேசும்போது, ‘நான் என்றைக்கும் சிறுபான்மையினருக்கு உயிராகவும் உற்ற தோழனாகவும் இருப்பேன். நான் எப்பவும் சிறுபான்மையினர் பக்கம்தான். அதனாலதான் என் மகன் சண்முகபாண்டியனுக்கு முதலில் ‘சௌஹத் அலிகான்’னுதான் பேரு வச்சேன். ஆனா, அப்பா அம்மா இந்து பேரா இருக்க மகன் பேரு முஸ்லிமா இருந்தா பாஸ்போர்ட் எடுக்கும்போது பிரச்னை வரும்னு சொன்னாங்க. அதனாலதான் பேரை மாத்திட்டேன். நான் கோபப்படுவதாகச் சொன்னார்கள். நான் எதற்காகக் கோபப்படுகிறேன். தப்பு செய்தவர்களைக் கண்டால் கோபம் வருகிறது. மற்றபடி நான் ஜெயலலிதாபோல் எல்லாவற்றுக்கும் கோபப்படுவதில்லை. அவர்தான் குடை பிடித்தாலும் கோபப்படுவார். குடை பிடிக்காவிட்டாலும் கோபப்படுவார்’ என்று முடித்தார்!’’ என்று சொல்லிவிட்டு எழுந்த கழுகார்,
‘‘முதல்வர் பூரண நலம் பெற வேண்டி கோயில்களில் வழிபாடு நடத்தலாமா என்று அமைச்சர் ஒருவர் நல்ல எண்ணத்தின் அடிப்படையில் கோரிக்கை வைத்தாராம். கோபம் கொப்பளிக்க வந்த பதிலை யாரால் சொல்ல முடியும்!” என்றபடி பறந்தார் கழுகார்!
படம்: சு.குமரேசன், 
உ.பாண்டி

நன்றி - விகடன்

0 comments: