Friday, July 17, 2015

மனுசங்க.. 11: காக்காய்க் கதை -கி.ராஜநாராயணன்

காக்கையுடன் சிநேகம் பிடிப்பது அவ்வளவு சுலபம் இல்லை. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் நம்முடைய கையினால் கொடுத்த உண்டியைச் சாப்பிட்ட காக்காயா இது என்று எப்படிக் கண்டுபிடிக்க? நாய் என்றால் வாலை ஆட்டி தனது சிநேகப் புன்னகையைத் தெரிவிக்கும். காக்காய் ‘களுதை’ மண்ணாக நிற்கும். நமக்கும் கண்டுபிடிக்க முடியாத காரணம் அது களின் ஒன்றுபோலவே உள்ள நிறம் தான்!
நாய் நாய்தான்; காக்காய் காக்காய் தான்! நம்முடைய சேக்காளிக் காக்கா யைத் தெரிந்துகொள்ள முடியாதது அதுக்குத்தான் நட்டம்.
ஆட்களைக் ‘காக்காய் பிடிக்கிற’தும் லேசில்லை. அப்படி இருக்கும்போது நிஜக் காக்காயை எப்படிப் பிடிப்பது என்று எனது ‘பிஞ்சுகள்’ குழந்தை குறுநாவலின் ஏழாவது, எட்டாவது அத்தியாயங்களில் சற்று விரிவாகவே எழுதியிருக்கிறேன்.
காக்கைகளில் நாட்டுக் காக்கை, நீர்க் காக்கை, அண்டங்காக்கை போன்ற வகைப்பாடுகள் உண்டு. அபூர்வமாக வெள்ளை யானை என்று இருப்பது போல; வெள்ளைக் காக்கையும் உண்டு. நாங்கள் இங்கே புதுச்சேரியில் லாஸ்பேட்டை Q - 13க்குக் குடிவந்தபோது ஒரு வெள்ளைக் காக்காயைப் பார்க்கும் யோகம் எங்களுக்குக் கிடைத்தது.
முதலில் அந்தக் காக்கை கருப்பு நிற மாக இல்லை; கொக்குபோல தூய வெள்ளை நிறமாகவும் இல்லை. அழுங் கல் வெள்ளையாக இருந்தது. அதை ‘வெள்ளைக் காக்காய்' என்று சொல்லி அடுத்தவர்களை அதிர வைப்பதில் ஒரு குள்ள மகிழ்ச்சி இருந்தது மக்களுக்கு.
கடும் கருப்பும் கடும் சிவப்பும் இல்லாமல் இருப்பவர்களை ‘பொது நிறம்’ என்று சொல்லுவதைப் போல, இந்தக் காக்கையை பொது நிறம் என்று சொல்ல மனசில்லை.
ஒரு மாலைவேளையில்தான் நாங்கள் அதைப் பார்த்தோம். எப்படியாவது இதை ஒரு படமாக எடுத்துவிட வேணுமே என்று தோன்றிவிட்டது. நோக்கை அறியும் குண முள்ள இவற்றை கேமராவுக்குள் எப்படிப் பிடிப்பது? பத்திரிகைக்காரர்களிடம் சொன்னால், செய்தி பரவி காபரா ஆகிவிடுமோ என்கிற தயக்கம். புதுவை இளவேனிலிடம் சொல்லி ரகசியமாக வரவழைக்கலாம். போனிலும் அகப்பட மாட்டான். நேரிலும் சொல்லியனுப்பி வரவழைக்கவும் முடியாது. அப்படி ஒரு பிஸி ஆகிவிட்டான் ஆசாமி.
சொல்லி வைத்ததைப் போல் ஒரு வெயில் மாலை நேரத்தில் அந்த வெள்ளைக் காக்காய் எங்கள் வீட்டுத் தோட்டத்துக்கே வந்துவிட்டது.
பேராசிரியர் நாயகருக்கு போன் போட்டோம் கல்லூரிக்கு. கிடைத்தார். ‘இன்ன மாதிரி சங்கதி என்று சொல்லி, உடனே கேமராவோடு இங்கே ஓடி வாருங்கள்’ என்றேன்.
அவர் வருவதற்குள் காகம் இடம் மாறிவிட்டது. எதிர்வீட்டு மாடியில் போய் உட்கார்ந்து கொண்டது. ‘ரொம்ப தூரமாக இருக்கே…’ என்றார். என்றாலும் பல கோணங்களில் மனசில்லாமலும் வேற வழியில்லாமலும் படம் பிடித்தார்.
பிரிண்ட் போட ஸ்டுடியோவுக்குக் கொண்டு போனால், ‘வேலைக்காவாது’ என்று சொல்லிவிட்டார்களாம். ரொம்ப வருத்தம் எனக்கு. அதன் பிறகு வந்த நாட் களில் மழைகள் குறுக்கிட்டன. எங்களுக் கும் வேறு கவனங்கள் வந்துவிட்டன.
அந்த ‘வெள்ளைக் காக்காய்’ என்ன ஆச்சு என்று நண்பர்கள் விசாரிப்பார்கள்.
‘இந்தக் கருப்புக் காக்காய்கள்தான் அதை எங்கோ விரட்டிவிட்டுவிட்டது…’ என்று ஊகமாகப் பதில் சொன்னோம்.
கள்ளம் உள்ளது காகம் என்பார்கள். அப்பேர்ப்பட்ட காகத்தையே ஏமாற்றி அதன் கூட்டில் போய் குயில் தனது முட்டையை வைத்து, தனது இனத்தைப் பெருக்கிக் கொள்கிறது என்பது ரசமான விசயம்தான்.
நான் இந்த புதுச்சேரிக்கு வந்த புதுசில் ஒரு நாள் குயில்களின் கெச்சடம் சங்கடப் படுத்தும்படியாக இருந்தது. ‘அட, ச்சே... என்ன இது' என்று சலித்துக்கொண்ட போது இங்கே ஒருவர் சொன்னது:
‘‘இந்த ஊரின் அதிதேவதையின் பெயரே குயிலாம்பாதான் தெரியு மோல்யோ’’.
காகம் ஒன்று குச்சிகளை, சிலும்பல் களைப் பொறுக்க ஆரம்பித்துவிட்டால் தெரிந்துவிடும் முட்டையிடப் போகிறது என்று.
அவை குடியிருக்கக் கூடு கட்டுவது இல்லை. முட்டை இட்டு அடைகாத்துக் குஞ்சு வளர்க்கவே கூடு.
காகம் அடைகாக்கும்போது அந்த மரத்தின் பக்கம் யார் போனாலும் தலையில் ஒரு குட்டு வாங்காமல் திரும்பவே முடியாது.
‘ஓ நாலு’-வில் நாங்கள் குடியிருந்த போது முதல் மாடியில் இருந்தோம். என்னுடைய எழுதும் அறையின் பக்கத்தை ஒட்டி ரெண்டு நெட்டிலிங்கம் மரங்கள் சேர்ந்தாற்போல் அமைந்திருந் தன. ஜன்னல்களின் சூரிய மறைப்பு, மரங்களின் மேலே பார்க்க முடியாமல் தடுத்தன. குனிந்து ஒதுங்கி நின்று திருட்டுத்தனமாகத்தான் காகங்களைப் பார்க்க முடியும். ஒரு சின்ன அலுக்கட்டம் தெரிந்தாலும் உசாராகிவிடும். ஜன்னல் கதவை ஒருச்சாய்த்து வைத்துக் கொண்டுதான் கவனிக்க வேண்டும். அப்படி கவனிக்க அங்கே என்ன இருந்தது?
நான் பார்த்தது என்பதைவிட, கேட் டது என்று சொல்லுவதே பொருந்தும். ரெண்டு காகங்கள் ஒட்டி உரசி இருந்துகொண்டு அந்தரங்கம் பேசிக் கொண்டிருந்தன.
நாம நினைக்கிறோம்; காகத்துக்குப் பேச, கத்த, ஒன்றை ஒன்று கூப்பிட ஒரே சொல்தான் உண்டு என்று. அந்த ஒரே 'கரைதல்’தான் அதற்கு காக்கா என்றும் பேர் வாங்கித் தந்தது.
வேற எந்தப் பட்சிக்கும் அது ஒலிக்கும் ஒலிப்பினுடைய ஒலியே பெயராக வந்ததாகத் தெரியவில்லை. குயிலுக்குக்கூட இல்லை.
நான் நினைக்கிறேன்; காக்கா என்ற பெயரை முதலில் ஒரு குழந்தைதான் வைத்திருக்க வேண்டும். குழந்தைகளுக் கும் காக்காய்க்கும் ஒரு நெருக்கம் உண்டு. கதைகள் மூலமாகவும் கூட. மனுசங்களின் அந்தரங்கப் பேச்சை (பெண்ணோடு ஆண்) கவனிக்கத் தோன்றுகிற நமக்கு, காக்கைகளின் நெருக்கத்தையும் அதன் குழறல் பேச்சையும் கவனிக்க விருப்பப்படுவது இயற்கைதானே; அது முறையில்லை என்றாலும்கூட!
அவை சிணுங்கிப் பேசிக்கொண்டது காக்கை மொழியில்தான். அந்த ஒலிப்பு ஓசைக்கு எழுத்து இல்லை என்றாலும் ஊகிக்க முடியுமே.
மனுச செல்லச் சிணுக்கட்டங்களை எழுதிக் காட்டவே நம்மிடம் எழுத்துக்கள் கிடையாது. இதில் பட்சிகளின் பேச்சுகளை எப்படி எழுதுவேன்?
ஆனாலும் மிருகங்கள், பட்சிகள் பேசுகின்றன என்று நமது சொல்கதைகள் சொல்கின்றன.
அண்டரணப் பட்சிகள் என்ன பேசிக் கொண்டன என்று கதைகளில் சொல்லப்பட்டிருக்கிறது.
- இன்னும் வருவாங்க…
ஓவியங்கள்: மனோகர்
முந்தைய அத்தியாயம்- மனுசங்க.. 9: காக்காய்கள் கூட்டம்!


thanx - the hindu

0 comments: