Friday, July 17, 2015

காமராஜ் - சினிமா விமர்சனம்


நடிகர் : ரிச்சர்ட் மதுரம்
நடிகை :ஆனந்தி
இயக்குனர் :பாலகிருஷ்ணன்
இசை :இளையராஜா
ஓளிப்பதிவு :ரங்கசாமி
கடந்த 2004-ஆம் ஆண்டு ரிச்சர்ட் மதுரம் நடிப்பில் வெளிவந்த காமராஜ் படத்தில், தற்போது மேலும் சில காட்சிகளை சேர்த்து டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மெருகேற்றப்பட்டு மீண்டும் ஒருமுறை மக்கள் பார்வைக்கு கொண்டு வந்துள்ளனர்.

சமுத்திரகனி, காமராஜ் வாழ்ந்த தி.நகர், திருமலைச் சாலை இல்லத்திற்கு வந்து அவரது பெருமைகள் குறித்து மேலும் அறிந்துகொள்வது போன்ற காட்சிகள் தற்போது இணைக்கப்பட்டுள்ளன. இதில், காமராஜரின் பால்ய பருவம் நொடியில் கடந்து, அவரது இளமை காலத்திற்கு வந்துவிடுகிறது. காமராஜர் தேச விடுதலை போராட்டத்தில் கலந்து கொள்ளுதல், அரசியலில் தனியிடம் பிடித்து முதல்வராகுதல், சாமான்ய மக்களுக்கு தொண்டாற்றுதல், அகில இந்திய அரசியலில் கிங் மேக்கராக முத்திரை பதித்தல் என காமராஜர் வாழ்வின் முக்கிய கட்டங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

காமராஜரின் பல்வேறு சம்பவங்களை தொகுத்து படத்திற்கு நெருக்கடி கொடுக்காமல் அவருடைய மாநில மற்றும் மத்திய அரசியல் சார்ந்த முக்கிய நிகழ்வுகளை மட்டுமே தேர்வு செய்திருக்கிறார் இயக்குனர் பாலகிருஷ்ணன். படத்தில் பெரும் பங்காற்றியிருப்பது ரிச்சர்ட் மதுரத்தின் திறமையான நடிப்புதான். ‘நான்தான் காமராஜர்’ என்று அசல் காமராஜரே நேரில் வந்து நம்ப சொன்னாலும், சந்தேகத்துடன் பார்க்க வைக்கும் அளவிற்கு யதார்த்தம் மீறாமல் நடித்திருக்கிறார் ரிச்சர்ட் மதுரம்.  இவருக்கு கொடுக்கும் பாராட்டில் சரி பாதியை எம்.எஸ்.பாஸ்கருக்கும் பகிர்ந்து கொடுக்க வேண்டும். ஏனென்றால், அவர்தான் ரிச்சர்ட் மதுரத்திற்கு டப்பிங் கொடுத்திருக்கிறார். இவரது குரல் ரிச்சர்ட் மதுரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறது.

குறைவான நிதியை வைத்துக் கொண்டு ஒருவருடைய வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்வதென்பது சவாலான விஷயம். அதில் பெருமளவுக்கு ஜெயித்திருக்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும். அதற்கு முக்கிய காரணம் காமராஜ் என்ற மாமனிதர் வாழ்ந்த எளிய வாழ்க்கைதான் என்றால் அது மிகையல்ல. சிறு பட்ஜெட் படங்களில் ஒளிப்பதிவுதான் மிகப்பெரிய சொதப்பலாக இருக்கும். ஆனால், இதில், ரெங்கசாமியின் கேமரா தன் கடமையை பக்குவமாய் கையாண்டிருக்கிறது.

இரண்டு மணி நேர திரைப்படத்தின் கதையை ஒரே பாடலில் சொல்வதென்பது தனிக்கலைதான். இந்த படத்தின் இறுதிக்கட்டத்தில் வரும் ‘நாடு பார்த்ததுண்டா’ என்ற பாடலில் காமராஜ் படத்தின் சாராம்சத்தை இளையராஜா தன் குரலால் அழகாக பதிவு செய்திருக்கிறார். அவரது குரலில் இந்த பாடலை நாம் கேட்கும்போது நெஞ்சம் ஈரமாகி, மௌனம் காக்க வைக்கிறது. ஒப்பற்ற தலைவனின் வாழ்க்கை வரலாற்றை ஒரு சில நிமிட பாடல் மூலம் ஆழமாய் பதிய வைப்பதென்பது கோடியில் ஒருவருக்கே சாத்தியம்.. ராஜா கோடியில் ஒருவர்.

சொந்தமாய் வீடில்லை.. வாகனமில்லை... வங்கி கணக்கில்லை... அலமாரியில் அவர் விட்டுச் சென்றது வெறும் 110 ரூபாய்தான். அதுகூட தனது தாயின் செலவுக்கோ, அல்லது ஏழையின் துயர் துடைக்கவோ வைத்திருந்த பணமாய் இருந்திருக்கக்கூடும். வீட்டை விட நாட்டிற்கே உழைக்க துடித்த உத்தமன். இப்படியும் ஒரு அதிசய பிறவி தமிழகத்தை ஆண்டார் என்பதை இன்றைய தலைமுறைக்கு சிறப்பாய் எடுத்துச் சொல்லியிருக்கிறது இப்படம்.

மொத்தத்தில் ‘காமராஜ்’ கிங் மேக்கர்.

thanz - maalaimalar

0 comments: