Tuesday, July 28, 2015

நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் - திரை விமர்சனம்

தலைப்பே படத்தின் கதையைச் சுமந்துகொண்டிருக்கிறது. பத்து பவுன் தங்கச் சங்கிலி தெருவில் கிடக்கிறது. அதை யாரும் எடுக்க மாட்டேன் என் கிறார்கள். தொலைத்தவரே திரும்ப வந்து எடுத்துக் கொண்டு போய்விடுவார் என்று அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாமல் வாழ்கிறார்கள். அந்த அளவுக்கு நேர்மையாக இருக்கும் ஒரு கிராமம் பொற்பந்தல். மது, புகை எதுவும் இல்லாத கிராமம் அது. கிராமத்தின் பஞ்சாயத் துத் தலைவரிடம் சாக்கடை அடைத்துக்கொண்டிருக்கிறது என்று சொன்னால், அவரே தனது வெள்ளைச் சட்டையைக் கழற்றி வைத்துவிட்டு சாக்கடை அடைப்பை நீக்கும் வேலையைச் செய்துவிட்டுச் செல்கிறார்.
சிறந்த கிராமம் என்று தொடர்ந்து ஜனாதிபதி விருது வாங்கும் இந்த கிராமத்தில் ஒரு காவல் நிலையம். குற்றமே இல்லாத ஊரில் காவல் நிலையத்துக்கு என்ன வேலை? அருள்நிதி, சிங்கம்புலி, பகவதி பெருமாள், ராஜ்குமார் ஆகியோர் வேலை செய்யும் அந்தக் காவல் நிலையம் மனமகிழ் மன்றம்போல நடக்கிறது. ஆளில்லாத கடையில் டீ ஆற்ற வேண்டாமே என்று இவர்கள் நால்வரையும் வேறு ஒரு ஊருக்கு மாற்றல் செய்ய முடிவெடுக்கிறது மாவட்டக் காவல் துறை. சிங்கம் புலி கூட்டணிக்கு அந்த ஊரை விட்டுச் செல்ல விருப்பமில்லை. போகும் ஊரில் குற்றங்கள் அதிகம் என்பதால் பயமும் அவர்களைப் பிடித்துக்கொள்கிறது. கிராமத்தில் குற்றம் நிகழச்செய்து வழக்கு பதிவு செய்துவிட்டால் அந்த ஊரிலேயே இருக்கலாம் என்ற நப்பாசையில் நச்சு வேலைகளில் இறங்குகிறது இந்த நால்வர் அணி. அதன் பிறகு அந்த அமைதியான ஊரின் நிலை என்னவாக மாறியது என்பதுதான் கதை.
கதையாகக் கேட்பதில் இருக்கும் சுவாரஸ்யம் காட்சிகள் மற்றும் திரைக்கதையில் இல் லாமல் போனது பெரும் சோகம். ஊரின் அருமையான சூழலையும் அதைக் கெடுக்க போலீஸார் செய்யும் அபத்தமான முயற்சிகளையும் கொண்டு முதல் பாதியை நகைச்சுவையாக நகர்த்துகிறார் அறிமுக இயக்கு நர்  கிருஷ்ணா. இரண் டாம் பாதியில் ஊர் கெட்டுப் போவதையும் அதைத் தடுக்கும் முயற்சிகளையும் சொல்கிறார். இரண்டுமே சொல்லப்படும் விதத்தில் கூறியது கூறல் ஆகிச் சோதிக்கின்றன.
அருள்நிதியின் காதல், அவர் கனவுலகில் சஞ்சரிப்பது, கனவி லேயே காதலைச் சொல்வது, நடந்தது நிஜமா கனவா எனத் தெரியாமல் குழம்புவது என்று இளமை ரசத்தையும் கூட்ட முயல்கிறார் இயக்குநர். ஆனால் படத்துக்கு எந்த விதத்திலும் ஒட்டாத தனி டிராக்காகப் பரி தாபமாக நிற்கிறது காதல் அத்தியாயம்.
எவ்வளவுதான் நல்லவர்களாக இருந்தாலும் சக மனிதர் மீது நம்பிக்கை குலையும்போதும், தன்முனைப்பு எட்டிப்பார்க்கும் போதும் நல்லுணர்வுகள் பின் னுக்குப் போய் கோபமும் வெறுப்பும் முனைப்பு பெறுவதை வலுவாகக் காட்டியிருக்கிறார் இயக்குநர். ஆனால் இந்தப் புள்ளிக்கு வருவதற்கான காரணங்களை முறையாகக் காட்சிப்படுத்தத் தவறிவிட்டார். தூய்மை, பக்குவம், கருணை, விட்டுக்கொடுத்து வாழ்தல், பரஸ்பர நம்பிக்கை என எல்லா நல்ல குணங்களின் கலவையாக வாழும் மனிதர்கள் சட்டென்று உணர்ச்சிவசப்படுவதும் இரு அணிகளாகப் பிரிந்து கடும் வன்முறையில் இறங்குவதையும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் சொல்லவில்லை.
திருந்தி வாழும் திருடர் மீண்டும் திருட ஆரம்பிப்பது, நேர்மையான இளைஞர்களை அவர் திருட்டுக் கும்பலாக மாற்று வது ஆகியவையும் நம்பும்படியாக இல்லை.
சிங்கப்புலி தனது வழக்கமான மிகை நடிப்பைக் கொட்டினாலும் நால்வர் அணியில் அவரே பளிச் சென்று பதிவாகிறார். அருள்நிதி கிட்டத்தட்ட ரன் அவுட்தான். வழக்கமான நாயக வேடங்களைத் தவிர்த்து வித்தியாசமான வேடங் களைத் தேர்ந்தெடுப்பது நல்ல விஷயம்தான். ஆனால் வலு வான பாத்திரமாக அமைய வேண்டாமா?
‘நடுவுல கொஞ்சம் பக் கத்தைக் காணோம்’ படத்தில் அறிமுக நட்சத்திரங்களாகக் கலக்கிய பகவதி பெருமாள், ராஜ்குமார் இருவரும் பரிதாப கரமாக எந்த வேலையும் இல்லாத போலீஸ்களாக வந்து போகிறார்கள்.
மகேஷ் முத்துசாமியின் ஒளிப் பதிவு நன்று. கருப்பு வெள்ளையில் படமாக்கப்பட்டிருக்கும் பாடல் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் நன்றாக உள்ளது. ரெஜினின் பின்னணி இசை காட்சிகளின் கலகலப்பைக் கூட்டுகிறது.
இயக்குநர் காட்சிகளை வலு வாகவும் நம்பகத்தன்மையோடும் அமைக்கத் தவறிவிட்டது தான் பெரும் கோளாறு. எனினும் காட்சிகளில் இருக்கும் கலகலப்பு படத்தை ஓரளவு காப்பாற்றுகிறது.


நன்றி - த இந்து

0 comments: