Saturday, July 25, 2015

நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் - சினிமா விமர்சனம்

நன்றி - மாலைமலர்


பொற்பந்தல் என்னும் கிராம மக்கள் ஒற்றுமையோடும் சமாதானத்தோடும் இருக்கிறார்கள். இவர்களின் அமைதிக்காகவும் ஒழுக்கத்திற்காகவும் சிறந்த கிராமத்திற்கான ஜனாதிபதி விருதை தொடர்ந்து பெற்று வருகிறது.

இந்த ஊரில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் பகவதி பெருமாள் எஸ்.ஐ.யாகவும், சிங்கம் புலி ஏட்டாகவும், அருள்நிதி மற்றும் ராஜ்குமார் கான்ஸ்டபிளாகவும் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த ஊர் அமைதியாகவும், சண்டை சச்சரவுகள் இல்லாமலும் இருப்பதால் இவர்களுக்கு வேலையே இல்லை. டென்ஷன் இல்லாமல் சொகுசாக வாழ்ந்து வருகிறார்கள்.

இவர்களில் அருள்நிதி எதாவது சாகசம் செய்ய வேண்டும் என்ற கனவுடன் இருக்கிறார். மேலும், இதே ஊரில் டீச்சராக இருக்கும் ரம்யா நம்பீசனை காதலித்தும் வருகிறார். ரம்யா நம்பீசனும் அருள்நிதியை காதலித்தபோதும் தன்னுடைய காதலை மறைத்து வருகிறார்.

இந்நிலையில் குற்றமே நடக்காத ஊரில் எதற்கு போலீஸ் ஸ்டேஷன் என்று அரசு கூறி, இவர்கள் நான்கு பேரையும் பக்கத்து ஊருக்கு மாற்றம் செய்கிறார்கள். பக்கத்து ஊரிலோ ஒரே கலவரம், சண்டை சச்சரவுகள்.

நான்கு பேரும் பொற்பந்தல் கிராமத்தை விட்டு சென்றால் ரொம்ப கஷ்டப்படுவோம் என்று நினைத்து, இரண்டு மூன்று கேஸ் பிடித்து இதே ஊரில் செட்டிலாகி விடலாம் என்று திட்டம் தீட்டுகின்றனர்.

அதன் முயற்சியாக இந்த ஊருக்கு திருட வந்து திருந்தி வாழும் யோகிபாபுவை பிடித்து கேஸ் போட நினைக்கிறார்கள். அது பலனலிக்காமல் போகிறது. அதன் பின்னர் சிங்கம் புலி, பகவதி பெருமாள் இருவரும் களத்தில் இறங்கி ஊர் மக்களுக்குள் இருக்கும் ஒற்றுமையை கெடுத்து பிரச்சனைக்கு தூபம் போடுகிறார்கள். அதன் விளைவு, அந்த கிராமத்தையே ஒரு போர்க்களமாக மாற்ற, அதற்கு பின் என்ன ஆனது என்பதை காமெடி கலந்து சொல்லியிருக்கிறார்கள்.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் அருள்நிதி முந்தைய படங்களை விட இந்தப் படத்தில் நடிப்புக்கு தீனி போடும் வாய்ப்பு குறைவு. கொடுத்த வேலையை செய்திருக்கிறார். நாயகியாக ரம்யா நம்பீசன் அழகான கிராமத்து பெண்ணாக வந்து சென்றிருக்கிறார். காமெடி, சென்டிமென்ட் என அனைத்து ஏரியாக்களையும் கவர் செய்திருக்கிறார் சிங்கம்புலி. பகவதி பெருமாள், ராஜ்குமார், யோகிபாபு ஆகியோர் அவர்களுக்குண்டான கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

நகைச்சுவையை மையமாக வைத்து படத்தை இயக்கியுள்ள ஸ்ரீகிருஷ்ணா, அதில் சிறிதளவே வெற்றி கண்டிருக்கிறார். படத்தின் முதல் பாதி காமெடியில் கைகொடுத்தாலும் பின் பாதியில் பெரியதாக கைகொடுக்கவில்லை. காதல் காட்சிகள் படத்தில் எந்த இடத்திலும் ஒட்டாமல் இருப்பது படத்திற்கு மைனஸ். படம் முழுவதும் ஏதோ நாடகம் பார்ப்பது போன்ற ஓர் உணர்வு ஏற்படுகிறது. 

ரஜின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணியில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். மகேஷ் முத்துச்சாமியின் ஒளிப்பதிவு ஒரு சில காட்சிகளில் பளிச்சிடுகிறது.

மொத்தத்தில் ‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’ கொஞ்சம் காமெடி கொஞ்சம் சொதப்பல்.

0 comments: