Friday, July 24, 2015

மதுரை -மதுரை மண்ணுக்குள்... ரகசியங்களின் ஆதிநிலம்! - 1

வைகை நதி நாகரிகம் !
மதுரை மண்ணுக்குள்... ரகசியங்களின் ஆதிநிலம்! - 1சு.வெங்கடேசன்படங்கள்: ஸ்ரீராம் ஜனக், கே.ராஜசேகரன்
ரு காட்சியை, கற்பனை செய்து பாருங்கள்... ஒரு வீட்டுக்குள் உட்கார்ந்து இரண்டு பெண்கள் தாயம் விளையாடுகிறார்கள். அவர்களில் ஒரு பெண், கழுத்தில் முத்துமணி மாலை அணிந்திருக்கிறாள். தூய வெண்ணிற முத்துக்களின் ஒளி, வீடு முழுவதும் சிதறியபடி இருக்கிறது. அது போதாது என, காதுகளில் பளிங்கால் ஆன பாம்படம் அணிந்திருக்கிறாள், அது முத்துமணி மாலையின் ஒளியையும் விஞ்சுகிறது. அவளோடு எதிரில் உட்கார்ந்து விளையாடிக்கொண்டிருப்பவளோ, தனது கழுத்தில் ஆப்கானிஸ்தானில் கிடைக்கும் மூலப்பொருளைக் கொண்டு செய்யப்படும் சூது பவளத்தால் ஆன (Carnelian) மணிமாலை அணிந்திருக்கிறாள். அதன் அழகு எல்லையற்றதாக இருக்கிறது. இருவரும் விளை யாடிக்கொண்டிருக்கும்போது தாகம் எடுக்கிறது. உள்ளே இருக்கும் சிறுமியிடம் நீர் கொண்டுவரச் சொல்கிறார்கள்.
வீட்டுக்குள் இருக்கும் சிறுமி, ஓடோடி வந்து ரோமானியக் குவளையில் தண்ணீர் கொடுக்கிறாள். கொடுப்பவளின் கையில் சித்திரம் வரையப்பட்ட சங்கு வளையல் சரசரக்கிறது. அவர்கள் தண்ணீரை வாங்கிக் குடித்துவிட்டு மீண்டும் தாயக்கட்டைகளை உருட்டுகிறார்கள். அவர்களின் உள்ளங்கையில் இருந்து உருளும் தாயக்கட்டைகள் தந்தத்தால் செய்யப்பட்டிருக்கின்றன.
சுமார் 2,500 வருடங்களுக்கு முன்னர் மதுரையில் அரங்கேறியது இது என்றால், நம்புவீர்களா? ஆனால், இந்தப் பொருட்கள் அத்தனையும் மதுரையில் இப்போது நடக்கும் அகழாய்வில் கிடைத்திருக்கின்றன. ஒரு சங்க காலக் குடியிருப்புக்குள் நம் கற்பனைக்கு எட்டாத ஒரு வாழ்வை 2,500 ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்திருக்கிறார்கள் மதுரை மாந்தர்கள். இங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் ஏற்படுத்தும் ஆச்சர்யத்தைவிட, கூடுதல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் செய்தி ஒன்று உண்டு. அதுதான் அகழாய்வு நடக்கும் இடம்.
தென்னந்தோப்புக்குள் நடக்கும் அகழாய்வாக இந்த இடம் இருந்தால், நமது வியப்பு ஒரு கட்டுக்குள் அடங்கும். ஆனால், நமது வியப்பு கட்டுக்குள் அடங்காதபடி மேலெழக் காரணம், பாண்டியர்களின் பழைய தலைநகர் எனச் சொல்லப்படும் மணலூரின் கண்மாய்க்கரை மேட்டில்தான் இந்தத் தென்னந்தோப்பு அமைந்திருக்கிறது என்பது.
காலத்தின் கரங்களால் இறுகப் பூட்டப்பட்ட மதுரை என்ற ஓர் ஆதி ரகசியத்தின் கதவை, தென்னந்தோப்பின் காற்று மெள்ள அசைத்துப் பார்க்கிறது.
நாமும் அந்தக் காற்றின் வழி பயணிப்போம்!
மதுரை என்றாலே சவால்களுக்குப் பஞ்சம் இருக்காது. அதுவும் இன்று... நேற்று அல்ல, 2,000 ஆண்டுகளுக்கு முன்பு, ஒருவன் உலகம் முழுவதும் இருக்கும் நகரங்களைப் பார்த்து ஒரு சவால்விட்டான்.
'ஒரு துலாக்கோளைக் கொண்டுவாருங்கள். அதன் ஒரு தட்டில், இந்த உலகத்தில் இருக்கும் அனைத்து நகரங்களையும் வையுங்கள். இன்னொரு தட்டில், மதுரையை மட்டும் வையுங்கள். பெருமையும் சிறப்பும் காரணமாக மதுரை இருக்கும் தட்டே கனம் தாங்காமல் கீழ் இறங்கும்’ என்றான்.
'என்ன இது... உலக நகரங்களை எல்லாம் சேர்த்தாலும் மதுரையின் புகழுக்கு ஈடு ஆகாதா?!’ எனக் கோபம்கொள்ளத் தேவை இல்லை. மதுரை என்பது, ஈடு-இணையற்ற ஒரு நகரம் என்பதற்கான அறிவிப்பை, கம்பீரத்தோடு அவன் வெளியிட்டிருக்கிறான். இந்த நகரத்தை அவன் எவ்வளவு நேசித்திருந்தால், இப்படி ஓர் அறிவிப்பை வெளியிட்டிருப்பான் என யோசித்துப்பாருங்கள். இந்த அறிவிப்பைத் தாங்கிய கவிதையை, இத்தனை ஆயிரம் வருடங்களாக, தமிழ்ச் சமூகம் பாதுகாத்து வருகிறது என்றால், இந்தச் சமூகத்துக்கு மதுரையின் மீது இருக்கும் மதிப்பை எண்ணிப்பாருங்கள்.
பரிபாடலில் ஆறாவதாக இடம்பெற்றுள்ள இந்தப் பாடல், மதுரையைப் பற்றிய கவிதை அல்ல; கனவு. இவ்வளவு பெரிய கனவை உருவாக்கி, அதைக் காத்துவரும் திறன் மதுரைக்கு உண்டு. ஏனென்றால், மதுரை என்பது ஒரு நகரத்தின் பெயர் மட்டும் அல்ல; தமிழ் மொழியின், தமிழ்ப் பண்பாட்டின், தமிழ் இலக்கியத்தின் முகம். அது நிலத்தைக் குறிக்கும் சொல்லாக மட்டும் அல்லாமல், தமிழர்களின் நினைவைக் குறிக்கும் சொல்லாகவும் இருக்கிறது.
உலகின் மிக மூத்த அரச குலங்களில் ஒன்று பாண்டிய அரச குலம். தமிழ்நாட்டை சங்க காலம் தொட்டே சேர, சோழ, பாண்டியர் எனும் மூவேந்தர்கள் ஆள, மூவரில் மூத்தோனாக, பழையோனாகப் பாண்டியனே இருந்தான். இதன் காரணமாகவே மற்ற இருவரும் பாண்டியர்கள் மீது பொறாமைகொள்ளவும் பகை வளர்க்கவும் செய்தனர். பாண்டியர்களின் தலைநகராக மதுரை இருக்க, பாண்டிய மன்னனுக்கு உரியது வேப்பம் பூ மாலை என ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்கள் சொல்கின்றன. இன்றளவும் மதுரையின் அரசி மீனாட்சிக்கு, திருநாளில் வேப்பம் பூ மாலைதான் சூடப்படுகிறது. காலத்தின் மிக நீண்ட ஓட்டத்தில், தனது அடையாளங்களையும் மரபுகளையும் உதிர்த்துவிடாமல் மதுரை காத்துவருகிறது.
ஆன்மிக மரபில், மீனாட்சிதான் மதுரையின் அரசி என்பது எல்லோருக்கும் தெரியும்; ஆனால், மீனாட்சியின் கணவன் சொக்கநாதன் மதுரையின் அரசன் அல்ல; மீனாட்சியின் கணவன் மட்டுமே என்பது பலருக்குத் தெரியாது. இந்த வியப்பூட்டும் செய்திக்குப் பின்னால் இருக்கும் உண்மை என்னவென்றால், உலகெங்கும் ஆதி சமூகத்தின் தலைமை பெண்களிடம்தான் இருந்தது. பின்னர்தான் ஆணிடம் வந்தது. அந்த ஆதி காலம்தொட்டு இந்த நகர் தனது ஞாபக எச்சங்களை இழக்காமல் இன்றுவரை காத்துவருகிறது.
இவ்வளவு நீண்ட காலபரப்பில் இந்த நகரைப் பற்றி எவ்வளவோ இலக்கியங்கள் தொடர்ந்து பேசிவருகின்றன. விந்தியமலைக்கு தெற்கே புகழ்பெற்ற நகராக மதுரை இருந்ததைப் பற்றி வால்மீகி வர்ணிக்கிறார். திரௌபதியின் சுயம்வரத்தில் பாண்டிய அரசன் கலந்துகொண்டதாக வியாசன் எழுதுகிறார். வாத்ஸாயனரும், கௌடில்யரும், காளிதாசனும் இந்த நகரை வியந்து பாடுகின்றனர். கடல் கடந்த தேசங்களில் இருந்து பயணிகள், காலம்தோறும் இந்த நகருக்குள் வந்தவண்ணமே இருந்துள்ளனர்.
சங்க இலக்கியங்களில் பாடல் எழுதிய பலரும், இந்த நகரைச் சார்ந்தவர்களே. இதை அதன் கோட்டைச்சுவர்களை, காவல் வீரர்களின் கைகளில் ஒளிரும் ஆயுதங்களை, நாள் அங்காடிகளில் நடக்கும் வணிகத்தை, நகரத்தின் மீது கவியும் இரவை, வைகையின் படித்துறையில் சலசலக்கும் நீர் ஓசையை... என ஒன்றுவிடாமல் நவீனக் கருவிகொண்டு செய்யப்படும் ஒளிப்பதிவுபோல பரிபாடலும் மதுரைக் காஞ்சியும் பதிவுசெய்துள்ளன. இதன் பிரமாண்டத்தை, சிலப்பதிகாரம்   விரித்துக்காட்டியுள்ளது.
தேவாரம் பாடிய மூவரும், ஆழ்வார்கள் பலரும் இந்த நகரைப் பாடியுள்ளனர். 'திருவிளையாடற்புராணம்’ இந்த நகரை உச்சியில் ஏற்றிக் கொண்டாடுகிறது. அது இந்த நகரத்தின் மண்ணை சிவன் சுமந்தான் எனக் கூறுகிறது. இந்த நாடு முழுவதும் சைவ மதம் இருந்தாலும், சைவ மதத்தின் மூலக்கடவுளான சிவன்,  மதுரையின் மண்ணைச் சுமந்தான் என, சைவ இலக்கியங்களே பெருமைகொள்கின்றன.
மதுரையின் பெருமைக்கும் பாரம்பர்யத்துக்கும் இலக்கிய ஆதாரங்களைப்போலவே எண்ணி
லடங்காத வரலாறுகளும் மற்றும் தொல்லியல் ஆதாரங்களும் உள்ளன. இந்தியாவில் இதுவரை கண்டறியபட்ட கல்வெட்டுகளில் காலத்தால் மிகப் பழமையான கல்வெட்டுகள் அதிகம் கிடைத்திருப்பது மதுரை மற்றும் அதைச் சுற்றி உள்ள பிராந்தியங்களில் இருந்துதான். சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புள்ளிமான் கோம்பை நடுகல் தமிழி எழுத்துக்கள் அசோகர் காலத்துக்கும் முன்பானது என அறிஞர்கள் கருதுகின்றனர்.
அதாவது இந்தியாவிலேயே எழுத்தும், எழுத்து சார்ந்த அடையாளங்களையும் மிக அதிக அளவில் கொண்டுள்ள நகரம் மதுரை. இங்குதான் சமணப் பள்ளியும் பௌத்தப் பள்ளியும் வேதப் பள்ளியும் இருந்தன என இலக்கியங்கள் சொல்கின்றன. பள்ளிகள் நிறைந்து இருந்த இந்த நகரில்தான் பல சங்கங்கள் நடத்தப்பட்டன. அந்த இலக்கியச் சங்கத்தினரால் தொகுக்கப்பட்டு, ஏற்றுக்
கொள்ளப்பட்ட பாடல் தொகுப்புகள்தான் இன்று உலகின் மிகப் பழமையான பாடல்கள் எனக் கருதப்படும் நமது சங்க இலக்கியங்கள்.
சிலப்பதிகாரத்தில் ஒரு காட்சி வருகிறது. மதுரையின் தெருக்களை வியந்து பார்த்தபடி கோவலன் நடந்து சென்றுகொண்டிருப்பான். அப்போது எதிரில் வரும் பெண் ஒருத்தி, கையில் வடமொழியில் எழுதப்பட்ட ஓர் ஏடு வைத்திருப்பாள். அதில் உள்ள                                          வாசகத்தைக் காட்டி கோவலனிடம் விளக்கம் கேட்க, வேடிக்கை பார்த்தபடி சென்றுகொண்டிருந்த கோவலன், சற்றே நின்று அவளுக்கு விளக்கம் சொல்லிவிட்டுச் செல்கிறான். இது வீதியில் நடந்துபோகிற ஒரு பெண்ணின் கல்வி அறிவுக்குச் சான்று மட்டும் அல்ல, ஒரு நகரத்தின் எழுத்தறிவுக்கும் சான்று.
மதுரையின் சிறப்புகளில் முக்கியமானது இந்த நகரின் தெருக்கள். இங்கு எந்தத் தெருவுக்குள் நீங்கள் போனாலும் அந்தத் தெரு சுமார் ஈராயிரம் ஆண்டுகள் நீளம்கொண்ட தெருவாகத்தான் இருக்கும். உங்களால் காலத்தைக் கடந்து பார்க்க முடியும் என்றால், அதே தெருவில் உங்களைக் கடந்து, பதற்றத்தோடு ஓடிக்கொண்டிருப்பவன்தான் பாண்டிய நெடுஞ்செழியனைப் பார்க்கப் போய்க் கொண்டிருக்கும் பொற்கொல்லன் என்பதை உணர்வீர்கள். அந்தத் தெருமுக்கில், எந்தவிதப் பதற்றமும் இன்றி உட்கார்ந்து இட்லி அவித்துக்கொண்டிருப்பவள் தான், வைராக்கியம் ஏறிய வந்தியக்கிழவி என்பதையும் அறிவீர்கள்.
மதுரை என்பது, ஒரு வகையில் மாயநகரமும் கூட. 'இன்று நாம் பார்க்கும் மதுரைதான் நேற்றைய இலக்கியங்களில் சொல்லப்பட்ட மதுரையா?’ எனக் கேட்டால், சட்டென 'ஆம்’ எனப் பதில் சொல்லிவிட முடியாது. 'மதுரை’ என்பது இன்றைய மாநகராட்சியால் குறிக்கப்பட்ட இடத்தின் பெயர் அல்ல. அது ஒரு ரகசிய நிலத்தின் பெயர் என வாதிடுவதற்கு நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன. இறையனார் அகப்பொருள் உரை எனும் நூல், முதல் தமிழ்ச்சங்கம் இருந்த மதுரையும் கபாடபுரமும் கடல் கொண்டுபோக, மூன்றாவதாக இப்போது இருக்கும் மதுரை உருவானதாகக் கூறுகிறது. கண்ணகி எரித்த மதுரையைப் பற்றி சிலப்பதிகாரம் பேசுகிறது. திருவிளையாடற்புராணமோ, வைகையின் ஓரத்தில் இருந்த கடம்பவனத்தில் இரவில் தங்கிய வணிகன், தான் கண்ட அதிசயக் காட்சியை பக்கத்தில் உள்ள மணலூரைத் தலைமையிடமாகக்கொண்டு ஆட்சிசெய்த குலசேகரப் பாண்டியனிடம் சொல்ல, அவன் வந்து பார்த்து, அந்தக் கடம்பவனத்தை அழித்து இப்போது உள்ள மதுரையை நிர்மாணித்தான் எனச் சொல்கிறது. பெரும்பற்ற புலியூர் நம்பி என்பவர் எழுதிய திருவிளையாடற்புராணத்தைப் பதிப்பித்த தமிழ்த் தாத்தா உ.வே.சா அவர்கள், பாடலின் அடிக்குறிப்பில் பாண்டியர்களின் பழைய ராஜதானி (தலைநகர்) மணலூர் எனக் குறிப்பிடுகிறார்.
இந்த இலக்கிய ஆதாரங்களைத் தவிர, மக்கள் மத்தியில் மதுரையைச் சுற்றி உள்ள இடங்களான அவனியாபுரம், பாண்டி கோயில் பகுதிகளில் பழைய மதுரை இருந்ததாக வாய்மொழிக்
கதைகள் உள்ளன. கதைகளை எல்லாம் வரலாறுகளாக அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால், எந்த ஒரு கதையும் சின்னஞ்சிறு அளவிலேனும் ஓர் உண்மையில் இருந்துதான் தொடங்குகிறது என்பதும் உண்மைதானே!
இந்த வரலாற்று, சரித்திரக் கதைகள் எல்லாம் இப்படி இருக்க, இப்போது மதுரையைப் பற்றி புதிய கதை ஒன்று தொடங்குகிறது. மத்திய தொல்பொருள் ஆய்வுத் துறை, மதுரையில் இருந்து தென்கிழக்காக சுமார் 12 கிலோமீட்டர் தள்ளி பள்ளிச்சந்தைத் திடல் என்ற இடத்தில் இருக்கும் தென்னந்தோப்புக்குள், கடந்த ஐந்து மாதங்களாக அகழ்வாராய்ச்சியை நடத்திவருகிறது. மிக விரிவாக நடத்தப்படும் இந்த ஆய்வில், இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள பொருட்களும் அமைப்புகளும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.
சுமார் 2,200-ம் ஆண்டில் இருந்து 2,500 ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் குடியிருந்த குடியிருப்புப் பகுதியாக இது இருக்கிறது. வரிசை, வரிசையாக வீடுகள், மிக அகலமான செங்கற்கள், தரைத்தளமாக, கனமான தட்டோடுகள், மேற்கூரைக்கு ஆணி அறையப்பட்ட செம்மண் ஓடுகள், வீடுகளை ஒட்டி பெரும் அகலத்தில் நீண்ட சுவர்கள், தண்ணீர் வழிந்தோட வடிகால்கள், வட்டவடிவ உரையிடப்பட்ட கிணறு... என நிலத்துக்குள் ஒரு நகரமே துயில்கொண்டிருக்கிறது. அதைத் துயில் எழுப்பும் முயற்சியில் தொல்பொருள் ஆய்வுத் துறை ஈடுபட்டிருக்கிறது. நீருக்குள் மூழ்கும் நகரங்களை, ஹாலிவுட் படங்களின் கிராஃபிக்ஸ் காட்சிகளில் பார்க்கலாம். ஆனால், மண்ணுக்குள் இருந்து மேலே எழும் நகரங்களை தமிழ்நாடு போன்ற மனித நாகரிகத்தின் பாரம்பர்யத் தொட்டில்களில்தான் பார்க்க முடியும். பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளால் ஒருபோதும் கைக்கொள்ள முடியாத                  இப்படியான பெருமைகளை, நம் நாட்டு கிராம ஊராட்சிகள் தன்னகத்தே கொண்டுள்ளன.
தமிழ்நாட்டில் இதுவரை நடந்துள்ள அகழாய்வுகளில் முழுமையான குடியிருப்புப் பகுதி கிடைத்திருப்பது இதுதான் முதல்முறை என்கிறார்கள் தொல்லியலாளர்கள். இங்கு கிடைத்திருக்கும் பொருட்களின் பட்டியல் மிக நீளமானது. மற்றும் நம்ப முடியாத வியப்பை ஏற்படுத்தக்கூடியது.
இப்போது சொல்லுங்கள்... பரிபாடலில் புலவன் எழுதியது வெறும் வாய்ச்சவடால் அல்ல, வாழ்வின் செருக்கில் இருந்து மேலெழுந்த சவால் என்பது உண்மை அல்லவா?!

நன்றி -விகடன்

0 comments: