Tuesday, June 05, 2012

கமல் பேட்டி BY சிவசங்கரி @ விகடன் பொக்கிஷம் -1983


மல்ஹாசனைச் சந்திக்க அவர் இல்லத்துக் குச் சென்றபோது கூடத்தில் பழுப்பு நிற கதர் சட்டை, நாலு முழ வேட்டியில் இருக்கும் பெரியவரிடம் என்னை அறிமுகம் செய்து வைக்கிறார்கள்.


அவர், கமலின் தந்தை... மென்மையாகச் சிரிக்கிறார்.

''பரமக்குடியில் இருந்து எப்போது வந்தீர் கள்?''

''இரண்டு நாள் முன்பு... நாளை இரவு திரும்புகிறேன்.''

''ரயிலிலா?''

மீண்டும் அதே மென்மையான சிரிப்பு... ''முப்பது வருஷமாக பஸ்தான்...''


''சின்ன வயசு கமலைப் பற்றி ஏதாவது சொல்ல முடியுமா?''


''ம்ம்ம்? கமலுக்கு அவன் அம்மாவிடம் ஏக ஆசை. சின்னப் பையனாக இருக்கையில் நினைத் துக்கொண்டு அவளிடம் ஓடி வருவான். வயிற்றைத் தடவிக் கொடுத்து, 'இங்கேதானேம்மா நான் இருந்தேன்; இங்கிருந்துதானே வந்தேன்?’ என்று கேட்டு வாஞ்சையுடன் அந்த வயிற்றில் முத்தம் கொடுப்பான்.''தொடர்ந்து பேசுவதற்குள் கமல், கங்கை அமரன் சிரித்துக்கொண்டே உள்ளே வருகிறார் கள்.


''அமரனின் அடுத்த படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? 'கால்வாய்க் கரை’... முதலில் 'கோழி கூவுது’, பிறகு 'கொக்கரக்கோ’... தொடர்வது கால்வாய்க் கரைதானே?''


பலத்த சிரிப்பு கூடத்தில் உள்ள அனைவரையுமே ஆக்கிரமிக்கிறது. இரண்டு நிமிஷங்களில் கங்கை அமரன் விடைபெற்றுக்கொண்டு புறப் பட, கமல் எதிரில் உள்ள திவானில் அமர்கிறார்.


''ஸாரி... உங்களை முதலில் ஐந்து மணிக்கு வரச் சொல்லிவிட்டு, பின் ஆறு என்று மாற்றியதற்கு. நிறைய ரசிகர்கள் 'இலங்கைத் தமிழர் படு கொலையை எதிர்த்து நாமும் ஓர் ஊர்வலம் போகலாம்’ என்ற கோரிக்கை யுடன் கூட்டமாக வந்துவிட்டார்கள்.

'அவசரப்படக் கூடாது. இது இந்திய அரசு சம்பந்தப்பட்ட பிரச்னை. நாம் தனிப்பட்டரீதியில் எதையாவது செய்யப்போக, அது அங்கு ஏற்கெனவே அவதிக்கு உள்ளாகி இருக்கும் தமிழ் இனத்தை மேலும் கஷ்டத்தில் ஆழ்த்தி விடக் கூடாது. யோசித்து, ஆக்கபூர்வ மான காரியத்தை அவசியம் செய்ய லாம்’ என்று கூறி அனுப்பினேன்.''


ரசிகர்களைப் பற்றி கமல் குறிப்பிட்ட தால், ரசிகர் மன்றம் சம்பந்தப்பட்ட கேள்வியுடனேயே பேச்சைத் தொடங்கு கிறேன்.1. ''வெகு சீக்கிரமே நீங்கள் அரசியலில் நுழையப்போகிறீர்கள்... அதன் அஸ்தி வாரம்தான் இந்த விரிவான ரசிகர் மன்ற நடவடிக்கைகள் என்கிறார்களே?'' 


உதட்டைப் பிதுக்குகிறார். கைகளை விரித்து, தோளைக் குலுக்கி 'நான் என்ன சொல்வேன்’ என்கிற பாவனையுடன் ஏறிடுகிறார். ''லயன்ஸ் கிளப் போல முழுக்க முழுக்க சமூக சேவை பிரக்ஞை கொண்ட ஓர் அமைப்பை உண்டாக்க வேண்டும் என்ற ஆசையின் விளைவுதான் என் ரசிகர் மன்றம். 1980 வரை ரசிகர் மன்றங்கள் தேவை இல்லை என்ற எண்ணத்தில் இருந்தவனுக்கு, சமூக சேவை என்ற விழிப்பு உணர்வு வந்த பிறகு, ஏன் ரசிகர்மன்றத்தைத் தோற்றுவித்து ஆக்கபூர்வமாகச் செயல்படக் கூடாது என்று தோன்றியது.


தயவுசெய்து என் ரசிகர் மன்ற அலுவல கத்துக்குப் போய் நாகராஜனைச் சந்தியுங்கள். முதன்முதலில் பஸ் ஸ்டாப்பில் 'இன்ன எண் பஸ்... இன்ன இடத்துக்குச் செல்லும்’ என்ற விவரம் அடங்கின பலகையை மாட்டி, எங்களுக்குத் தெரிந்த விதத்தில் சமூக சேவையை ஆரம்பித்ததைப் பற்றிக் கூறுவார்!''


2. ''அப்படியென்றால், நீங்கள் பணம் கொடுப்ப தாகவும் அரசியலில் புக இதன் மூலம் படிக்கட்டுகள் கட்டுவதாகவும் கூறுவதில் நிஜம் இல்லையா?'' 


''சத்தியமாக இல்லை. இன்று வரை என் ரசிகர் மன்றத்துக்காக நான் பைசா செலவழித்தது இல்லை. போன் பில்கூட அவர்களேதான் பார்த்துக் கொள்கிறார்கள்.''


3. ''உங்கள் ரசிகர் மன்றத்தின் தற்போதைய நடவடிக்கைகள் என்னென்ன?'' 


''இறந்த பிறகு கண் தானம் செய்ய பெயரைப் பதிவுசெய்துகொண்டு இருக்கிறோம். நல்ல புத்தகங்களை வாங்கி நூலகங்களை உருவாக்க இருக்கிறோம். ஆகஸ்ட்-15 போன்ற விசேஷ தினங் களில் நான் உட்பட மன்றத்தைச் சார்ந்த பலரும் இலவசமாக ரத்த தானம் செய்து ஆஸ்பத்திரி களில் ரத்த வெள்ளத்தை உண்டாக்கப் போகிறோம். எங்காவது இறப்பு நடந்தால், அங்கு சென்று கண் தானத்தின் மேன்மையை விளக்கி, இறந்தவரின் கண்களைத் தானமாகப் பெற முயற்சிக்கப்போகிறோம்!''
4. ''கைக் காசைச் செலவழித்து... உங்களுக்காக, உங்கள் வார்த்தையை நிறைவேற்றப் பாடுபடும் ரசிகர்களை நினைக்கையில்..?'' ''நெகிழ்ந்துபோகிறேன். எனக்கு அந்தத் தகுதி இருக்கிறதா என்று தவித்துப்போகிறேன். முடிந்த வரைக்கும் தனித்தனியே அனைவரையும் சந்தித்து என் குறிக்கோள், நன்றி, சந்தோஷத்தைத் தெரிவிக்கப் போகிறேன். இத்தனை ஆயிரம் பேர் உழைப்பும் கமல்ஹாசன் என்ற தனி நபருக்குப் பெருமை சேர்க்கத்தான் என்பதை நினைத்தால் சிலிர்த்துப்போகிறது. 'பதிலுக்கு நீ என்ன செய்யப்போகிறாய்?’ என்று மனசு பரபரக்கிறது.


என் ரசிகனுக்குத் தேவையான படத்தைக் கொடுத்து, அவனை மகிழ்விப்பது ஒன்றுதான் என்னால் முடிந்த சமாசாரம். 'சகல கலா வல்லவன்’ போன்ற படங்களை நான் அதிகம் இப்போது ஒப்புக்கொள்வதற்குக் காரணம், இந்த விதத்திலாவது என் ரசிகர்களைத் திருப்தி செய்யலாமே என்றுதான். நிஜமாகச் சொல்கிறேன், பணமும் புகழும் அடுத்த காரணங்களே!''


5. ''வரதட்சணைக் கொடுமை, முதியோர் பிரச்னை, வறுமை, வேலை இல்லாமை என்று இன்றைக்குத் தாண்டவமாடும் இன்னும் பல பிரச்னைகள் குறித்து..?'' 


''தனி மனிதனாக என்னால் முடிந்ததை நான் செய்துகொண்டுதான் இருக்கிறேன். ஆனால், எங்கள் இண்டஸ்ட்ரி மாபெரும் சக்தி வாய்ந்தது. இதைச் சரிவரப் பயன்படுத்தினால், பட்டிதொட்டிகளில் உள்ள பாமர மக்களிடமும் நல்லவிதமான பாதிப்புகளை ஏற்படுத்துவது சுலபம்!''


6. ''சரி... அதைச் செய்வதற்கு என்னதடை?'' 


''அதிகமாக வரி கொடுக்கும் தொழிலாக இருப்பினும், அதற்கு உரிய மரியாதை எங்களுக்குக் கிடைக்காதது வருத்தப்பட வேண்டிய விஷயம். செக்யூரிட்டியே இல்லாத தொழில் எங்களுடையது. ஒரு ரசாயனத் தொழிற்சாலை ஆரம்பிக்கப் பண உதவி செய்ய முன் வரும் வங்கிகள், ஒரு படம் எடுக்க எங்களுக்கு உதவுவது இல்லை. ஏன் இந்தப் பாரபட்சம்? கேட்டால், பாதுகாப்பு இல்லை என்பார்கள். அரசாங்கம் மட்டும் எங்கள் தொழிலை மதித்து, படத் தயாரிப்புக்குப் பண உதவி செய்ய முன்வந்தால், நிச்சயமாகச் சொல்கிறேன்.


.. பத்தில் ஆறு படங்களாவது உயர்ந்த குறிக்கோளுடனும் சமூகப் பிரக்ஞையுடனும் அமையும். சந்தேகமே இல்லை!''


7. ''இந்த அளவுக்கு வளர்ந்த பின்னர், யாருடைய இழப்பையாவது வெகுவாக உணர்கிறீர்களா?'' 


''என் அம்மா! எதற்கும் இவன் உதவ மாட்டான் என்கிற முடிவுக்கு அனைவரும் வந்துவிட்ட பின், 'எதிர்காலத்தில் என்ன பண்ணுவான், இவனுக்கு என்று கொஞ்ச மாவது வருமானம் வேண்டாமா?’ - என்ற ஆதங்கத்தில் வாசலில் இருக்கும் கடைகளைக் கட்டக் காரணமாக இருந்தவர். I miss her alot!''


8. ''உங்களையே விமர்சித்துக்கொள்ளும் பக்குவம் உண்டா?'' 


''கொஞ்சம் என் பலம், பலவீனம் எனக்குத் தெரியும். எனக்கு வேண்டும், வேண்டாததைக் கவனமாகத் தேர்ந்தெடுக்கும் விவேகத்தை மெதுவாக வளர்த்துக்கொண்டு இருக்கிறேன். முன் கோபம், ஆத்திரம் என் மைனஸ் பாயின்ட்ஸ். ஆனால், எப்பேர்ப்பட்ட விரோதிக்கும் அவர் என் பிடிக்குள் வரும்போதுகூடக் கெடுதல் செய்ய முடியாதது என் ப்ளஸ் பாயின்ட்!''


9. ''தொடர்கதை எழுத முனைந்திருப்பதன் மூலம் எழுத்துலகில் உங்களை ஸ்திரப்படுத்திக் கொள்ள முனைந்திருக்கிறீர்கள். இந்தக் கதையை நீங்கள் எப்படி உருவாக்கினீர்கள் என்பதைச் சொல்லுங்களேன்...'' 


''இது ரொம்ப வருஷங்களுக்கு முன் என்னுள் ஜனித்தது. நண்பன் ஒருவனுக்கு உண்டான அனுபவத்தை ஆதாரமாகக் கொண்டது. இதை முதலில் திரு.பாலசந்தரிடம் கூறினேன். அவர், 'நன்றாக இருக்கிறது, ஆனால், மிt வீs ரீஷீக்ஷீஹ். ரொம்ப பயங்கரம்’ என்று சொன்னார். இந்தக் கதை என்னுள் முழுமையாக உள்ளது. நடிகன் கமல்ஹாசனால் வெளிப்படுத்த இயலாத எல்லைகளை எழுத்தாளன் கமல்ஹாசன் தொட்டுக் காட்ட வேண்டும் என்கிற ஆர்வம் இருக்கிறது!''


10. ''பாட, ஆட, நடிக்க, எழுதத் தெரிவதன் மூலம் நீங்கள் ஒரு All Rounder என்பதை நிரூபிக்கிறீர்கள். இன்னும் எந்தக் களத்திலாவது தேர்ச்சி பெற ஆசை உண்டா?'' 


''கர்னாடக இசையை முழுமையாக அறிய, திரு.பாலமுரளியிடம் சங்கீதம் கற்கிறேன். மேடையில் நான் கச்சேரி செய்ய வேண்டும் என்பது அப்பாவின் ஆசை. இது எந்த அளவுக்கு நிறைவேறும் என்பதைப் பொறுத்துதான் பார்க்க வேண்டும். விஞ்ஞானத்தின் வளர்ச்சி என்னை ரொம்பப் பயமுறுத்துகிறது. இன்னும் சில வருஷங்களில் கம்ப்யூட்டரின் முன் நான் ஒரு ஞானசூன்யமாகி விடுவேனோ என்ற மிரட்சியின் காரணமாக, கம்ப்யூட்டர் பற்றின அறிவைச் சமயம் கிடைக்கும்போது எல்லாம் வளர்த்துக்கொள்கிறேன்!''


11. ''இன்றைய கமல்ஹாசனின் வளர்ச்சியில் உங்கள் மனைவி வாணிக்குப் பங்கு இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?'' 


''ரொம்ப... ரொம்ப! முரட்டுத்தனம் நிறைந்த என்னைப் பல விஷயங்களில் ஒருநிலைப் படுத்தியது அவள்தான். என் அம்மாவின் இழப்பை ஓரளவுக்குத் தாங்கிக்கொள்கிறேன் என்றால், அது வாணி தரும் இதத்தால்தான். எல்லாவற்றையும்விட, வாணி எனக்கு ஒரு நல்ல Companion!''


12. ''இதுவரை யாரிடமும் பகிர்ந்துகொள்ளாத நினைப்பை என்னிடம் சொல்வது சாத்தி யமா?'' 


''ம்ம்...'' - கமல் சிந்திக்கிறார். தீவிரமான பார்வையுடன் மெதுவாகப் பேசுகிறார். ''விட்டுக்கொடுத்து, விட்டுக்கொடுத்து அதாவது, கலையுலகில் Compromise செய்து செய்து நாளடைவில் எனக்குள் இருக்கும் கலைஞன் கமல்ஹாசன் உருவமற்றுப் போய்விடுவானோ என்ற பயம் எனக்கு உண்டு. 'ராஜபார்வை’ நடிகன் கமல் இன்றைக்கும் அதே வீரியத்துடன் உள்ளே நடமாடிக்கொண்டு இருக்கிறானா என்பது சந்தேகமாகவே இருக்கிறது.

உண்மையிலேயே கலைஞன் கமல்ஹாசன் இறந்து விடுவானோ என்ற பயம். நான் சொல்வது உங்களுக்குப் புரிகிறது அல்லவா?''
பேட்டி முடிந்துவிடுகிறது.


கமலின் கடைசி வாக்கியங்கள் ஒருவித வேதனையை உண்டுபண்ண... அப்படியே அமர்ந்து சிந்திக்கிறேன்.


வசதி இருந்தும் எளிமையான வாழ்க்கையை மனப்பூர்வமாக ஏற்று வாழும் தந்தை ஸ்ரீனிவாஸன், அண்ணன் சாருஹாஸன். அன்பையும் சிரிப்பையும் தவிர, வேறு எதையும் தரத் தெரியாத மன்னி. நடிகை என்ற பந்தா இல்லாமல், எந்தக் குடும் பத்திலும் காணப்படும் ஒரு பொறுப்புள்ள பெண் போல காபி கலந்து எடுத்து வரும் சுஹாசினி. சுமுகமாகப் பேசும் சாருஹாஸனின் மூத்த மகள் டாக்டர் நந்தினி. வெட்கத்துடன் 'ஹலோ’ சொல்லி உட்காரும் கடைசிப் பெண் சுபாஷிணி. நாட்டியப் பயிற்சியில் இருந்தாலும் கீழே இறங்கி வந்து நட்புடன் பேசும் வாணி -


இவர்கள் நடுவே வசிக்கும் கமல்...


- ஒரு சமயம், கார் டிரைவர் எங்கோ சென்று விட, சட்டென்று கட்டின லுங்கியுடன் தானே வண்டி ஓட்டிக்கொண்டு என்னை வீட்டில் விட்ட கமல்...


- நல்லது, கெட்டதைத் தேர்ந்தெடுக்கும் விவேகத்தை வளர்த்துக்கொள்ள முயற்சிக்கிறேன் என்று வெளிப்படையாகத் தன்னை அலசிக் கொள்ளும் கமல்...
சமூக சேவை செய்வதுதான் முக்கியமே தவிர, கமல்ஹாசனின் பேர் நீடிப்பது அல்ல - என்று தெளிவான சிந்தனையுடன் பேசும் கமல்...


- மனைவி தரும் தோழமையில் பெருமை கொள்ளும் கமல்...


- முக்கியமாக,
மனிதாபிமானத்துடன், தன்னைச் சுற்றி நடப்பவற்றைக் கவனித்து, அதில் சம்பந்தப்படுத்திக் கொள்ள விரும்பும் கமல் -


இவ்வளவு விழிப்பு உணர்வு உண்டாகிவிட்ட பிறகு, மனிதன் கமல், நடிகன் கமல் அழிந்து போவதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பது சாத்தியமா என்ன?


ம்ஹூம்...  இல்லை.


இந்தப் பயம் அநாவசியமானது...


நிச்சயம்...

மனசு தெளிந்துவிட, 'நான் கிளம்புகிறேன்... ஆல் தி பெஸ்ட் கமல்!’ என்று கூறியபடி எழுந்து நிற்கிறேன்!