Thursday, June 07, 2012

கட்சி ஆரம்பித்த பிரபல பத்திரிக்கையாளர் - ஜூ வி கேள்வி பதில்கள்

1.  ஜனாதிபதி வேட்பாளராக லோக்சபா சபாநாயகர் மீரா குமாரை முன்னிறுத்துகிறாரே மம்தா?


மக்களவையில் யார் என்ன திட்டு திட்டினாலும் சிரித்துக்கொண்டே இருக்கிறார் மீரா குமார். இந்தத் தகுதியால் இருக்குமோ?



2. ஜெயலலிதாவின் உருப்படியான சாதனை என்ன?

கருணாநிதியை வீட்டுக்கு அனுப்பியது மட்டும்தான்!
இன்று தன்னுடைய சாதனைகளாக ஜெயலலிதா சொல்பவை அனைத்தும் ஓர் அரசாங்கம் தனது குடிமக்களுக்குச் செய்துதர வேண்டிய அடிப்படைக் கடமைகள், அவ்வளவுதான்.

 இதை ஜெயலலிதாவும் செய்யலாம். கருணாநிதியும் செய்யலாம். ஏதாவது ஒரு கவர்னரும் உட்கார்ந்து கொண்டு செய்யலாம். பரீட்சை எழுதி பாஸ் ஆன அனைவரும் சாதனை செய்தவர்களாக சொல்லப்படுவது இல்லை. அடிப்படை வசதிகள் அனைத்தையும் முழுமையாக நிறைவேற்றிக் காட்டினேன். ஏழ்மை இல்லாத நிலையை உருவாக்கினேன். மின் பற்றாக்குறை இல்லாத தமிழகம் இது. வேலை இல்லாப் பட்டதாரிகள் கிடையவே கிடையாது என்பது மாதிரியான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களையே சாதனைகளாக வரவு வைக்கவும், வரவேற்கவும் முடியும்!


3.'புலிகளுக்கு எதிரான போரில் அப்பாவி மக்களைக் கொல்லவில்லை’ என்கிறாரே, இலங்கை மாஜி ராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகா?


ராஜபக்சேவால் கைது செய்யப்பட்டவர் என்பதற்காக ஃபொன்சேகா புனிதராகி விட முடியாது. ஐ.நா. மனித உரிமை அமைப்பு பகி ரங்கப் போர் விசாரணையை நடத்துமானால், முதல் குற்றவாளி ராஜபக்சே என்றால், இரண்டாவது குற்றவாளியாகப் பதில் சொல்ல வேண்டியவர் ஃபொன்சேகா. எனவே, 'அப்பாவிகளைக் கொல் லவில்லை’ என்றுதான் அவரும் சொல்வார்.


4. அரசியலில் ஆன்மிகம், ஆன்மிகத்தில் அரசியல் - எது சரியானது?


இரண்டுமே தவறானவை. பக்தி, ஆன்மிகம், கடவுள், மதம் ஆகியவை ஒரு மனிதனின் தனிப்பட்ட விருப்பங்களை அடிப்படையாகக் கொண்டவை. அவை, தனிச்சொத்து. நம்பிக்கை சார்ந்த விஷயம். அந்த விருப்பங்கள், அரசியல் ரீதியாக விமர்சிக்கத்தக்கவையும் அல்ல. எனவே, அரசியலில் ஆன்மிகத்தைப் புகுத்தி ஆதாயம் தேடுவதும் தவறு. ஆன்மிகவாதிகள் தேர்தல் அரசியலுக்குள் புகுந்து செயல்படுவது அதைவிடத் தவறு.


ஆனால், தங்களது சுய லாபங்களுக்காக ஆன்மிக விஷயங்களைக் கபளீகரம் செய்ய அரசியல்​வாதிகள் நினைக்கிறார்கள். அதற்கு அப்பாவிகள் பலியாகிறார்கள்!


5. மதுரை ஆதீனம் பிரச்னையில் தமிழக அரசு மௌனமாக இருப்பது ஏன்?


மௌனமாக இல்லை. உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. முதல்வரைச் சீண்டிப்பார்க்கும் சில கமென்ட்ஸ்களை நித்தியானந்தா தரப்பு வைத்ததாக மேலிடத்துக்குத் தகவல் வந்துள்ளது. அதனுடைய ரியாக்ஷன் போகப் போகத்தான் தெரியும்!


6. இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துகொண்டே போவது குறித்து மத்திய அரசுக்கு கவலையே இல்லையா?


இந்தியாவின் மதிப்பு எப்போதோ குறைந்து​போய்விட்டது. அதைப் பற்றியே கவலைப்​படவில்லையே!


வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கும் இந்தியப் பணத்தை மீட்டு வருவதற்குக் கூட இவர்கள் மனப்பூர்வமாக முயற்சி செய்யவில்லை. இந்தப் பணத்தை மொத்தமாக மீட்டு வந்தால் ரூபாயின் மதிப்பு உயருமா, இல்லையா என்பதை விட, இந்தியாவின் மதிப்பாவது உயரும்!



7. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை’ என்பது அரசியலுக்குப் பொருந்துமா?


அரசியல் என்பதே தனி​மனிதப் போட்டியை அடிப்​படையாகக் கொண்டதாக மாறிவிட்டது. ஒருவர், அடுத்தவரை வீழ்த்துவதன் மூலமாகவே லாபம் அடைய முடியும் என்பது யதார்த்தமாக உள்ளது. இந்த நிலையில் குற்றம் கண்டுபிடித்துப் பேர் வாங்குபவர்களால் மட்டுமே அரசியலில் கோ​லோச்ச முடியும்.


இதுபற்றி கண்ணதாசன், 'அரசியல் சதுரங்​கத்தில் இரண்டு வகை உண்டு. நேரடி​​யாக இறங்கிஉள்ளதை உள்ளபடியே சொல்லி, உண்மை, நேர்மை என்று பாடுபட்டு இறுதியில் இருக்குமிடம் தெரியாமல்​போ​வது. இன்​னொன்று, குறுக்கு வழியில் காய்களை நகர்த்தி, நண்பனையோ உற​வினனை​யோ கொல்ல வேண்டுமானால் கொன்று, அரங்கத்தில் நேர்மையாக நடித்து அந்தரங்கத்தில் வஞ்சகனாகி எந்த வழியில் வெற்றி கிடைக்குமானாலும் அந்த வழியை நாடுவது. இவை இரண்டுக்கும் உதா​ரணம் காட்டுகிறது மகாபாரதம். நேர்வழிக்குப் பரந்தாமன். குறுக்கு வழிக்கு சகுனி’ என்று எழுதினார்.


இது, சகுனிகளின் காலம். அண்ணா சொன்ன அந்த உதாரணம் வெறும் கனவு!


8. 'எந்த வேலையையும் செய்ய இந்த ஆட்சியில் ஒப்பந்தக்காரர்கள் முன்வருவது இல்லை’ என்கிறாரே கருணாநிதி?


கமிஷன் தொகையையும் அதிகரித்து​விட்டார்கள். யாரிடம் கொடுப்பது என்பதிலும் குழப்பம். எப்படி வரு​வார்கள் ஒப்பந்தக்காரர்கள்? ஆனால் இதுதான், சில அதிகாரிகளுக்கு வசதியாகப் போய் விட்டது. கொழிக்கிறார்கள். 'வருமானத்​துக்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்த வழக்கு’ இப்போதே சில அதிகாரிகள் மீது
போடலாம்! 


9. தமிழ்நாட்டில் எந்தப் பத்திரிகையாளராவது கட்சி ஆரம்பித்திருக்கிறாரா?


உடனடியாக நினைவுக்கு வருகிறார், சி.பா. ஆதித்தனார். முதலில் அவர் வக்கீல். ஆனால், பத்திரிகையாளராகவே தன்னை வளர்த்துக் கொண்டார். 'தமிழப் பேரரசு’ என்கிற கொள்கை ஈர்ப்பால், 'நாம் தமிழர் கட்சி’ தொடங்​கினார். பின்னர், அவர் தி.மு.க-வில் ஐக்கியம் ஆகிவிட்டாலும், அந்தக் காலத்தில், குறிப்பிடத்தகுந்த அதிர்வுகளை அந்தக் கட்சி உருவாக்கியது.


மற்றபடி, கட்சி ஆரம்பித்தவர்கள் அனை​வருமே தங்களுக்கென ஒரு பத்திரிகை​​யையும் ஆரம்பித்தார்கள். அதற்கு எத்தனையோ உதார​ணங்கள் உண்டு!


10. ஊழலுக்கு எதிராகப் போராடுபவர்கள், மர்ம நபர்களால் தாக்கப்​பட்டுக் கொல்லப்படுவது பற்றி?


தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி ஊழல் முறைகேடுகளை வெளிக்கொண்டு வரக்கூடிய கேள்விகள் கேட்கும் அனைவருக்குமே அச்சுறுத்தல் இருக்கிறது. ஆனால் சட்டத்தின் பாதுகாப்பு, இத்தகைய தகவல் போராளிகளுக்கு இல்லை. போலீஸ், இதைக் கண்டுகொள்வதும் இல்லை. அதனால், இதுபோன்ற கொலையை, சாதாரணக் கொலை வழக்காக இல்லாமல், சிறப்பு வழக்காகப் பதிவு செய்ய வேண்டும்.


2 comments:

ADMIN said...

சூப்பர் மாமு.. உங்கள்..தளத்தில் நான் படித்ததிலேயே இதுதான் முதல்முறையாக சினிமா வாடையில்லாமல் இருந்தது..!

சி.பி.செந்தில்குமார் said...

@palani vel


அப்போ சினிமா ஒரு வாடையா அவ்வ்வ்வ்