Thursday, June 21, 2012

அசோகமித்திரனும், வைஜயந்திமாலாவும்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgGqJklJ22eGWlqijyNxZPyD9yKg8cm8if8d72nRffYUr0N3DEIo1Sey84xT-qASiCPovXg-WNGBbu8P7vAZfZcwgtG06Kn23pwv7iTnZ66nOHJJ4epLL5JhTD-CpDmzvD1OlGCi5PmTnM/s1600/8.jpgவைஜயந்திமாலா


ஒரு தமிழ் நட்சத்திர நடிகையாக வைஜயந்தி மாலா அதிகம் எழுதப் படவில்லை.


அவருடைய சமகாலத்திய நடிகைகளாக லலிதா, பத்மினி, ராகினி, பானுமதி, சாவித்திரி போன்றவர்களைக் கூறலாம். ஒரு வியக்கத்தக்க தகவல், வைஜயந்திமாலா ஒருத்திதான் தமிழ்ப் பெண். மற்றவர்கள் வேற்று மொழிக்காரர்கள். இன்றும் தமிழ்ப் படங்களில் கதாநாயகிகளாக நடிப்பவர்கள், அநேகமாக நூற்றுக்கு நூறு சதவிகிதம் வேறு மொழிக் காரர்கள். இன்று குரல் கொடுப்பது சர்வ சாதாரணமாகிவிட்டது.


 ஆனால் பானுமதியும் பத்மினியும் சாவித்திரியும் பக்கம் பக்கமாகத் தமிழ் வசனங்களை அவரவர்கள் மொழியில் எழுதி மனப்பாடம் செய்தார்கள். மிக நன்றாகவே நடித்தார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு உச்சத்தில் இருந்த ஒரு தமிழ் டைரக்டர் தமிழ் மூச்சு, தமிழ் உயிர், தமிழ் மண் என்று ஒரு திரைப் படத்தில் அவராகவே பேசியிருக் கிறார். ஆனால் அவருடைய கதாநாயகிகள் பெரும்பாலும் வேறு மொழிக்காரர்கள். அவருடைய கதாநாயகர்களில் ஒருவர் தெலுங்கர்; இன்னொருவர் மலையாளம்.இந்தச் சூழ்நிலையில் வைஜயந்திமாலா தமிழ்ப் பெண்ணாக இருந்தும் அதிகத் தமிழ்ப் படங்களில் நடிக்கவில்லை. அவரை அணுகவே பயப்படுவது போல தமிழ்த் தயாரிப்பாளர்கள் அவரை அமர்த்தவில்லை. ஏவிஎம், ஜெமினி தவிர்த்து மூன்று வேறு படங்களில் மட்டும் நடித்தார். ஒன்று, ‘பாக்தாத் திருடன்’, இன்னொன்று ‘பார்த்திபன் கனவு’. ஜெமினியுடன் தேன்நிலவு. ‘பாக்தாத் திருடன்’ படத்தில் எம்ஜிஆர் நடித்தார்.. ஏன் அது இன்று யார் நினைவிலும் இல்லை? எம்ஜிஆர் நடித்த சுவடே இல்லாமல்போன வேறு படங்களும் உள்ளன. அதில் ஒன்று கண்ணாம்பா எடுத்தது. ‘தாலி பாக்கியம்’ கண்ணாம்பா அவர்களுக்கு தாலி, வீடு, வாசல் எல்லாம் போய் திடீரென்று இறந்தும் விட்டார்.

என்னுடைய நண்பர்  ‘பாக்தாத் திருடன்’ படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றினார். திரைப்பட சாதனத்தின் எல்லாப் பிரிவுகள் பற்றியும் மிகத் தெளிவாக அறிந்தவர். அவர் ‘திருடன்’ பற்றியும் பேசமாட்டார். கதாநாயகி வைஜயந்திமாலா பற்றியும் பேசமாட்டார்.


வைஜயந்திமாலா இன்று எழுபது வயதைத் தாண்டியும் ஆண்டுக்கு ஒரு நடன நிகழ்ச்சியாவது அவரே பங்குபெற்று நடத்தி வருகிறார். அவர் வேறு மொழிகளில் நடித்த ஒரு படமும் சோடை போகவில்லை. திலீப்குமார், ராஜ்கபூர், தேவ் ஆனந்த், ராஜேந்திர குமார், பிரதீப் குமார், பால்ராஜ் சகானி, அசோக்குமார் என பலதரப்பட்ட நட்சத்திர நடிகர்களோடு நடித்து அப்படங்களில் முக்கியத்துவமும் பெற்றார். ஒரு கட்டத்தில் கதாநாயகியாக நடிக்கமுடியாது என்று ஏற்பட்டவுடன் அவர் நடிப்பிலிருந்து விலகி, நாட்டிய நிகழ்ச்சிகள் மட்டும் அவ்வப்போது நடத்தினார்.

வைஜயந்திமாலா தோற்றம், நடன ஆற்றல் ஆகியவற்றுக்கே முன்னணி நடிகையாக இருந்தார். இந்தியில் அவருடைய சமகாலத்தைய நடிகைகளாக விளங்கிய நர்கிஸ், மதுபாலா, வஹிதா ரஹ்மான், நூதன் போன்றோர் பலமுறை ஆண்டின் சிறந்த நடிகையாக முன்மொழியப்பட்டு இருமுறை மூன்று முறை தேர்வும் பெற்றார்கள்.


வைஜயந்திமாலா ஒரே ஒருமுறை துணைக் கதாநாயகி விருதுக்காக முன்மொழியப்பட்டுத் தேர்வும் பெற்றார். ஆனால் அவர் அவ்விருதை ஏற்கவில்லை. ‘தேவதாஸ்' படத்தில் சந்திரமுகி வேடத்தில் நடித்த அவர், தானே கதாநாயகி என்று வலியுறுத்தினார். ஆனால் நடுவர்கள் அப்படிக் கருதவில்லை. சங்கடந்தான். தமிழ் ‘தேவதாஸ்' படத்தில் கூடப் பார்வதி வேடத்தில் நடித்த சாவித்திரியைத் தான் அனைவரும் கதாநாயகியாக ஏற்றுக்கொண்டார்கள். சந்திரமுகி வேடத்தில் நடித்த லலிதாவை அல்ல.

தமிழ் வரையில் ‘வாழ்க்கை’ என்ற படம் அடைந்த வெற்றியை ‘பெண்’, ‘அதிசயப்பெண்’ ஆகிய படங்கள் பெறவில்லை. ‘வாழ்க்கை’ படத்தில் பலர் சிறப்பாக நடித்திருந்தார்கள். டி.ஆர். ராமச்சந்திரன், சகஸ்ரநாமம், சாரங்கபாணி தவிர மிகச்சிறிய பாத்திரங்களில் நடித்தவர்களும் விசேஷ கவனம் பெற்றார்கள். இசை இன்னொரு வெற்றி அம்சம். பல பாடல்கள் இந்திப் பாடல்களின் கலப்படமற்ற பிரதிகள்.


ஆனால் அந்தப் பாடல்களுக்காக ரசிகர்கள் பலமுறை படத்தைப் பார்த்தார்கள். அந்த நாளில் (1949&ல்) பாடல்கள் திரைப்படம் வெளியாகிச் சிலகாலம் கழித்தே வெளியிடப்படும். இசைத் தட்டுத் துறையிலும் ஏவிஎம் முதன்மை நிறுவனமாக இருந்தது. வர்த்தகரீதியாக அவர்கள் ஏகபோகமாக நடந்துகொண்டார்கள் என்று சில இசைத்தட்டு நிறுவனங்கள் கூறின. ஆனால் திரைப்படங்களில் பல வெவ்வேறு அம்சங்களை இணைத்து வெற்றி ‘ஃபார்முலா’ கண்ட ஏவிஎம் சட்டரீதியாக இசைத்தட்டு வெளியிடுதலிலும் நல்ல திறமையை வெளிக்காட்டியது.


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhSZmSmAWFFOpj7K6wV_e-1wGDEpQnfzJXfZOQlm8LuQuCpIpEAXfUcs8qDMsd-jUdXflklWpo8TBFSyMhwOhuSpsoiWg_ho8gvWvyau7ptVO3DrhODc9GvuZihCbC3QAhDWLWjKllTYOGU/s1600/vaijayanti-mala.jpg


வைஜயந்திமாலா, ஒரு தமிழ் நட்சத்திர நடிகையாக விளங்காத தற்கு ஒரு காரணம் பம்பாய்த் திரைப்படத்துறை அவருக்குக் கொடுத்த முக்கியத்துவம் தெற்கே கிடைக்கவில்லை. பத்மினி ஓரிரு இந்திப் படங்களில் நடித்தாலும் பிரதானமாகத் தமிழில்தான் இயங்கினார். சரோஜாதேவி, ஜமுனா போன்றோர்கூடச் சென்னையில் தயாரிக்கப்பட்ட ஓரிரு இந்திப் படங்களில் நடித்திருக்கிறார்கள். ஜெமினி ஸ்டூடியோ வைஜயந்திமாலாவுக்கென்றே விசேஷ நடனக் காட்சிகளை ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ படத்தில் சேர்த்திருந்தது.


‘ஜிந்தகி’ என்ற இந்திப் படத்தில் கதாநாயகிப் பாத்திரமே ஒரு நடன நாடகப் பெண்தான். இப்படம் தமிழில் ‘வாழ்க்கைப் படகு’ என்ற தலைப்பில் வேறு நடிக நடிகையரோடு தயாரிக்கப்பட்டது. இந்திப் படத்தில் வைஜயந்திமாலா சிறப்பாக நடித்திருந்தாலும், படம் வெற்றியடையாததால் வைஜயந்திமாலாவுக்கு பாராட்டுகள் கிட்டவில்லை. அவருடைய நடிப்புக்கென்று விருதும் பாராட்டும் கிடைத்தது பிமல்ராய் டைரக்ட் செய்த ‘தேவதாஸ்’ படத்துக்குத்தான். அதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை!வைஜயந்திமாலாவின் இளமைப்பருவம், அவ்வளவு மகிழ்ச்சிகரமாக அமையவில்லை. தாய், தந்தையர் பிரிந்துவிட்டனர். வைஜயந்திமாலாவின் பாட்டியாகிய யதுகிரி அம்மாள்தான் அவளை வளர்த்து, நடனம் பயிற்றுவித்து, முதல் திரைப்படப் பிரவேசமே கதாநாயகியாக நடிக்க வழி செய்தவர் என்பார்கள். வைஜயந்தி மாலாவின் காவலராக யதுகிரி அம்மாளைத்தான் பலகாலம் மக்கள் அறிந்தார்கள்.

ஆனால் ஒருகட்டத்தில் வைஜயந்திமாலா அவருடைய பாட்டியையும் பிரிய நேர்ந்தது. அதன் பின்னர்தான் அவருடைய திருமணம் நடந்தது. மணமகன் ஒரு மருத்துவர். டாக்டர் பாலி. அந்நிய மொழிக்காரர். முதல் மனைவி இறந்துபோனதாகக் கூறுவார்கள். வைஜயந்திமாலா -&பாலி திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாகவே இருந்திருக்க வேண்டும். பாலி மறைந்துவிட்டார். ஒரு மகன் இருக்கிறான். எம்ஜிஆரைக் கடைசிவரை கதாநாயகனாகவே விளங்கியவர் என்று கூறுவார்கள். வைஜயந்திமாலா கதாநாயகியாகவே திரையில் பிரவேசித்து கதாநாயகியாகவே இறுதிப்படம் வரை தோன்றினார்.

http://www.cineradham.com/news/wp-content/uploads/2011/12/hema-malini-cineradham-270x300.jpg

திரைப்படங்கள் போல மனித அனுபவத்தில் வேறெதுவும் பரபரப்பூட்டுவதில்லை. அதேபோல நினைவிலிருந்து விலகிவிடுவதும் இல்லை. இன்று பழைய படங்களைப் பார்க்க நிறைய வசதி இருக்கிறது. ஆனால் பழைய படங்களைப் பார்ப்பவர்கள் அவர்கள் இளமைக் காலத்தில் அப்படங்களைப் பார்த்துப் பரவசமடைந்தவர்கள். இது நடிக நடிகைகளுக்கும் பொருந்தும். வைஜயந்திமாலா அவருடைய தமிழ்த் திரைப்படங்களை விட ஒரே ஒரு நடன நிகழ்ச்சிக்காகச் சிறிது காலம் நினைவில் இருப்பார். அது ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ என்ற படத்தில் அமைந்த போட்டி நடனம். அதில் பத்மினி அவர்கள் தோற்றுப் போகும் நிலையில் இருக்கும்போது போட்டி தடைப்படுகிறது. போட்டியில் வைஜயந்திமாலா சிறப்பாகத்தான் நடனமாடினார். அப்படத்தில் அவருடைய நடிப்பும் வசன உச்சரிப்பும் மிகவும் விசேஷமாக இருக்கும்.

சமீபத்தில் வைஜயந்திமாலா அவருடைய மகனுடன் முதலமைச்சர் அவர்களைச் சந்தித்தது புகைப்படத்துடன்கூடிய செய்தியாக வந்தது. முதலமைச்சரும் நடனமாடிய படிதான் திரைப்படத்தில் கதாநாயகியாகப் பிரவேசித்துக் கதாநாயகியாகவே விலகினார். இருவரின் சந்திப்பு மரியாதை நிமித்தம் என்றாலும், இருவருக்கும் பல பழைய நினைவுகள் வந்திருக்கும். அவர்களுடைய இளமைக்காலத் திரைப்படங்களைப் பார்த்தவர்களுக்கும் பல நினைவுகள் தோன்றியிருக்கும்.


நன்றி - த சண்டே இந்தியன்

1 comments:

Vetirmagal said...

தெளிவாக , அந்த கால சினிமாவை , நினைவு கூர வைத்து விட்டது. அருமையான பதிவு.

வாழ்க்கை படத்தில் பாடல்கள் கூட நன்றாக இருந்ததாக என் அக்கா கூறுவார்கள். அந்த பாடல்களை ,பலர் பாடி கேட்டிருக்கிறேன்.
இப்போது நினைவில் இல்லை!