Saturday, October 10, 2015

கத்துக்குட்டி-சினிமாவிமர்சனம்-சீரியஸான ஜாலி சினிமா!

பத்திரிகையாளர் இரா.சரவணன் இயக்கத்தில் வெளியாகும் முதல் படம், பாரதிராஜா, வைகோ, சீமான் ஆகியோரால் பாராட்டப்பட்ட படம், ட்ரெயல்ர் - டீஸர்களில் ஈர்த்த கவனம்... இந்த காரணங்களே 'கத்துக்குட்டி' படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
'கத்துக்குட்டி' நிஜத்தில் எந்த மாதிரி?
கதை: நரேன் ஒரு விவசாய ஆர்வலர். வேலை, வெட்டி இல்லாமல் வம்பு செய்பவருக்கு தேர்தலில் நிற்கும் சூழல் ஏற்படுகிறது. அதை ஏற்றுக்கொண்டாரா? அவரைச் சுற்றி என்ன நடக்கிறது? அதற்குப் பிறகு என்ன ஆகிறார்? என்பது ஒன்லைன்.
ஒரு கருத்தை முன் வைக்க எந்த சமரசமும் செய்துகொள்ளாமல் படைப்பின் நேர்த்திக்காக உழைப்பது ஆரோக்கியமான விஷயம். மீத்தேன் பிரச்சினையை அழுத்தமாகப் பதிவு செய்த அறிமுக இயக்குநர் இரா.சரவணனுக்கு வெல்கம் பொக்கே கொடுக்கலாம்.
வெட்டியாய் திரிவது, குடித்துவிட்டு சலம்புவது, அப்பாவுக்காக துடிப்பது, விவசாயத்தை தவறாகப் பேசுபவனின் சட்டையைப் பிடித்து உலுக்குவது, காதலில் கிறங்குவது என அறிவழகன் கதாபாத்திரத்துக்கு நரேன் சரியாகப் பொருந்துகிறார். ''பட்டினிச் சாவுங்கிறது விவசாயி பட்டினியால செத்துப்போறது இல்லை. மத்தவங்க பட்டினியை போக்க முடியலைங்கிற வருத்தத்துல செத்துப் போவது'' என வசனம் பேசும்போது கதாபாத்திரத்துக்கு கம்பீரம் கூட்டுகிறார்.
சூரியின் கவுன்டர் வசனங்களுக்கும், ரைமிங் பன்ச்களுக்கும் தியேட்டர் குலுங்குகிறது.
''அவன் ஆடுனது டான்ஸாடா? ஒரு ஃபைட்டயே டான்ஸா மாத்திக்கிட்டு போயிக்கிட்டு இருக்கான்'' என்று சூரி சொல்லும்போது ஆரம்பித்த கை தட்டல் படம் நெடுக நீண்டதுதான் ஆச்சர்யம்.
எறும்புகளை விரட்டுவதற்காக ஸ்ருஷ்டி டாங்கே செய்யும் ஐடியா அசத்தல். கன்னத்தில் குழி விழும் அளவுக்கு சிரிக்கும் ஸ்ருஷ்டி மனதில் நிறைகிறார்.
''செல்போன் டவர் வந்தா கரிச்சான், மைனா, புறான்னு எந்த பறவையும் இங்க இருக்காது'' என்று ஸ்ருஷ்டி பேசும் வசனத்துக்கு அப்ளாஸ் அள்ளுகிறது.
பாரதிராஜாவின் தம்பி ஜெயராஜ் நரேன் அப்பாவாக இதில் அறிமுகம் ஆகியிருக்கிறார். மாவட்ட செயலாளராக வரும் ஞானவேல், ஸ்ருஷ்டியின் அப்பாவாக வரும் ராஜா, துளசி, தேவிப்ரியா ஆகியோர் பொருத்தமான தேர்வு.
சந்தோஷ் ஸ்ரீராம் ஒளிப்பதிவு படத்துக்கு கூடுதல் பலம். அருள் தேவின் இசையில் களைக்கட்டு கண்ணால மெனக்கெட்டு பாடல் ரசிக்க வைக்கிறது.
அடிதடி இளைஞன் அரசியலுக்கு வரும்போது என்ன ஆவான்? என்பதை இடைவேளையாக வைப்பது மாஸ்.
விவசாயத் தொழில், கடன் பிரச்சினை, தற்கொலை, பட்டினிச்சாவு, மீத்தேன் பிரச்னை, கூல்டிரிங்ஸ் நச்சு , ஈமுகோழி, ரியல் எஸ்டேட், டாஸ்மாக் என்று கிடைத்த கேப்பில் எல்லாம் சந்து விடாமல் பிரச்சினையின் தீவிரத்தை விதைத்திருக்கிறார் இயக்குநர் சரவணன்.
டிரான்ஸ்பார்மர் இருக்கு... மின்சாரம்தான் இல்லை என்பதை உணர்த்துவதற்காக டிரான்ஸ்பார்மரில் அரிக்கேன் விளக்குகளைத் தொங்கவிட்டிருக்கும் விவசாய பூமியை பதிவு செய்த விதத்தில் கவனம் ஈர்க்கிறார்.
படத்தில் சில காட்சிகள் கோர்வையாக இல்லாமல் அங்கும் இங்குமாக இருக்கின்றன. ஆனால், அதை தஞ்சை மண்ணின் வாழ்வியலாலும், வசனங்களாலும், சூரியாலும் நிரப்பி இருக்கிறார்.
ஹீரோவை வைத்துதான் கிளைமாக்ஸ் வைக்க வேண்டுமா என்ன? அதிலும், வித்தியாசம் காட்டி இருக்கிறார் இயக்குநர்.
மண்ணின் பெருமைக்குக் காரணமான விவசாயிகளின் வலிகளை உணர்த்திய விதத்தில் 'கத்துக்குட்டி' கண்ணியமான சினிமா. நம் காலத்து சமூகப் பிரச்சினைகளை நையாண்டித்தனத்துடன் சுவாரசியமாக ரசிகர்களைக் கட்டிப்போட்ட விதத்தில் இது கெத்துக்குட்டி!


நன்றி-தஹிந்து

0 comments: