Wednesday, October 28, 2015

மரபு மருத்துவம்: வண்ணத்துப்பூச்சி வடிவத்தில் ஒரு பயங்கரம்!

உச்சி முதல் உள்ளங்கால் வரை ஏதாவது ஒரு பகுதியில் ஏதாவது ஒரு உறுப்பில் பாதிப்பு இல்லாத மனிதர்களே இல்லை. நவீன மாற்றங்களின் பின்னால் ஓடி, பாரம்பரிய உணவு, பழக்கவழக்கங்களைக் கைவிட்டதன் விளைவாக, ஆரோக்கியம் இழந்து, நிம்மதியை இழந்து வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அந்த வகையில், மனிதர்களை ஆட்டிப் படைக்கும் பல நூறு நோய்களில் தைராய்டு நோயும் ஒன்று.
தைராய்டு சுரப்பி
கழுத்தின் முன் பகுதியில் ட்ரக்கியா எனப்படும் மூச்சுக்குழலுக்கு மேலே, குரல்வளைக்குக் கீழே லாரிங்ஸ் எனப்படும் குரல்வளையின் இரண்டு பக்கவாட்டுப் பகுதிகளிலும் அமைந்துள்ள ஒரு நாளமில்லா சுரப்பிதான், தைராய்டு சுரப்பி. இரண்டு பக்கமும் இணைந்து காணப்படும். இவற்றை இணைப்பது இஸ்த்மஸ் என்ற பூசந்தி. இதன் எடை 20 கிராம் முதல் 40 கிராம்வரை இருக்கும். ஆண்களைவிட பெண்களுக்கு இச்சுரப்பி பெரிதாக இருக்கும். இது வண்ணத்துப்பூச்சியின் வடிவத்தைப் போலிருக்கும்.
ஒரு குழந்தை பிறப்பதற்கு முன்பே தைராய்டு சுரப்பி வேலையைத் தொடங்கிவிடுகிறது. உடலின் வளர்சிதை மாற்றங்களுக்கும், உடலின் சத்துகளைச் சீராக வைத்திருக்கவும் இது உதவுகிறது. இச்சுரப்பியின் ஹார்மோன்கள் மனித உடல் வளர்ச்சி, மன வளர்ச்சி, உறுப்புகளின் செயல்பாடுகளுக்குப் பெரும் உதவி செய்கின்றன.
தைராய்டு சுரப்பியில் ஏற்பட்ட பாதிப்பால், பல லட்சம் பேர் வாழ்நாள் முழுவதும் மருந்து எடுத்துக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். உலகம் முழுவதும் 20 கோடி பேர் தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வோர் ஆண்டும் மே 25-ம் தேதி உலகத் தைராய்டு நோய் விழிப்புணர்வு நாளாகக் கொண்டாடப்படுகிறது. சித்த மருத்துவம் மூலம் தைராய்டு நோயைக் குணப்படுத்த முடியும்.
ஹைப்போ தைராய்டிசம் எதனால் ஏற்படுகிறது?
அயோடின் சத்து குறைபாடு, தைராய்டு சுரப்பியில் வீக்கம், தொற்றுநோய் (வைரஸ்) கிருமி தாக்குதல், இதய நோய்கள், மனநோய், வலிப்பு நோய், புற்றுநோய்களுக்காக எடுத்துக்கொள்ளப்படும் மருந்துகளின் பக்க விளைவு, கர்ப்பக் காலத்தில் ஏற்படும் தைராய்டு சுரப்பி பாதிப்பு, பிறவி தைராய்டு சுரப்பி குறைபாடு, பிட்யூட்டரி சுரப்பி பாதிக்கப்பட்டிருப்பது, மூளையில் உள்ள ஹைபோதலாமஸ் ஹார்மோன் உற்பத்தி குறைபாடு, உணவு முறை மாற்றங்கள், மனஉளைச்சல் போன்றவற்றால் ஹைபோ தைராய்டிசம் ஏற்படுகிறது.
அறிகுறிகள்
பெண்களின் மாதவிடாய் ஒழுங்கின்மை, தீராத மலக்கட்டு பிரச்சினை, கோபம், மன அழுத்தம், தலைமுடி வறண்டு போதல், முடி உதிர்தல், தோல் வறட்சி, சோர்வு, அடிக்கடி சளி பிடித்தல், குறைந்த அளவு இதயத் துடிப்பு, உடல் பருமன், கை, கால் சில்லிடல், சுரப்பி வீக்கம் போன்ற அறிகுறிகள் தைராய்டு பிரச்சினை இருப்பவர்களுக்கு இருக்கலாம்.
கருவில் இருக்கும் குழந்தையை இந்நோய் பாதிக்குமா?
மலட்டுத் தன்மை, இதய நோய்கள், கை, கால் மூட்டு வலிகள், தீரா உடல் பருமன் போன்றவை ஏற்படக்கூடும்.
ஹைபர் தைராய்டிசம் எதனால் ஏற்படுகிறது?
தைராய்டு சுரப்பியின் ஹார்மோன் உற்பத்தி (தைராக்சின்) அதிகரித்துக் காணப்படுவது, கிரேவீஸ் நோய் இருப்பது, அயோடின் சத்து அதிகரித்துக் காணப்படுவது, தைராய்டு சுரப்பி வீக்கம், சினைப்பை கட்டி, விதைப்பை கட்டி, வீக்கம், பிட்யூட்டரி சுரப்பியில் கட்டி, ரசாயனங்கள் கலந்த உணவு முறை, பழக்கவழக்க மாற்றங்கள் போன்றவற்றால் ஹைபர் தைராய்டிசம் ஏற்படுகிறது.
அறிகுறிகள்
உடல் பலவீனம், வேகமான இதயத் துடிப்பு, இதயப் படபடப்பு, இதயத் துடிப்பு மாறுபாடு, தூக்கமின்மை, உடலில் அரிப்பு, முடி உதிர்தல், குமட்டல், வாந்தி, திடீரென உடல் எடை குறைதல், ஆண்களின் மார்பு வளர்ச்சி (ஹைனகோமேசியா), தசை தளர்ச்சி, கை, கால் நடுக்கம், மனநிலை மாறுபாடு, உணர்ச்சிவசப்படுதல், வயிற்றுப் பிரச்சினை, அதிக வியர்வை, தோல் வறட்சி, சுரப்பி வீக்கம், சிலருக்கு மாதவிடாய் பிரச்சினை போன்ற அறிகுறிகள் காணப்படும்.
நோயின் தீவிரத்தில் பாதிப்பு
இதய நோய்கள், எலும்பு தேய்மானம், கண் பார்வை பாதிப்பு, தோல் பாதிப்பு போன்றவை ஏற்படலாம்.
தடுப்பது எப்படி?
சத்துள்ள சுத்தமான பச்சை காய்கறிகள், கனிகள், கீரைகள், சரிவிகித உணவு, உடல் உழைப்பு, ஏதாவது ஒரு உடற்பயிற்சி, ஆசனங்கள், மன மகிழ்ச்சி ஆகியவற்றை வாழ்க்கையில் சாத்தியப்படுத்தினால், தைராய்டு நோய் மட்டுமல்ல, எந்த நோயும் வராது. அப்படியே வந்தாலும் எளிதில் தீர்க்க முடியும்.
மருந்துகள்
அமுக்கரா கிழங்கு, சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம், சிறுநாகப்பூ, கிராம்பு, மஞ்சள், கரிசாலை, வல்லாரை, நீலி, கொட்டை கரந்தை, செருப்படை, சீரகம், கொத்துமல்லி, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், ஓமம், சாதிக்காய், கீழாநெல்லி, கறிவேப்பிலை, கருஞ்சீரகம், இஞ்சி பவளம், முத்து, அன்னபேதி ஆகிய மூலிகைகள், உலோக, உபரச பாடாணங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட மருந்துகள் தைராய்டு நோய் வராமல் தடுப்பதுடன், ஹார்மோன் குறைபாடுகளைச் சமன்செய்து உடலையும், உடல் உறுப்புகளையும் ஆயுள் உள்ள மட்டும் பாதுகாக்கும் காயகல்பமாகச் செயல்படுகின்றன.
எத்தனை வகைகள்?
தைராய்டு நோயில் இரண்டு வகை உள்ளன. அவை, ஹைப்போ தைராய்டிசம். ஹைபர் தைராய்டிசம்.
ஹைப்போ தைராய்டிசம் என்றால் என்ன?
தைராய்டு ஹார்மோன்கள் குறைந்த அளவு சுரப்பது ஹைப்போ தைராய்டிசம்.
ஹைபர் தைராய்டிசம் என்றால் என்ன?
தைராய்டு ஹார்மோன்கள் அதிக அளவு சுரப்பது ஹைபர் தைராய்டிசம்.
தைராய்டு சுரப்பி உற்பத்தி செய்யும் ஹார்மோன்கள் எவை?
தைராய்டு சுரப்பி மூன்று வகை ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. அவை, T3 – ட்ரை அயோடோதைரோனைன், T4 – டெட்ரா அயோடோதைரோனைன், கால்சிடோனின்.
டி.எஸ்.எச். என்றால் என்ன?
பிட்யூட்டரி சுரப்பி டி.எஸ்.எச். என்ற ஹார்மோனைச் சுரந்து, அதன்மூலம் தைராய்டு சுரப்பியைத் தூண்டித் தைராய்டு ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. டி.எஸ்.எச். என்பது தைராய்டு ஸ்டிமுலேடிங் ஹார்மோன்.
மனிதர்களுக்கு இருக்க வேண்டிய சராசரி ஹார்மோன்களின் அளவு எவ்வளவு?
T3 – சீரம் ட்ரைஅயோடோதைரோநைன் ஹார்மோன் அளவு 80 – 230 ng/dl.
T4 – சீரம் தைராக்சின் ஹார்மோன் அளவு 5 – 14ng/dl.
TSH அல்லது சீரம் தைரோட்ரோபின் அளவு 0.4 – 6 miu/L.
பரிசோதனை
காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் (ஃபாஸ்டிங்) மேற்கண்ட ரத்தப் பரிசோதனை, தைராய்டு ஸ்கேன் பரிசோதனை செய்து நோயை உறுதி செய்யலாம்.
தவிர்க்க வேண்டியவை
முட்டை கோசு, காலிஃபிளவர், முள்ளங்கி, உருளைக்கிழங்கு, சோயா பீன்ஸ், நூல்கோல், கடுகு, டீ, காபி, இனிப்புப் பலகாரங்கள், கேக், பிரெட் வகை, உலர் பழங்கள், குளிர்பானங்கள், ஐஸ்கிரீம், சாக்லேட்கள், வெள்ளை சீனி, தேன் ஆகியவற்றை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.
சேர்க்க வேண்டியவை
தேங்காய், பூண்டு, வெங்காயம், கோதுமை, ஆரஞ்சு, எலுமிச்சை, நெல்லி, அமுக்கரா, காளான், பசலைக் கீரை, சிவப்பு அரிசி, பல்வேறு தானியங்கள், பார்லி, ஓட்ஸ், தக்காளி போன்றவற்றோடு சரிவிகித பாரம்பரிய உணவு முறை. பச்சை காய்கறிகள், பழங்கள் சாப்பிடலாம்.
கட்டுரையாளர், திருச்சி இ.எஸ்.ஐ. சிறப்பு நிலை சித்த மருத்துவர்
தொடர்புக்கு: [email protected]

தஹிந்து

0 comments: