Tuesday, October 20, 2015

ப்ரெஸ்ட் அயர்னிங் (மார்பக மெலித்தல்): ஓர் பகீர் ரிப்போர்ட்!

லகில் இன்று பல்வேறு வளர்ந்த, வளரும் நாடுகள் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளில் இருந்து அவர்களை காப்பாற்றி முன்னேற்றே பாதையில் செலுத்துகின்றன. ஆனால் ஆப்ரிக்கா போன்ற வளர்ச்சி அடையாத நாடுகளில் இருக்கும் நிலைமையே வேறு.

அதில், நம் மூச்சை ஒரு நிமிடம் நிறுத்தி விடும் வகையில் தீவிரம் கொண்டது இந்த மார்பக மெலித்தல் (ப்ரெஸ்ட் அயர்னிங்). இது மத்திய மற்றும் மேற்கு ஆப்ரிக்காவில் பின்பற்றப்பட்டு வருகிறது. கேமரூன், நைஜீரியா, கினியா ரிபப்ளிக் முதலான நாடுகளும் இதில் அடங்குமாம்.

சிறுவயது பெண்களின் மார்பகங்களில், சூடான இரும்பு அல்லது கற்களை வைத்து, அவர்களின் மார்பக திசுக்களை அழுத்தி விடுகின்றனர்.  இதனால், அவள் 2 நாட்களில் இருந்து சில வாரங்களுக்குள், தன் மார்பகங்களை இழந்து விடுகிறாள். இப்படி மார்பகங்களை தட்டையாக்குவதினால், பெண்கள் பார்ப்பதற்கு பெண்மை தோற்றம் குறைந்தும், ஆண்களுக்கு கவர்ச்சிகரமாகத் தோன்றாமலும், உடல் ரீதியான துன்புறுத்தல்களில் இருந்தும், பாலியல் பலாத்காரங்களில் இருந்தும் காக்கப்படுகிறனராம்.

பணக்கார வீட்டுப்பெண்கள் எலாஸ்டிக் பெல்ட்டுகளை பயன்படுத்துகின்றனர். பள்ளிக்கு செல்லும் மகள், 'அந்த பெல்ட்டை' அணிந்திருக்கிறாளா என தாய் சோதிப்பது, பெண் குலத்திற்கே ஏற்பட்டுள்ள துயரமான நிகழ்வு. 

இதில் 58 சதவிகிதம் வழக்குகளில், தாய்மார்களேதான் தங்கள் மகளுக்கு இந்த துன்பத்தை இழைக்கிறார்கள். இப்படி அறியாமையால், நிலக்கரியில் காய்ச்சிய கற்கள் மற்றும் இரும்பு சுத்தியலைக் கொண்டு பெண்களை துன்புறுத்தும் காரியம், நமக்கு கேட்கும்பொழுதே நடுக்கத்தைத் தருகிறது. 

'கலாச்சாரம்', 'பாரம்பரியம்' என்ற வழக்கமான காரணச் சொற்களை சொல்லி, அவர்களின் இச்செயலை நியாயப்படுத்திக் கொள்கிறனர். இந்த இரக்கமற்ற செயல்முறை பெண்களை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், நாம் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்பிற்கு உள்ளாக்குகிறது. இப்படி செய்வதனால் புற்றுநோய், கடுமையான காய்ச்சல், அரிப்பு, திசுச் சிதைவு, மார்பகங்கள் மறைந்தே போவது போன்ற துன்பங்களை அனுபவித்து வருகின்றனர் இப்பெண்கள்.

மார்பக மெலித்தல் செய்த பிறகும், பாலியல் கொடுமைகளுக்கு ஆளான பெண்களும் உண்டு. இதனால், குழந்தை பிறந்த பிறகு, பெண்களின் மார்பகங்கள் பால் சுரக்கும் தன்மையை இழந்து விட, ஒரு வித கடி எறும்பை கடிக்க விட்டு சுரக்க வைக்கின்றனர். ஒரு தவறை மறைக்க, இன்னொரு தவறு. அதுவும் மன்னிக்க முடியாத தவறு. தங்கள் அடையாளத்தையே இழந்து, ஆண்களைப் போல மாறி, உளவியல் ரீதியான மனநோயை சந்திக்கின்றனர்.

பல தலைமுறைகளுக்கு ரகசியமாக வைக்கப்பட்டிருந்த இந்த கொடூர செயல், இன்று அனைவரும் விவாதிக்கும் வண்ணம் உலகத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. சமீபத்திய அறிக்கையின் படி, உலகில் 3.8 மில்லியன் பெண்கள், இந்த 'மார்பக மெலித்தல்' கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனராம். ஐக்கிய நாடுகளின் மக்கள் நிதி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, பாலியல் சார்ந்த குற்றம் சாற்றப்படாத குற்றங்களுள் இந்த 'மார்பக மெலித்தல' மிக முக்கியமான ஒன்று.

இந்த முட்டாள் தனத்தை எதிர்த்து போராடும் லண்டனைச் சேர்ந்த பெண்கள் முன்னேற்ற கழகத்தினர், "மார்பகங்கள் கடவுளால் உருவாக்கப்பட்டவை. அவற்றை மெலித்தல் பாவச் செயல். இது போன்ற தவறுகள் ஒழிய செக்ஸ் கல்வி கொண்டு வர வேண்டும். இயற்கையாக இருக்கும் பெண்ணின் உடலே அவளுக்கு பாதுகாப்பற்றது எனக் கருதுவது உச்சகட்ட மூடத்தனம்" என்று கூறுகின்றனர். 

ஆண்களுக்கும் இது சார்ந்த அறிவையூட்ட வேண்டும். 21-ம் நூற்றாண்டில் இது போன்ற ஒரு நம்பிக்கையும், அவலமும் நிலவுவது மனித குலத்திற்கே அவமானமேயன்றி வேறென்ன? 

சித்தார்த்

ன்றி-விகடன்

0 comments: