Monday, October 19, 2015

பதின் பருவம் புதிர் பருவமா? 5 - கிளிக்கு றெக்கை முளைச்சிடுச்சா?

ஓவியம்: முத்து
ஓவியம்: முத்து
‘அவன் கூட டூ! உன்கூட பழம் விட்டுக்கட்டுமா?' என்று கேட்பது குழந்தைப் பருவ நட்பு. ‘மச்சி இன்னிக்கு ஒரு நாளாவது ‘கிளாஸை கட்' அடிக்கிறியா... சும்மா அடிச்சுப் பாரு மச்சி!' என்பது விடலைப் பருவ நட்பு.
நடத்தையை வைத்தே, மேற்கண்ட இரண்டு நட்புக்கும் பெரிய வித்தியாசம் உண்டு என்பதைத் தெரிந்துகொள்ளலாம். குழந்தைப் பருவத்தில் ஏற்படும் நட்புகள் சந்தர்ப்பச் சூழ்நிலையால் அமைவது. ஆனால், வளர் இளம்பருவத்தில் அமையும் நட்பு, ஒருவர் தேடித் தேர்வு செய்து அமைத்துக் கொள்வது. இதை சான்ஸ் எதிர் சாய்ஸ் (chance vs choice) என்று கூறுவதுண்டு.
வளர் இளம்பருவத்தில் தங்களுக்கு ஒத்த வயதுடைய, கருத்துடைய, விருப்பங்களுடைய நபர்களையே தேர்வு செய்து குழுவாகச் சேர்ந்துகொள்வார்கள். அதிலும் ஒரு சிலரைத் தங்கள் நெருக்கமான நட்புக்கென்று தேர்ந்தெடுத்துக்கொள்ளும் உண்மையான நட்பு உருவாவதும், இந்த வளர் இளம்பருவத்தில்தான்.
நல்ல மாற்றமா?
இந்த நேரத்தில்தான் பெற்றோருக்குப் பதற்றமும் பயமும் ஏற்படும். தங்களிடம் நெருக்கமாக இருந்த மகன் / மகள் விலகிச்செல்வது போலத் தெரிவதும், புதிய நட்புகளிடம் நெருக்கம் பாராட்டுவதும் பெற்றோருக்குப் புதிய அனுபவமாகத் தெரியும். அது மட்டுமல்லாமல், தங்கள் குழந்தைகள் வழிதவறிச் சென்றுவிடுவார்களோ என்ற கலக்கத்துக்கும் உள்ளாவது வாடிக்கைதான்.
ஒருவகையில் பெற்றோர் பயப்படும் வகையில் சில சம்பவங்கள் நடந்தாலும், நட்பு வட்டம் பெரிதாவது என்பது, வளர் இளம்பருவத்தின் ஒரு படிநிலை என்பது மட்டுமல்லாமல், அது மிகவும் இன்றியமையாத ஒரு மாற்றமும்கூட.
ஏனென்றால், நட்பு வட்டத்தின் மூலம் அவர்கள் இந்த உலகத்தைப் புத்தாய்வு செய்வதுடன், சமூக உறவுகளை உருவாக்கவும், மேம்படுத்தவும், தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தும் திறனை வளர்க்கவும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். பெற்றோர் அஞ்சுவதுபோல உண்மையில் அவர்கள் விலகிச் செல்வது இல்லை. இந்த உலகத்துக்குத் தங்கள் வரவை அறி விக்க முயற்சிக்கும், ஒரு தேடல்தான் இது.
குணநலன்களில் நட்பு
வளர் இளம்பருவத்தினரின் குணநலன்களை வடிவமைப்பதில் நட்பு வட்டம் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஒரு நபருக்கான நெருங்கிய நட்பு வட்டத்துக்குள் தான் ஒருவர் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டதாக உணரும்போது தன்னம்பிக்கை அதிகரிக்கும், சுயகவுரவம் பெருகும், வெளியுலக ஈடுபாடு மற்றும் தனிமனித உறவுகள் கூடும்.
ஆனால், குறிப்பிட்ட ஒருவருடைய நட்பு வட்டத்தில் தாங்கள் ஏற்றுக்கொள்ளப்படாததாகவோ, புறக்கணிக்கப்பட்டதாகவோ வளர் இளம்பருவத்தினர் நினைக்கும் நிலை ஏற்பட்டால், பல எதிர்விளைவுகள் ஏற்படும். இதனால் அவர்களுடைய சுயமதிப்பீடு பாதிக்கப்படும். தாங்கள் சமூகத்துக்குத் தேவைப்படாதவர்கள், திறன் குறைந்தவர்கள் என்ற எண்ணம் மேலோங்குவதால் மற்றவர் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களாகவும், தன்னம்பிக்கை அற்றவர்களாகவும், உள்முக சிந்தனை கொண்டவர்களாகவும் (Introvert) மாறி உலகத்திலிருந்து தங்களை ஒதுக்கியும் கொள்வார்கள்.
எதிர்மறை பிரச்சினைகள்
நண்பர்கள் வட்டத்திலிருந்து வரும் ‘பீர் பிரஷர்' என்று சொல்லப்படும் நிர்பந்தங்களும் அழுத்தங்களும் சில முக்கியப் பிரச்சினைகளுக்குக் காரணமாகவும் அமைந்துவிடும். பெரும்பாலும் முதன்முதலில் புகை, மது உள்ளிட்ட போதைப் பழக்கங்களுக்கு அறிமுகமாவது நண்பர்களின் கட்டாயத்தால்தான். ஆபாசப் படங்கள், சமூக விரோதச் செயல்கள், தன்பாலின உறவு போன்றவை நட்பு வட்டத்தின் மூலமாகவே அறிமுகமாகின்றன.
ஒருவருக்கு விருப்பம் இல்லாவிட்டாலும், ஒரு விஷயத்தைப் புறக்கணித்தால் நட்பு வட்டத்தால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டோமோ என்ற பயத்தாலும், கேலிக்குள்ளாகி விடுவோமோ என்ற எண்ணத்தாலும் சிலர் வேறு வழி தெரியாமல் ஒப்புக்கொள்ளும் மனநிலைக்குத் தள்ளப்படுகின்றனர். நண்பர்களின் உற்சாகத் தூண்டுதல் கண்மூடித்தனமாக பைக்கை ஓட்ட வைக்கலாம், தினமும் பின்தொடர்ந்து வரும் முன்பின் தெரியாத ஆணைக் காதலிக்கக்கூட வைக்கலாம்.
பெற்றோரின் பங்கு
இந்த நேரத்தில்தான் பெற்றோர்-பிள்ளைகள் உறவின் தரம் பரிசோதனைக்குள்ளாகிறது. நல்ல ஆரோக்கியமான அடித்தளம் உள்ள உறவின் பின்னணியிலிருந்து வரும் வளர் இளம்பருவத்தினர் நட்புகளால் ஏற்படும் இந்தச் சவால்களை, எளிதில் எதிர்கொண்டுவிடுவார்கள் அல்லது சிறிது குழப்பம் ஏற்பட்டாலும் பின்னர் சுதாரித்துக்கொள்வார்கள்.
நண்பர்கள் அப்போது முக்கியமாகத் தெரிந்தாலும் பெற்றோர் கற்றுக்கொடுத்த மதிப்பு, ஒழுக்கம், மரபார்ந்த நம்பிக்கைகள் ஆகியவற்றை அவ்வளவு சீக்கிரம் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். அதேநேரம் சிறுவயதில் குடும்ப வன்முறையைத் தினமும் பார்த்து வளர்வது, சிறுவயதில் உடல் மற்றும் பாலியல் ரீதியான தொந்தரவுகள், பெற்றோர் இழப்பு மற்றும் பிரிவு போன்றவற்றால் பாதிக்கப்படும் குழந்தைகள் வளர் இளம்பருவத்தின்போது நட்பு வட்டத்தின் சிக்கல்களில் எளிதில் சிக்கிக்கொள்ள வாய்ப்பு அதிகம்.
தவறு என்று தெரிந்த எந்த ஒரு விஷயத்துக்கும் சின்ன வயதில் இருந்தே தைரியமாக ‘நோ’ சொல்லக் குழந்தைகளைப் பழக்குவது, பல பிரச்சினைகளுக்கு ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைக்கும்.
(அடுத்த வாரம்: அதைப் பற்றி பேசலாமா, கூடாதா? )
கட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர்
தொடர்புக்கு: [email protected]

தஹிந்து

0 comments: