Sunday, October 11, 2015

ராம்லீலா (2015)-சினிமாவிமர்சனம்-கோவிந்துடு அந்திரிவாடேலே’

நடிகர் : ராம் சரண் தேஜா
நடிகை :காஜல் அகர்வால்
இயக்குனர் :கிருஷ்ண வம்சி
இசை :யுவன் சங்கர் ராஜா
ஓளிப்பதிவு :சமீர் ரெட்டி
ராம்சரணின் அப்பா ரகுமான் லண்டனில் மிகப்பெரிய டாக்டர். அவர் பணிபுரியும் மருத்துவமனையில் அவருக்கு டீன் பதவி கொடுத்து கௌரவிக்க நினைக்கின்றனர். ஆனால், அது கடைசி நேரத்தில் வேறு ஒருவருக்கு செல்கிறது. இதனால், மன உளைச்சலுக்கு ஆளாகும் ரகுமானை, ராம்சரண் சமாதானப்படுத்துகிறார். அப்போது ரகுமான், ராம்சரணிடம் தனது இளமை காலத்தில் நடந்த விஷயங்களை கூறுகிறார். 

அதன்படி, ரகுமானின் அப்பா பிரகாஷ் ராஜ், கிராமத்தில் ஊர் பெரியவர். கிராமத்தில் பணிபுரிந்தால் பெரிய அளவில் வருமானம் கிடைக்காது என்பதால் எந்த டாக்டரும், இந்த கிராமத்திற்கு வைத்தியம் செய்ய வருவதில்லை. எனவே, தனது மகனான ரகுமானை டாக்டருக்கு படிக்க வைத்து, தனது கிராம மக்களுக்கு வைத்தியம் செய்ய வைக்கவேண்டும் என்று நினைக்கிறார்.

அதன்படி, ரகுமானை டாக்டருக்கு படிக்க வைக்கிறார். படிப்பு முடிந்து கிராமத்திற்கு வரும் ரகுமான், தான் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும், அவளுடன் வெளிநாடு செல்லவிருப்பதாகவும் கூறுகிறார். இதனால், தனது கனவை நிறைவேற்றாத ரகுமானின் மீது மிகுந்த கோபம் அடைகிறார். ரகுமான் தனது பிள்ளையே கிடையாது என்று வெறுத்து அவரை ஒதுக்குகிறார்.

அதன்பின்தான் ரகுமான் லண்டன் வந்து, நிறைய சம்பாதிக்கிறார். தனது அப்பாவின் சாபம்தான் தன்னை இப்போதும் தொடர்ந்து வருவதாக ராம்சரணிடம் சொல்லி ரொம்பவும் வருத்தப்படுகிறார் ரகுமான். அப்பாவின் ஏக்கத்தை புரிந்துகொண்ட ராம்சரண், தனது தாத்தா பிரகாஷ்ராஜை சமாதானப்படுத்துவதாக கூறி, லண்டனில் இருந்து இந்தியா திரும்புகிறார். தனது சொந்த கிராமத்துக்கு சென்று, அங்கு தங்கி சிறு சிறு நல்ல விஷயங்கள் செய்து, பிரகாஷ் ராஜிடம் நல்ல பெயர் வாங்குகிறார். 

ஒருநாள் ராம்சரண் பப்பில் பார்த்த காஜல் அகர்வாலை, இவரோட சொந்த கிராமத்தில் பார்க்கிறார். அவள் பிரகாஷ் ராஜின் மகள் வழி பேத்திதான் என்பது தெரிந்ததும், அவள் மீது காதல் கொள்கிறார் ராம் சரண்.

இறுதியில், பிரகாஷ் ராஜிடம் நல்ல பெயர் வாங்கி தனது அப்பா மீதிருந்த கோபத்தை ராம் சரண் தணித்தாரா? தனது கிராமத்து மக்களுக்கு மருத்துவமனை வேண்டும் என்ற தனது தாத்தாவின் கனவை நிறைவேற்றினாரா? என்பதே மீதிக்கதை.

ராம்சரண் துள்ளலான நடிப்பு, அசத்தலான டான்ஸ், ஆக்ரோஷமான சண்டைக் காட்சி என அனைத்திலும் வெளுத்து வாங்கியிருக்கிறார். பாசத்துக்காக ஏங்கும் காட்சிகளில் எல்லாம் கைதட்டல் பெற வைக்கிறார். காஜல் அகர்வால் கவர்ச்சியில் தாராளம் காட்டியிருக்கிறார். இவருக்கான காட்சிகள் குறைவுதான் என்றாலும், இவர் வரும் காட்சிகள் எல்லாம் நிறைவாக இருக்கின்றன. 

ஊர் பெரியவராக வரும் பிரகாஷ் ராஜ், கண்டிப்பான அப்பாவாகவும், தனது கிராமத்து மக்களுக்கு ஏதாவது நல்லது செய்யவேண்டும் என்ற லட்சியத்துடன் வலம் வரும் பெரிய மனிதராகவும் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். பிரகாஷ் ராஜின் மகன்களாக வரும் ரகுமான், ஸ்ரீகாந்த் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார்கள்.

மேலும், கமாலினி முகர்ஜி, ஜெயசுதா ஆகியோரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இயக்குனர் கிருஷ்ண வம்சி, காதல், பாசம், ஆக்க்ஷன், காமெடி என ஒரு கமர்ஷியல் படத்துக்கான அத்தனை அம்சங்களையும் இப்படத்தில் வைத்திருக்கிறார். படத்தின் திரைக்கதையையும் ரொம்பவும் விறுவிறுப்பாக கொடுத்திருக்கிறார். 

தெலுங்கில் வெளிவந்த ‘கோவிந்துடு அந்திரிவாடேலே’ படத்தின் தமிழ் பதிப்புதான் ‘ராம்லீலா’. தெலுங்கில் ரசிக்கப்பட்ட யுவனின் இசையில் வந்த பாடல்கள் தமிழ் வார்த்தைகளுடன் கேட்கும்போது ஏனோ கவனம் பெறவில்லை. பின்னணி இசை ஓகேதான். சமீர்ரெட்டியின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தாக அமைந்திருக்கிறது. 

மொத்தத்தில் ‘ராம்லீலா’ ரசிக்கலாம்
ன் றி-மாலைமலர்
.

0 comments: