Tuesday, October 20, 2015

கான்டாக்ட் லென்ஸ் அணிபவர்கள் கவனிக்க வேண்டிய 8 வழிகள்!

ங்கிலாந்தில் வசிக்கும் ஜாக்கி ஸ்டோன் என்ற 42 வயதுப் பெண்மணி, பார்வைக் குறைபாட்டுக்காக கான்டாக்ட் லென்ஸ் பொருத்திக்கொண்டார். பிரிட்டனிலேயே இரண்டாவது பிரபலமான நிறுவனத்தின் தயாரிப்பைத்தான் அவர் பயன்படுத்தி இருக்கிறார். லென்ஸை அணிந்த மறுதினமே பார்வை மங்கலானதை அவர் உணர்ந்தார். இரண்டு நாட்கள் கழித்து வலி பொறுக்க முடியவில்லை. மருத்துவரிடம் விஷயத்தைச் சொன்னபோது, கண்களுக்கு சொட்டு மருந்து போட்டு வீட்டுக்கு அனுப்பி இருக்கிறார். ஆனால், எல்லை மீறிய வலியின் காரணமாக மீண்டும் மருத்துவமனைக்கு வந்திருக்கிறார். வலியைக் குறைப்பதற்கான மருந்துகள் எதுவும் வேலை செய்யவில்லை. அவரது கண்ணில் ஃப்யூசாரியம் (fusarium) என்னும் பூஞ்சைத் தொற்று ஏற்பட்டு இருப்பதைக் கண்டுபிடித்தார்கள்.
அதற்குள் அவரது இடது கண்ணில் மூன்று படலங்களையும், 70 நரம்புகளையும் அந்தப் பூஞ்சை தின்று தீர்த்திருந்தது. மருத்துவமனையில் விழித்திரை மாற்று அறுவை சிகிச்சை உள்பட 22 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும், பலன் இல்லை. 17 வாரங்கள் அவர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற நேர்ந்தது. இருந்தும் அவரது இடது கண் பார்வை பறிபோனது. இந்தப் பூஞ்சைத் தொற்று, பார்வை நரம்புகள் மூலம் மூளையைத் தாக்கக்கூடிய அபாயம் இருக்கும் என மருத்துவர்கள் அஞ்சியதால் பாதிக்கப்பட்ட கண்ணையே அப்புறப்படுத்த வேண்டியதாயிற்று. பூஞ்சைத் தொற்று ஏற்பட்டதற்குக் காரணம் அவர் கண்ணில் அணிந்திருந்த காண்டாக்ட் லென்ஸ்தான் என மருத்துவர்கள் உறுதி செய்தனர். அவர் தற்போது செயற்கைக் கண் பொருத்திக்கொண்டு இருக்கிறார்.

கான்டாக்ட் லென்ஸ் அணிபவர்கள் கவனிக்க வேண்டிய 8 வழிகளை  நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியின் கண் சிகிச்சைப் பிரிவுப் பேராசிரியர் கே. கண்மணி.

* உரிய மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சிறந்த நிறுவனத்தின் தரமான தயாரிப்பைப் பயன்படுத்த வேண்டும்.

* அணிவதற்கான பயிற்சியினைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

* முகம் பார்க்கும் கண்ணாடி முன் நின்று அணிய வேண்டும்.

* மின் விசிறியை அணைத்துவிட்டு அணிய வேண்டும். இல்லாவிட்டால் லென்ஸ் காற்றில் பறக்கும் வாய்ப்பு உண்டு.

* லென்ஸ் தவறி விழுந்தாலும், கீறல் ஏற்பட்டுவிடாதபடி கீழே ஒரு சுத்தமான துணி இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

* நகக் கீறல் லென்ஸில் ஏற்படாமல் இருக்க நகத்தை ஒட்ட நறுக்க வேண்டும்.

* கண்ணுக்குச் சொட்டு மருந்து போடும்போது லென்ஸைக் கழற்றிவிடவும்.

* லென்ஸ் அணிபவர்கள் கண்ணுக்கு மை போடக்கூடாது.

நன்றி-விகடன்

0 comments: