Thursday, October 29, 2015

மனுசங்க.. 25: அரியும் சிவனும் ஒண்ணு!-கி.ராஜநாராயணன்

துரசாபுரம் தாத்தா பல ஊர்களுக்குச் சென்றிருக்கிறார். அந்த ஊர்களில் எல்லாம் ஊர் தவறாமல் பஜனை மடங்கள் இருந்தன. நம்ம ஊருக்கும் ஒரு பஜனைக் கோயில் இருந்தால் நல்லா இருக்குமே என்கிற எண்ணம் சமீபகாலமாக அவருக்குள் தோன்றிக்கொண்டே இருந்தது.
வீட்டுக்குள்ளேயே நடந்தவர் தெருவில் இறங்கி நடந்தார்.
விறுவிறு என்று நடந்து, கண்மாய்க் கரை அரசமரத்தடி நிழலில் நின்று கொண்டு, அந்த ஊரின் முக்கியமான நாலு பெரியவர்களை வரவழைத்தார்.
துரசாபுரம் தாத்தாவோடு சேர்ந்து அய்ந்து பேர்களும் உட்கார்ந்தார்கள்.
‘‘நம்ம ஊருக்கென்று ஒரு பஜ னைக் கோயில் வேண்டாமா… அதைப் பத்தி நீங்களெல்லாம் ஏதாச்சும் யோசிச் சீங்களா...? என்று கேட்டார் தாத்தா.
கோயில் வேண்டாம் என்று யார் சொல்வார்கள்.
‘‘நீங்க மொத அடி எடுத்து வையுங்க… உங்க பாட்டையில் எத்தன தடங்கள் பின் தொடருதுன்னு அப்புறம் பாருங்க’’ என்றார்கள்.
அதில் ஒருத்தர் ரொம்பவும் ஆர்வ மாக ‘‘முடிச்சிருவோம்... ஒரு தலைக்கட் டுக்கு எவ்வளவு வசூலிக்கலாம்? ”என்று கேட்டார்.
‘‘என்னுடைய செலவிலேயே ஊர்ப் பொதுவுக்குக் கட்டுவோம். நீங்கள் சம்மதமும் ஒத்தாசையையும் தந்தால் போதும்’’என்றார்.
தங்கமுட்டை இடுகிறேன் என்றால் யார்தான் வேண்டாம் என்று சொல் வார்கள்.
‘‘சரீ… ரொம்ப நல்லது! கட்டப் போற கோயில் செலவுகளைப் பராமரிக்க, விழாக்கள் கொண்டாட இதுகளுக்கெல் லாம் வருமானத்துக்கு என்ன செய்ய?’’
‘‘என்னோட தோட்டம், கிணறு, மனாம் பாரி எல்லா நிலங்கள், தொழு, வீடு, பசு மாடுகள் எல்லாத்தையும் கோயில் பேருக்கே எழுதி வெச்சிருதேம்’’ என்றார்.
இதுகளை எல்லாம் அங்கே கூட்டமாக வந்து கேட்டுக்கொண்டிருந்த ஊர் மக்கள் ஆச்சரியத்தில், சந்தோஷத்தில் திக்குமுக்காடிக் போனார்கள். மிக உயர்ந்து தோன்றினார் தாத்தா அவர்களுக்கு.
‘‘கோயில் பேரில் எழுதி வைத்து விட்டால் அந்தக் கோயில் வந்து சம்சாரித்தனம் பார்க்குமா?’’ என்று கேட்டார் அதில் ஒருத்தர்.
‘‘யாரையாவது பொறுப்பாளியாக்கி எழுதி வைக்கணும்’’ என்றார் இன் னொருத்தர்.
‘அதுதான் யார்… யார்?’ என்று மண் டைக் குழம்பியது சிலருக்கு. ‘நம்ம பேருக்கு எழுதி வைத்தால் தேவலையே’ என்றிருந்தது இன்னும் சிலருக்கு.
‘‘மழைத் தண்ணி இல்லாத காலங் களிலும், பஞ்சமே வந்தாலும்கூட கோயில் காரியம் நிற்கக்கூடாது’’ என்று தாத்தா சொன்னபோது, ‘‘அதானெ… கானம் என்றால் வாயைத் திறக்கிறதும் கடிவாளம் என்றால் வாயை மூடிக் கிறதுமா’’ என்றார் ஒருத்தர்.
அவரே இருக்கட்டும் எப்போது போல என்றார்கள் சிலர்.
‘‘சட்டையைக் கழற்றிப் போட்ட நாகம் திரும்பவும் அதை எடுத்து அணியாது’’ என்றார் தாத்தா கராலாக.
அந்தக் கூட்டம் பற்றிக் கேள்விப்பட்டு வந்திருந்த ஊர் மடத்துச் சாமியாருக்கு, தாத்தா சொன்ன பதிலுக்குப் பதிலாக, ‘‘நாகரட்ணத்தைக் கக்கித் தந்துவிட்ட நாகம் திரும்பவும் அதை எடுத்து விழுங்குமா?’’ என்று கேட்டார்.
தனது சொத்துப் பத்து செல்வங்களை, கழற்றிப்போட்ட கந்தலான ஒரு பாம்புச் சட்டை என்று தாத்தா சொன்னது சாமி யாருக்குப் பிடிக்கவில்லை. அவை நாகரத்தினம் போன்ற விலை மதிப்பற் றவை என்று சொன்னதும் சரியே.
கூட்டம் இப்போது கோயிலைக் கட்டுவதற்கான இடத்தைப் பற்றிய விவாதத்தில் இறங்கியிருந்தது.
முதல் எடுப்பிலே தாத்தா சொல்லி விட்டார் ‘‘ஊர் மடத்தை பஜனை மடம் ஆக்க வேண்டாம்’’ என்று.
ஊர் என்றால் அப்படியும் ஒன்று இருக்கவே வேண்டும்.
கோயில் கட்ட என்றால் அதுக்குத் தக்கன இடமாக அமைந்திருக்க வேண் டுமே என்பது அனைவரின் கவலையும், இதில் வெளியில் சொல்ல முடியாத கவலையும் சிலருக்கு உண்டு. ஊரின் வடக்குப் பகுதியில் கோயில்கள் இருக் கின்றன. ஆனால், அவை திருநீறு பூசிக்கொள்ளும் சாமிகள். இவர்கள் தேடும் இடம் திருமண் இட்டுக்கொள்ளும் சாமிக்கான கோயில் இடம்.
ஒரு இலக்கியக் கூட்டத்தில் கேள்வி ஒன்று எழுப்பப்பட்டது.
சிவன் கோயில்கள் செம்மண் இருக்கும் இடங்களாகவும், வைணவக் கோயில்கள் இருக்கும் இடங்கள் கருப்பு மண் இருக்கும் இடங்களாகவும் இருக்கக் காரணம் என்ன?
எல்லா இடத்திலுமா இப்படி என்று ஒரு கிளைக் கேள்வியும் வந்தது.
கிளைக் கேள்விக்கு மட்டும் பதில்:
அநேகமாக என்று சொல்லியாகி விட்டது. முதல் கேள்விக்கு சட்டென்று பதில் சொல்ல முடியவில்லை.
என்றாலும் சமாளிக்கும் பதிலாக இப்படி சொல்லப்பட்டது:
சிவன் சிவப்பு, அதனால் சிவப்பு மண்; விஷ்ணு கருப்பு, அதனால் கருப்பு மண்!
பெரும்பாலான கிராமத்து மக் களுக்கு இந்தக் கவலை எல்லாம் ஏதும் கிடையாது. எல்லா சாமிகளும் நம்ம ஊரில் இருப்பது நல்லதுதானெ என்பதுதான் எண்ணம்.
‘அரியும் சிவனும் ஒண்ணு இதை அறியாதவன் தலையிலெ மண்ணு’ கிராமத்துப் பிள்ளைகள்கூட இப்படித்தான் பாட்டு சொல்லுவார்கள்.
கடோசியில் எல்லாருமாகச் சேர்ந்து தேர்ந்தெடுத்த இடம், இடிந்து போன பழைய பவுண்டுத் தொழு இருந்த இடம்.
தாத்தாவுக்கு இந்த இடம் ரொம்பப் பிடித்துவிட்டது.
ஊருக்கு வடக்கே இரண்டு பாறைகளைத் தெரிந்தெடுத்தார்கள். ஒன்றில் செம்பரைப் பாய்ந்த அரளைக் கற்களாகப் பெயர்த்துக் குவித்தார்கள். இன்னொன்றில் நீள நீளமான, கனமான தூண்களுக்கு ஆனவையாக உடைத்து வைத்தார்கள்.
கற்களுக்காகப் பாறைகளைத் தோண்டி உடைத்து எடுக்கும் பள்ளங்களில் ஒரு பள்ளத்தில் நீர் சுரந்து தேங்கியது. ஒன்றைத் தேடிப் போனால் ரெண்டு கிடைக்கும் என்பார்கள். குடி தண்ணீர் கிடைத்தது அடுத்த லாபம். தாத்தாவுக்கு அப்படி ஒரு பேர் உண்டு.
கோயிலுக்கு கல் கட்டிடம் கட்டு வதற்கு முன்னதாக தற்காலிகமாக ஒரு மண் கட்டிடம் இருக்கட்டும் என்று ஆரம்பித்தார்கள். சீமந்து (சிமெண்ட்) வராத காலம் அது. சுண்ணாம்புச் சாந்துதாம் முக்கியமாக இருந்தது. கீழ்ப் பகுதி மண்ணும் தலைப் பகுதி சுண்ணாம்புமாக துரு பிடிக்காதத் தகடுகளால் வேய்ந்த சாய்ப்பு வைத்துக் கட்டி முடித்தார்கள்.
கட்டிடம் கட்டும்போதே கோயி லினுள் வைக்கும் சாமி சிலையால் ஆனதான அல்லது மற்ற பஜனை மடங்களில் உள்ளது போல பெரிய்ய அளவிலான படங்களா என்ற பேச்சும் எழுந்தது.
கல் கட்டிடம் எழும்போது சிலை வைத்துக்கொள்ளலாம். இப்போதைக்கு படம் போதும் என்று முடிவானது.
ஊர்க்கூடி, சேர்ந்து செய்யும் பொதுக் காரியங்களின்போது நிலவுகிற சந்தோஷமே ஒரு தனிதான்!
ஒருவர் மேல் ஒருவர் அப்படிப் பிரியமாக அந்நியோன்யம் நிறைந்து காணப்படும். எப்போதும் இப்படியே இருந்தால் தேவலையே என்றிருக்கும். இதுக்காகத்தானோ பெரியவர்கள் இப்படிப் பொதுக் காரியங்கள் செய்யும்படி வைத்தார்களோ என்று தோன்றும்.
- இன்னும் வருவாங்க…

தஹிந்து

0 comments: