Friday, October 30, 2015

மனுசங்க.. 26: பாலகிருஷ்ணன் படம்-கி.ராஜநாராயணன்

தாத்தா மதுரையில் இருந்தார்.
கோயில் கட்டி முடிந்தபிறகு அதில் என்னவெல்லாம் இருக்க வேண்டுமோ அதுகளையெல்லாம் வாங்கிக் கொண்டிருந்தார்.
மதுரைப்பட்டினத்தில் கிடைக்காதது என்று உண்டா? அம்மா, அப்பா தவிர எல்லாத்தையும் வாங்கலாம் என்று சொல்லுவார்கள்.
அவர் வாங்கியதிலெல்லாம் சிகரம் என்று சொல்லும்படியாக அமைந்தது பகவான் பாலகிருஷ்ணனின் பெரிய அளவிலான படம்தான்!
பார்த்துக்கொண்டே இருக்கலாம் அதை. தஞ்சாவூர் பாணி ஓவியங்கள் என்று சொல்லப்படும் ஓவிய வகை அது.
அந்தப் படத்தின்மேல் பார்வை விழுந்தவுடன் ஒரு பரமானந்தம் ஏற்படும்.
தாய்மை உள்ளம் பொங்கும் ஒரு பெண் அதைப் பார்த்தால் “வாடா கண்ணா...'' என்று பாட ஆரம்பித்துவிடுவாள். பக்தன் அதைப் பார்த்தால் சொல்ல வேண்டியதில்லை. அந்தக் கண்கள் அவன் அணிந்துள்ள மயில் பீலியின் நீல வர்ணக் கண்ணோடு போட்டியிடும்.
கண்களே முகமாகத் தெரிந்தது. பெயர் வாங்கித் தந்த கண்கள் அவை. முகமே கண்களாய் கண்களே முகமாய். அந்த புன்னகைக்கு இணையாய் அவன் அணிந்திருந்த புல்லாக்கின் முத்து போட்டி போட்டுப் பார்க்கிறது. சற்றே தலையைச் சாய்த்துப் புன்னகைக்கிறான். ஈடு இணையில்லாத படம் அது. இந்த ஊர்க் கோயிலுக்கென்று கிடைத்த படம்.
அந்தப் படத்தைப் பார்த்துப் பார்த்துக் கரைந்தார் தாத்தா.
இந்த ஒன்று போதும் இந்தக் கோயிலுக்கும் இந்த ஊருக்கும்.
அந்தப் படம் கோயிலுக்குள்ளேயே இருந்தா எப்படி? ஊரும் உலகமும் பார்க்க வேண்டாமா? அதற்காகத்தான் சாமி ஊர்கோலம். வருசத்தில் மூணு முறை; கண்ணன் பிறப்பு, ஏகாதசி, புரட்டாசியின் மூணாம் சனிக்கிழமை கொண்டாட்டம் கோலாகலம் . சப்பரம் சுமந்து வருவதில் இளவட்டங்களில் போட்டி.
வீடு தவறாமல் தேங்காய் உடைப்பார் கள். தெருவெல்லாம் சுத்தம்பண்ணி நீர் தெளித்துக் கோலங்கள் போட்டிருப் பார்கள்.
பெண் குழந்தைகள் குதித்துக் குதித்து கோலாட்டம் அடித்தும், கண்ணனைப் பற்றிய கும்மிப் பாடல்களும் பாடுவார் கள். இது முடிந்ததும் அவர்களைக் கோயிலினுள் அழைத்து வந்து வாழையிலையில் சர்க்கரைப் பொங்கல் வைத்துச் சாப்பிட வைப்பார் தாத்தா.
தாத்தாவின் தொழுவில் காராம்பசுக் கள் நிற்பதால் சுயம்பான நெய்யிக்குப் பஞ்சமில்லை. அந்த சர்க்கரைப் பொங்கலின் மணமும் ருசியும் சொல்லி முடியாது.
‘சர்க்கரை' என்பதை சில இடங்களில் ஜீனியைக் குறிப்பதால் சின்ன ஒரு குழப்பம் ஏற்படும்.
சர்க்கரை என்பது இங்கே கரும்பின் அச்சுவெல்லம்,
கருப்பட்டிக்கு நல் லெண்ணெய்தான் கொண்டாட்டம். (‘இஞ்சிக்கு ஏலம் கொண்டாட்டம்; அந்த எடுபட்ட சிறுக்கிக்கி கோவம் கொண்டாட் டம்' என்பது நாட்டுப்புறப் பாடல்)
இப்படி கொண் டாட்டங்களைப் பற்றி நிறையவே சொல்லப் பட்டிருக்கு; அவை அப்படி நிற்கட்டும்.
கும்மி, கோலாட்டு முடிந்த வுடன் கோயிலுக்கு முன்புறம் போடப் பட்டிருக்கும் கொட்ட கையின்கீழ் கொலுமேளம் வாசிப்பு. குருமலை பொன்னுசாமி சகோதரர்கள் நாயன‌ம்.
இந்த சகோதரர்கள் இருவரில் மூத்தவரின் பெயர் மணி முத்துப் புலவர் என்றாலும் மக்கள் சொல்லுவது பொன்னுசாமி பிள்ளை சகோதரர்கள் என்றுதான்.
அநேகமாக, எல் லாக் குடும்பங்களிலும் ஆணோ, பெண்ணோ நடு வுள்ளவர்கள்தான் பிரகாசிக்கிறார்கள். பொன்னுசாமி அப்படி.
காருகுறிச்சி கிராமத் தில் பெரிய அருணாசலம் சின்ன அருணாசலம் என்று இரண்டு பேர் இணைந்து நாயன‌ம் வாசித்து வந்தார்கள்.
நானாசரியில் சின்ன அருணாசலமே பிரகாசிக்க ஆரம் பித்துவிட்டதால் ‘காருகுறிச்சி அருணாசலம்' என்ற பெயர் மட் டுமே நிலைத்தது.
தஞ்சை மண்ணில் ஒரு சின்னப் பக்கிரி நாயன‌த்தில் கொடிகட்டிப் பறந்தார்.
விளாத்திகுளம் சுவாமிகளிடம் ஒரு நாள் நான் கேட்டேன்: “இதுவரை நீங்கள்கேட்ட நாயன‌த்தில் அந்த வாத்தியத்தின் உச்சம் என்று யாரைக் குறிப்பிடுவீர்கள்” என்று கேட்டபோது அவர் சொன்னது:
‘‘சந்தேகமில்லாமல் சின்னப் பக்கிரிதான்” என்றார்.
சின்னப்பக்கிரிக்கு ஒரு அண்ணன் இருந்தாரா, தெரியாது எனக்கு, கோயிலின் கொட்டகையில் கொலு மேளம் வாசித்து முடித்துவிட்டு அவர்கள் போனதும் கிராமத்துப் பெரியவர்கள் விரும்பிக் கேட்கும் உறுமி மேளம்! சக்கைபோடு போடும்.
எப்பவுமே உழைப்பாளிகளுக்கான மேளம் அது.
தனி உறுமி மட்டுமே எல்லா நல்லது பொல்லாதுகளுக்கும். கோயிலுக்கும் கூட வாத்தியமாகக் கொண்ட குறிப்பிட்ட மொழிக்காரர்கள் உண்டு அந்த ஊரில். அவர்களும் இந்தக் கோயில் விழாக்களில் வந்து கலந்துகொள்ள எந்த ஆட்சேபணையும் இல்லை.
ஒவ்வொரு கோயிலுக்கும் அந்தக் கோயிலுக்கென்றே உள்ள பிரசாதம் பேர்போனதாக அமைந்திருக்கும். நமது இந்தக் கோயிலின் சர்க்கரைப் பொங்கலின் மணமும் ருசியும் அப்படி ஒரு ‘தேனாமிர்த'மாக அமைந்திருக்கும்; திருப்பதிக்கு லட்டு வாய்த்ததுபோல. எல்லாம் தாத்தாவின் பக்குவமும் மேல் பார்வையும்தான்.
எல்லா விசயங்களிலும் ஒரு கறார்த் தன்மை இருந்தது அவரிடம்.
ஒரு விசயம் அவருக்குப் பிடிக்க வில்லை என்றால் மவுனமாக சிலைபோல இருப்பார். அதைக் கண்டு, தெரிந்து கொள்வார்கள்.
ஊரில் எங்காவது வீடு கட்டுகிறார்கள் என்றால், அழைக்காமலேயே போய் நிற்பார். எல்லா விவரங்களையும் வீட்டுக்காரனிடமும் அங்கே தொழில் செய்யும் தொள்ளாளிகளிடமும் கேட்டு விசாரித்துத் தெரிந்து கொள்வார்.
“அப்படியா? இப்படிச் செய்து பாருங்களேன்” என்று யோசனை சொல்லுவார். அதன்படி செய்தால் செலவு சுருக்கமாகவும் வசதியாகவும் அமையும்.
சில சமயம் “யோசிச்சிக்கிடுங்க” “யோசிச்சுப் பண்ணுங்க” என்று சொல்லி விட்டுப் போவார். பிறகுதான் தெரியும்; அவர் சொன்ன‌படிக்குச் செய்யாமல் போனோமே என்று.
அவருடைய உணவு வகைகள் வித்தியாசமானவை. விதவிதமான மாவு உருண்டைகள் கேட்பார். எள்ளு ருண்டை, கம்பு மாவு உருண்டை, கடலை மாவு உருண்டை, முந்திரிக்கொத்து, விதவிதமான கொழுக்கட்டைகள் இப்படி. சில சமயம் மாவாகவே எடுத்துச் சாப்பிடுவதைப் பார்க்கலாம். வெண்ணெய் உருண்டைகள், சீம்பால் பாலாடைக் கட்டி, தேன், பழ வகைகள் என்று.
“தட்டத்திலெ சாதத்தெக் கொட்டி னோம். குளூற கறிய ஊத்துனோம், நெய்யோ நல்லெண்ணைய்யோ விட்டுக் குழப்பி பெரிய பெரிய உருண்டைகளாகச் செஞ்சி அடிச்சோம்னு கிடையாதே, வேண்டாத நொசனாரித்தனமெல்லாம் செஞ்சிக்கிட்டே இருப்பாம்; சின்ன வயசிலேயிருந்து இப்படித்தான்” என்று தாத்தாவோட அவ்வா சொல்லிக்கிட்டே இருப்பாளாம்.
வயசுல தாத்தாவுக்கு நசியம் (மூக்குப் பொடி) போடுகிற பழக்கமும் இருந்ததாம். கலியாணத்துக்குப் பிறகுதாம் அதெ விட்டொழிச்சாராம்.
- இன்னும் வருவாங்க

தஹிந்து

0 comments: