Monday, October 12, 2015

‘The Shallow Grave’ -தனியார் துப்பறியும் நிறுவனம்-பட்டுக்கோட்டை பிரபாகர்

பட்டுக்கோட்டை பிரபாகர்

தனியார் துப்பறியும் நிறுவனம் என்பது முன்பு ஆங்கில திரைப்படங்களில் மட்டும் இருந்தது. இப்போது இந்தியாவில் அநேகமாக அத்தனை பெரிய நகரங்களிலும் நிறைய துப்பறியும் நிறு வனங்கள் இயங்கிக் கொண்டிருக் கின்றன.
தமிழில் எழுதப்பட்ட, எழுதப்படுகிற துப்பறியும் நாவல்களில் கற்பனையாக உருவாக்கப்பட்ட பல கதாப்பாத்திரங்கள் மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றிருக்கிறார்கள்.
அதே போல சர்வதேச அளவில் புகழ் பெற்ற துப்பறிவாளன் ஜேம்ஸ்பாண்ட். இந்தப் பாத்திரத்தைப் படைத்தவர் இயன் ஃபிளெமிங். துறுதுறுவென்று ஆராய்ச்சி மனப்பன்மையுடன் யாரா வது செயல்பட்டால் ‘‘இவரு பெரிய ஜேம்ஸ்பாண்ட்’’ என்று கிண்டல் செய் யும் அளவுக்குப் புகழ்பெற்ற ஜேம்ஸ் பாண்ட்டை வைத்து ஏராளமான திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் கிழக்கு லண்டனில் கிறிஸ்டியன் போத்தா என்கிற நிஜ ஜேம்ஸ்பாண்ட் ஒரு வெற்றிகரமான துப்பறியும் நிறுவனம் நடத்தி வருகிறார். அவர் துப்பறிந்த வழக்குகளைப் பற்றி ‘The Shallow Grave’ என்னும் புத்தகத்தில் விரிவாக எழுதியிருக்கிறார். அதில் இருந்து ஒரு வழக்கைப் பார்க்கலாம்.
2004-ம் ஆண்டு. பிரிக்ஸ்டன் நகரத்தில் வசித்த ஸ்டீன்கெம்ப் தனக்கு வரவேண்டிய பெரிய கடன் தொகையை வசூலிப்பதற்காக கென்னத் டவுனி என்னும் நண்பரைப் பார்க்க காரில் சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவே இல்லை. மறுநாள் வரை அங்குமிங்கும் தேடிப் பார்த்த அவரின் மகள் சமந்தா காவல்துறையிடம் சென்றார்.
காவல்துறை அதிகாரிகள் ஸ்டீன் கெம்ப் கடைசியாகச் சந்தித்த கென்னத் டவுனி வீட்டுக்கு வந்து விசாரித்தார்கள். தன் வீட்டுக்கு வந்த ஸ்டீன்கெம்ப் பணத்தை வாங்கிக்கொண்டு உடனே புறப்பட்டுவிட்டதாகவும், ஜூஸ் குடிக் கிறீர்களா என்று கேட்டதற்கு, ஓர் அவசர வேலை திடீரென்று வந்துவிட்டதால் நேரமில்லை என்று சொல்லிப் புறப்பட்ட தாகவும் சொன்னார். அவருக்குக் கடனைத் திருப்பித் தருவதற்காக வங்கியில் பணம் எடுத்து வைத்திருந்த விவரத்தையும் காட்டினார்.
அவருக்குத் தீடீரென்று வந்த அந்த அவசர வேலைதான் என்ன? அவசர வேலை என்றால் அது அலைபேசி மூல மாகத்தான் தெரிவிக்கப்பட்டிருக்க வேண் டும். ஸ்டீன்கெம்ப்பின் குடும்பத்தினர் யாரும் அவரை அலைபேசியில் அழைக்க வில்லை என்றார்கள். அவரின் அலை பேசி எண்ணை வைத்துக்கொண்டு அதற்கு வந்த அழைப்புகளின் விவரங் களை சேகரித்தபோது ஒரு தகவல் கிடைத்தது.
கென்னத் டவுனி வீட்டுக்கு அவர் செல்வதற்கு அரை மணி நேரம் முன்பாக ஒரு புதிய எண்ணில் இருந்து அவருக்கு அழைப்பு வந்திருந்தது. அது ஒரு பொது தொலைபேசியின் எண். ஆகவே, அதற்குமேல் அழைத்த நபரைப் பற்றி வேறெதுவும் தெரிந்துகொள்ள முடியவில்லை.
ஆனால், அந்த நபர் தான் ஸ்டீன்கெம்ப் பின் மர்மமான தலைமறைவுக்கான காரணம் என்று மட்டும் புரிந்தது. அந்த நபர் போனில் ஏதோ ஒரு பொய்யான அதிர்ச்சி தரும் தகவலைச் சொல்லி ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு வரச் சொல்லியிருக்க வேண் டும். அங்கே இவர் சென்றதும் இவரைக் கடத்தியிருக்க வேண்டும். இப்படி ஊகித்த காவல்துறை அதிகாரிகள் பணயத்தொகை கேட்டு அந்த மர்மநபரிடம் இருந்து தகவல் வரும் என்று எதிர்பார்த்தார்கள்.
ஸ்டீன்கெம்ப்பின் வீட்டில் இருந்த தொலைபேசிக்கு வரும் அழைப்புகளை ஒட்டுக் கேட்பதற்கான ஏற்பாடுகள் செய் யப்பட்டது. இரண்டு, மூன்று நாட்கள் கடந்தும் அப்படி எந்த அழைப்போ, மிரட்டல் கடிதமோ வரவில்லை.
மூன்றாவது நாள் ஊருக்கு வெளி யில் இருந்த ஓர் உணவு விடுதியின் பார்க் கிங் பகுதியில் ஒரு கார் அதன் உரிமை யாளரால் எடுத்துச் செல்லப்படாமல் காலையில் இருந்து நிற்பதாக ஓட்டல் நிர்வாகம் காவல்துறைக்குத் தகவல் தந்தது. போலீஸ் அந்த காரை கைப்பற்றி விசாரித்தபோது அது ஸ்டீன்கெம்ப்பின் கார் என தெரியவந்தது. மாற்றுச் சாவி போட்டுத் திறந்து பார்த்தபோது, அவர் அன்றைய தினம் தன்னுடன் எடுத்துச் சென்றிருந்த சிறிய பிரீஃப்கேஸும் அலைபேசியும் இருந்தன. பெட்டியில் கென்னத் டவுனியிடம் வசூலித்த பணம் இல்லை.
போனில் அழைத்த மர்ம நபருக்கு ஸ்டீன்கெம்ப் பெரிய தொகையை வசூல் செய்துவிட்டுத் திரும்பப் போகிற தகவல் தெரிந்திருக்க வேண்டும். அத னால் திட்டமிட்டு வரவழைத்து பணத் தைப் பறித்துக்கொண்டு அவரைக் கொலை செய்திருக்க வேண் டும். போலீஸ் தலையிட்டதை அறிந்ததால் அவரின் உடை மைகளை இப்படி போட்டு விட்டுப் போயிருக்க வேண்டும் என்று கருதினார்கள்.
அந்த காரில் கைரேகைகள் எடுத்தார்கள். அந்த உணவு விடுதியில் பலரை விசாரித் தார்கள். நகரத்தில் நிகழ்ந்த கொலைகளை ஆராய்ந்தார் கள். அடையாளம் தெரியாமல் கைப்பற் றப்பட்டப் பிணங்களை அடையாளம் காட்டச் சொல்லி குடும்பத்தினர் அலைக்கழிக்கப்பட்டார்கள்.
நாட்கள் வாரங்களாகின. வாரங்கள் மாதங்களாகின. மாதங்கள் வருடங்களா கின. ஸ்டீன்கெம்ப் பற்றி எந்த ஒரு தகவ லும் இல்லை. அவர் எங்கோ உயிருடன் இருப்பதாக நினைத்து நம்பிக்கையுடன் வாழ்வதா? இறந்துவிட்டார் என்றெண் ணித் துக்கப்படுவதா என்று புரியாமல் அந்தக் குடும்பம் மன உளைச்சலில் தத்தளித்தது.
அவரின் மகள் சமந்தா நம் ஜேம்ஸ் பாண்ட் கிறிஸ்டியன் போத்தாவிடம் வந்தார். அவர் இதில் தீவிரமாக இறங் கினார். 8 ஆண்டுகளாக விடை தெரியாத இந்த வழக்கின் கேள்விகளுக்கு இரண்டே நாட்களில் விடை கண்டு பிடித்தார். குற்றவாளி பிடிபட்டான். கோர்ட்டில் நிறுத்தப்பட்டு அவனுக்குத் தண்டனை கொடுக்கப்பட்டது. காவல் துறை கிறிஸ்டியன் போத்தாவைப் பாராட்டியது.
ஸ்டீன்கெம்ப்புக்கு
என்ன நடந்தது? கிறிஸ்டியன் போத்தா குற்றவாளியை எப்படிக் கண்டுபிடித்தார்?
முதலில் காவல்துறையிடம் இருந்து அவர்களின் விசாரணை அறிக்கை களைக் கேட்டுப்பெற்று அவற்றை நிதான மாகப் படித்தார் போத்தா. கடைசியாக ஸ்டீன்கெம்ப்பைச் சந்தித்த கென்னத் டவுனியின் வீட்டுக்குச் சென்றார். வீடு பூட்டியிருந்தது. பக்கத்து வீட்டில் விசா ரிக்க, கென்னத் டவுனி காலி செய்து விட்டுப் போனபிறகு வேறு எவரும் குடி வரவில்லை என்றும், சாவி தங்களிடம் இருப்பதாகவும் தெரிவித்தார்கள். வீட் டைச் சோதனை செய்தார் போத்தா.
அந்தத் தூசியடைந்த வீட்டில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு என்ன தடயம் கிடைக்கும் என்கிற சந்தேகத்துடன் நுழைந்தார். எந்தப் பொருளும் கிடைக்க வில்லை. பல மணி நேரம் நுணுக்கமாக பார்த்தபடி சுற்றி வந்தவரின் கண்ணில் அது தென்பட்டது.
ஹாலில் போடப்பட்டிருந்த கார்ப் பெட்டின் ஒரு ஓரம் சிறிதளவு கத்தரிக் கப்பட்டிருப்பது தெரிந்தது. முதல் சந் தேகம் விழுந்தது. ஒரு கார்ப்பெட் கிழிந் திருக்கலாம்; நைந்து போயிருக்கலாம்; சுருண்டிருக்கலாம். ஒரு பகுதி மட்டும் ஏன் கத்தரிக்கப்பட வேண்டும்? அடுத்து வீட்டின் வெளிப்புறமாகச் சுற்றி வந்தார். தோட்டத்தில் நடப்பதற்காகப் போடப்பட்டிருந்த சிமென்ட் ஸ்லாப்கள் பதிக்கப்பட்ட பாதையில் சில ஸ்லாப்கள் கொஞ்சம் தரையிறங்கியிருந்தன.
காவல்துறைக்குத் தகவல் தெரிவித் தார். தடயவியல் நிபுணர்களுடன் காவல் துறை வந்தது. அந்த சிமென்ட் ஸ்லாப் களைப் பெயர்த்துப் பார்த்தபோது, பூமிக்கு அடியில் 8 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட ஸ்டீன்கெம்ப்பின் எலும்பு மிச்சங்கள் கிடைத்தன.
வேறு அடையாளத்தில் வேறு பெய ரில் தலைமறைவாக இருந்த கென்னத் டவுனியை அடுத்த சில நாட்களிலேயே வளைத்துப் பிடித்தார்கள். விசாரித்த போது, ‘தனக்குக் கடன் தொகையைத் திருப்பித் தர விருப்பமில்லாததால், ஸ்டீன்கெம்ப் வந்ததும் கழுத்தை நெரித் துக் கொலை செய்தேன். தன் மேல் சந்தேகம் வரக் கூடாதென அரை மணி நேரத்துக்கு முன்னதாக பொது தொலை பேசிக்குச் சென்று ஸ்டீன்கெம்ப்பை அழைத்து குரலை மாற்றி ஓர் அவசர வேலைக்காக அழைத்ததாகவும், போலீஸ் நம்ப வேண்டும் என்பதற்காக வங்கியில் இருந்து பணத்தை எடுத்து வீட்டில் பீரோவில் வைத்துக் கொண்ட தாகவும் கென்னத் டவுனி தெரிவித்தான். வழக்கின் முடிவில் டவுனிக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது.
- வழக்குகள் தொடரும்
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: [email protected]

ன்றி-தஹிந்து