Saturday, July 04, 2015

MIND FULLNESS - சினிமா விமர்சனம்

டான் மில்மேன் எழுதிய ‘வே ஆஃப் பீஸ்ஃபுல் வாரியர்’ என்ற நாவலின் திரைப் பதிப்பு இந்த திரைப்படம். ‘நாவல் போல சினிமா இல்லை’ என்ற விமர்சனத்தையும் மீறி இந்த படத்தைப் பார்க்க இரு காரணங்கள். ஒன்று இது ஆசிரியரின் உண்மைக் கதை. இரண்டு 'மைண்ட்ஃபுல்னெஸ்' பற்றிய படம்.
எக்கார்ட் டாலே புத்த வழிமுறைகளில் பெரிதும் தாக்கம் கொண்டு எழுதிய புத்தகங்களில் அதிகம் பிரபலமானது, ‘பவர் ஆஃப் நவ்’. இன்று மேலை நாடுகள் கிழக்கத்திய நாடுகளின் தத்துவத்தை உள்வாங்கி வருவது ஆரோக்கியமான விஷயம். கடந்த காலத்திலும் எதிர்காலத்திலும் வாழ்க்கையை இழக்காமல் இந்த நொடியை முழுதாக வாழும்முறை பற்றியது அது. இது ஒரு திரைப்படத்தில் சாத்தியமானது அதை விட அபூர்வமானது. உலகின் தலைசிறந்த சுயஅறிவு ஜீவிகள் இந்தப் படத்தை தூக்கிப் பிடிப்பது இந்த தத்துவ பின்புலத்தினால்தான்.
ஐ.எம்.பி.டி. ரேட்டிங்க் பிரமாதமாக இல்லை. விமர்சனங்களும் சுமார் ரகத்தில்தான் வந்தன. ஆனால் படம் பார்வையாளர்களிடம் வெற்றி பெற்றது. வசூலையும் அள்ளியது. தொடர்ந்து ஆங்கிலப் படங்கள் வரும் தொலைக்காட்சி சேனல்களில் தொடர்ந்து ஒளிபரப்பாகிறது. படத்தில் ஜார்கன்ஸ் (jargons) எனப்படும் துறைசார்ந்த சொற்கள் மற்றும் கனமான உரையாடல்கள் உள்ளன என்ற விமர்சனத்தில் உண்மை இல்லாமல் இல்லை. இருந்தும் சில கருத்தாக்கங்கள் இப்படிப்பட்ட உண்மைக் கதைகள் மூலம் மக்களை அடைவது நல்ல விஷயம் என்றுதான் தோன்றுகிறது.
அதுதான் மனப்பயிற்சி
கதை என்ன? வாழ்வில் அவசரத்தனமும் போட்டியும் கொண்ட சராசரி அமெரிக்க இளைஞன் அவன். ஒலிம்பிக் கனவில் வாழும் அதெலட். தன் நிலையில்லாத தன்மையால் தூக்கம் கெட்டு விடியற்காலை சாலையில் திரிபவன். அப்படி ஒருநாள் அதிகாலையில் ஒரு முதியவரைச் சந்திக்கிறான். வாகனத்துக்கு எரிபொருள் நிரப்பச் செல்லும் இடத்தில் எந்த விசேஷ குணமும் தெரியாத, இரு கால்களில் இரு அளவு காலணிகள் அணிந்த அவரை முதலில் சாதாரணமாகப் பார்க்கிறான். திரும்பும்போது நொடிப் பொழுதில் கூரையின் மேல் ஏறி நிற்கும் அவரின் வேகம் அவனை பிரமிக்க வைக்கிறது.
மறு நாள் மீண்டும் அங்கு வந்து அவருடன் உரையாடல் நடத்துகிறான். எல்லாம் தெரிந்தவராய், ஒரு துறவியைப் போல பேசும் அவரை முதலில் பிடிக்கவில்லை. ஆனால் அவரின் உருவமும் பேச்சும் செயலும் இவனை தொடர்ந்து வந்து அலைக்கழிக்கிறது. அவரை சாக்ரடிஸ் என்று கேலியாக அழைக்கப்போய் அவ்வாறே தொடர்ந்து விளிக்கிறான். அவரின் உதவியாளராய் தோன்றும் ஜப்பானியப் பெண்ணும் மிகுந்த ஞானம் படைத்தவளாய் தெரிகிறாள்.
சுற்று நடப்பதை உற்றுநோக்கு என்று சாக்ரடிஸ் சொல்லும்போது பார்க்க எதுவுமில்லை என்று சொல்கிறான். பின் அவன் பார்வை கூர்மையடைய தன்னைச் சுற்றி நடப்பதை ஒவ்வொன்றாக, தெளிவாக, துல்லியமாக, அமைதியாக நோக்குகிறான். அந்த காட்சி அனுபவம் அவனைப் புது மனிதனாக்குகிறது.
மனம் அமைதியாய் செய்யும் வேலையில் மட்டும் நிலைத்து, வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் கரையும் அந்த அற்புத அனுபவத்தை உணர்கிறான். தன் சாதனைக்கு இந்த மனநிலைதான் வேண்டும் என்று உணர்ந்துகொள்கிறான். இதை ஒரு உத்தியாக நினைத்துப் பயிற்சி செய்து தன் பயிற்சியாளர் முன் நற்பெயர் பெறுகிறான். இது ஒரு பம்மாத்து வேலை அல்ல, மனப்பயிற்சி என்று முதலில் புரிந்துகொள்ளவில்லை.
பிரிவும் முறிவும்
சாக்ரடிஸுடன் வந்த விவாதத்தில் அவர் தன்னைச் சிறுமைப்படுத்திவிட்டதாக எண்ணி அவரிடமிருந்து விலகி தன் வழியில் செல்கிறான். மது, மங்கை, கேளிக்கை என்ற சுழற்சியில் அதிவேகமாக இரு சக்கர வாகனத்தை ஓட்டி வரும்போது அந்தக் கோர விபத்து நடக்கிறது. வலது காலின் தொடைஎலும்பு நொறுங்குகிறது. உலோகத் தகடு பொருத்தப்பட்டு நடப்பதற்கே சில மாதங்கள் பிடிக்கும் என்ற நிலை வருகிறது. இதில் ஒலிம்பிக்ஸ் முதல் கட்டத் தேர்வு என்பதெல்லாம் சாத்தியமில்லாதது என்று சொல்கிறார்கள்.
மனமுடைந்த டானை சாக்ரடிஸின் ஜப்பானிய உதவியாளரான ஜாய் வந்து பார்க்கிறாள். படுக்கையில் தன்னை சாக்ரடிஸ் வந்து பார்த்ததை உணர்கிறான். மீண்டும் அவரைக் காணச் செல்கிறான்.
வேகமும் கோபமும் வன்முறையில் முடியும் என்று அறிகிறான். வெற்றி தோல்வி முக்கியமல்ல என்று உணர்கிறான். செய்யும் அனுபவத்தில் பெறுவதுதான் ஞானம் என்று உணர்கிறான். பயிற்சி என்பது பெருமளவில் மனதில்தான் என்று உணர்கிறான். உடல் வெறும் கருவிதான் என்றும் தெரிந்துகொள்கிறான். சாக்ரடிஸின் வழிமுறைகள் புரிகிறது. எதையும் வார்த்தைகளில் சொல்லிப் புரிய வைக்காமல் செயல்கள் செய்தும் யோசிக்க வைத்தும் புரிய வைக்கும் முறைகள் புரிகின்றன.
பல எதிர்ப்புகள் தடைகள் மீறி இறுதிச் சுற்றுத் தேர்வுக்குச் செல்கிறான். மும்மடங்கு சிறப்பாகச் செய்து தகுதி பெறுகிறான். தேர்வாளர்கள் ஆச்சரியத்தில் திளைக்கிறார்கள். அந்த நிகழ்வுக்கு முன்னே சாக்ரடிஸ் மாயமாய் மறைந்துபோகிறார். ஆனால், இறுதி சுற்றில் அவர் பேசுவதைப் போல இவனுக்கு கேட்கிறது.
“எங்கு இருக்கிறாய்”
“இங்கு!”
“என்ன நேரம் இப்பொழுது?”
“இப்பொழுது!”
“நீ யார்?”
“இந்த கணம்!”
டான் ஜாயை மணம் முடித்து வாழ்க்கையில் நிறைய சாதிக்கிறார். அவர் பலருக்கு மைண்ட்ஃபுல்னெஸ் பயிற்சி கொடுக்கிறார். விக்டர் சல்வாவின் இயக்கத்தில் வந்த இந்த படத்தை சாதிக்கத் துடிக்கும் அனைத்து இளைஞர்களும் அவசியம் பார்க்க வேண்டும்!


நன்றி - த இந்து

0 comments: