Thursday, October 17, 2013

நிலக்கரி சுரங்க முறைகேட்டில் பிரதமரும் குற்றச்சதி புரிந்தவரே: -சர்ச்சை

நிலக்கரி சுரங்க முறைகேட்டில் பிரதமரும் குற்றச்சதி புரிந்தவரே: முன்னாள் செயலர் பரேக் கருத்தால் சர்ச்சைநிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கில், பிரதமர் மன்மோகன் சிங்கையும் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று நிலக்கரித் துறை முன்னாள் செயலர் பி.சி.பரேக் கருத்து தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில், "நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முடிவுகளில் எந்தத் தவறும் இல்லை. நாங்கள் நேர்மையாகவும் சரியாகவுமே முடிவுகளை எடுத்தோம். இதில் குற்றச்சதி இருப்பதாக சிபிஐ நினைப்பது ஏன் என்றே தெரியவில்லை.


ஆனால், ஒருவேளை குற்றச்சதி இருப்பதாக கருதினால், இதில் பலரும் பல்வேறு வகையில் குற்றச்சதி புரிந்தவர்களே. பிரதிநிதி என்ற வகையில், கே.எம்.பிர்லாவும் ஒரு குற்றச்சதி புரிந்தவர், இந்த விஷயத்தை ஆய்வு செய்து பரிந்துரைத்த வகையில் நானும் குற்றச்சதி புரிந்தவர், இறுதி முடிவு எடுத்தவர் என்றவர் என்ற வகையில் நிலக்கரி சுரங்கத் துறை அமைச்சராகவும் இருந்த பிரதமர் மன்மோகன் சிங்கும் மூன்றாவதாக குற்றச்சதி புரிந்தவரே.


எனவே, நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் குற்றச்சதி இருப்பதாக சிபிஐ கருதினால், பிர்லாவையும் என்னையும் மட்டுமே ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்? பிரதமரையும் சேர்க்க வேண்டுமே. ஒரு குற்றச்சதி நடந்திருந்தால், அதில் சம்பந்தப்பட்ட அனைவருக்குமே பங்கு இருக்கிறது அல்லவா?" என்றார் பரேக்.


பாஜக வலியுறுத்தல்


நிலக்கரித் துறை முன்னாள் செயலர் பி.சி.பரேக் வெளியிட்டுள்ள கருத்து, மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


இந்த வழக்கில், நேர்மையான முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.


இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், "பிரதமர் மற்றும் பிரதமர் அலுவலகம் மீதான நம்பகத்தன்மை மிகவும் முக்கியம். பரேக்கின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பரீசிலிக்க வேண்டும்" என்றார்.


சி.கே.பிர்லா, பரேக் மீது சிபிஐ வழக்குப் பதிவு


முன்னதாக, நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பாக ஆதித்ய பிர்லா குரூப் தலைவர் குமார் மங்கலம் பிர்லா (46), நிலக்கரித் துறை முன்னாள் செயலாளர் பரேக் ஆகியோர் மீது சிபிஐ நேற்று வழக்குப் பதிவு செய்தது.


மும்பை, டெல்லி, ஹைதராபாத், புவனேஸ்வரம் உள்ளிட்ட 6 இடங்களில் பிர்லா நிறுவன அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். 1993 முதல் 2010 வரை நாடு முழுவதும் பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு நிலக்கரிச் சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில் அரசுக்கு ஒரு லட்சத்துக்கு 86 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி (சி.ஏ.ஜி.) சுட்டிக் காட்டினார்.


நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய இந்த முறைகேடு குறித்து உச்ச நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.


நிலக்கரி சுரங்க முறைகேட்டில் ஆதாயம் பெற்ற நிறுவனங்கள் மீதான விசாரணையை வரும் டிசம்பருக்குள் முடிக்க வேண்டும் என்று சிபிஐ-க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த முறைகேடு விவகாரத்தில் காங்கிரஸ் எம்.பி. நவீன் ஜிண்டால், நிலக்கரித் துறை முன்னாள் அமைச்சர் தாசரி நாரயண் ராவ் உள்ளிட்டோர் மீது சிபிஐ ஏற்கனவே வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

THANX - THE TAMIL HINDU

READERS VIEWS

1. மெளனத்தை கலைத்துவிடுங்கள்(மனதுக்குள் குமறி அழுவது தெரிகிறது)பிரதமர் அவர்களே ஒருவர் என்னடா நான்சென்ஸ் என்று கூறுகிறார்(தலைசிறந்த பொருளாதார மேதை கையை கட்டி போட்டுவிட்டார்கள்) இப்படி தேவையா ஒரு பதவி நீங்கள் பின்ன நாளில் ஒரு சுயசரிதம் எழுதுவீர்கள் என்பது என் திண்ணம் அப்பம் தெரியும் இவர்களின் வண்டவாளம் தண்டவாளம் ஏறும் என்பது நிச்சயம்

2  படித்தவன் ஏமாற்றினால் ஐயோ என்று போவன் பாரதி . நிலக்கரி ஊழல் செய்தவர்கள் கதியும் அப்படித்தானே ஆகும்


3  மிக நல்ல பிரதமர். எல்லோரும் ஊழல் செய்த பிறகு, கடைசியாகச் செய்துள்ளார். லாலுவிற்கு தண்டனை கொடுத்தும் அவர் சிறை செல்லவில்லை. அதுபோல் இந்த குற்றச்சாட்டும் விசாரிக்க பல வருடங்களாகும்.


4  என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்று பாரதி பாடியது போல் என்று முடியும் இந்த நிலக்கரி ஊழல் விசாரணை? கலியுகம் முடிவதிர்க்கு முன்?0 comments: