Monday, August 26, 2013

ஆல் ஆண்ட்டீஸ் ! யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்! 40 +

இது பெண்களை, "பிடித்த' நோய். ஆம்... பெண்ணாகப் பிறப்பதே, எலும்பு புரை வருவதற்கான முக்கிய காரணி. பெண்களில், மூன்றில் ஒருவரையும், ஆண்களில், ஐந்தில் ஒருவரையும் எலும்பு புரை தாக்கக் கூடும்'


* "ஆஸ்டியோபோரோசிஸ்' என்னும் எலும்பு புரை நோய் - மறைந்திருந்தே தாக்கும் மர்மம் என்ன?வித்யாவுக்கு பன்னாட்டு நிறுவனத்தில், முக்கிய பொறுப்பில் வேலை; கை கொள்ளா சம்பளம்; பதவியுடன் வரும் அழகு, கம்பீரம், இத்யாதி இத்யாதி, கொஞ்ச நாளாக முதுகுவலி, இடுப்புவலி என்று அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார். வேலை பளுவே காரணம் என்ற சுயமுடிவோடும், வலி மாத்திரைகளின் உதவியோடும், காலம் கடத்திக் கொண்டிருக்கிறார். ஒரு நாள் ஆபீஸ் கிளம்பும் அவசரம்; காலணி நாடாவை கட்ட குனிந்தவர் தான்... சுரீரென்ற வலி நடு முதுகில், முள்ளெலும்பு முறிவாம்.

மருத்துவர் சொன்ன காரணம், "ஆஸ்டியோபோரோசிஸ்' என்று அழைக்கப்படும் எலும்பு புரை நோய். "எனக்கா? 42 வயதிலா?' என, உடைந்து போனார் வித்யா. வாழ்க்கையை, வேலையை, முன்னுரிமைகளை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார். தலைகீழாக புரட்டிப் போட்டதை போன்றதொரு உணர்வு. வித்யாவுக்கு இது ஏன் வந்தது? எப்படி வந்தது? எலும்பு புரை என்றால் என்ன?

* எலும்பு புரை என்றால் என்ன?

எலும்புத் திசு அழித்தலுக்கும், உருவாக்கலுக்கும் இடையே, சமச்சீர்கேடு ஏற்படுவது தான், இந்த நோய் உருவாகுவதற்கு முதற் காரணம். இந்த சமச்சீர் கேட்டால், எலும்புத் தாது அடர்த்தி, மெது மெதுவாக குறைகிறது; எலும்பு வலுவிழக்கிறது. எலும்பு முறிவு ஏற்படுகிறது. எலும்பு புரை நோய் உண்டாகிறது. இந்த மாற்றங்கள் ஏற்படும் காலக்கட்டத்தில், நோய்க்கான அறிகுறிகள் பெரும்பாலும் இருக்காது. இதை, பரவலாக எலும்பு மெலிதல் அல்லது, "ஆஸ்டியோபீனியா' என்றும் கூறுவர்.

* எலும்பு புரையால் என்ன தான் பிரச்னை?
பிரச்னையே, இந்த நோய் நாம் முற்றிலும் எதிர்பாராத தருணத்தில், எலும்பு முறிவு போன்ற சிக்கல்களோடு, அழையா விருந்தாளியாக வருகை தருவது தான். சின்ன சின்ன முறிவுகள் கூட குணமடைய நாளாகலாம்; முழுவதுமாக குணம் அடையாமல் போகலாம். சில எலும்பு முறிவுகள், வாழ்நாள் முழுவதும், அடுத்த வரை சார்ந்து வாழ வேண்டிய நிலைமையை உருவாக்க வல்லது - வித்யாவுக்கு நேர்ந்த மாதிரி. அத்தகைய நிலை, மனச்சிதைவு போன்ற ஏனைய பிற பிரச்னைகளையும் உருவாக்கும்.

* யாருக்கு வரும்? எதனால் வரும்?
இது பெண்களை, "பிடித்த' நோய். ஆம்... பெண்ணாகப் பிறப்பதே, எலும்பு புரை வருவதற்கான முக்கிய காரணி. பெண்களில், மூன்றில் ஒருவரையும், ஆண்களில், ஐந்தில் ஒருவரையும் எலும்பு புரை தாக்கக் கூடும் என, புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
குறிப்பாக பெண்களுக்கு, மாதவிடாய் நின்றலுக்கு பின், நோய் வருவதற்கான ஆபத்தும் அதிகரிக்கிறது. ஆசிய மரபுவழி, குடும்ப வரலாறு, முதுமை, தைராய்டு பிரச்னை, அழற்சி எதிர்ப்பு, மருந்துகள் உட்கொள்ளுதல் ஆகியவை, ஏனைய காரணங்கள்.
மேற்கூறியவை எல்லாம், நம்மால் மாற்ற இயலாத, ஆபத்து காரணிகள். நம்மை அறியாமல், நாம் பின்பற்றும் பழக்க வழக்கங்களும், எலும்பு புரையை உருவாக்க வல்லவை; இதில் முக்கியமானது, உடற்பயிற்சி அற்ற, சூழலில் வாழ்தல் மற்றும் உப்பு, கோலா, காபி, மது போன்றவற்றை, அதிக அளவில் உட்கொள்ளுதல்.

* இதை எப்படி அறியலாம்?

இந்தியாவில், 2.6 கோடி மக்கள் எலும்பு புரை நோயால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இதில், விழிப்புணர்வுடன் மருத்துவரை அணுகி, எலும்பு அழிவு நிலைமையில், அதை கண்டுகொண்டவர்கள் குறைவு தான். 40 வயதை நெருங்கும் பெண்கள், குறிப்பாக மேற்கூறிய ஆபத்து காரணிகள், உங்களுக்கு பொருந்தும் எனில், மருத்துவரை அணுகி, Dexa ஸ்கேன் எனப்படும், எலும்புத்திறம் பரிசோதனை செய்து கொள்ளலாம்.

அரசு மருத்துவக் கல்லூரிகளில், இதற்கான விழிப்புணர்ச்சி முகாம்களும், இலவச ஸ்கேன் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. நீடித்து இருக்கும் வலி, குறிப்பாக கழுத்து, மணிக்கட்டு, முதுகுவலி என்றால், அலட்சியப்படுத்தாமல் உடனே மருத்துவரை அணுகி, பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
எலும்பு புரை என்னும் அரக்கனை, அவனது மறைவிடமான எலும்பு அழிதல் நிலைமையிலேயே கண்டுபிடித்து, அழிக்க வேண்டும். எலும்பு முறிவு, உயரக்குறைவு போன்றவை வருமாயின், நோய் உறுதித் தன்மையை அடைந்துவிட்டது என்று பொருள்.

* எப்படி தடுக்கலாம்? எவ்வாறு குணப்படுத்தலாம்?
ஆரோக்கியமான உணவு முறைகள், அளவான உடற்பயிற்சி கொண்டு, எலும்பு புரை உருவாவதை எளிதில் தடுக்கலாம். கால்சியம் கூடிய உணவு வகைகளை, (தயிர்,மோர், பால், tofu, கேழ்வரகு) அதிகமாக உண்ணவேண்டும். கால்சியத்தை உடலில் பிடித்து வைக்க வைட்டமின் "ஈ' சத்து தேவை. நம் உடல், இதை இளஞ்சூரிய வெப்பத்தில் மட்டுமே உற்பத்தி செய்யும். அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் நடைபயிற்சி, நடைபயணம் போன்றவற்றை மேற்கொள்ளலாம். கால்சியத்தை உடலில் இருந்து வெளியேற்ற ஆற்றல் கொண்ட உப்பு, கோலா, காபி, மது போன்றவற்றை அதிக அளவில் உட்கொள்வதை தவிர்க்கலாம்.

உறுதி செய்யப்பட்ட எலும்பு புரை நோய்க்கு, நாளுக்கு ஒரு மாத்திரை, ஆண்டுக்கு ஒரே ஒரு ஊசி என்று பல விதமான சிகிச்சை முறைகள் உள்ளன. மருத்துவரை அணுகி, தங்கள் வாழ்க்கை முறைக்கு பொருந்தும் வழி முறையை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். எலும்பு புரையை பொறுத்தவரை, வரும் முன் காப்பதே சால சிறந்தது.

டாக்டர் உமா மகேஸ்வரி,

ஹரிணி, குரோம்பேட்டை, சென்னை: என் வயது 18, என் இடது பக்க மார்பு, அசையும்போது வலிக்கிறது. உருவாகும் வலி, நெஞ்சுக்கும், கைக்கும் பரவுகிறது. மூச்சு இழுத்து விடும்போதும் வலிக்கிறது. இதற்கு காரணம் என்ன?


 
இள வயதில் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த வலிக்கு, தசையே காரணம். காய்ச்சல், இருமல், வேறு தொற்றுகள், ஆழ்ந்து மூச்சு விடும்போது, மார்பில் வலி ஆகியவை, நுரையீரல் மேல் புறத்தில் வீக்கம் இருப்பதற்கான அறிகுறிகளாக இருக்கலாம். இது தானாகவே சரியாகக் கூடியது. இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு வலி தொடர்ந்தால், மருத்துவரை அணுகவும்.


thanx-dinamalar

0 comments: