Showing posts with label மருத்துவம். Show all posts
Showing posts with label மருத்துவம். Show all posts

Wednesday, October 14, 2015

பதின் பருவம் புதிர் பருவமா?- என்னப்பா, இப்படிப் பண்றீங்களே?-டாக்டர் ஆ. காட்சன்

ஓவியம்: முத்து
ஓவியம்: முத்து
புராகிரஸ் ரிப்போர்ட்டில் அப்பாவின் கையெழுத்தைத் தானே போடுவது, ‘ஹேப்பி வயசுக்கு வந்த டே' என்று வகுப்புத் தோழிக்குப் பூ கொடுப்பது, பதின்பருவக் காதலியை எப்படியாவது திருப்திப்படுத்த நினைப்பது... திரைப்படங்களில் காட்டப்படுவது போல, இப்படிக் குழந்தையாகவும் அல்லாமல் வளர்ந்தவராகவும் இல்லாமல் இளமைத் துடிப்பு, குறுகுறுப்பு, கட்டுக்கடங்காத ஆர்வம் எனப் பல்வேறு உணர்வுகள் நிரம்பியதுதான் இளமைக் காலம்.
நம் அனைவரையும் கதாநாயகர்களாகவும், கதாநாயகிகளாகவும் நினைத்துப் பார்க்கச் செய்கிற இந்த வயசுதான் எவ்வளவு அழகானது! இந்த வயதில்தான் ஒவ்வொருவருக்கும் எத்தனை கனவுகள், எத்தனை லட்சியங்கள். இனிமையான நினைவுகளோ, கசப்பான அனுபவங்களோ... இரண்டுமே நம் மனநலத்தைத் தீர்மானிக்கும் சக்தி படைத்தவை.
விவகாரமான பருவமா?
விடலைப்பருவம் விளையாட்டான பருவம் மட்டுமல்ல... கொஞ்சம் விவகாரமான பருவமும்தான்! சரியான நேரத்தில் மன மற்றும் உடல்ரீதியான வளர்ச்சிக்கு ஆதரவு கொடுக்கும் தோள், ஒரு கட்டாயத் தேவை. இதைக் குழந்தைப் பருவம் என்றும் சொல்ல முடியாது, விவரம் அறிந்த பருவம் என்றும் எடுத்துக்கொள்ளவும் இயலாது. அதனால்தான் இந்த வயதை இரண்டும் கெட்டான் பருவம் எனச் சொன்னார்கள்.
இந்த வயதின் ஆரம்பக் கட்டமே, உடல் வளர்ச்சியின் வேகம் அதிகரிப்பதுதான். ஆண்களைவிட பெண்களுக்கு இந்த வயதில் வளர்ச்சியின் வேகம் அதிகம். ஆண்கள் அரும்பு மீசையைப் பெருமையுடன் தடவிப் பார்ப்பதிலும், பெண்பிள்ளைகள் கண்ணாடி முன்பு அதிக நேரத்தைச் செலவிடுவதிலும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல. சிலருக்கு இந்த வளர்ச்சிகள் இதமாக இருக்கும். சிலருக்கு அதுவே இடறலாகவும் இருக்கலாம்.
குழந்தைகள்தான்
இந்த வயதில் உடல் வளர்ச்சியைக் குறித்து எழும் பல சந்தேகங்களுக்குத் தெளிவான விளக்கங்கள் தேவை. அவை தேவையற்ற பயங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். நண்பர்களின் தவறான கருத்துகள், குழப்பங்களை அதிகரிக்கவே செய்யும்.
நண்பர்கள், பெற்றோர் தரும் சுதந்திரம், எதிர்பாலினத்தின் மீதான ஈர்ப்பு ஆகிய மூன்று விஷயங்களுக்கு மனம் முக்கிய இடம்கொடுக்கும். அதேநேரம் விஷயங்களைப் பகுத்து ஆராயும் தன்மை, தனிமனித உறவுகளை மேம்படுத்தும் தன்மை, சமூகத்தின் மீது அக்கறை, தனிப்பட்ட திறமைகள், தலைமைப் பண்புகள் எனப் பல நல்ல குணங்களும் வெளிப்பட ஆரம்பிக்கும்.
பிடிவாதம், எதிர்த்துப் பேசுதல், நண்பர்கள் சொல்வதுதான் வேதவாக்கு என நினைப்பது உள்ளிட்ட பல மாறுதல்கள் காணப்பட்டாலும், இவர்கள் இன்னமும் பெற்றோரின் கவனிப்பு தேவைப்படும் குழந்தைகள்தான்.
புரிதல் அவசியம்
விடலைப் பருவத்தில் வேகத்தைத் தீர்மானிக்கும் மூளைப் பகுதியின் வளர்ச்சி, கட்டுப்பாடுகளை விதிக்கும் மூளைப் பகுதியின் வளர்ச்சியைவிட முன்னதாகவே முதிர்ச்சி பெற்றிருக்கும். அதனால்தான் இவர்களுடைய செயல்பாடுகள் சில வேளைகளில் கட்டுக்கடங்காமல், பிறர் முகம் கோணும் அளவுக்கு மாறிவிடுகின்றன.
பல மனநோய்களின் அறிகுறிகள் வெளிப்படும் பருவம் இதுதான். இந்த வயதில் காணப்படும் மாற்றங்களில் பெற்றோர், சமூகம் மற்றும் கல்வியின் பங்குக்குச் சமமாக மரபணுக்களும், முக்கிய அங்கம் வகிக்கின்றன. பதின் பருவத்தினரின் சாதாரண மாற்றங்களைப் பற்றித் தெரிந்துகொண்டால்தான், அவர்களிடம் உள்ள அசாதாரண மாற்றங்களையும் தேவைகளையும் அறிந்துகொள்ள முடியும். அதற்கு பதின் பருவத்தினருடன் தொடர்பில் உள்ள அனைவருடைய புரிதலும் மேம்பட்டிருக்க வேண்டும்.
வளரிளம் பருவம் சில பிரச்சினைகள்
l மற்றவர்களிடம் அனுசரித்துப்போவதில் உள்ள மாற்றங்கள்,
l எதிர்பாலின ஈர்ப்பு, காதல், பாலியல் தடுமாற்றங்கள், தவறான நம்பிக்கைகள்
l தற்கொலை எண்ணங்கள், முயற்சிகள்
l போதைப் பொருள் பழக்கம்
l படிப்பில் நாட்டமின்மை, பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்வதைத் தவிர்த்தல்
l மன அழுத்தம்
l சமூக வலைதளங்களின் தாக்கம்
l சினிமா தாக்கம்
l சமூக விரோதச் செயல்பாடுகள்
l ஆழ்மனப் பிரச்சினைகளால் உடலில் ஏற்படும் பாதிப்புகள்
l வளரிளம் பெண்களின் தனிப்பட்ட பிரச்சினைகள்
(அடுத்த வாரம் தனித்தன்மையா? தடம் மாறுதலா? )
கட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர்
தொடர்புக்கு: [email protected]

நன்றி-தஹிந்து

Thursday, September 03, 2015

தலைச்சுற்றல் ஏற்படுவது ஏன்? - டாக்டர் கு.கணேசன்

ஓவியம்: வெங்கி
ஓவியம்: வெங்கி
நடைமுறையில் ஒருவருக்குக் கிறுகிறுப்பு, தலைச்சுற்றல் வந்துவிட்டால், உடனே அது மூளை தொடர்பான நரம்புக் கோளாறு என்றுதான் பலரும் நினைக்கிறார்கள், அப்படியில்லை. பெரும்பாலான நேரங்களில் இந்தப் பிரச்சினைகளுக்குக் காதுதான் முக்கியக் காரணமாக இருக்கும். ஏனென்றால், கேட்பதற்கு மட்டுமல்ல காது! உடலைச் சமநிலைப்படுத்த உதவும் உறுப்புகளில் முக்கியமானதும் காதுதான்!
காது கேட்பது எப்படி?
காதில் வெளிக்காது, நடுக்காது, உள்காது என்று மூன்று பகுதிகள் உள்ளன. வெளிக்காது ஒலி அலைகளை உள்வாங்கிக் காதுக்குள் கொண்டு செல்கிறது. நடுக்காதில் உள்ள செவிப்பறை அந்த ஒலி அலைகளை ஏற்றுக்கொள்ளும்போது அதிர்கிறது. இந்த அதிர்வுகள் செவிப்பறையை ஒட்டியுள்ள சுத்தி, பட்டடை, அங்கவடி எனும் மூன்று எலும்புகள் மூலம் உள்காதுக்குள் நுழைந்து, அங்கு நத்தை வடிவில் உள்ள ‘காக்ளியா'வை (Cochlea) அடைகின்றன.
அங்கு பெரிலிம்ப் (Perilymph), எண்டோலிம்ப் (Endolymph) என்று இரு வகைத் திரவங்கள் உள்ளன. இதில் எண்டோலிம்ப் திரவத்தின் மீது நடுக்காதின் அங்கவடி எலும்பு பிஸ்டன் போல் இயங்குவதால், இங்கேயும் அதிர்வுகள் உண்டாகின்றன. அப்போது இந்தத் திரவங்களில் மிதந்துகொண்டிருக்கும் இழை அணுக்கள் (Hair cells) தூண்டப்படுகின்றன. உடனே, அங்கு மின்னலைகள் உருவாகி, செவி நரம்பு வழியாக மூளைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. பிறகுதான் நாம் கேட்பது பேச்சா, பாட்டா, இசையா, இரைச்சலா என்று வகை பிரித்துச் சொல்கிறது, மூளை.
சமநிலை காவலன்
உள்காதில், கேட்கும் திறனைத் தருகிற காக்ளியாவோடு உடலைச் சமநிலைப்படுத்துகிற லேப்ரிந்த் (Labyrinth) என்னும் பகுதியும் உள்ளது. லேப்ரிந்தின் ஒரு பக்கத்தில் காக்ளியாவும், இன்னொரு பக்கத்தில் அரைவட்டக் குழல்களும் (Semicircular canals) இருக்கின்றன. லேப்ரிந்த் என்பது எலும்பு லேப்ரிந்த், படல லேப்ரிந்த் என்று இரண்டுவிதமாக இருக்கிறது.
மேலும் கீழும் உள்ள எலும்பு லேப்ரிந்தில் பெரிலிம்ப் திரவமும், நடுவில் உள்ள படல லேப்ரிந்தில் எண்டோலிம்ப் திரவமும் உள்ளன. நாம் நடக்கும்போது, எழுந்திருக்கும்போது, ஓடும்போது, தலையைத் திருப்பும்போது படல லேப்ரிந்தில் உள்ள எண்டோலிம்ப் திரவம் அசைகிறது. இந்த அசைவின் வேகம், விகிதம், திசை, பரப்பு ஆகியவற்றைக் கொண்டு அரைவட்டக்குழல்களில் வெவ்வேறு குறியீடுகள் உண்டாகும்.
இவற்றை இழை அணுக்கள் கிரகித்துச் செவிநரம்பின் வழியாக மூளைக்கு எடுத்துச் செல்லும். இந்தத் தகவல்களைக் கொண்டு நாம் நிற்கிறோமா, நடக்கிறோமா, தலையைத் திருப்புகிறோமா என்று நம் மூளை தெரிந்துகொள்ளும். அதற்கேற்ப மூளை செயல்பட்டு உடல் தசைகளுக்கு ஆணை பிறப்பித்து, உடலைச் சமநிலைப்படுத்துகிறது. இந்தச் சங்கிலிவினைச் செயல்பாட்டில் ஏதாவது குறை ஏற்படுமானால், காதிலிருந்து தவறான தகவல்கள் மூளைக்குச் செல்லும். அப்போது மூளை குழம்பிவிடும். இதனால்தான் தலைச்சுற்றல் ஏற்படுகிறது.
தலைச்சுற்றல் என்பது என்ன?
கிறுகிறுப்பு (Dizziness) என்பது மிதமான தலைச்சுற்றல். கிறுகிறுப்புக்கு அடுத்த நிலைதான் உண்மையான தலைச்சுற்றல். காதுப் பிரச்சினை காரணமாக உடல் சமநிலையை இழக்கும்போது, நம் கட்டுப்பாட்டில் இல்லாமல் தலை தனியாகச் சுற்றுவதுபோல் தோன்றும். அல்லது சுற்றியுள்ள பொருட்கள் சுற்றுவதுபோல் தோன்றும். இந்த வகைத் தலைச்சுற்றலை ஆங்கில மருத்துவத்தில் ‘வெர்டைகோ’ (Vertigo) என்கிறார்கள்.
இது முப்பது வயதுக்கு மேல் எவருக்கும் வரலாம் என்றாலும், 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் நூறு பேரில் பத்து பேருக்குக் கட்டாயம் உள்ளது. ஆண்களைவிட பெண்களுக்குத்தான் தலைச்சுற்றல் தொல்லை அதிகம். என்றாலும், இந்த மாதிரித் தலைச்சுற்றல் காரணமாக உயிருக்கு ஆபத்து ஒன்றும் ஏற்பட்டுவிடாது என்பது ஓர் ஆறுதல்.
மூன்று வகை
மிதமான வகை: இந்த வகை தலைச்சுற்றல் உள்ளவர்களுக்குக் குமட்டலும் தலைச்சுற்றலும் சிறிது நேரம் இருக்கும். படுத்துக்கொண்டு சில மணி நேரம் ஓய்வு எடுத்துக்கொண்டால், இந்த அறிகுறிகள் தானாகவே மறைந்துவிடும்.
மத்திய வகை: இவர்களுக்குத் தலைச்சுற்றலோடு வாந்தியும் இருக்கும். படுத்து ஓய்வு எடுத்துக்கொண்டால் இவை சரியாகிவிடும்.
தீவிர வகை: இந்த வகைதான் மோசமானது. தலைச்சுற்றலும் அதிகமாக இருக்கும், வாந்தியும் மோசமாக இருக்கும். தலையை அசைத்தாலே இந்த இரண்டும் அதிகப்படும். நடந்தால் மயங்கிவிடுவோமோ என்ற அச்ச உணர்வை ஏற்படுத்தும்.
மினியர் நோய்
உள்காதில் எண்டோலிம்ப் திரவம் அளவுக்கு அதிகமாகச் சேருவதால் காதுக்குள் அழுத்தம் அதிகரித்துத் தலைசுற்றல் வருவது ஒரு வகை. இது தூங்கும்போதுகூட வரும். இந்த வகை தலைசுற்றல் உடனே குறையாது; இரண்டு நாட்களுக்கு மேல்கூட நீடிக்கும். குமட்டலும் வாந்தியும் அதிகமாக இருக்கும். எப்போதும் படுக்கையிலேயே இருக்க வேண்டும் என்பது போன்ற உணர்வு இருக்கும். காதில் இரைச்சல் கேட்கும். காது மந்தமாகக் கேட்கும். இதற்கு ‘மினியர் நோய்’ (Meniere’s disease) என்று பெயர்.
ஒரு திசை தலைச்சுற்றல்
சிலருக்கு ஏதாவது ஒரு பக்கமாகக் கழுத்தைத் திருப்பும்போது, மேல்நோக்கிப் பார்க்கும்போது, குனியும்போது, நிமிரும்போது தலை சுற்றும். இதற்கு ‘ஒரு திசை தலைச்சுற்றல்’ ( Benign Paroxysmal Positional Vertigo) என்று பெயர். இதன் அறிகுறிகள் மினியர் நோய்க்கு எதிராக இருக்கும். குறிப்பாக, இந்த வகைத் தலைச்சுற்றலின்போது காதில் இரைச்சல் இருக்காது. காது கேட்பதில் பிரச்சினை இருக்காது. தலைசுற்றலுக்காகச் சிகிச்சை பெற வருகிறவர்களில், பெரும்போலோருக்கு இந்த வகை தலைசுற்றல்தான் முக்கியக் காரணமாக இருக்கும்.
உட்செவி நரம்புப் பிரச்சினை
ஜலதோஷம் பிடிக்கும்போது உட்செவி நரம்பில் வைரஸ் கிருமிகள் பாதிக்குமானால், நரம்பு வீங்கித் தலைச்சுற்றலை ஏற்படுத்தும். லேப்ரிந்த் பகுதியில் வீக்கம் ஏற்பட்டாலும், உட்செவியில் கட்டிகள் தோன்றினாலும் தலைச்சுற்றல் உண்டாகும். நடுக்காதில் சீழ் வைக்கும்போது, வெளிக்காதில் அழுக்கு சேர்ந்து அடைக்கும்போது எனப் பலவிதக் காதுப் பிரச்சினைகளால் தலைச்சுற்றல் ஏற்படலாம்.
இதர காரணங்கள்
பொதுவாகக் காதுப் பிரச்சினை காரணமாக 80 சதவீதம் பேருக்குத் தலைச்சுற்றல் ஏற்படுகிறது என்றால், மீதி 20 சதவீதம் பேருக்கு மற்றக் காரணங்களால் தலைச்சுற்றல் ஏற்படுகிறது. ஒற்றைத் தலைவலி, உயர் ரத்தஅழுத்தம், குறை ரத்தஅழுத்தம், மிகை ரத்தக்கொழுப்பு, ரத்தச் சோகை, ஊட்டச்சத்துக் குறைவு, கட்டுப்படாத நீரிழிவு நோய், தாழ் சர்க்கரை, கழுத்து எலும்பில் பிரச்சினை, தைராய்டு பிரச்சினை, கர்ப்பத்தின் ஆரம்பக் கட்டம், இதயத்துடிப்புக் கோளாறுகள், மருந்துகளின் பக்கவிளைவு, பார்வைக் கோளாறு, மன அழுத்தம், உறக்கமின்மை, மலத்தில் ரத்தம் போவது, தலைக்காயங்கள் என்று பல காரணங்களால் தலைச்சுற்றல் ஏற்படுவதுண்டு.
பரிசோதனைகள் என்ன?
ஒருவருக்கு முதல்முறையாகத் தலைச்சுற்றல் ஏற்படும்போது முழு உடல் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. அப்போதுதான் காரணம் தெரிந்து சிகிச்சை செய்துகொள்ளமுடியும். மேலும் தலைச்சுற்றல் என்பது பலருக்கும் மீண்டும் மீண்டும் வருகிற தொல்லை என்பதால், ஒருமுறை காரணத்தைக் கண்டுபிடித்துவிட்டால், அடுத்தமுறை இது தொல்லை தரும்போது பயப்படாமல் இருக்கலாம்.
பொதுவாக, தலைச்சுற்றல் ஏற்பட்ட நபருக்கு உட்கார்ந்த நிலையிலும் படுத்த நிலையிலும் ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்படும். முழு ரத்தப் பரிசோதனை உதவக்கூடும். ஆடியோகிராம், சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் உள்ளிட்ட காதுக்கான அனைத்துப் பரிசோதனைகளும் தேவைப்படும். சில வேளைகளில் கழுத்தெலும்பு எக்ஸ்ரே, கண் பரிசோதனை, தைராய்டு பரிசோதனை மற்றும் இதயத்துக்கான பரிசோதனைகளும் தேவைப்படும்.
சிகிச்சை என்ன?
தலைச்சுற்றலுக்குப் பலதரப்பட்ட காரணங்கள் உள்ளதால், முதலில் அடிப்படைக் காரணத்துக்குச் சிகிச்சை பெற வேண்டும். அப்போதுதான் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும். காது தொடர்பான தலைச்சுற்றல் பிரச்சினையைப் போக்க, இப்போது நல்ல மருந்துகள் உள்ளன. இவை காதின் சமநிலை உறுப்புக்கு ஓய்வு கொடுப்பதால், தலைச்சுற்றல் சரியாகிறது. சில மருந்துகள் உட்செவிக்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும். இதனாலும் தலைச்சுற்றல் கட்டுப்படும்.
மினியர் நோய்க்குக் காதின் செவிப்பறையில் ஸ்டீராய்டு ஊசி மருந்து அல்லது ஜென்டாமைசின் ஊசி மருந்தைச் செலுத்திக் குணப்படுத்தும் முறை நடைமுறையில் உள்ளது. இப்போது இதைக் குணப்படுத்துவதற்கு நல்ல மாத்திரைகள் வந்துள்ளன. இதில் குணமடையாதவர்களுக்கு அறுவைச் சிகிச்சை உதவுகிறது.
பயிற்சிகள் உதவும்
இங்கு ஒரு விஷயத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ‘ஒரு திசை தலைச்சுற்றல்’ உள்ளவர்களுக்கு மாத்திரை மருந்துகளால் மட்டுமே தலைச்சுற்றலைத் தடுக்க முடியாது. குறிப்பிட்ட உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டியதும் முக்கியம்.
படுத்திருக்கும்போது கண்களைச் சுழற்றுதல், உட்கார்ந்துகொண்டு கழுத்துத் தசைகளுக்கும் தோள்பட்டைத் தசைகளுக்கும் பயிற்சி அளித்தல், தலையை முன்னும் பின்னும் வளைத்தல், பக்கவாட்டில் வளைத்தல், நடந்துகொண்டே பந்தைப் பிடித்தல் போன்ற பல பயிற்சிகள் இவ்வகை தலைச்சுற்றலைத் தடுக்க உதவுகின்றன. இவற்றைக் காது மூக்கு - தொண்டை மருத்துவர் மற்றும் இயன்முறை மருத்துவர் ஆலோசனையுடன் முறையாகவும் சரியாகவும் செய்துவந்தால், தலைச்சுற்றல் விடைபெற்றுக்கொள்வது உறுதி.
தடுப்பது எப்படி?
l உணவில் உப்பைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
l அதிகக் கொழுப்புள்ள உணவைத் தவிர்க்க வேண்டும்.
l சரியான அளவுக்கு ஓய்வும் உறக்கமும் அவசியம்.
l ரத்த அழுத்தம், ரத்தக் கொழுப்பு மற்றும் ரத்தச் சர்க்கரை அளவுகளை நல்ல கட்டுப்பாட்டுக்குள் வைத்திருங்கள்.
l புகைபிடிக்காதீர்கள்.
l மது அருந்தாதீர்கள்.
l போதை மாத்திரைகளைச் சாப்பிடாதீர்கள்.
l தலை சுற்றுவதுபோல் உணர்ந்தால், உடனே தரையில் படுத்துக்கொள்ளுங்கள். கால்களைச் சற்று உயரமாக வைத்துக்கொள்ளுங்கள்.
l படுக்கமுடியாத நிலைமைகளில் தரையில் உட்கார்ந்துகொண்டு, உடலை முன்பக்கமாகச் சாய்த்து, முழங்கால்களை மடக்கி, கால்களுக்கு இடையில் தலையை வைத்துக்கொள்ளுங்கள்.
l படுக்கையை விட்டு எழுந்திருக்கும்போது நேராக எழுந்திருக்காமல், பக்கவாட்டில் முதலில் படுத்துக்கொண்டு அந்தப் பக்கமாகவே எழுந்திருங்கள்.
l எழுந்தவுடனேயே நடந்து செல்ல வேண்டாம்.
l படுக்கையில் சிறிது நேரம் உட்கார்ந்த பிறகு நடந்தால், தலைசுற்றல் ஏற்படாது.
l படுக்கையிலிருந்து எழுந்ததும் எதையாவது எடுப்பதற்குக் கீழ்நோக்கிக் குனியவோ, சட்டென்று திரும்பவோ முயற்சிக்காதீர்கள்.
l தலைக்குத் தலையணை வைக்காதீர்கள்.
l உடலின் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு உடனடியாக மாறாதீர்கள். உதாரணத்துக்கு, புரண்டு படுக்கும்போது திடீரெனப் புரளாதீர்கள்.
l அடிக்கடி தலைச்சுற்றல் பிரச்சினை உள்ளவர்கள், வீட்டுக் கழிப்பறை, குளியலறை போன்ற இடங்களில் பிடிமானக் கம்பிகளைச் சுவற்றில் பதித்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் தலைச்சுற்றல் வரும்போது இந்தக் கம்பிகளைப் பிடித்துக்கொள்வதன் மூலம் கீழே விழுவதைத் தடுக்கமுடியும்.
l வீட்டிலும், குளியலறை மற்றும் கழிப்பறைகளிலும் வழுக்காத தரைவிரிப்புகளையே பயன்படுத்துங்கள்.
l இரவு விளக்குகளைப் பயன்படுத்துங்கள்.
l அடிக்கடி மாடிப்படிகளில் ஏறி, இறங்குவதைக் குறைத்துக்கொள்ளுங்கள்.
l ரோலர் கோஸ்டர் போன்ற ராட்டினங்களில் சுற்றுவதைத் தவிருங்கள்.
l மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மருந்து சாப்பிடாதீர்கள். அப்படிச் சாப்பிட வேண்டிய அவசியம் ஏற்பட்டால், மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டுச் சாப்பிடுங்கள்.
l மன அழுத்தத்தைத் தவிருங்கள்.
l வாகனத்தை ஓட்டாதீர்கள். ஆபத்தான இயந்திரங்களை இயக்காதீர்கள்.
l ஆண்டுக்கு ஒருமுறை காதுப் பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.
தொடர்புக்கு: [email protected]

Tuesday, August 11, 2015

ரத்தச் சர்க்கரை குறைவது ஏன்? - மருத்துவக்கட்டுரை

ஓவியம்: வெங்கி
ஓவியம்: வெங்கி
‘வீட்டுக்கு வீடு வாசப்படி’ என்று சொல்வதற்குப் பதிலாக இனி, ‘வீட்டுக்கு வீடு ஒரு நீரிழிவு நோயாளி’ என்று சொல்லும் அளவுக்கு உலகில் நீரிழிவு உள்ளவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே போகிறது. இன்றைய நிலவரப்படி இந்தியாவில் ஏழு கோடிப் பேருக்கு நீரிழிவு உள்ளது. தமிழ்நாட்டில் 90 லட்சம் பேர் இந்த நோயால் அவதிப்படுகிறார்கள்.
இது குழந்தைகள் முதல் முதியோர்வரை எல்லா வயதினரையும் பாதிக்கிற நோயாகவும் உள்ளது. இந்த நோய்க்குச் சிகிச்சை எடுத்துவருபவர்கள், அவ்வப்போது சந்திக்கிற பிரச்சினைகளில் முக்கியமானது, தாழ்சர்க்கரை மயக்கம் (Hypoglycaemic Coma). இன்சுலினை மட்டுமே நம்பியுள்ள டைப் 1 நீரிழிவு நோய் உள்ளவர்களுக்குச் சராசரியாக ஆண்டுக்கு ஒருமுறையாவது தாழ்சர்க்கரை ஏற்பட்டுவிடுகிறது.
என்ன காரணம்?
ஆரோக்கியமாக உள்ளவர்களுக்கு, ரத்தச் சர்க்கரை சாதாரணமாக 120 முதல் 140 மி.கி./ டெ.லி. (ஒரு டெசிலிட்டரில் உள்ள மில்லி கிராம் அளவு) வரை இருக்கும். இவர்களுக்கு இயல்பாகச் சுரக்கிற இன்சுலின், இந்த அளவைச் சரியாக வைத்துக்கொள்கிறது. அப்படியே இன்சுலின் குறைவாக இருந்தாலும், ரத்தத்தில் குளுக்ககான் (glucagon) ஹார்மோன் சுரந்து, ரத்தச் சர்க்கரையை அதிகப்படுத்தி, நிலைமையைச் சரிசெய்துவிடும்.
ஆனால், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு நிலைமை வேறு. இவர்கள் உணவுக் கட்டுப்பாடு, மாத்திரை, இன்சுலின் ஊசி ஆகியவற்றால்தான் ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்த முடியும். இவ்வாறு ரத்தச் சர்க்கரையைச் சரியான கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவர முயற்சிக்கும்போது, இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றில் தவறு ஏற்பட்டாலும், ரத்தச் சர்க்கரை ரொம்பவே குறைந்துவிடும் அல்லது அதிகமாகிவிடும். அப்போது மயக்கம் வரும். இந்த இருவகை மயக்கங்களில் தாழ்சர்க்கரை மயக்கம் மோசமானது. உயிருக்கு ஆபத்தை உடனே வரவழைப்பது.
எது தாழ்சர்க்கரை?
ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு 70 மி.கி./டெ.லி.க்குக் கீழ் குறையும் நிலைமையை ‘தாழ்சர்க்கரை’ (Hypoglycaemia) என்கிறோம். ஒருவருக்கு இந்த அளவு 50 மி.கி./டெ.லி.க்குக் கீழ் குறையும்போது அவருக்கு மயக்கம் வருகிறது. இதை ‘தாழ்சர்க்கரை மயக்கம்' என்கிறோம். என்றாலும், சொல்லிவைத்ததுபோல் எல்லோருக்கும் இந்த அளவு பொருந்தாது. ஒருவருக்கு ரத்தச் சர்க்கரை 70 மி.கி./டெ.லி. இருந்தாலே மயக்கம் வரலாம். சிலருக்கு 50 மி.கி./டெ.லி. இருக்கும்போதும் மயக்கம் வராமல், எப்போதும்போல் இருக்கலாம். இது அவரவர் உடல் இயல்பைப் பொறுத்தது.
எப்படி வருகிறது?
சாதாரணமாக, நமது மூளை செயல்படுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு 5 - 6 கிராம் குளுக்கோஸ் தேவை. தொடர்ந்து மூன்று நிமிடங்களுக்கு குளுக்கோஸ் மூளைக்குச் செல்லவில்லை என்றால், மூளை செயலிழந்துவிடும். வழக்கமாக, ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு 100 மி.கி./டெ.லி.க்குக் குறையாமல் இருந்தால், மூளைக்குத் தேவையான குளுக்கோஸ் சரியான அளவில் கிடைத்துக்கொண்டிருக்கும்.
ஆனால், ரத்தத்தில் இந்த அளவு 50 மி.கி./டெ.லி.க்குக் கீழ் குறையும்போது மூளைக்குக் குளுக்கோஸ் கிடைப்பது குறைந்துவிடும். இதன் விளைவாக, மூளை செல்கள், மூளை நரம்புகள் குறிப்பாக, தானியங்கி நரம்புகள் - வேலை செய்யாமல் போகும். மேலும், ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்போது, அதை சரி செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிற குளுக்ககான் ஹார்மோன் அப்போது செயல்படுவதில்லை. இதனால், உடலானது ரத்தச் சர்க்கரையைத் தானாக அதிகப்படுத்திக்கொள்ள வழி இல்லை. ஆகவேதான், இந்த மயக்கம் ஏற்படுகிறது.
அறிகுறிகள் என்ன?
ஆரம்ப அறிகுறிகள
ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு 60 மி.கி./டெ.லி.க்குக் கீழ் குறையும்போது இந்த அறிகுறிகள் தென்படலாம். இவற்றை முன்னெச்சரிக்கை அறிகுறிகள் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.
உடல் அதிகமாக வியர்ப்பது.
உடல் குளிர்ச்சியாக இருப்பது.
உடல் தளர்ச்சி.
படபடப்பு.
உடல் நடுக்கம்.
அதிகப் பசி.
தலைவலி.
தலைசுற்றல்.
பார்வை குறைவது.
இதயத் துடிப்பு அதிகரிப்பது.
அடுத்த கட்ட அறிகுறிகள்
ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு 40 மி.கி./டெ.லி.க்குக் கீழ் குறையும்போது ஏற்படும் அறிகுறிகள்.
l பேச்சு குழறுதல்.
l மனக் குழப்பம்.
l அரை மயக்கம் (Semiconsciousness).
இறுதி கட்ட அறிகுறிகள்
l வலிப்பு வருவது.
l முழு மயக்கம் (Unconsciousness).
l 'கோமா' (Coma) எனும் ஆழ்நிலை மயக்கம்.
முழு மயக்கம் ஏற்பட்டால்?
முழு மயக்கத்தில் உள்ளவருக்கு மேற்சொன்ன முதலுதவிகளைச் செய்ய முடியாது. அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து, குளுக்கோஸ் செலுத்த வேண்டும். தேவைப்பட்டால் குளுக்ககான் ஊசி போடப்பட வேண்டும்.
டைப் 1 நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு அடிக்கடி தாழ்சர்க்கரை மயக்கம் வரலாம். இவர்கள் வீட்டிலேயே குளுக்ககான் ஊசியைப் போட்டுக்கொள்ளலாம். டாக்டர் ஆலோசனைப்படி அளவு அறிந்து, இன்சுலின் சிரிஞ்சிலேயே இந்த மருந்தை எடுத்து, வீட்டில் யார் வேண்டுமானாலும் அவருக்குப் போட்டுவிடலாம்.
எச்சரிக்கையாக இருக்க வேண்டியவர்கள்!
வாகனம் ஓட்டுபவர்கள், இயந்திரங்களில் வேலை செய்பவர்கள், உயரமான இடங்களில் வேலை செய்பவர்கள், தண்ணீருக்கு அருகில் வேலை செய்பவர்கள் போன்றோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவர்களுக்குத் தாழ் சர்க்கரை ஏற்பட்டால், விபத்து ஏற்படவும், உயிருக்கு ஆபத்து உண்டாகவும் வாய்ப்பு அதிகம்.
குழந்தைக்கு ரத்தச் சர்க்கரை குறைந்தால்?
டைப் 1 நீரிழிவு நோய் குழந்தைகளுக்குத்தான் அதிகம். இவர்களுக்குத் தாழ்சர்க்கரை மயக்கம் ஏற்படும் வாய்ப்பும் அதிகம். குழந்தைக்கு ரத்தச் சர்க்கரை குறைய ஆரம்பித்துவிட்டால், குழந்தையின் நடத்தையில் மாறுதல்கள் தெரியும். அதிகம் பசிக்கும், வியர்க்கும், படபடப்பு வரும், நாக்கு உலரும், உடல் நடுங்கும், பார்வை குறையும். குறிப்பாக, குழந்தையின் பேச்சு குழறும்; குழப்பமான மனநிலையில் இருக்கும். இன்னும் சொல்லப்போனால், குடிபோதையில் நடப்பது போன்ற நிலையில் இருக்கும்; மயக்கம் வரும்; சில வேளைகளில் வலிப்பு வரலாம்.
பொதுவாக, மயக்க நிலையில் உள்ளவர்களுக்கு வாய்வழியாக எதுவும் கொடுக்கக் கூடாது; அப்படிக் கொடுத்தால், புரையேறி சுவாசத்தை நிறுத்திவிடும் என்றுதான் சொல்வோம். ஆனால், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ரத்தச் சர்க்கரை குறைவதன் காரணமாக மயக்கம் ஏற்படும்போது, அவர்களுக்கு எவ்வளவு விரைவில் இனிப்புப் பொருள் கொடுக்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு மயக்கம் விரைவில் தெளியும், ஆபத்து குறையும்.
எனவே, நீரிழிவு நோய் உள்ள குழந்தைகளுக்கு மயக்கம் ஏற்பட்டால்,உடனே மாவு போலிருக்கும் குளுக்கோஸ் பவுடர், இனிப்பு மாவு போன்றவற்றில் ஒன்றைப் பிசைந்து, நாக்கிலும் பல் ஈறுகளிலும் தடவி, முன்பக்கத் தொண்டையைத் தடவிவிட வேண்டும். இப்படிச் செய்யும்போது, குழந்தை மயக்கத்தில் இருந்தாலும், அந்த இனிப்புப் பொருளை விழுங்கிவிடும். இதனால் மயக்கம் தெளிந்துவிடும். இந்த முதலுதவி தரப்பட வேண்டிய அவசியத்தைப் பள்ளியிலும் சொல்லிவைப்பது நல்லது.
தடுப்பது எப்படி?
l நீரிழிவு உள்ளவர்கள் சரியான நேரத்தில் தேவையான அளவு உணவைச் சாப்பிட வேண்டும்.
l இடைவேளை உணவைத் தவிர்க்கக் கூடாது.
l டாக்டர் சொல்லாமல் மாத்திரை அல்லது இன்சுலின் அளவை மாற்றக்கூடாது.
l இன்சுலினுக்கு ஏற்ற சிரிஞ்சைப் பயன்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக, 40 யூனிட் இன்சுலினுக்கு 100 யூனிட் சிரிஞ்சைப் பயன்படுத்தினால், இன்சுலின் அளவு அதிகரித்துவிடும். இது தாழ்சர்க்கரை மயக்கத்தை வரவேற்கும். இதைத் தவிர்க்கவே இந்த எச்சரிக்கை.
l இன்சுலின் ஊசியைப் போட்டுக்கொண்ட உடனே அல்லது நீரிழிவு நோய்க்கான மாத்திரைகளைச் சாப்பிட்ட உடனே நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்யக் கூடாது.
l அடிக்கடி இப்படி மயக்கம் வருபவர்கள், வெறும் வயிற்றில் நடைப்பயிற்சி செய்யக் கூடாது. சர்க்கரை இல்லாத பால் அருந்திவிட்டு நடைப்பயிற்சி செய்யலாம்.
தாழ்சர்க்கரை ஏன் ஏற்படுகிறது?
l தேவைக்குச் சாப்பிடாமல், குறைந்த அளவில் உணவைச் சாப்பிடுவது.
l இடைவேளை உணவைச் சாப்பிடாமல் இருப்பது.
l தாமதமாகச் சாப்பிடுவது.
l விரதம் இருப்பது.
l நீரிழிவு நோய் மாத்திரைகள் அல்லது இன்சுலின் அளவை அதிகமாக எடுத்துக்கொள்வது.
l அதிக நேரம் உடற்பயிற்சி / நடைப்பயிற்சி செய்வது.
l கடுமையாக உடற்பயிற்சி செய்வது.
l வெறும் வயிற்றில் மது அருந்துவது.
யாருக்கு வருகிறது?
கீழ்க்காணும் நபர்களுக்குத் தாழ்சர்க்கரை ஏற்பட வாய்ப்பு அதிகம்.
l இன்சுலின் ஊசி போட்டுக்கொள்பவர்களுக்கு.
l டைப் 1 நீரிழிவு நோயாளிகளுக்கு.
l சல்ஃபொனைல் யூரியா மாத்திரைகள் சாப்பிடுவோருக்கு.
l முதியோருக்கு (வயது 70-க்கு மேல்)
l மது அருந்தும் நீரிழிவு நோயாளிகளுக்கு.
l கல்லீரல் நோய், சிறுநீரக நோய், பிரிட்டில் டயபடிஸ் உள்ளவர்களுக்கு.
இவர்கள் என்ன செய்ய வேண்டும்?
கீழ்க்காணும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்:
l ‘தான் ஒரு நீரிழிவு நோயாளி’ எனும் அடையாள அட்டையை எப்போதும் சட்டைப் பையில் வைத்துக்கொள்ள வேண்டும்.
l தினமும் சாப்பிடும் மாத்திரை விவரங்கள், அதில் இடம் பெற்றிருக்க வேண்டும்.
l இன்சுலின் எடுத்துக்கொள்வதாக இருந்தால் அதன் அளவு, நேரம் போன்ற விவரங்கள் அதில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
l 25 கிராம் குளுக்கோஸ் மாவு, சாக்லேட், மிட்டாய் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை எப்போதும் கைவசம் வைத்திருக்க வேண்டும்.
l குளுக்ககான் ஊசியைக் கைவசம் வைத்துக்கொள்வதும் நல்லதுதான்.
l தாழ்சர்க்கரையின் அறிகுறிகள் தெரிந்த உடனேயே இனிப்புப் பொருளைச் சாப்பிட்டுவிட வேண்டும்.
l வீட்டில் உள்ளவர்கள், உறவினர்கள், அலுவலக நண்பர்கள் போன்றோரிடம் தனக்குத் தாழ்சர்க்கரை வந்தால், எவ்வாறு முதலுதவி செய்ய வேண்டும் என்பதைக் கற்றுத் தந்துவிட வேண்டும்.
l குளுக்கோமீட்டரைக் கைவசம் வைத்துக்கொள்ள வேண்டும்.
l தனியாக உறங்குவதைத் தவிர்ப்பது நல்லது.
l படுக்கை அறையைத் தாழ்ப்பாள் போட்டு உறங்குவதைத் தவிர்ப்பதும் நல்லது.
என்ன முதலுதவி?
தாழ்சர்க்கரையின் ஆரம்ப அறிகுறிகள் தெரிந்தவுடன் வீட்டில் அல்லது அலுவலகத்தில் செய்ய வேண்டிய முதலுதவி:
l குளுக்கோமீட்டர் இருந்தால் உங்கள் ரத்தச் சர்க்கரையைப் பரிசோதித்து ‘தாழ் சர்க்கரை’ உள்ளதா என உறுதி செய்துகொள்ளுங்கள். அப்படி உறுதியானால், உடனடியாக 20 - 25 கிராம் குளுக்கோஸ் மாவைச் சாப்பிடுங்கள்.
l குளுக்கோஸ் மாவு இல்லாதபோது சாக்லேட், மிட்டாய், ஜீனி, தேன், பழச்சாறு, ஜாம் போன்றவற்றில் ஒன்றைச் சாப்பிடுங்கள்.
l மாத்திரை வடிவில் இருக்கும் குளுக்கோஸ் மாத்திரைகளையும் சாப்பிடலாம்.
l கிடைக்கிற ஏதாவது ஒரு இனிப்புப் பானத்தை அவசரத்துக்குப் பருகலாம்.
l இந்த ஆரம்ப அறிகுறிகள் 10 - 12 நிமிடங்களுக்குள் மறைந்துவிடும். என்றாலும், பிரச்சினை சரியாகிவிட்டது என்று வீட்டில் இருந்து விடக்கூடாது. மேல் சிகிச்சைக்கு டாக்டரிடம் சென்று ஆலோசனை பெற வேண்டும்.
l முக்கியமாக, மாத்திரைகளை மாற்ற வேண்டுமா, உணவு முறையைச் சரி செய்ய வேண்டுமா அல்லது இன்சுலின் அளவை குறைக்க வேண்டுமா என்பது போன்ற விவரங்களைத் தெரிந்துகொண்டு சிகிச்சையைத் தொடர வேண்டும்.
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.
தொடர்புக்கு: [email protected]

நன்றி - த இந்து

Tuesday, August 04, 2015

அடிக்கடி களைப்பு ஏற்படுவது ஏன்? மருத்துவக்கட்டுரை

ஓவியம்: வெங்கி
ஓவியம்: வெங்கி
நம்மில் பலருக்கும் சில வேளைகளில் களைப்பு (Fatigue) ஏற்படுவதுண்டு. கடுமையான உழைப்புக்குப் பிறகு உடலில் களைப்பு ஏற்படுவது இயற்கை. மாலையில் அல்லது இரவில் போதுமான அளவுக்கு ஓய்வு எடுத்துக்கொண்டால், காலையில் ஏதேனும் ஒரு உடற்பயிற்சியை மேற்கொண்டால் களைப்பு மறைந்து, உடல் புத்துணர்ச்சியைப் பெற்றுவிடும். மறுநாள் உழைப்புக்கு உடல் தயாராகிவிடும்.
ஆனால், சிலருக்கு எந்த நேரமும் களைப்பாக இருக்கலாம்; அன்றாட வேலைகளைச் செய்ய முடியாத அளவுக்கு உடல் பாதிக்கப்படலாம்; உடல் தளர்ந்து, உள்ளம் உற்சாகம் இழந்துபோகலாம். அப்படியானால், அது சாதாரணக் களைப்பு அல்ல! உடலில் அல்லது உள்ளத்தில் உள்ள பிரச்சினையின் வெளிப்பாடு; அறிகுறி!
களைப்பைப் பற்றி சொல்லும்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி சொல்வார்கள். ஒரு வேலையைச் செய்வதற்குச் சோம்பேறித்தனமாக இருக்கிறது; உற்சாகம் இல்லாமல் இருக்கிறது; உடல் சக்தியை இழந்த மாதிரி இருக்கிறது; உடலில் சக்தியே இல்லாததுபோல் இருக்கிறது; ஆர்வமில்லாமல் இருக்கிறது; அசதியாக இருக்கிறது; கவனம் செலுத்த முடியாமல் இருக்கிறது. இப்படியாகத்தான் களைப்பை வெளிப்படுத்துவார்கள்.
காரணம் என்ன?
களைப்புக்கு உடல் சார்ந்த காரணங்களும் உண்டு; உள்ளம் சார்ந்த காரணங்களும் உண்டு. ஒரு சிலருக்கு இந்த இரண்டு விதக் காரணங்களும் சேர்ந்தே இருக்கவும் வாய்ப்புள்ளது. இன்னும் சில பேருக்கு, முதலில் உடல் சார்ந்த காரணங்களால் களைப்பு ஏற்படும். அதற்குத் தீர்வு கிடைக்கத் தாமதமாகும்போது உள்ளம் சார்ந்த காரணங்களும் சேர்ந்துகொள்ளும்.
களைப்பால் பாதிக்கப்பட்டவருக்கு உடல் சார்ந்த களைப்பு என்றால், பகலில் தெரிகிற களைப்பைவிட மாலையில் களைப்பு சற்று அதிகமாகவே தெரியும். உள்ளம் சார்ந்த களைப்பு, நாள் முழுவதும் தொல்லை தரும். இது ஒரு பொதுவான மருத்துவக் கருத்து. என்றாலும், அவரவர் காரணத்தைப் பொறுத்துக் களைப்பின் தன்மை, அளவு, நேரம், தீவிரம் அமையும்.
முறையற்ற உணவுப் பழக்கம்
கொழுப்பும் எண்ணெயும் மிகுந்த பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், துரித உணவு வகைகள் போன்றவற்றை அடிக்கடி சாப்பிடுவது களைப்பை வரவேற்கும். காரணம், இந்த உணவு வகைகளில் வைட்டமின்களும் தாதுச் சத்துகளும் குறைவு. இது ஊட்டச்சத்துக் குறைவுக்கு வழிவகுக்கும். மேலும், கொழுப்பு மிகுந்த உணவு வகைகளை அடிக்கடி சாப்பிட்டால், உடல் மந்தமாகவே இருக்கும்; தூக்கக் கலக்கமாகவே இருக்கும்.
ரொட்டி, கேக் போன்ற பேக்கரி உணவு வகைகளில் ‘குளூட்டன்’ எனும் புரதம் உள்ளது. இது ஒவ்வாமையாக மாறினால் ‘சிலியா’ நோயை (Coeliac disease) ஏற்படுத்தும். அப்போது களைப்பு பிரதானத் தொல்லையாக இருக்கும். நேரம் தவறிச் சாப்பிடும் உணவுப் பழக்கம் நீடிக்கும்போது செரிமானம் குறையும். அப்போது உணவுச் சத்துகள் உடலில் சேராது. இதுவும் களைப்புக்குப் பாதை அமைக்கும்.
ஊட்டச்சத்துக் குறைவு
உடல் உற்சாகமாக உழைப்பதற்குக் கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுக்கள் என எல்லாச் சத்துகளும் தேவையான அளவில் தரும் சமச்சீரான உணவைச் சாப்பிட வேண்டியது அவசியம். ஆனால் வறுமை, விரதம், உடல் எடையைக் குறைப்பதில் / ஒல்லியாவதில் விருப்பம் போன்ற காரணங்களுக்காகப் பலரும் உணவு சாப்பிடுவதைக் குறைத்துக்கொள்வார்கள். இதனால் உடலுக்குத் தேவைப்படுகிற ஊட்டச்சத்துகள் கிடைப்பதில்லை. இது களைப்புக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்கும். குறிப்பாக இரும்புச் சத்து, வைட்டமின் பி12, வைட்டமின்- டி, ஃபோலிக் அமிலம் போன்றவை குறைய ஆரம்பித்ததும் களைப்பு தலைகாட்டும்.
ரத்தசோகை
ஊட்டச்சத்து குறைவால் ஏற்படுகிற நோய்களில் மிக முக்கியமானது ரத்தசோகை. ஆண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு 13.5 கிராமுக்குக் கீழும், பெண்களுக்கு 12 கிராமுக்குக் கீழும் குறைந்துவிட்டால், அந்த நிலைமையை ‘ரத்தசோகை’ என்கிறோம். இன்றைய தினம் குழந்தைகள், வளரிளம் பருவத்தினர், பெரியவர்கள் என்று வயது வேறுபாடின்றிப் பாதிக்கிற நோய் இது. அதிலும் குறிப்பாக, பெண்களுக்கு ஊட்டச்சத்துக் குறைவு மட்டுமன்றி, முறையற்ற மாதவிலக்கு காரணமாக வும் ரத்தசோகை ஏற்படுகிறது. ரத்த சோகையின் ஆரம்ப அறிகுறி களைப்பு.
தொற்றுநோய்கள்
எந்த ஒரு தொற்றுநோயும் களைப்பை ஏற்படுத்தும். தடுமம், ஃபுளூ காய்ச்சல் போன்ற சாதாரணத் தொற்றுகளில் தொடங்கி மலேரியா, டைபாய்டு, கல்லீரல் அழற்சி, மஞ்சள் காமாலை, காச நோய் என்று பல விபரீத நோய்கள்வரை களைப்பை ஏற்படுத்து வதில் முன்னிலை வகிக்கும். ஆனால், இவை எல்லாமே தற்காலிகமாகவே களைப்பை ஏற்படுத்தும். நோய் குண மானதும் களைப்பும் மறைந்துவிடும்.
தூக்கமின்மை
இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் பலருக்கும் தூங்கும் நேரம் குறைந்துவிட்டது. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நாளொன்றுக்கு 8 மணி நேரத் தூக்கம் அவசியம். ஆனால், இன்றைய குழந்தைகளும் சரி, பெரியவர்களும் சரி சராசரியாக 5 மணி நேரமே தூங்குகிறார்கள் என்கிறது ஒரு மருத்துவ ஆய்வு. இரவில் போதுமான தூக்கம் இல்லாத நிலையில் பகலில் களைப்பு ஏற்படுவது இயல்பு. குறட்டை விடுதல், தூக்கத் தடை (Obstructive Sleep Apnea), அதீதத் தூக்கம், தூக்கக் குறைவு நோய், வேலை நேர மாறுதல்கள், இரவில் நெஞ்செரிச்சல், புராஸ்டேட் வீக்கம் போன்ற தொல்லைகளைக் கொண்டவர்களுக்கு, இதுபோலத் தூக்கம் குறைந்து களைப்பு உண்டாகிற வாய்ப்பு அதிகம்.
மருந்துகளின் பக்கவிளைவு
தடுமத்துக்குத் தரப்படும் மருந்துகள், அரிப்பு மருந்துகள், தூக்க மருந்துகள், மன அழுத்த மாத்திரைகள், மன அமைதியூட்டிகள், போதை மாத்திரைகள், ரத்த அழுத்த மாத்திரைகள், ஸ்டீராய்டுகள் போன்ற பலதரப்பட்ட மாத்திரை மருந்துகளின் பக்கவிளைவாகவும் களைப்பு ஏற்படும்.
நீரிழந்த உடல்
ரத்தத்தில் சோடியம், பொட்டாசியம் மற்றும் பிற தாதுகளின் அளவு எப்போதும் சரியாக இருக்க வேண்டும். போதுமான அளவுக்குத் தண்ணீர் குடிக்காதது, வெயில், அதிக வியர்வை, வயிற்றுப்போக்கு, கடுமையான வாந்தி, நீரிழிவு, சிறுநீரக நோய் போன்ற பல காரணங்களால் உடலில் நீரிழப்பு ஏற்படும். அப்போது களைப்புதான் மற்ற அறிகுறிகளைவிட முன்னிலை வகிக்கும்.
உளவியல் காரணங்கள்
தனிமை, தோல்வி, இழப்பு, பொருளாதார நெருக்கடி, வேலைப் பளு போன்ற காரணங்களால் ஏற்படுகிற மனச்சோர்வு, மன அழுத்தம், மனப் பதற்றம், கோபம், பொறுமையின்மை, பரபரப்பான வாழ்க்கைமுறை ஆகியவற்றாலும் களைப்பு ஏற்படுகிறது.
மற்ற காரணங்கள்
தைராய்டு சுரப்புக் குறைவு, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், இதய நோய், நுரையீரல் நோய், புற்று நோய், மூட்டழற்சி நோய், நார்த்திசு அழற்சி வலி (Fibromyalgia) போன்ற பல நோய்களிலும் களைப்பு தலைதூக்குவதுண்டு. புற்று நோய்க்கு மருந்து சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை தரப்படும்போது களைப்பு ஏற்படுவதுண்டு. முதுமை, கர்ப்பக் காலம், சோம்பேறித்தனமான வாழ்க்கை முறை, மாசுபட்ட சுற்றுச்சூழல், மது அருந்துவது, புகைபிடிப்பது, பசிக் குறைவு, அதீதப் பசி போன்றவையும் களைப்பை வரவேற்பவையே.
நாட்பட்ட களைப்பு
ஒருவருக்குக் களைப்பு ஆறு மாதங்களுக்கு மேல் நீடித்தால், அதை ‘நாட்பட்ட களைப்பு’ (Chronic fatigue syndrome). என்கிறோம். இவர்களுக்குக் களைப்பு கடுமையாக இருக்கும். தசைவலி, மூட்டுவலி, தலைவலி, நிணநீர்ச் சுரப்பிகளில் வலி, தொண்டை வலி, கவனக்குறைவு போன்ற பல அறிகுறிகளும் சேர்ந்துகொள்ளும். இதற்கான காரணம் மருத்துவர்களுக்கே இன்னும் தெளிவாகப் புரியவில்லை. எனவே, அடிப்படை நோய்க்குச் சிகிச்சை அளிக்கமுடியவில்லை; நோயாளி கூறும் அறிகுறிகளைப் போக்குவதற்கு மட்டும் சிகிச்சை அளிக்கிறார்கள்.
பரிசோதனை என்ன?
களைப்பு என்பது ஒரு தனிப்பட்ட நோயல்ல என்பதால், இதற்கென்று தனிப்பட்ட பரிசோதனை எதுவும் இல்லை. களைப்புடன் சேர்ந்து காணப்படும் மற்ற அறிகுறிகளை வைத்து, அடிப்படை நோய் எது எனத் தீர்மானிக்கப்படும். அதற்கேற்பப் பரிசோதனைகள் பரிந்துரை செய்யப்படும். பொதுவாக, ரத்தஅணுப் பரிசோதனைகள், ரத்தச் சர்க்கரைப் பரிசோதனை, தைராய்டு பரிசோதனை, சிறுநீரக நோய் மற்றும் கல்லீரல் நோய்க்கான பரிசோதனைகள், ரத்த அயனிகள் பரிசோதனை, மார்பு எக்ஸ்-ரே, எக்கோ உள்ளிட்ட ‘முழு உடல் பரிசோதனைகள்’ மூலம் களைப்புக்குக் காரணம் தெரிந்துகொள்வது வழக்கம்.
மேலும், இவர்களுக்கு உளவியல் சார்ந்த பரிசோதனைகளும் உளவிய லாளரின் ஆலோசனைகளும் தேவைப் படும். என்றாலும், நடைமுறையில் மூன்றில் ஒருவருக்குக் களைப்புக்கான காரணம் தெரிவதில்லை.
தடுப்பது எப்படி?
களைப்புக்குக் காரணம் தெரிந்து சிகிச்சை பெறுவதுதான் சரி. அப்போதுதான் களைப்பு மறுபடியும் தொல்லை தராது.
அலுவலகத்திலும் வீட்டிலும் நீங்கள் அதிக நேரம் இருக்கிற இடத்தில் நல்ல காற்றோட்டம் இருக்க வேண்டும். மாசில்லாத காற்றைச் சுவாசிக்க வேண்டும்.
தினமும் குறைந்தது ஆறு மணி நேரம் எவ்வித இடையூறும் இல்லாமல் தூங்க வேண்டும். முடியாதவர்கள் வார இறுதி நாட்களிலாவது ஓய்வு எடுக்க வேண்டும்.
உடல் பருமனாக இருந்தால் உடல் எடையைக் குறைக்க வேண்டும்.
சமச்சீரான இந்தியப் பாரம்பரிய உணவு வகைகளைச் சாப்பிடுங்கள்.
மேற்கத்திய உணவு வகைகளையும் அதிக எண்ணெய் உள்ள, கொழுப்புள்ள உணவு வகைகளையும் குறைத்துக்கொள்ளுங்கள்.
காய்கறி, பழங்களைத் தேவையான அளவுக்குச் சாப்பிடுங்கள்.
தினமும் காலையில் நடைப் பயிற்சி அல்லது உடற்பயிற்சி ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும். முடிந்தால் மாலையில் யோகாசனம் செய்யலாம்.
இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு, சிறிது நேரம் தியானம் செய்யலாம்.
வேலைகளை முறைப்படுத்திச் செய்யுங்கள். முக்கிய வேலைகளுக்கு முதலில் முக்கியத்துவம் கொடுத்துச் செய்வதும், நன்கு திட்டமிட்டு, நேர மேலாண்மையைப் பின்பற்றி, நிதானமாகச் செய்யவேண்டியதும் முக்கியம். காரணம், தினமும் அவசர அவசரமாகவும் பரபரப்பாகவும் வேலை செய்வதை வழக்கப்படுத்திக்கொண்டால், உடல் விரைவிலேயே களைப்பு அடைந்துவிடும்.
தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.
குளிரூட்டப்பட்ட அறைகளில் பணிபுரிபவர் களுக்கு நீரிழப்பு ஏற்படுவது கோடைக் காலத்தில் வெளியில் தெரியாது. ஆனால், களைப்பு தெரியும். அவர்களும் தேவைக்கு ஏற்பத் தண்ணீர் அருந்தினால்தான் களைப்பு நீங்கும்.
உங்களுக்கு நீரிழிவு நோய் இல்லை என்றால், இயற்கைப் பழச்சாறுகளை அருந்துங்கள். செயற்கைப் பழச்சாறுகள் வேண்டாம்.
காபி, தேநீர், கோலா மற்றும் குளிர்பானங்கள் குடிப்பதைக் குறைத்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் பக்கவிளைவால் களைப்பு ஏற்படுகிறதா என்பதை மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எந்த மருந்தையும் சாப்பிடாதீர்கள்.
புகை பிடிப்பதைத் தவிர்த்துவிடுங்கள்.
மது அருந்த வேண்டாம்.
மன அழுத்தத்துக்கு இடம் தராதீர்கள். மனக் கவலை இருக்கும்போது உங்கள் நம்பிக்கைக்கு உரியவரிடம் பகிர்ந்துகொள்ளுங்கள். உங்கள் ஆசைகளுக்கு ஓர் எல்லை வகுத்துக்கொள்ளுங்கள். கோபத்தைக் குறைத்துக்கொள்ளுங்கள். பிறருடன் வாதிடுவது, சண்டை போடுவது போன்றவற்றைத் தவிருங்கள். பாதுகாப் பான முறையில் உங்கள் உரிமைகளைப் பெறுவதற்குப் பழகிக்கொள்ளுங்கள். இம்மாதிரி பழக்கங்கள் மூலம் மன அழுத்தத்தைத் தவிர்க்கலாம்; களைப்பையும் தடுக்கலாம்.
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.
தொடர்புக்கு: [email protected]

நன்றி - த இந்து

Wednesday, October 09, 2013

பிந்துரேகா -அ. முத்துலிங்கம் -நகைச்சுவை சிறுகதை

கனடாவுக்கு வந்த புதிதில் எனக்கு ஒரு மருத்துவர் தேவைப்பட்டார். என் பக்கத்து வீட்டுக்காரர் பரிந்துரை செய்ததில் அவரிடம் போயிருந்தேன். குஜராத்திப் பெண்மணி. பெயர் பிந்துரேகா. சிறு வயதிலேயே கனடா வந்து, இங்கேயே படித்து டொக்ரர் பட்டம் பெற்றவர். நான் போனபோது வரவேற்பறையில் 20 பேர் காணப்பட்டார்கள். எனக்கு முன்னர் 1,000 பேர் உட்கார்ந்து பள்ளம் விழுந்திருந்த நாற்காலியில் பாதி புதைந்துபோய் அமர்ந்தேன். நீண்ட கனவுகளைக் காண்பதற்கு மருத்துவரின் அறையைவிட உகந்த இடம் கிடையாது. ‘அடுபாரா முட்டுங்கலிம்’என்று யாரோ கத்தினார்கள். ‘இப்படியும் பெயர் இந்த நாட்டில் வைக்கிறார்களே’என்று நினைத்துச் சிரித்துக்கொண்டு, மறுபடியும் தூங்கப்போனேன். டொக்ரர் எனக்கு முன் நின்றார். வெள்ளை கோட் அணிந்திருந்த உயரமான பெண்மணி, சுவர் ஓரமாக எலி ஓடுவதுபோல நினைத்துப்பாராத வேகத்தில் குடுகுடுவென ஓடினார். என்னைத்தான் இவ்வளவு நேரமும் அழைத்தார். நீண்ட நேரம் சப்பியதால் என் பெயர் அப்படி உருக்குலைந்து வெளியே வந்திருந்தது. 


‘உங்கள் பெயர் என்ன மொழி?’ என்றார் டொக்ரர். தமிழ் என்றேன். ’அப்படியென்றால்?’ ‘இந்தியாவில் ஒரு மாநிலமே பேசும் மொழி. 70 மில்லியன் மக்கள்’என்றேன். ‘எனக்குத் தெரியவில்லையே’என்றார். ‘60 மில்லியன் மக்கள் மட்டுமே குஜராத் மொழி பேசுகிறார்கள்’என்ற உபரித் தகவலை அவர் கேட்காமலே சொன்னேன். இது தேவையில்லாதது. அவருக்குப் பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன். கைக்குக் கிட்ட இருந்த ஊசியை எடுத்து புஜத்தில் குத்தி மருந்தைச் செலுத்தினார். அதற்குப் பிறகு என் வியாதியைக் கேட்டறிந்தார். 


எங்கள் இரண்டாவது சந்திப்பு இன்னும் மோசமாக இருந்தது. நான் அவருக்கு முன் கடுதாசி கவுணை அணிந்து கூச்சத்துடன் அமர்ந்திருந்தேன். மண்டையில் நீர் நிரப்பியதுபோல பாரத்தில் அதுபாட்டுக்குக் கவிழ்ந்து கிடந்தது. இரண்டு கையாலும் பிடித்துத் தூக்க வேண்டிய ஒரு தொக்கையான கோப்பை அவர் படித்துக்கொண்டிருந்தார். அவரிடமிருந்து மருந்து மணம் வீசியது. எனக்கு நெஞ்சு திடுக்கென்றது. நான் வந்து ஆறு மாதம் ஆகவில்லை, இந்தக் கோப்பை நிறைத்து இத்தனை வியாதிகள் சேர்ந்துவிட்டனவே. பெருமைப்படுவதா இல்லையா என யோசித்தேன். 


‘காலையில் எத்தனை வீடுகளுக்கு பேப்பர் போடுகிறீர்கள்?’ நான் பதில் பேசவில்லை. ‘இன்னும் சுப்பர் மார்க்கெட்டுகளில் பாரமான பெட்டிகளைத் தூக்கி அடுக்குகிறீர்களா?’ நான் அவரையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தேன். சட்டென்று மருந்தை எழுதி என்னிடம் தந்து முழங்காலில் பூசச் சொன்னார். ‘தலை நோவுக்கு முழங்காலில் பூசினால் சரியாகிவிடுமா?’ என்று கேட்டேன். பின்னர்தான் தெரிந்தது வேறு யாருடையவோ கோப்பை அவர் அத்தனை நேரமும் பார்வையிட்டிருக்கிறாரென்று. ஒவ்வொரு தடவையும் அவருக்கும் எனக்கும் இடையில் ஏதோ ஒன்று நடந்தது. ஒருமுறை பூட்ஸ் அரையடி ஆழம் புதையும் பனியில் நடந்து அவரிடம் போனேன். மூச்சை விட்டால் திருப்பி இழுக்க முடியவில்லை. சோதித்துவிட்டு ‘பால் குடிப்பதை நிறுத்துங்கள்’என்றார். நிறுத்தினேன். ‘தேநீரும் வேண்டாம்’என்றார். அதையும் விட்டேன். பின்னர் ‘கோப்பியைக் காட்டக் கூடாது’என்றார். அதையும் செய்தேன். எஞ்சியது தண்ணீர் ஒன்றுதான். அதற்கும் தடை வந்துவிடுமோ என அதிகம் நடுங்கியதால், வியாதி பெரிசாகத் தெரியவில்லை.


 இன்னொரு தடவை காதுகுத்துக்கு மருந்து கேட்டுப் போனேன். ‘தேங்காய் எண்ணெய் ஒரு சொட்டு காதுக்குள் விடுங்கள்’என்றார். 60 வருடங்களுக்கு முன்னர் எங்கள் கிராமத்தில் அம்மா சொன்னதும் அதுதான். இந்த 60 வருடமும் மருத்துவம் அதே இடத்தில்தான் நிற்கிறது. கழுத்து வலி என்று போனால் பயற்றை வறுத்து டவலிலே உருளைபோலச் சுருட்டி அதற்குமேல் படுக்கச் சொல்கிறார். எந்த மருத்துவப் புத்தகத்தில் தேங்காய் எண்ணெய் என்றும் உருட்டி வைத்த பயறு என்றும் எழுதிவைத்திருக்கிறது. 


எந்தச் சின்ன வியாதி என்று அவரைப் பார்க்கப் போனாலும் அந்தப் பகுதி உறுப்புக்குத் தேவைப்படும் அத்தனை பரிசோதனைகளையும் ஒன்றன் பின் ஒன்றாகச் செய்து முடிப்பார். எக்ஸ்ரே, ஸ்கேன், அல்ட்ரா சவுண்ட், எம்.ஆர்.ஐ. என்று பெறுபேறுகள் வரும். அவற்றை கணினியில் உருட்டி உருட்டி மேலும் கீழும் தேடி ஆராய்வார். 4-ம் வகுப்பு மாணவனிடம் 8-ம் வகுப்புக் கணக்கைச் செய்யச் சொன்னதுபோல நெற்றியைச் சுருக்கி யோசிப்பார். சட்டென்று ஒரு வியாதியின் நுனியைக் கண்டுபிடித்து முன்னெப்போதுமே கேள்விப்பட்டிராத பெயரைச் சொல்லிக் கிலியூட்டுவார். இந்தச் சோதனைகள் இரண்டு மாதகாலமாக நடந்துகொண்டிருக்கும்போதே வியாதி தானாக நின்றுவிடும். இறுதியில் உங்களிடம் கேட்பார், ‘எதற்காக இத்தனை பரிசோதனைகள் செய்தோம்?’ அப்படிக் கேட்கும்போது உங்களுக்கு மருத்துவரிடம் ஏன் வந்தோம் என்பது மறந்துபோயிருக்கும். தடுப்பூசி போடப்போகும்போது எச்சரிக்கை தேவை. உங்கள் பெயரை நினைவூட்ட வேண்டும். அவர் மேசையில் இருப்பது உங்கள் கோப்புதான் என்பதைத் தலைகீழாகப் படித்து உறுதிசெய்வது நல்லது. தடுப்பூசிக் காலங்களில் வரவேற்பறையை நிறைத்து நோயாளிகள் குழுமியிருப்பார்கள். அறையை உலோக இருமல்கள் ஆக்கிரமித்திருக்கும். மருத்துவர் நின்ற நிலையில் தடுப்பூசிகளைப் போட்டுத்தள்ளுவார். என்னுடைய முறை வந்தது. நீண்ட சேர்ட் கைமடிப்பைச் சுருட்டிச் சுருட்டி புஜத்துக்கு மேல் ஏற்றியிருந்தேன்.


 டொக்ரர் பஞ்சிலே ஸ்பிரிட்டைத் தோய்த்து தோளிலே பூசிவிட்டு ஊசியைச் செலுத்தினார். அந்த வேளை அவருக்கு குஜராத்திலிருந்து தொலைபேசி வந்தது. புதுவிதமான மொழியில் சத்தமாகப் பேசிவிட்டுத் திரும்பினார். நான் அப்படியே உட்கார்ந்திருந்தேன். ஓர் ஊசி நிறைய மருந்தை எடுத்து என் தோள்மூட்டில் குத்த வந்தார். நான் வெலவெலத்துப்போய் எழுந்து நின்று, ஏற்கனவே அவர் குத்திவிட்டாரென்று சொன்னேன். அவர் நம்பவில்லை. அவரை ஏய்த்துவிட்டுத் தப்பியோடப் பார்க்கிறேன் என்று நினைத்தார். என்னைப் பார்த்தார். பின்னர் ஊசியைப் பார்த்தார். மறுபடியும் என்னைப் பார்க்கத் திரும்பியபோது நான் மறைந்துவிட்டேன். 


ஒரு வருட காலமாக என் உடம்பைத் தேமல் போல ஒன்று பிடித்திருந்தது. பலவிதக் களிம்புகளைத் தந்தார். ஒருவிதமான பவுடரைப் பூசச் சொன்னார். ஒன்றுக்குமே பயன் கிடைக்கவில்லை. தேமல் பாட்டுக்கு இனப்பெருக்கம் செய்தது. ஒருநாள் அவரைப் பார்க்கப் போனபோது சோளத்தைப் பட்டுப்போல அரைத்துப் பூசச் சொன்னார். ‘நாளுக்கு எத்தனை தரம்?’ சொன்னார். ‘எத்தனை நாள் தொடர வேண்டும்?’ ‘வியாதி மாறும்வரை’. ‘சாப்பாட்டுக்கு முன்னரா பின்னரா?’ ‘எப்பவும் பூசலாம்’என்றார். என்ன ஆச்சரியம்! ஒரு வார காலத்திலேயே வியாதி குணமாகிவிட்டது. அப்படியாயின் ஏன் அந்த மருந்தை அவர் ஒரு வருடம் முன்னரே தரவில்லை. இது மருந்துக் கடையில் கிடைக்காது. சுப்பர் மார்க்கெட்டில்தான் வாங்கலாம். விற்பனைப் பெண்ணிடம் இதை எதற்குப் பாவிப்பார்கள் எனக் கேட்டேன். அவர் சொன்னார், ‘ஆடைகளை இஸ்திரி பண்ணும்போது சோளமா கரைத்த தண்ணீரைத் தெளித்தால் உடுப்புகள் விறைப்பாக நிற்கும். அல்லது சூப் செய்யும்போது அதைக் கெட்டியாக்கவும் இதைச் சேர்த்துக்கொள்ளலாம்’என்றார். சலவைக்காரர்களும் சமையல்காரர்களும் மட்டுமே உபயோகப்படுத்தும் ஒரு பொருள் எப்படி மருந்தானது? எந்த மருத்துவப் புத்தகத்தில் இப்படி எழுதிவைத்திருக்கிறது. இவர் எழுதும் மருந்துகளை வாங்குவதற்கு அடிக்கை பலசரக்குக் கடைக்குப் போக வேண்டிவருகிறது. இப்பொழுது வீட்டிலே கடலை எண்ணெய், பாசிப் பருப்பு, புதினாக் கீரை, மைதா மாவு, இஞ்சிக் கிழங்கு, காளான், கருப்பட்டி என்று சகலவிதமான பொருள்களையும் சேமித்து வைத்திருக்கிறோம். அடுத்த வியாதிக்கு என்ன எழுதுவாரோ? எதற்கும் தயாராக இருப்பது நல்லது. அ. முத்துலிங்கம், எழுத்தாளர், தொடர்புக்கு: [email protected] 

thanx - the hindu tamil

Tuesday, August 27, 2013

மேரேஜே பண்ணிக்காத நவீன அன்னை தெரேசா


மருத்துவ ஸ்பெஷல்

சேவையே உயிர் மூச்சாக!


திருமண வரவேற்பு விருந்து! பந்தியில் அமர்ந்து அந்தப் பெண்மணி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். மருத்துவமனை வளாகத்தின் உள்ளே அமைந்துள்ள விழா அரங்கு அது. ஆயாம்மா பதற்றமாக ஓடி வருகிறார். அம்மா... ஒரு சிசேரியன் கேஸ். க்ரிடிக்கல் பொசிஷன்மா..." சாப்பிடுவதை நிறுத்திவிட்டு ஆபரேஷன் தியேட்டர் நோக்கி விரைந்து செல்கிறார். சிறிது நேரத்தில் ஓர் அழகியப் பெண் குழந்தை பிறக்கிறது. திருமண வரவேற்பு விருந்தில் உணவருந்த கிளம்பிச் செல்கிறார். எல்லோராலும்அம்மாஎன்றழைக்கப்படும் அந்த மகப்பேறு மருத்துவர், டாக்டர் ஆர். கௌசல்யா தேவி. அவருக்கு வயது 83. காந்தி கிராமம் கஸ்தூரிபாய் மருத்துவமனையின் ஆலோசகர்.


கடந்த நாற்பத்தைந்து ஆண்டுகளாக இம்மருத்துவமனையில் சேவை புரிந்து வரும் இவரை திண்டுக்கல்-மதுரை மாவட்ட மக்கள், ‘எங்கள் தெரசாஎன்றே போற்றுகின்றனர். திண்டுக்கல்-மதுரை சாலையில் சின்னாளப்பட்டி பகுதியில் அமைந்துள்ளது, காந்தி கிராம அறக்கட்டளையின் கஸ்தூரிபாய் மருத்துவமனை.

1930-ஆம் வருடம் சாத்தூர் அருகே அருணாச்சலபுரம் கிராமத்தில் பிறந்தவர் கௌசல்யா தேவி. அப்பா ரகுபதி ரெட்டி கால்நடை மருத்துவர். பள்ளிப் பருவத்திலிருந்தே மருத்துவம் பயின்று மக்களுக்குச் சேவை செய்ய வேண்டுமென்று கௌசல்யா தேவியின் இலட்சியம். சென்னை மருத்துவக் கல்லூரியில் 1959-ல் தேர்ச்சி. 1960லிருந்து 69 வரை சங்கரன்கோவில், கோபிசெட்டிப் பாளையம், நாகப்பட்டினம் போன்ற ஊர்களில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றியவர். 7.11.1969 முதல் காந்தி கிராம கஸ்தூரிபாய் மருத்துவ மனையில் சேவை செய்து வருகிறார். தமது அறுபதாவது பிறந்த நாளிலிருந்து சம்பளம் ஏதும் பெறாமல், கடந்த இருபத்தியிரண்டு ஆண்டுகளாக சேவையாற்றி வருகிறார்.

அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து கொண்டிருந்த உங்களை, மாற்றம் பெற வைத்த சம்பவம் எது?

எனது நெருங்கிய தோழி சிவரஞ்சனியை மதுரையில் ஒரு நாள் சந்தித்தேன். காந்தி கிராம அறக்கட்டளை சார்பாக இயங்கி வரும் கஸ்தூரிபாய் மருத்துவ மனை நிர்வாகம், சேவை மனப்பான்மையுள்ள மருத்துவர்களைத் தேடிக் கொண்டிருப்பதாகத் தகவல் சொன்னார். அன்றே கிளம்பி வந்து சௌந்தரம் அம்மாளைச் சந்தித்தேன். தனியாக நானும் அவருமாக மாலை ஐந்திலிருந்து இரவு ஒன்பது மணி வரை பல விஷயங்கள் குறித்துப் பேசினோம். சௌந்தரம் அம்மாளுடன் நான் தொடர்ந்து பேசிய அந்த நான்கு மணி நேர உரையாடலே, என்னை கஸ்தூரிபாய் மருத்துவமனைக்கு வரவழைத்து விட்டது. 1969 நவம்பர் மாதம் முதல் இன்று வரைக்கும் இந்த வளாகம் முழுவதுமாக உயிரும் உடலுமாக உலவி வருகிறேன்.

திருமணம் செய்து கொள்ளாமலே... (நாம் முடிக்கவில்லை. சட்டென அம்மாவே பேசுகிறார்...)

பள்ளிப் பருவத்திலிருந்தே திருமணத்தை நான் விரும்பவில்லை. காரணம், மருத்துவச் சேவைக்குத் திருமணம், ஒரு பெரும் தடைக்கல்லாக இருக்குமென முடிவு செய்திருந்தேன். உயிர் காக்கும் மருத்துவத்தை விட உயர்ந்தது வேறென்ன? நான் அதையே மணம் புரிந்து கொண்டேன் மானசிகமாக!


உங்களது மருத்துவச் சாதனைகள்...

எனது மருத்துவச் சாதனைகள் என்று பட்டியலிட்டுக் கொள்ள என் மனம் இடம் தரவில்லை. கஸ்தூரிபாய் மருத்துவமனையின் சாதனைகள் என்று தான் அவற்றைக் குறிப்பிட வேண்டும்.

தயவுசெய்து அந்த விவரங்களைச் சற்று விவரமாகக் கூறலாமே...

செயற்கைக் கால் மருத்துவ மையம் இங்கு மிகச் சிறப்பு. செயற்கைக் காலினை முதன் முதலாக உருவாக்கியவரான டாக்டர் பி.கே.சேத்தியின், ராஜஸ்தான் மாநில மருத்துவமனைக்குச் சென்று தங்கியிருந்து பயிற்சி பெற்றுத் திரும்பிய பின்னர், இங்கு நிறுவப்பட்ட மையம் இது. மிகக் குறைந்த கட்டணத்தில் செயற்கைக் கால் பொருத்தி, அவர்கள் நன்கு நடைப்பயிற்சி பெற்ற பின்னரே வெளியில் அனுப்புகிறோம்.


 இதுவரை 4,233 நபர்களுக்கு செயற்கைக் கால் பொருத்தியிருக்கிறோம். எங்கள் மருத்துவ மனையின் இன்னொரு தனிச் சிறப்பு, குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்களுக்கு, அவர்களது தேவையின் பொருட்டு கர்ப்பப்பைக் குழாய் இணைப்பு அறுவை சிகிச்சை செய்கிறோம். 1976-77லிருந்து இதுவரை சுமார் 1400 பெண்களுக்கு மேற்கண்ட அறுவைச் சிகிச்சை செய்துள்ளோம். 1947-48லிருந்து இதுவரை சுமார் ஒரு லட்சத்து இரண்டாயிரம் பெண்களுக்குப் பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது.உங்கள் மனதை உலுக்கிய சம்பவம் ஏதேனும்...

நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் அப்போது எனக்குப் பணி. 1969-ல் நாகை அருகே கீழவெண்மணி கிராமத்தில் இந்தியாவையே உலுக்கியெடுத்த கோரச் சம்பவம். ஐம்பதுக்கும் மேற்பட்ட தலித் மக்கள் குடிசைக்குள் தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பயங்கரக் கலவரம். ஆயுதங்களால் தாக்கப்பட்டு நூற்றுக்கணக்கான மக்களுக்கு மிக மோசமான படுகாயங்கள்


 அத்தனை பேரும் நாகை அரசு மருத்துவமனைக்குத்தான் கொண்டுவரப்பட்டனர். அவர்களுக்கு உடனடி அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. தொடர்ந்து 52 மணி நேரம் பணியாற்றி அறுவைச் சிகிச்சைகள் செய்து பலரையும் காப்பாற்றினோம். என் இதயத்தை ரணமாக்கிய அந்த மக்களின் வேதனைக் குரலை எப்போதும் என்னால் மறக்கவே முடியாது.


நன்றி- மங்கையர் மலர்