Monday, August 19, 2013

சரக்கு சங்கரலிங்கங்களே!ஒரு சொல் கேளீர் - - பாரதி பாஸ்கர்


உத்வேகத் தொடர் - 7

சில பாதைகள்... சில பயணங்கள்...

- பாரதி பாஸ்கர்

டாஸ்மாக் கடைகளில் 2012-13ல் விற்பனை ரூபாய் 21, 680 கோடியைத் தொட்டது. இது போன வருட விற்பனையை விட 20% அதிகம். - செய்தி சென்னையில் ஒரு கரிய மழை நாள். கொட்டித் தீர்த்த மழைக்கு நடுவே கைத்தடி ஊன்றிய ஒரு முதியவர், அன்றைய தமிழக முதல்வரின் இல்லத்துக்குப் போனார். ‘எந்தக் காரணம் கொண்டும் தமிழ் நாட்டில் மது விலக்கை ரத்து செய்துவிடக் கூடாதுமுதல்வரிடம் மன்றாடிக் கேட்டுக் கொள்வதே அவரின் நோக்கம். ‘கடைசி நிமிஷத்தில் இந்த வேண்டுகோளை நான் விடுத்தேயாக வேண்டும். இல்லையென்றால் என் கடமையில் தவறியவனாவேன் என்பதால் சென்றேன். நான் நம்பிக்கையோடு திரும்பவில்லை.எனது கோரிக்கை நிறைவேறாதா - என்ற தாபத்துடனும் பிரார்த்தனையுடனும் திரும்பினேன்என்று பின்னாளில் இந்த சம்பவத்தை அவர் பதிவு செய்தார். அவரது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. பொருளாதார நிர்பந்தங்கள் ஜெயித்து விட்டன. தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. கடந்த நாற்பது ஆண்டுகளாய் தமிழ்நாட்டில் பெண்களின் வாழ்க்கையை வறுமையும் வன்முறையும் வன்மமும் படிந்த ஒரு சமூகப் பேரழிவிற்குக் கொண்டு போனது அந்த முடிவுதான்.கொட்டும் மழையைப் பொருட்படுத்தாது கோரிக்கையைக் கொண்டு போன அந்த முதியவர் பேரறிஞர் ராஜாஜி. நாள் ஜூலை 20, 1971. அதன்பின் வந்த அரசுகளால் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. மூடப்பட்டன. பின்பு ஒருவழியாக 2011ல் டாஸ்மாக் முழுப் பொறுப்பேற்றது. அன்றிலிருந்து இன்று வரை சாராய விற்பனை பொங்கித் ததும்பி பூரணமாய் வளர்ந்து, இன்று 21,000 கோடி ரூபாய் என்றும் சரித்திர சாதனையை எட்டியுள்ளது தமிழகம்.


என் வீட்டில் முன்பு வேலை செய்த யசோதா, வேலைக்கு வந்த புதிதில் எப்படி இருப்பாள்? எப்பவும் சிரிப்பு, இயல்பான வெட்கம், மென்மையான பேச்சு என்று தேவதை மாதிரி இருந்தவள், கல்யாணம் ஆகி ஏழே வருடங்களில் எப்படி மாறினாள்?


சிடுசிடுப்பும், கடுஞ்சொல்லும், எப்போதும் பாய்ந்து சீறி சண்டைக்கு வரும் சினமும் கொண்டவளாய்ப் போனாள். கல்யாணம் ஆன புதுசுல நல்லாதாம்மா இருந்தாரு. டைலர் வேலைக்குப் போனா ஒரு நாளைக்கு முந்நூறு ரூபாய் கூட சம்பாதிக்கலாம். எங்க? முதல்லல்லாம் மறைஞ்சு மறைஞ்சு குடிப்பாரு. இப்போ? காலையிலேயே கடைக்கு போறாரு. கடையி லேருந்து வரப்போ பாக்கணுமே, என்ன கெட்ட வார்த்தை... என்ன ரவுசு... அடின்னா அடி, உங்க வூட்டு அடி, எங்க வூட்டு அடி இல்ல. அப்படியே கவுந்து உக்காந்துகுனு முதுகில எல்லா அடியையும் வாங்கிக்கணும் அப்பால முடியைப் புடிச்சு இஸ்து மூஞ்சில குத்துவாரு பாரு... வாயெல்லாம் வெத்தல பாக்கு போட்டுக்கும். வூட்டுக்கு ஒரு பைசா அந்த ஆளால பிரயோஜனம் கிடையாது. நான் வேல செஞ்சு கஞ்சி ஊத்தறேன்பாரு, இது மானம் கெட்ட பொழப்பாம். அன்னிக்கு குழந்தைக்கு ஜுரம்னு உன் கையில காசு வாங்கிக்கிட்டு போனேனா, டாக்டராண்ட போக, அந்த காசப் புடுங்கி குடிச்சிட்டு வாராரும்மா. ஒரு நாள் இல்ல ஒரு நாளு சோத்துல பாலிடால் கலக்கலன்னா, நான் யசோதா இல்லை..." சொன்னது தனியொரு யசோதாவா?

நூறு நூறு வருஷங்களாய்கணவன் என்ன தீமை செய்தாலும் அவன் கட்டிய தாலி நிலைக்க வேண்டும்என்ற தமிழ் சிந்தனை மரபை, சாராயம் மாற்றிப் போட்டுவிட்டதன் சாட்சியே யசோதாவின் குரல்.


இன்று குடிக்கும் தண்ணீர் கிடைப்பதைவிட இந்ததண்ணிதமிழ்நாட்டில் சுலபமாகக் கிடைக்கிறது. டாஸ்மாக் சிப்பந்திகளுக்கு விற்பனையில் கடுமையான டார்கெட்டுகள் கொடுக்கப்படுகின்றன. இதுதவிர, ‘மது ஒழிப்புஎன்று வேறு ஒரு அரசுத் துறை நமக்கு உண்டு. அதில் வேலை செய்கிறவர்களுக்கு சம்பளம் தருவதே டாஸ்மாக் வருமானத்தில் தானோ என்னமோ? ஆளே இல்லாத டீக்கடையில் நீங்கல்லாம் யாருக்கு சார் டீ ஆத்தறீங்க?


அண்மையில் கல்வித் துறை அதிகாரி ஒருவரை சந்தித்தபோது, பள்ளிகளுக்குப் பக்கத்தில் உள்ள டாஸ்மாக்குகளில் இடைநேரம் போய் மாணவர்கள் குடித்து விட்டு வருவது நடக்கிறது என்று கண்ணீரோடு கூறினார். இந்தப் பிள்ளைகளின் ஆதர்சமாய் இருக்கும் நம் ஹீரோக்களும் காமெடியன்களும், ‘மச்சி, ஒரு க்வாட்டர் சொல்லேன்அல்லது, ‘மச்சி ஓப்பன் பாட்டில்போன்ற கருத்தாழமிக்க வீர வசனங்களைச் சொல்லாமல் ஒரு தமிழ் சினிமா கூட இன்று வந்துவிட முடியாதல்லவா? ஆங்கிலப் படங்களில் கூடமது அருந்துவது உடல் நலத்திற்குக் கேடுஎன்ற எச்சரிக்கை வாசகம் ஏதோ ஓரிரண்டு காட்சிகளில் தான் வருகிறது. ஆனால் நம் சினிமாக்களிலும் சீரியல்களிலும் அத்தனை காட்சிகளிலும் இந்த எச்சரிக்கை வாசகம் தேவைப்படுகிறது.வரம்பு மீறிய எல்லாக் குற்ற சம்பவங்களின் பின்னும் மது இருக்கிறது. நாலு வயசு குட்டிப் பாப்பாவிலிருந்து எண்பது வயசுப் பாட்டி வரை பாலியல் வன்முறையால் பாதிக்கப்படுவதன் பின்னணியில் ஏதோ குடிகாரன் நிச்சயம் இருக்கிறான். பெண்கள் மீதான எந்த வன்முறைகளும் அரங்கேறிய இடங்களிலும் நடந்த சம்பவத்திற்கு சாட்சியாக இருப்பது பல ரத்தத் துளிகளும், சில காலி மதுப்புட்டிகளுமே.


அண்மையில் என் நெருங்கிய உறவினர் மகன், பெரும் தேர்ச்சிகளோடு உயர்தரக் கல்லூரி ஒன்றில் எம்.பி.. சேர்ந்தான். அங்கே மாணவர்கள் தொடர்ந்து வார இறுதிகளில் நடத்தும் பார்ட்டிகள் தனக்கு கலாசார அதிர்ச்சி அளித்தன என்றான். பரீட்சையில் வென்றால், தோற்றால், காதல் முகிழ்ந்தால், காதல் பிரேக்-அப் ஆனால் எல்லாவற்றுக்கும் தண்ணி பார்ட்டி. தன்னுடைய அதிர்ச்சிகளிலேயே பெரும் அதிர்ச்சியாக இருந்தது, தன்வகுப்புப் பெண்கள் முழு மனதோடு அந்தப் பார்ட்டிகளில் பங்கேற்றதேஎன்றான். பெரும் நட்சத்திர ஹோட்டல்களில்பெண்களுக்கான இரவுகள்வெள்ளிக் கிழமைகளில் நடக்கின்றன.  


அவற்றில் கலந்து கொண்டு வெளியே வரும் பெண்களின் வாயிலிருந்து வரும் சொற்களுக்கும் யசோதாவின் கணவன் பேசும் சொற்களுக்கும் வித்தியாசம் அதிகமில்லை. ஒன்று ஆங்கிலம் - மற்றொன்று தமிழ். ‘ஆணுக்கு பெண் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி இவ்வையகம் தழைக்குமாம்என்று பாரதியார் பாடியிருப்பதை வேறு எப்படித்தான் நிறைவேற்றுவது?சரி, உள்ளே போகும் மது மனிதனை என்ன செய்வதாய் விஞ்ஞானம் சொல்கிறது? ‘எத்தனால்என்ற வேதிப்பொருளே எல்லா மதுவகைகளில் பிரதானமாய் இருக்கிறது. அருந்தியதும் ரத்தத்தில் உறைந்திருக்கும் தண்ணீரோடு அது கலக்கிறது. மூளையின் செரிப்ரம், செரிபெல்லம், மெடில்லா எல்லா பகுதிகளிலும் பரவுகிறது. தயக்கமும் கூச்சமும் போய்விடுவதாக குடிமகன்கள் முதலில் உணருகிறார்கள். கை, கால் தடுமாற்றம், புலன்கள் மங்குதல், பாலுணர்வில் நாட்டம், குழப்பம், வலி தெரியாது இருத்தல் (குடித்தவனை அடித்துப் பாருங்கள் - அவன் வலியில் துடிப்பதில்லை) பெரும் உணர்வுக் கொந்தளிப்பு... இவையெல்லாம் உடனடி நிகழ்வுகள். நாள்படக் குடிக்கும்போது அதை விட்டு விலக முடியாத மரண நிர்பந்தம்.

குடிப்பழக்கம் ஒரு நோய். அதைத் தீர்க்க முடியும்என்ற நம்பிக்கையை இந்தியாவில் முதலில் விதைத்தவர் சாந்தி ரங்கநாதன். பிரசித்தி பெற்ற டி.டி.கே. குடும்பத்தில் வாழ்க்கைப் பட்ட சாந்திக்கு, திருமண நாளில் இந்த உலகமே இன்பங்களின் சுரங்கம் என்று தோன்றியிருக்க வேண்டும். ஆனால் கணவர் ரங்கநாதன் பெரும் குடிகாரர் என்று சாந்தி அறிந்து கொள்வதற்குள் நிலைமை கைமீறியிருந்தது. ரங்கநாதன் பலமுறை குடியை விட முயற்சி செய்து, முடியாமல் மீண்டும் மீண்டும் அந்த புதைச் சேற்றில் போய் மூழ்குவதை, செயலற்ற நிலையில் சாந்தி பார்த்துக் கொண்டிருந்தார் மனிதனை எல்லாவிதக் கீழ்மைகளுக்கும் மது எடுத்துச் செல்வதைப் பார்த்தவாறே சாந்தி விதவையான போது அவருக்கு முப்பது வயதுதான். ‘இனி என்ன?’ என்ற கேள்வி எழுந்தபோது, ‘மதுப்பழக்கத்திலிருந்து மீள விரும்புகிறவர்களுக்கான மருத்துவமனைஎன்று தன் புகுந்த வீட்டு நபர்களிடம் சொன்னார். அமெரிக்காவில் போய் அதற்கான பயிற்சி எடுத்தார். இந்தியாவின் முதல் மறுவாழ்வு மையம் - டி.டி. ரங்கநாதன் அவர்களின் பெயரில் அடையாரில் எழுப்பப்பட்டது. இன்றுவரை ஆயிரக்கணக்கானவர்களைக் காப்பாற்றி வருகிறது.


ஆரம்பித்த புதிதில் வெறும் 20 நோயாளிகள் இருந்தபோது, அந்த மருத்துவமனையின் முதல் மரணம் நிகழ்ந்தது. கடும் withdrawal symptoms காரணமாக ஒரு நோயாளி இறந்து போனார். பார்த்து பயந்து போன மற்ற நோயாளிகள் சிகிச்சையை நிறுத்திவிட்டு வெளியேற உத்தேசித்தனர். அப்போது தான் அது நடந்தது - இறந்தவரின் மனைவி, ஒவ்வொரு நோயாளியிடமும் போய்சிகிச்சையை நிறுத்த வேண்டாம்என்று மன்றாடிக் கேட்டுக் கொண்டார். ‘என்ன கஷ்டம் வந்தாலும் இதைத் தொடர வேண்டும்என்ற தரிசனம் சாந்திக்குக் கிடைத்த தருணம் அது. பின்னாளில் அவர் பத்மஸ்ரீ விருது பெற்ற நேரத்தைவிட அந்த நேரம் அவருக்குப் புனிதமானது.

ஒரு மாதம் முன்பு நான் பயணம் செய்த கார் போக்குவரத்து நெரிசலில் சிக்கி ஒரே இடத்தில் சுமார் 20 நிமிடம் நின்றது. என் ஜன்னலுக்கு வெளியே ஒரு டாஸ்மாக் கடை. கடையையே பார்த்தேன். என்ன நடக்கிறது அங்கே? மூத்து முதிர்ந்த பெரிசுகள் சிலதும் இளசுகள் பலதும் போவதும் வருவதுமாய் இருந்தனர். கெச்சலான ஆள் ஒருவன் பாடிக்கொண்டே இருக்கிறான். தின்பண்டங்கள் கொண்டுவந்த பாலிதீன் பைகள் வீசி எறியப்பட்டு, பதறிப் பறக்கின்றன. வெளியே வருகிறவர்கள் அநேகமாக காறித் துப்பிக் கொண்டே வருகிறார்கள். வாந்தி எடுத்த ஒருவன், மீதி பாட்டிலை அப்படியே குடிக்கிறான்.  இவர்களில் எத்தனை பேரின் வீடுகளில், மனைவிகள் இன்று அடிபடுவார்கள்? எத்தனை பேருக்கு சில வருடங்களில் லிவர் சிரோஸிஸ் பாதிப்பு வரப்போகிறது! ஊரெங்கும் முளைத்திருக்கும் இந்த விஷத்தாவரம் எத்தனை குடும்பங்களை அழிக்கப் போகிறது? சாராயக்கடை வாசலில் நிறுத்தியிருந்த பைக்கை ஸ்டாண்டில் இருந்து எடுக்கவே தடுமாறும் ஒருவன் போகும் பாதையில் எந்த வண்டியில் அடிபடப் போகிறான்? இல்லை, யாரை மோதப் போகிறான்?

திடீரென்று ஜீன்ஸ் பாண்டும், டீ ஷர்ட்டும் அணிந்திருந்த அந்த இளைஞன் வெளியே வந்தான். உக்கிரமான கெட்ட வார்த்தைகளை இறைத்தான். ‘டேய், நான் சாவறேன்டா...’ என்று கத்தினான். கீழே உட்கார்ந்து, மடை திறந்தாற்போல கதறிக் கதறி அழுதான். கடை சிப்பந்தி அவனை ஓரமாய் நின்று அழச் சொல்கிறார். பக்கத்தில் உள்ள விளக்குக் கம்பத்தின் அருகே போய் கழிவும், சகதியும் நிரம்பிய மண்ணில் அப்படியே சரிந்து திரும்பவும் அழுதான். தன் அழுக்குப் படிந்த கைகளை நீட்டி, எதிரில் இருந்த அத்தனை பேரையும் ஏசி ஏதோ சொன்னான். புறப்பட்டு விட்ட பஸ்ஸின் உருமலில் அவன் வார்த்தைகள் கரைந்தது.


இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்கள் கையில் தான் இருக்கிறது" என்று என் காரை போக்குவரத்துச் சிக்கலில் நிற்க வைத்த அரசியல் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த தலைவர் சொல்கிறார்.

(பயணிப்போம்...)

thanks-mangaiyar  malar