Friday, August 16, 2013

எலந்தப் பயம் எலந்தப் பயம் பாட்டு சூப்பர் ஹிட் ஆனது எப்படி? -எல் ஆர் ஈஸ்வரி


காதோடு நான் பேசுவேன்...

எல் ஆர் ஈஸ்வரி

பாடல் ரெக்கார்டிங்கிற்காக சென்னை வந்திருந்த பிரபல இந்தி பின்னணிப் பாடகியான ஆஷா போஸ்லே விரும்பி அழைத்ததன் பேரில், அவரைக் காண நான் ஜெமினி ஸ்டூடியோவுக்குப் போனேன். ஆஷா போஸ்லேவுடனான அந்த நெகிழ்ச்சியான சந்திப்பை என்னால் என்றைக்கும் மறக்க முடியாது. என்னை மனதாரப் பாராட்டிவிட்டு, எனக்கு ஒரு பரிசுத் தரப்போவதாக அவர் சொன்னபோது, நான் வானத்தில் பறப்பது போல உணர்ந்தேன். தன்னுடைய கைப்பையில் இருந்து, அவர் ஒரு சின்ன பார்சலை எடுத்து என்னிடம் கொடுத்து, ‘பிரிச்சுப் போட்டுக்கங்கஎன்று சொன்னார். நான் ஆர்வத்தோடு அதைப் பிரித்துப் பார்த்தேன். வெள்ளியில் அழகிய வேலைப்பாடு செய்யப்பட்ட பிளாஸ்டிக் வளையல். உடனே அவற்றை அணிந்து கொண்டு நன்றி சொன்னேன். அவர் முகத்தில் மிகுந்த சந்தோஷம்.


பணமா? பாசமா?’ படத்தில் இடம்பெற்றஎலந்தப் பயம்பாட்டு கொஞ்ச நாளைக்கு முன்னால தனுஷ் பாடியஒய் திஸ் கொலைவெறி?’ மாதிரி தமிழ் நாட்டின் பட்டித் தொட்டிகளிலெல்லாம் சூப்பர் ஹிட் ஆன பாட்டு. இத்தனைக்கும் அந்தக் காலத்துல இன்னைக்கு இருக்கிற மாதிரி ஏகப்பட்ட டீ.வி. சேனல்கள் கிடையாது. பாட்டுக் கேட்கணும்னா, ரேடியோதான் ஒரே வழி. அதுலயும் இன்னைக்கு மாதிரி நிறைய எஃப்.எம். அலைவரிசைகளும் கிடையாது. அப்படி இருந்தும் அன்னைக்கு எலந்தப் பழம் பாட்டு அந்த அளவுக்கு ஹிட் ஆச்சுன்னா அது மிகப்பெரிய சாதனை தான். அந்தப் பாடலின் ஒலிப்பதிவுச் சம்பவம் இன்னமும் ரொம்ப நல்லா ஞாபகத்துல இருக்கு.


பணமா? பாசமா?’ படத்தின் டைரக்டர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். உடனடியாக வந்து பாடிக் கொடுக்க வேண்டும் என்று கேட்டார். அன்று காலையில் இருந்த ரெக்கார்டிங்குகளை எல்லாம் முடித்துவிட்டு, மாலை மூணு மணி அளவில் விஜயா கார்டனில் கே.எஸ்.ஜி.யை சந்தித்தேன். அவர்எலந்தப்பழம்...எலந்தப் பழம்...’ என்று ஆரம்பித்து, கண்ணதாசன் எழுதிக் கொடுத்திருந்த பாட்டைக் கொடுத்தார். நான் பாடல் வரிகளைப் படித்துக் கொண்டிருந்தபோது, சட்டென்று ஓர் ஐடியா உதித்தது.
சார்! கவிஞர்எலந்தப் பழம்னு எழுதி இருக்காரு. ஆனா, அதை எலந்தப்பயம்னு மாத்தி பாடினா இன்னுமே நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்னு சொன்னதும், அவர் ஒரு வினாடி யோசித்துவிட்டு, ஸ்லம் பாஷையில பாடறேன்னு சொல்லறே! ம்...சரி! ஒரு தரம் பாடிக்காட்டேன் பார்க்கலாம்!" என்று பச்சைக் கொடி காட்டினார். நானும் ஒரு தடவை முழுப் பாட்டையும் பாடிக் காட்டினேன். அவ்வளவுதான். ‘.கே! டேக் போகலாம்னு சொல்லிட்டார்! எனக்கோ ஒண்ணும் புரியலை. என்ன சார்னு கேட்டேன். ‘ஈஸ்வரி! ரொம்ப நல்லா இருக்கு! நீ இப்படியே பாடிடு!’ என்று சொன்னார். படத்தின் மியூசிக் டைரக்டரான கே.வி. மகாதேவனும், ‘ராஜா! பிரமாதமா இருக்கு; அப்படியே பாடிடு!’ன்னு சொல்லிவிட்டார். பாடினேன்.


சார்! ரிக்கார்டிங் பண்ணினதை நான் ஒரு தடவை கேட்டுக்கறேன். இன்னும் கொஞ்சம் பெட்டரா பாடறேன்; எனக்காக இன்னும் ஒரு டேக் எடுங்களேன்!’ன்னு சொன்னபோது, ‘சரி உன் ஆசைக்காக ஒரு தடம் பாடிடு!’ என்றார். பாடினேன். ‘இது போதும்! உன்னாலையும் சரி, வேற யாராலையும் சரி இந்தப் பாட்டை இதைவிட பிரமாதமா பாடவே முடியாது!’ என்று சொல்லிப் பாராட்டினார்.
 இப்படியாக எலந்தப்பயம் ரெகார்டிங் ரொம்ப சுலபமாக முடிந்துவிட்டது. ஆனால் அப்போது இந்தப் பாட்டு ரொம்பப் பெரிய அளவில் ஹிட் ஆகப்போவது யாருக்குமே தெரிந்திருக்கவில்லை. ‘பணமா? பாசமா?’ படம் கே.எஸ்.ஜி.க்கு மிகப்பெரிய ஒரு வெற்றிப் படமாக அமைந்ததோடு. ‘எலந்தப் பயம் பாட்டு ரொம்பப் பிரபலமானது. இன்றைக்குக் கூட என்னை மெல்லிசை நிகழ்ச்சிகளில் பாட அழைக்கிறவர்கள், அம்மா! எலந்தப் பயம் பாடுவீங்கல்ல?" என்று கேட்கத் தவறுவதில்லை. மேடையிலும் ரசிகர்கள் அந்தப் பாட்டைப் பாடுகிறபோது, பிரமாதமாகக் கைத்தட்டி ரசிப்பது இன்றளவும் தொடர்கிறது.


எலந்தப் பயம் பாடல் ரிக்கார்டிங் முடிந்ததும், மறுநாள் நான் பாடி, ஒலிப்பதிவு செய்யப்படவிருந்தபட்டத்து ராணி பார்க்கும் பார்வை..’ பாட்டை எனக்கு சொல்லிக் கொடுத்தார். கவனித்துக் கேட்டுக் கொண்டு, பாடிக்காட்டினேன். மறுநாள் காலை பத்து மணிக்கு வரச்சொல்லி அனுப்பி வைத்தார்கள்.


மறுநாள் நான் ரிக்கார்டிங்குக்குப் போனபோது, ஆச்சரியம் தாங்கவில்லை. சுமார் நூற்றைம்பது வாத்தியக் கலைஞர்கள் அங்கே திரண்டு வந்திருந்தனர். ரிக்கார்டிங் ஸ்டூடியோவுக்குள் இருக்கும் ஹாலில் எல்லோருக்கும் உட்கார இடம் இல்லாமல், ஹாலுக்கு வெளியில் மரத்தடியில் எல்லாம் கலைஞர்கள் தங்கள் வாத்தியங்கள் சகிதம் உட்கார்ந்துகொண்டிருந்தார்கள். வயலின் கலைஞர்கள் மட்டும் ஐம்பதுக்கு மேல் இருந்தார்கள். அவர்களது வாசிப்பைப் பதிவு செய்வதற்குத் தேவையான மைக்குகள் ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தன மரங்களில் காகங்கள் வந்து உட்கார்ந்து, அனாவசியமான சப்தம் வந்தால் ரிக்கார்டிங் பாதிக்கப்படும் என்று ஆட்கள் கையில் குச்சி வைத்துக் கொண்டு காகங்களை விரட்டிக் கொண்டிருந்தார்கள். நான் ரிக்கார்டிங் அறைக்குள் சென்று மைக் முன்னால் நின்று பாட ஆரம்பித்தேன். அத்தனைக் கலைஞர்களின் இசையையும் ஒருங்கிணைத்து, நான் பாடுவது மிகவும் சிரமமாக இருந்தது. காரணம், நடுவில் ஏதாவது ஒரு வயலின் கலைஞரோ, இல்லை ஃப்ளூட் கலைஞரோ ஒரு சின்ன தவறு பண்ணிவிட்டாலும், மறுபடியும் ஆரம்பத்திலிருந்து எல்லோரும் வாசிக்க வேண்டும்; பாட வேண்டும் என்கிற தொழில்நுட்பக் கட்டாயம் அன்றைய காலகட்டத்தில் இருந்தது.

பட்டத்து ராணிபாடலில் இன்னொரு விஷயம் என்னவென்றால், அதன் மியூசிக்கின் இடையிடையில் மூச்சு இறைக்கும் சப்தம், துப்பாக்கி வெடிக்கிற, சாட்டையை வீசுகிற சப்தமெல்லாம் வரும். அவரவர் வாத்தியங்களை வாசித்துக் கொண்டிருக்கும்போதே, நான் பாடிக் கொண்டிருக்கும்போதே இடையிடையில் அந்த வெடி, சாட்டை சப்தங்களையும் சரியான இடங்களில் சேர்க்க வேண்டும். பகல் ஒரு மணி ஆகிவிட்டது, ஒத்திகை முடிந்து டேக் ஆரம்பித்த பாடில்லை. நான் கவலையோடு இருந்த நேரத்தில் டைரக்டர் ஸ்ரீதரும் எம்.எஸ்.வியும் தனியாகப் போய் ஏதோ பேசிக் கொள்வதை கவனித்தேன். உடனே பயம் பற்றிக் கொண்டது. ‘ஒரு வேளை நான் படுவது அவர்களுக்குப் பிடிக்கவில்லையோ! எனக்கு பதிலாக வேறு யாரை பாடவைப்பது என்றுதான் விவாதித்துக் கொண்டிருக்கிறார்களோ?’ என்றெல்லாம் நினைத்தேன்.


நான் கொஞ்சம் பொறுமை இழந்துவிட்டேன். நேரே ஸ்ரீதர், எம்.எஸ்.வி.இருவரிடமும் போய், ‘என்ன பிரச்னை? நான் சரியா பாடலையா? எனக்கு பதிலா வேற யாரையாவது பாட வைக்கப்போறீங்களா?’ என்று கேட்டுவிட்டேன். ஸ்ரீதர், ‘இல்லம்மா! உன் குரல் ரொம்ப நல்லா இருக்கு! நீ நல்லாத்தான் பாடுற! ஆனால் இப்ப நீ பாடும்போது, வேற ஒரு நபர் மூச்சு இறைக்கும் சப்தம் மாதிரியான எஃபெக்ட்களை குடுக்கறாரு இல்லையா? நான் அது மாதிரி வேணாம்! ஈஸ்வரியே பாடிக்கிட்டே ஹஹ்..ஹஹ்...ஹஹ்..எஃபெக்ட்டையும் கொடுக்கட்டும்னு சொல்லறேன். ஆனா, விசு, உன்னால இரண்டையும் செய்ய முடியாதுன்னு சொல்லறாருஎன்று நிலைமையை விளக்கினார்.


நான் இதை ஒரு சவாலாகவே எடுத்துக் கொண்டு, நான் பாடறேன் சார்!" என்று, பாடிக்காட்டியதும், ஸ்ரீதர் வேறு எதுவுமே சொல்லவில்லை, விசு! டேக் போயிடலாம்" என்று சொல்லிவிட்டார். அடுத்த ஒரு மணி நேரத்தில்பட்டத்து ராணிபாட்டின் ஒரு பாதி ஒலிப்பதிவு முடிந்துவிட்டது.பட்டத்து ராணிபாட்டு இடம் பெற்ற படம்சிவந்த மண்என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். ஸ்ரீதர் அந்தப் படத்தை தமிழிலும் இந்தியிலும் ஒரே நேரத்தில் எடுத்தார். தமிழில் சிவாஜிக்கு ஜோடி காஞ்சனா. அதே போல இந்தியில் ஹீரோ ராஜேந்திரகுமார். அவருக்கு ஜோடி வஹிதா ரஹ்மான். தமிழுக்கு மியூசிக் எம்.எஸ்.விஸ்வநாதன். இந்திக்கு மியூசிக் ஷங்கர்- ஜெய் கிஷண் என்ற இரட்டையர்கள். இங்கேபட்டத்து ராணிபாட்டை ஒலிப்பதிவு செய்து கொண்டு, மறுநாள் ஸ்ரீதர் இதே காட்சிக்குரிய இந்திப் பாடலை பதிவு செய்வதற்காக பம்பாய் புறப்பட்டுச் சென்று விட்டார். இந்தியில்பட்டத்து ராணிபாட்டை லதா மங்கேஷ்கர் பாடுவதாக ஏற்பாடு. அங்கே என்ன நடந்தது?


என்னோட வெயிட் அறுபத்து அஞ்சு கிலோ. உயரம் ஐந்தடி, இரண்டு அங்குலம். முப்பது வருஷமா என்னோட எடை ஏறவும் இல்ல; இறங்கவும் இல்ல... அதுக்கு முக்கியக் காரணம், கண்ணுல பட்டதையெல்லாம் நான் சாப்பிடாமல் இருக்கிறதுதான்.


காலையில அஞ்சரை மணிக்கு வீட்டைச் சுற்றி வாக்கிங் போவேன். அப்புறம் எலிப்டிகல் மிஷினில் உடற்பயிற்சி செய்வேன். பச்சைத் தண்ணீரில் குளிச் சுட்டு சாமி கும்பிடுவேன். ஏழரை மணிக்கெல்லாம் டிபன் சாப்பிட்டு விடுவேன். மதியானம் பசிச்சாதான் சாப்பிடுவேன். இல்லைன்னாமோர் மட்டும் போதும்னு சொல்லிடுவேன். வாயைக் கட்டினா, வாலிபமா இருக்கலாம்!


(கலகலப்போம்...)

1 comments:

'பரிவை' சே.குமார் said...

அருமையான பேட்டியைப் பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்....