Tuesday, January 29, 2013

விஸ்வரூபம் - கோர்ட் வாத விவாதங்கள்

விஸ்வரூபம் விசாரணை நீடிப்பு: சென்சார் போர்டு மீது தமிழக அரசு குற்றச்சாட்டு

சென்னை: விஸ்வரூபம் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கியது சட்டப்படியாக நடைபெறவில்லை என்றும், தணிக்கைச் சான்றிதழ் வழங்கியது நிறைய முறைகேடுகள் நடந்துள்ளது என்றும் சென்சார் போர்டு மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசின் வழக்கறிஞர் குற்றம்சாட்டியுள்ளார்.

விஸ்வரூபம் படம் தொடர்பான வழக்கு இன்று மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.  அப்போது, ராஜ் கமல் ஃபிலிம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், "தமிழகத்தில் 31 கலெக்டரும் ஒரே நாளில் தடை உத்தரவு போட்டனர். இதற்கு யாராவது புகார் அளித்தார்களா?" என்று வாதிட்டார். அதற்குப் பதிலளித்த அரசு வழக்கறிஞர், "இத்தகைய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் உண்டு" என்றார்.

பின்னர் பேசிய ராமன், "கேரளாவில் அதிகம் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் விஸ்வரூபம் வெளியாகியது. அங்கு எவ்வித பிரச்னையும் இல்லை. அமைதியானச் சூழல் அங்கு நிலவுகிறது" என்று வாதிட்டார். அதற்கு, "தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட வாய்ப்புண்டு" என்று அரசு வழக்கறிஞர் வாதிட்டார்.

மேலும், "விஸ்வரூபம் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கியதில் நிறைய முறைகேடுகள் நடந்துள்ளது. சினிமாட்டோகிராஃபி சட்ட விதிகளுக்கு உட்பட்டு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. அதுபற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்று தமிழக அரசு தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த விசாரணை உணவு இடைவேளைக்குப் பிறகு தொடரும் என்று அறிவித்தார். இந்த விசாரணை 2.30 மணியளவில் மீண்டும் தொடங்கி, பின்னர் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, நடிகர் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 25) திரையிடப்படுவதாக இருந்தது. இந்நிலையில் இந்தப் படத்தில் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் பல காட்சிகள் உள்ளதாகக் கூறி இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதன் அடிப்படையில் 2 வார காலத்துக்கு இந்தத் திரைப்படத்தை வெளியிடக் கூடாது என்று மாவட்ட ஆட்சியர்கள் தடை உத்தரவுகளைப் பிறப்பித்தனர்.

இதனைத் தொடர்ந்து இந்த தடை உத்தரவை ரத்து செய்யக் கோரி ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான எஸ். சந்திரஹாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீது கடந்த வியாழக்கிழமை விசாரணை நடத்திய நீதிபதி கே.வெங்கட்ராமன், வழக்கின் விசாரணையை திங்கள்கிழமைக்கு (ஜனவரி 28) ஒத்திவைத்தார். இதற்கிடையில் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் காட்சிகள் ஏதேனும் உள்ளனவா என்பது பற்றி ஆராய்வதற்காக சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் விஸ்வரூபம் படத்தை கடந்த சனிக்கிழமை நீதிபதி பார்த்தார்.

இதைத் தொடர்ந்து, திங்கள்கிழமை காலை நீதிமன்றம் கூடியதும், சந்திரஹாசன் தரப்பைச் சேர்ந்த மூத்த வழக்குரைஞர் பி.எஸ். ராமன் நீதிபதி வெங்கட்ராமனிடம் ஒரு முறையீட்டை முன் வைத்தார். விஸ்வரூபம் படத்துக்கு குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144-ஆவது பிரிவின் கீழ் தடை உத்தரவு பிறப்பித்ததை எதிர்த்தும், தடை உத்தரவு பிறப்பித்த எல்லா மாவட்ட ஆட்சியர்களையும் பிரதிவாதிகளாகச் சேர்த்தும் கூடுதலாக மனுக்களை தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

அவரது முறையீட்டை ஏற்றுக் கொண்ட நீதிபதி, கூடுதல் மனுக்களை தாக்கல் செய்ய அனுமதி அளித்தார். அதே நேரத்தில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு நீதிபதி சில அறிவுரைகளை வழங்கினார்.

இந்தப் பிரச்னையில் மனுதாரர் தரப்பினரோ அல்லது எதிர் தரப்பினரோ மேற்கொள்ளும் எந்த நடவடிக்கையும் நாட்டின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிப்பதாக ஆகி விடக் கூடாது. தனி மனித உரிமையை விட நாட்டின் ஒற்றுமைதான் மிகவும் முக்கியம். கவே, இந்தப் பிரச்னையில் பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு காண்பதற்கான எல்லாவித வாய்ப்புகள் குறித்தும் சம்பந்தப்பட்டவர்கள் முயற்சிக்க வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதி, மனு மீதான விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது.



விஸ்வரூபம் சான்றிதழில் முறைகேடு: தமிழக அரசு

சென்னை: விஸ்வரூபம் திரைப்படத்திற்கு சான்றிதழ் வழங்கப்பட்டதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. விஸ்வரூபம் திரைப்படத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை விலக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணை நடந்து வருகிறது. விசாரணையின் போது பேசிய தமிழக அரசின் வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன், விஸ்வரூபம் திரைப்படத்திற்கு சான்றிதழ் வழங்கப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், திரைப்பட தணிக்கைத்துறை சட்டப்படி சான்றிதழ் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். வழக்கு தொடர்ந்து நடந்து வருகிறது. 



அமெரிக்கா, இங்கிலாந்தில் விஸ்வரூபம் வசூல் சாதனை...!!

Vishwaroopam hit in US and UKஇந்தியாவில் விஸ்வரூபம் படத்திற்கு சிக்கல் எழுந்துள்ள நிலையில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் விஸ்வரூபம் வசூல் சாதனை படைத்து வருகிறது. கமல் நடித்து, இயக்கி, 3 மொழிகளில் தயாரித்துள்ள படம் விஸ்வரூபம். இப்படம் கடந்த 25ம் தேதி ரிலீஸ் ஆனது. ஆனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இப்படம் ரிலீஸ் ஆகவில்லை. காரணம் இப்படத்தில் முஸ்லிம் மதத்தவரை தவறாக சித்தரிப்பதாக கூறி முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்து தெரிவித்தன. இதனையடுத்து சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு இப்படத்தை தடை செய்தது தமிழக அரசு. ஆனால் இப்படத்தை தடை செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கமல் தரப்பில் ஐகோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு இன்று(29.01.13) வர இருக்கிறது. இதற்கிடையே தமிழகத்தில் உதித்த இந்த எதிர்ப்பு இப்போது மற்ற மாநிலங்களிலும் உருவாகியுள்ளது. இதனால் விஸ்வரூபம் படம் இந்தியாவில் பெரும் சிக்கலை சந்தித்துள்ளது. இதனால் படத்தின் வசூல் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் சுமார் ரூ.30 கோடி இழப்பீடு ஏற்பட்டதாக ஒரு சர்வே தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் இப்படம் முடங்கி இருந்தாலும் அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இங்கிலாந்தில் சுமார் 19 தியேட்டர்களில் வெளியான விஸ்வரூபம் படம் ரூ.81.23 லட்சம் வசூல் செய்துள்ளது. அதேபோல் அமெரிக்காவில் 44 தியேட்டர்களில் ரிலீஸான இப்படம் ரூ.3.43 கோடி வசூல் செய்துள்ளது. தொடர்ந்து அந்நாட்டு மக்கள் இடையே இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் இப்படம் இன்னும் வசூல் சாதனை படைக்கும் என்று கூறப்படுகிறது. 
 
 
 
நன்றி - விகடன் , தினமலர்




2 comments:

Unknown said...

வெல்லட்டும் நல் வாதங்கள்

'பரிவை' சே.குமார் said...

என்னதான் நடக்கிறது... பார்க்கலாம்...