Friday, July 03, 2015

வெர்ஜீனியா -பட்டுக்கோட்டை பிரபாகர்

அமெரிக்காவில் ‘இன்னொசன்ஸ் புராஜெக்ட்’ என்கிற அமைப்பு 1992-ல் தொடங்கப்பட்டு, தவ றாக தண்டிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கப் போராடி வருகிறது. இதுவரை 300-க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்டவர் களுக்கு சட்டரீதியாக போராடி விடுதலை வாங்கித் தந்துள்ளது. அதில் தூக்கு தண்டனைக்குக் காத்திருந்த 18 பேரின் உயிரைக் காப்பாற்றியிருப்பது குறிப்பிட வேண்டிய விஷயம்!
இந்த அமைப்பின் முயற்சியால் புதிய தீர்ப்பு எழுதப்பட்ட வழக்குகளில், முக்கியமான வழக்கு வர்ஜினியா ராபர்ட்சனின் கொலை வழக்காகும். இந்த வழக்கில் ஒரு அப்பாவி எப்படி குற்றவாளியாக தண்டிக்கப்பட்டான்? அவன் நிரபராதி என்று எப்படி நிரூபனம் ஆனது?
1986-ம் வருடம். நியூயார்க் மாகாணத்தில் புரூக்ளின் நகரம். ஓர் அதிகாலை. ஒரு சாலையின் நடை பாதையில் ஓர் ஆசாமி ஜாகிங் செய்து கொண்டிருந்தான். அப்போது அவன் ஒரு காட்சியைப் பார்த்தான்.
ஒரு சாம்பல் நிற கார் வந்து நின்றது. சிவப்பு நிற ஜீன்ஸ் பேண்ட் அணிந்த உயரமான, பருமனான நபர் காரில் இருந்து இறங்கினான். காரின் பின்சீட்டில் இருந்து போர்வையால் சுற்றப்பட்டு இருந்த பெண்ணைத் தூக்கி வந்து சாலையோரத்தில் கிடத்தினான். மீண்டும் காரில் ஏறி போய்விட்டான். எல்லாம் சில விநாடிகளில் நடந்து முடிந்துவிட்டன.
ஜாகிங் ஆசாமி அந்த காரின் எண்ணை கவனிக்கவில்லை. போனில் தகவல் கொடுக்க, நியூயார்க்கின் போலீஸ் படை வந்துசேர்ந்தது. லூயிஸ் எப்போ லிட்டோ என்கிற போலீஸ் அதிகாரி இந்த வழக்கைக் கையாண்டார்.
அவள் பெயர் வர்ஜினியா ராபர்ட்சன். தனியாக வசிக்கும் அவள் ஒரு விலைமாது. கயிற்றால் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டி ருந்தாள். இவை முதல் கட்ட விசாரணை யில் தெரிந்த தகவல்கள்.
வர்ஜினியாவின் வீடு சோதனை செய்யப்பட்டது. தொலைபேசி விவரங் கள் சேகரிக்கப்பட்டன. அக்கம்பக்கத்தில் பலர் விசாரிக்கப்பட்டார்கள். போலீஸ் சிலரை சந்தேகப்பட்டது. அவர்களை அணிவகுத்து நிற்கவைத்தது. பிணத்தை முதலில் பார்த்த ஜாகிங் ஆசாமியை அழைத்து, அவர்களில் அடையாளம் காட்டச் சொன்னபோது, அவன் விரல் நீட்டிய நபர்… பேரி கிப்ஸ் என்கிற 42 வயது ஆசாமி.
பேரி கிப்ஸுக்கும் வர்ஜினியாவுக்கும் தொடர்பு இருந்ததும் அவர் களுக்குள் சண்டை ஏற்பட்டதும் உண்மை. ஆனால், ‘நான் கொலை செய்ய வில்லை’ என்றான் கிப்ஸ். சம்பவ இடத்தில் கிப்ஸின் கைரேகை எதுவும் இல்லை.
கிப்ஸிடம் ஒரு கார் இருந் தது. அதுவும் சாம்பல் நிறம். ஆனால், அதன் இரண்டு டயர்களில் காற்று இறங்கியிருந்தது. தான் அதை உபயோகித்து பல நாட்களாயிற்று என்றான் கிப்ஸ். அவனது வீட்டை சோதனை செய்தபோது, சாட்சி சொன்னதைப் போலவே ஒரு சிவப்பு நிற ஜீன்ஸ் பேண்ட் கைப்பற்றப்பட்டது. அது தன்னுடைய பழைய பேண்ட் என்றும், தற்போது தனக்கு சேராது என்றும் சொன்ன கிப்ஸ் அதைப் போட்டும் காட்டினான். அது அவனுக்குச் சேரவில்லை.
ஆனால், இந்த வழக்கில் கண்ணால் பார்த்த சாட்சி மிகவும் உறுதியாக இருந்ததாலும், வர்ஜினியாவுக்கும் கிப்ஸுக்கும் முன் பகை இருந்ததாலும், அந்தக் கொலையைச் செய்தது கிப்ஸ் தான் என்று தீர்மானமாகி அவனுக்கு 20 வருடங்கள் சிறை தண்டனை என்று கோர்ட்டில் தீர்ப்பானது.
கிப்ஸ் கடைசி வரை தான் குற்ற வாளி இல்லை என்றுதான் சொல்லி வந்தான். தன் விதியை நொந்தபடி சிறை தண்டனையை அனுபவித்த அவன், 1992-ம் வருடம் தனக்கு உதவுமாறு ‘இன்னொசன்ஸ் புராஜெக்ட்’ அமைப்புக்கு கோரிக்கை விடுத்தான். அப்போது வழக்கத்துக்கு வர ஆம்பித்திருந்த டி.என்.ஏ. சோதனை செய்தால், தான் குற்றம் செய்யாதவன் என்பது தெரிந்துவிடும் என்று அவன் கேட்டிருந்தான்.
நீதிமன்றத்தில் கிப்ஸின் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டது. ஆனால், அப்போது வழக்கு தொடர்பான பல சாட்சியங்கள் தொலைந்தும், அழிந்தும் போயிருந்தன. இருந்த சில சாட்சியங்களில் கிப்ஸுக்கு பலனளிக்கும் முடிவுகள் எதுவும் வரவில்லை. இன்னொரு முக்கியமான விஷயம், கிப்ஸின் வழக்கு ஃபைலையே காணவில்லை என்கிற அதிர்ச்சியான செய்தியும் கிடைத்தது.
2005-ம் வருடம் கிப்ஸின் வழக்கை விசாரித்த போலீஸ் அதிகாரியான எப்போலிட்டோ கைது செய்யப்பட்டார். அவர் பலவிதமான குற்றங்களை செய்துவந்த ஒரு மாஃபியா கும்பலுடன் தொடர்பில் இருந்துவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு ஆயுள் தண்டனையுடன் 100 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. எப்போலிட்டோவின் வீட்டில் சோதனை போட்டபோது அங்கு கிப்ஸின் வழக்கு ஃபைல் கைப்பற்றப்பட்டது.
‘இன்னொசன்ஸ் புராஜெக்ட்’ அமைப்பு மீண்டும் முனைப்புடன் கள மிறங்கியது. சாட்சியை மீண்டும் விசா ரித்தபோது, அவன் எப்போலிட்டோ தனக்கு பணம் தந்ததுடன், தன்னை மிரட்டி அடையாள அணிவகுப்பில் கிப்ஸை அடையாளம் காட்டச் சொன்ன தாகச் கூறினான். தனக்கு தொடர்புள்ள மாஃபியா கும்பலைச் சேர்ந்த ஒருவனை அந்தக் கொலைக் குற்றத்தில் இருந்து காப்பாற்ற கிப்ஸை எப்போலிட்டோ பலிகடாவாக்கியது தெரியவந்தது.
கிப்ஸ் விடுதலை செய்யப்பட்டான். எப்போது? தன் தண்டனை காலமான 20 வருடங்களில் 19 வருடங்களை சிறையில் கழித்த பிறகு.
விடுதலையான கிப்ஸ் நியூயார்க் நகர அரசின்மீது தான் சிறையில் இருந்த வருடம் ஒன்றுக்கு ஒரு மில்லியன் வீதம் மொத்தம் 19 மில்லியன் டாலர்கள் கேட்டு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று வழக்கு தொடுத்தான். அந்த வழக்கு நான்கு ஆண்டுகள் நடந்தது. 2010-ம் வருடம் கிப்ஸுக்கு 909 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.50 கோடி) வழங்க வேண்டும் என்று தீர்ப்பானது. இதுதான் நியூயார்க் நகர வரலாற்றில் ஒரு தனி மனிதனுக்கு அரசு அளித்த உச்சமான நஷ்ட ஈடு தொகையாகும்.
விடுதலையான கிப்ஸ் பத்திரிகை யாளர்கள் சந்திப்பில் மனம்விட்டுப் பேசினான். ‘‘சிறையில் இருந்த ஒவ்வொரு நாளும் மரண வேதனைதான். எந்தத் தவறும் செய்யாமல் தண்டனை அனுபவிக்கிறோமே என்று மனம் நொந்துபோனேன்.
மனஅழுத்தம் ஏற்பட்டு மன நலம் கெட்டுப்போனது. உடல் நலமும் கெட்டது. கம்ப்யூட்டர், செல்போன் என்று உலகமே முற்றிலு மான மாறிப் போயிருக்கிறது. இனி, ஒவ்வொரு நாளும் இதுதான் என் கடைசி நாள் என்று நினைத்துக் கொண்டு வாழப் போகிறேன். என்னை இந்த வழக்கில் சிக்க வைத்த அந்த அதிகாரி, நான் அனுபவித்த சிறை என்னும் அதே நரக வேதனையை அனுபவிக்கப் போகிறான் என்பதை நினைத்தால் ஆறுதலாக இருக்கிறது.’’
‘இன்னொசென்ஸ் புராஜெக்ட்’ போன்ற ஓர் அமைப்பு இந்தியாவில் இருப்பதாகத் தெரியவில்லை. இல்லை என்றால் சிறந்த வழக்கறிஞர்கள் அப்படி ஓர் அமைப்பை உருவாக்கலாம்.
கதையில் உத்தி
ஒரு கதையில் ஒருவர் கடத்தப்படுவார். அவரை விடுவிக்க பணயத் தொகை கேட்டு போனில் மிரட்டுவான் கடத்தல்காரன். அந்தத் தொலைபேசி உரையாடலைப் பதிவு செய்து, பெரிதுபடுத்தி கேட்கும்போது ஒரு பரபரப்பான கடைத் தெருவின் சத்தங்கள் கேட்கும். அதில் ஒருவன் ராகமாக ‘மூன்று பேனா… ஒரு ரூபா…’ என்று கத்தி விற்பதைக் கேட்க முடியும்.
சென்னையில் எங்கு இப்படி கூவி விற்பனை செய்வார்கள் என்று விவாதிப்பார்கள். பாரிமுனைக்கு வருவார்கள். அதே போல ராகமாக கூவி பேனா விற்பவனைக் கண்டுபிடிப்பார்கள். அவன் நிற்கும் இடத்துக்கு அருகில் உள்ள லாட்ஜ்களில் சோதனை போட்டு கடத்தல்காரனைக் கண்டுபிடிப்பார்கள்.
- வழக்குகள் தொடரும்….


நன்றி -த இந்து

0 comments: