Wednesday, March 27, 2013

ராஜபக்சேவை அமெரிக்கா, இந்தியா ஆதரிக்கும் மர்மம் - பழ நெடுமாறன் ஜூ வி கட்டுரை

கண்டனமா? கண்துடைப்பா?
'தமிழர் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள ராணுவத்​தினரைத் திரும்பப் பெற வேண்டும்


; இலங்கை நடத்திய போர்க் குற்றங்கள், மனித உரிமைகள் மீறல்கள் குறித்து நம்பகமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்’ - இப்படி முக்கியமான கோரிக்கைகளை ஐ.நா. மனித உரிமைகள் குழுவின் ஆணையர் நவநீதம் பிள்ளை, ஜெனிவாவில் கூடிய கூட்டத்தில் 38 பக்கங்கள் கொண்ட அறிக்கையாக முன்​வைத்தார். இந்தச் செய்தி வெளியானபோது உலகெங்கும் உள்ள தமிழர்களின் உள்ளங்களில் நம்பிக்கை ஒளி படர்ந்தது.அந்த அறிக்கையில் வேறு முக்கியமான அம்சங்கள் என்ன இருந்தது தெரியுமா?


இலங்கையில் போர் நடைபெற்ற வேளையில் வயதானவர்களும் சிறுமிகளுமாக ஆயிரக்கணக்கான​வர்கள் காணாமல் போயுள்ளனர். அவர்களைத் தேடிக் கண்டுபிடிக்க எந்த நடவடிக்கையையும் இலங்கை மேற்கொள்ளவில்லை. இந்த நிலையில் போருக்குப் பிறகும் ஆள் கடத்தல் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடக்கின்றன.தமிழர்கள் வசிக்கும் பகுதியில் சிங்கள ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சிவில் நிர்வாகத்திலும் ஆதிக்கம் செலுத்தி வருகி​றார்கள். இதன் விளைவாக அங்கு வாழும் தமிழ்ப் பெண்களுக்கு பாலியல் வன்முறை அச்சம் நிலவுகிறது.


போருக்குப் பின் செய்ய வேண்டிய நிவாரணப் பணிகள், மீள் குடியமர்த்தல் போன்​றவை நிறைவேற்றப்படவில்லை. இலங்கை அரசின் தேசிய செயல்திட்டத்திலும் அவை புறக்​கணிக்கப்பட்டுள்ளன. தமிழர்களின் போர் நினைவுச் சின்னங்கள் அழிக்கப்பட்டுள்ளன.மனித உரிமை மீறல்கள் குறித்து விசா​ரணை நடத்துவதாகக் கூறிய இலங்கை அரசு முழுமையான விசாரணை எதுவும் நடத்தவில்லை. இடம்பெயர்ந்த மக்களைக் குடியமர்த்தும் பணியையும் செவ்வனே செய்ய​வில்லை. 2006-ம் ஆண்டு அதிபர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை இன்னும் வெளியிடவில்லை. சிறுபான்மையினரான தமிழர்​களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்க வேண்டும்.


தமிழர்களின் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள ராணு​வத்தினரைத் திரும்பப் பெறவேண்டும். இலங்கை நடத்திய போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்​கள் குறித்து நம்பகத்தன்மை வாய்ந்த சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்கிறது அந்த அறிக்கை.


ஆணையர் நவநீதம் பிள்ளையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள ஆலோசனைகளை உள்ளடக்கிய தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவந்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்வதற்கு அமெரிக்கா தவறிவிட்டது.


அமெரிக்காவின் வரைவுத் தீர்மானத்தில் ஆணையரால் குறிப்பிடப்பட்ட முக்கியமான ஆலோசனைகள் இடம்பெறவில்லை. நீர்த்துப்போன தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவந்தது. இதற்கு இந்தியாவின் முழுமையான ஒத்துழைப்பு இருந்தது.


அமெரிக்கத் தீர்மானத்தின் முக்கிய அம்சங்கள் இதுதான்... 'இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் உள்ள ராணுவத்தினரை உடனே அகற்ற வேண்டும். போரின்போது தமிழர்கள் பலர் காணாமல்போனது கவலை அளிக்கிறது. இலங்கை அரசு நியமித்த நல்லிணக்கக் குழுவின் பரிந்துரைகளை முழுமை​யாக நிறைவேற்றும் திட்டம் இலங்​கைக்கு இல்லை. இலங்கைத் தமிழர்களுக்கு வாழ்வாதாரம், நீதி, நல்லிணக்கம் முழுமையாகச் செய்யப்படவில்லை. போர்க் குற்றம் தொடர்பாக இலங்கை அரசே விசாரணை நடத்த வேண்டும்.’ - இவைதான் அமெரிக்கத் தீர்மானத்தின் சாராம்சம்.


உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் சார்பில் இரண்டு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. ஈழத் தமிழர்கள் இனப்படுகொலைக்கு ஆளாகி வருவது குறித்தும் போர்க் குற்றங்கள் குறித்தும் சர்வதேச நீதி விசாரணை வேண்டும் என்ற கோரிக்கைகள் முக்கியமாக வலியுறுத்தப்பட்டன. ஆனால் இந்த இரண்டு கோரிக்கைகளையும் அமெரிக்கத் தீர்மானம் புறந்தள்ளிவிட்டதுடன், அதற்கு எதிராகவும் அமைந்துவிட்டது.


அமெரிக்கத் தீர்மானம் போர்க் குற்றங்கள் குறித்த சுதந்திரமான சர்வதேச நீதி விசாரணை என்பதை ஏற்கவில்லை. மாறாக இலங்கையே அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்கிறது.


இலங்கையின் வடக்கு மாநிலத்தில் சீர்திருத்த நடவடிக்கைகளும் மனித உரிமைகளும் நிலை​நிறுத்தப்பட வேண்டும் என அமெரிக்கத் தீர்மானம் வலியுறுத்துகிறதே தவிர, கிழக்கு மாநிலத்தைப் பற்றி எதுவும் கூறவில்லை. இதன் மூலம் கிழக்கு மாநிலம் சிங்களவர்களுக்குச் சொந்தமானது என மறைமுகமாக அமெரிக்கத் தீர்மானம் கூறுகிறது.


வடக்கு மாநிலத்தில் மாகாண சபைக்கான தேர்தல் சுயாதீனமாக நடத்தப்பட வேண்டும் என அமெரிக்கத் தீர்மானம் கூறுவது கொடுமையான வேடிக்கை. ஏனெனில் வடக்கு மாநிலத்தில் வாழ்ந்த 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் சொந்த வீடுகளில் இருந்து விரட்டியடிக்கப்பட்டு இன்னமும் அகதிகளாக அலைந்து திரிகிறார்கள். தமிழர் பகுதிகளில் வேகமாகவும் தங்குதடையில்லாமலும் சிங்களக் குடியேற்றங்கள் நடைபெறுகின்றன. வடக்குப் பகுதி ராணுவமயமாகிவிட்டது. இந்தச் சூழ்நிலையில் சுதந்திரமான தேர்தல் எப்படிச் சாத்தியமாகும்? ஒரு போலியான தேர்தலை நடத்துவதற்கு சிங்கள அரசுக்கு அமெரிக்கத் தீர்மானம் உதவுகிறது.வெற்று வாக்குறுதிகள் நிறைந்த இந்தத் தீர்மானத்​தில் கூறப்பட்டவற்றை நிறைவேற்றுவதற்கு சிங்கள அரசுக்கு ஓர் ஆண்டு கால அவகாசத்தை அமெரிக்கத் தீர்மானம் அளித்திருப்பது அவல நகைச்சுவையின் உச்சக்கட்டம். கடந்த ஆண்டு நடந்த மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் இதைப் போல ஓர் ஆண்டு கால அவகாசம் சிங்கள அரசுக்கு அளிக்கப்பட்டபோது எத்தகைய நிவாரண நடவடிக்கைகளும் அங்கு நடைபெற​வில்லை.


கடந்த ஆண்டு இலங்கை அரசுக்குக் கொடுக்கப்பட்ட அவகாசத்தில் மேலும் மேலும் தமிழர்களுக்குக் கொடுமைகள் இழைக்கப்​பட்டனவே தவிர, நிலைமை சிறிதளவுகூட மாறவில்லை. இப்போது இன்னும் ஓர் ஆண்டு கால அவகாசம் அளிப்பது எஞ்சியுள்ள தமிழர்களை முற்றிலுமாக அழிப்பதற்கே உதவும். அமெரிக்கத் தீர்மானத்தை இலங்கை எதிர்ப்புத் தீர்மானம் என அழைப்பது மிகத் தவறானதாகும். உலகக் கண்டனத்தில் இருந்து இலங்கையைக் காப்பாற்றும் தீர்மானமே அது.அமெரிக்கத் தீர்மானம் குறித்து நடைபெற்ற விவாதத்தில் இந்தியாவின் பங்கு என்பது சூழ்ச்சிகர​மானது. தான் நேரடியாக சம்பந்தப்படாமல் பின்னணியில் இருந்து இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்காவின் தீர்மானத்தை வடிவமைத்தது இந்தியாதான். இலங்கைப் பிரச்னை சம்பந்தமாக இலங்கை அரசுடன் பேசுவதற்கு வழக்கமாக அனுப்பப்படும் பிரதமரின் ஆலோசகர் சிவசங்கர​மேனன் இம்முறை அனுப்பப்படவில்லை


. மாறாக அரசாங்கத்துடனோ காங்கிரஸ் கட்சியுடனோ எந்தவிதத்திலும் சம்பந்தப்படாத சுப்பிரமணியன் சுவாமியை, இந்திய அரசு தனது தூதுவராக இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் அனுப்பியது. அவர் சென்று இந்தியாவின் கருத்தோட்டத்துக்கு ஏற்ப அமெரிக்கா தனது தீர்மானத்தை உருவாக்குவதற்குக் காரணமாக இருந்தார். சுப்பிரமணியன் சுவாமி ஒரு தனி நபர். 


 ஆனால் இலங்கை அதிபர் ராஜபக்ஷே, அமெரிக்காவின் வெளியுறவுத் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் ஆகியோரை அவர் சந்தித்துப் பேசிய விவரங்கள் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. ஒரு தனி நபருக்கு இவ்வளவு செல்வாக்கு அரசு வட்டாரங்களில் இருக்க முடியாது. இந்தியாவின் சார்பில் அவர் சென்றார் என்பதினால்தான் அவரைச் சந்தித்துப் பேச, இலங்கை, அமெரிக்க அரசு உயர் மட்டத்தினர் முன்வந்தனர்.அது மட்டுமா? நாடாளுமன்றத்தில் முலாயம்சிங் யாதவ் போன்றவர்கள் இந்திய அரசின் இலங்கைக் கொள்கையைக் கடுமையாக விமர்சனம் செய்தார்கள். ஆனால், இப்போது அவர்கள் மாறிவிட்டனர். இதற்குப் பின்னணி என்ன? இந்தியாவில் இலங்கைத் தூதுவராக இருக்கும் பிரசாத் கரியவாசம், முலாயம் சிங் மற்றும் பல்வேறு வட மாநில முதல்வர்களை எல்லாம் சந்தித்துப் பேசி சிங்கள அரசின் நிலைக்கு ஆதரவாக அவர்களை மாற்றியிருக்கிறார். வெளிநாட்டுத் தூதுவர் ஒருவர் டெல்லியைவிட்டு வெளியேச் செல்ல வேண்டுமானால்கூட இந்திய அரசின் அனுமதி தேவை. மாநில முதலமைச்சர்களைச் சந்திப்பதற்கும் இந்திய அரசு அனுமதிக்க வேண்டும். ஆக, இந்திய அரசுதான் அவருக்கு இத்தகைய ஆலோசனைகளை வழங்கி, எதிர்க்கட்சித் தலைவர்களையும் முதல்வர்களையும் சந்தித்துப் பேசச் செய்திருக்கிறது.    ஒட்டுமொத்தத் தமிழகத்தின் கடும் எதிர்ப்பும், இதுவரை கூட்டணிக் கட்சியாக இருந்த தி.மு.க. வெளியேறியதும் மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படுத்தவில்லை. அதைப்போல, உதட்டளவில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசும் அமெரிக்காவும் இந்தப் பிரச்னையில் இரட்டை வேடம் போடுகிறது. அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளின் நிலைப்பாடு என்பது ஈழத் தமிழர் பிரச்னையைப் பயன்படுத்தி இலங்கை அரசை மிரட்டி சீனாவிடமிருந்து பிரிக்க நினைக்கிறது.இலங்கையிலும், குறிப்பாக இந்துமாக்​கடலிலும் சீனாவின் ஆதிக்கம்  ஏற்படுவது தன்னுடைய உலகளாவிய நலன்களுக்கு எதிரானது என அமெரிக்கா கருதுகிறது. இந்தியாவும் தனது தென்னாசிய நலன்​களைப் பொறுத்தவரையில் சீனாவின் தலையீட்டை விரும்பவில்லை. எனவே, அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து இந்தப் பிரச்னையைப் பயன்படுத்தி ராஜபக்ஷே அரசுக்கு நெருக்குதல் கொடுத்து, சீனாவின் பிடியிலிருந்து அவரை மீட்பது ஒன்றே அவர்களது நோக்கம். ஏனெனில், அமெரிக்காவின் இந்துமாக் கடலின் நலன்களும் இந்தியாவின் பிராந்திய அரசியல் பொருளாதார நலன்களும் முக்கி​யமே தவிர, ஈழத் தமிழர்களின் வாழ்வு அவர்களுக்கு முக்கியமல்ல.ஈழத்தில் நடக்கும் இனப்படுகொலை, போர்க் குற்றம், மனித உரிமை மீறல் ஆகியவை குறித்து எவ்வளவோ உண்மைகளை வெளிப்படுத்தியும்கூட, அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் தங்களின் அரசியல், பொரு​ளாதார நலன்களை மட்டுமே மனதில்கொண்டு ராஜபக்ஷேவின் ரத்த வெறிக்கு ஈழத் தமிழர்களைக் காவு கொடுக்கத் துணிந்துவிட்டன என்பதைத்தான் அமெரிக்கத் தீர்மானம் எடுத்துக்காட்டுகிறது.


எனவே, இது கண்டனத் தீர்மானம் அல்ல... கண்துடைப்புத் தீர்மானம்!


நன்றி - ஜூ வி

0 comments: