Tuesday, March 05, 2013

ஹெலிகாப்டர் ஊழல் -இத்தாலி -அதிரடி ( A TO Z SECRETS)


டெல்லி டு இத்தாலி!

கிலி கிளப்பும் ஹெலிகாப்டர் ஊழல்


இந்திய அரசியல் வரலாற்றில் பல புகழ்​பெற்ற ஊழல்கள் பூதாகரமாகத் தோன்றி சாதாரணமாக மறைந்துள்ளன. அதிலும் ராணுவ ஊழல்கள் சுதந்திரம் அடைந்த மறு வருடத்திலேயே தொடங்கியது. கிருஷ்ணன் மேனன் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த காலத்தில் தொடங்கிய ஜீப் ஊழல் முதல், இப்போதைய ஹெலிகாப்டர் விவகாரம் வரை பட்டியலில் உண்டு. எல்லா ஊழல்களுமே மர்ம​மாகவே முடித்துவைக்கப்பட்டன. இப்போது புதிதாக விஸ்வரூபம் எடுத்துள்ள ஹெலிகாப்டர் விவகாரமும் இந்த ரகம்தான்.  


காங்கிரஸ் கட்சிக்கு எதிராக எதிர்க் கட்சிகள் தூக்கப்போகும் இந்த ஹெலிகாப்டர் ஆயுத விவாதத்தில், பல திருப்புமுனைகள் வர உள்ளன. ஹாலிவுட் திரைப்படங்களுக்கு நிகரான அதிரடிகள் இதோ...


பூனைக்குட்டி வெளியே வந்தது எப்படி? 


1999-ல் முக்கியப் பிரமுகர்களின் பாதுகாப்பைக் கருதி புதிய ஹெலிகாப்டர்களை வாங்க அன்றைய பி.ஜே.பி. அரசு முடிவுசெய்தது. மூன்று ஹெலிகாப்டர்கள் வாங்குவதாக ஆரம்பித்து, பின்னர் எட்டு ஹெலிகாப்டர்களாகி, இறுதியில் 12 வாங்க முடிவு எடுத்து டெண்டர் விடப்பட்டது. இந்த விவகாரம்தான் இப்போது வெடிக்கிறது.



51 மில்லியன் யூரோ ஊழல் தொகையாக இந்தியர்களுக்கும் மற்றவர்களுக்கும் கொடுக்கப்​பட்டுள்ளது என்று கடந்த பிப்ரவரி 12-ம் தேதி இத்தாலி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இது இந்திய ரூபாய் கணக்கில் 362 கோடி. 2010-ல் முடிவு செய்யப்பட்ட இந்த 12 ஹெலிகாப்டர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலை 3,546 கோடி ரூபாய். இதில் 10 சதவிகிதம் கமிஷன் என பேரம் நடந்துள்ளது என்று இத்தாலி அரசு வழக்கறிஞர் அறிக்கை தாக்கல்செய்தது. 



 அந்த ஹெலிகாப்டர் நிறுவனத் தலைமை அதிகாரி கியூசெப் ஒர்சி என்பவர் கைதுசெய்யப்பட்டு, சிறைக்கு அனுப்பப்பட்டார். இந்திய ராணுவத்தின் டெண்டரில் கொடுக்கப்பட்ட லஞ்ச விவகாரம் இத்தாலியில் வெடித்தது அதிர்ச்சியை பன்மடங்காக உயர்த்தியது.  



2011-ல் இத்தாலியில் பிரதமராக இருந்தவர் சில்வோ ப்ரூல்ஷ்கானி. அவர் மீது பல்வேறு கிரிமினல் வழக்குகள், செக்ஸ் ஊழல்கள் எல்லாம் சுமத்தப்​படவே, பதவி விலக நேர்ந்தது. அவருக்கு அடுத்துப் பதவி ஏற்றவர் மரியோ மோன்ட்டி. பதவி விலகிய ப்ரூல்ஷ்கானி தன் மீது உள்ள செக்ஸ் வழக்குகள் போன்றவற்றையும் தாண்டி, மக்கள் விடுதலைக் கட்சி என்ற பெயரில் மீண்டும் அரசியலில் தீவிரமாக இறங்கினார். 


76 வயதைக் கடந்த ப்ரூல்ஷ்கானி மூன்று தடவை பிரதமராக இருந்தவர். இப்போது மீண்டும் பிரதமர் பதவிக்கான போட்டியில் இறங்க, இவருடைய அரசியலுக்கு வைக்கப்பட்ட குறிதான் இந்த ஹெலிகாப்டர் விவகாரம். இத்தாலி பிரதமர் மரியோ மோன்ட்டியின் அரசியல் ஆக்ஷன் இல்லை என்றால், இந்தியர்களுக்கு இந்த ஹெலிகாப்டர் பேரம் தெரியவே வாய்ப்பு இல்லை.  



இந்தியாவுக்கு ஹெலிகாப்டர்களை சப்ளை செய்த நிறுவனத்தின் பெயர் ஃபின் மெக்கனிகா. இது தனியார் நிறுவனம் என்றாலும், இதில் 30 சதவிகிதம் இத்தாலி அரசின் பங்கும் உண்டு. இந்த நிறுவனத்தின் ஹெலிகாப்டர்களை விற்பதில் ப்ரூல்ஷ்கானி செலுத்திய ஆர்வமும் இதில் நடந்த பேரங்கள் குறித்த தகவல்களும் பிரதமர் மரியோ மோன்டியால் கிளறப்படுகின்றன.


இத்தாலி தேர்தல்... இந்தியா ஆர்வம்! 



''இத்தாலியின் பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணம்... மோசமான நிர்வாகமும் இத்தாலி நிறுவ​னங்களின் பணம் வெளிநாடுகளுக்குத் தவறான வழியில் போவதும்தான்'' என்று கூறி இந்த நடவடிக்கைகளுக்கு மரியோ மோன்ட்டி விளக்கம் சொன்னார்.



இத்தாலி பிரதமர் மரியோ மோன்ட்டியின் பதவிக்​காலம் இந்த மாதத்தோடு முடிவடைகிறது. 24, 25-ம் தேதிகளில் இத்தாலியில் தேர்தல் நடந்து முடிந்தது. யார் பிரதமராக வருகிறார்களோ அவர்களைப் பொறுத்தே ஹெலிகாப்டர் பேர விவகாரத்தின் தலைவிதி உள்ளது. அந்தத் தேர்தல் முடிவுகளை இத்தாலி அரசியல்வாதிகள் மட்டுமன்றி, இந்திய அரசியல்வாதிகளும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்கள். கடந்த 2012 பிப்ரவரியிலேயே இந்த பேரம் குறித்த தகவல் வெளியாகியும் இந்திய ராணுவ அமைச்சகம் மட்டுமல்ல... எதிர்க் கட்சிகளும் தூங்கிக்கொண்டு இருந்ததுதான் வேதனை.  



இந்தியாவும் இத்தாலியும் 


இப்போதைய பிரதமர் மரியோ மோன்ட்டி தனது ஆட்சியைத் தக்கவைக்க வேண்டும் என்கிற நோக்கத்​தோடு தொடங்கியதுதான் ஃபின் மெக்கனிகா ஆபரேஷன். ஆனாலும், அவரது ஆட்சிக்குக் கொடுத்துவந்த ஆதரவை சில கட்சிகள் வாபஸ்பெற, கடந்த டிசம்பர் மாதம் மெஜாரிட்டி பலத்தை இழந்தார்.


 மோன்ட்டிக்கு முன்பு பிரதமராக இருந்த சில்வியோ ப்ரூல்ஷ்கானி கூட்டணியில் ஏழுக்கும் மேற்பட்ட கட்சிகள் உள்ளன. இதில் நார்த் லீக் என்கிற கட்சியைச் சேர்ந்த லிகா நோர்ட் போன்றவர்களின் ஆதரவாளர்கள்தான் ஊழல் நடைபெற்றுள்ள இந்த ஃபின் மெக்கனிகாவின் தலைமைப் பொறுப்​பில் இருந்தனர்.


 இந்த நிறுவனத்தின் துணை நிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லேண்ட் இங்கிலாந்தில் இருக்கிறது. அந்த நிறுவனத்தின் கீழ்தான் ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்படுகின்றன. இப்போது கைதாகி இருக்கும் ஃபின் மெக்கனிகாவின் தலைவரான கியூசெப் ஓர்சி, முன்னாள் பிரதமர் ப்ரூல்ஷ்கானிக்கும் லிகா நோர்ட்டுக்கும் வேண்டப்பட்டவர். ஓர்சி லண்டனில் ஹெலிகாப்டர் தயாரிக்கும் அகஸ்டா வெஸ்ட்லேண்ட்டில் முன்பு தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்தார். இந்த சமயத்தில்தான் இந்த ஹெலிகாப்டர் டெண்டரும் பேரங்களும் நடந்​திருந்தன. அந்தப் பணத்தைக் கட்சிப் பணிகளுக்குப் பயன்படுத்தி இருப்பதும் தெரியவந்து இருக்கிறது.


முன்னாள் பிரதமர் சில்வோ ப்ரூல்ஷ்கானி ''லஞ்சம் கொடுப்பது இந்தியாவில் வேண்டு​மானால், அது சட்ட விரோதமாக இருக்கலாம். இத்தாலிய நிறுவனங்களில் இதுபோன்ற ஊழல்​களுக்காக டெண்டர்களை ஆய்வுசெய்தால், அது நாட்டின் பொருளாதாரத்தையே பாதிக்கும்'' என ஒரே போடாகப் போட்டு இருக்கிறார்.



இன்ஃபார்மர் 


2011-ல் இந்த ஊழல் வழக்கின் விசாரணை தொடங்கியது. இதில் வந்த முதல் இன்ஃபார்மர் இந்த நிறுவனத்தின் வெளி விவகாரங்களுக்கான முன்னாள் தலைமை அதிகாரி லோரென்சோ போர்கோனி. இவர்தான் முதன் முதலில் டெண்டர்களைப் பெறக் கொடுக்கப்பட்ட கையூட்டு விவகாரங்களை வெளிப்படுத்தினார். பின்னர் இத்தாலிய அரசு வழக்கறிஞர்களிடம் வாக்கு​மூலமாகவே கொடுத்தார்.


 இதில் இந்தியா சம்பந்தப்பட்ட ஹெலிகாப்டர் விவகாரத்தில் 51 மில்லியன் யூரோ வரை கையூட்டு கொடுக்கப்​பட்டது உட்பட பல விவகாரங்களைப் புலனாய்வுத் துறையிடம் கொட்டினார். மற்ற விவகாரங்​களும் ஒவ்வொன்றாகக் குவிந்தன. இதில் சம்பந்தப்பட்ட இடைத்தரகர்கள் ரால்ப் கைடோ ஹேஸ்செக், கார்லோ ஹெரோஸா, கிறிஸ்டியன் மிஷெல் மற்றும் இந்தியாவில் பலன் அடைந்த ராணுவத் தளபதி தியாகி ஆகியோரின் பெயர்களை சொல்ல விசாரணை சூடுபிடித்தது. இதில் ஹேஸ்செக் மற்றும் கிறிஸ்டியன் மிஷெல் இடையே நடந்த தொலைபேசி உரையாடல்களின் ரகசியப் பதிவுகள் பல உண்மைகளை வெளியே கொண்டுவந்து இத்தாலி நீதிமன்றத்தில் கடந்த ஆண்டே ஒப்படைக்கப்​பட்டன.


முதல் பலி 


இப்படி தொடங்கிய இந்த விசாரணையில் ஃபின் மெக்கனிகா நிறுவனத்தின் லண்டன் பிரிவான அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்​தின் வர்த்தகப் பிரிவு இயக்குநர் பலோ பஸ்காரி என்பவர்தான் முதன் முதலில் சிக்கினார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இவர் கைது​செய்யப்பட்டார். பிரேசில் மற்றும் பனாமா நாட்​டுக்கு முறையே ராணுவப் படகு மற்றும் ஹெலிகாப்டர் விற்ற விவகாரத்தில் நடந்த கையாடலில்தான் இவர் பிடிபட்டார். இந்தக் கைதுக்குப் பின்னர் இந்தியாவில் நடந்த ஹெலி​காப்டர் ஊழல்களும் தப்பாது என்று தெரிய... நம்ம புள்ளிகளின் வயிற்றையும் கலக்​கியது.


கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஊழல் விசாரணை தொடங்கியதுபற்றி தகவல் வந்தாலும், 'தவறு எதுவும் நடக்கவில்லை என்று ஃபின் மெக்கனிகா நிறுவனம் அறிக்கை கொடுத்துள்ளது’ என்றது இந்திய பாதுகாப்பு அமைச்சகம். தொடர்ந்து செய்திகள் வரவே, பாதுகாப்பு அமைச்சகம் கடந்த ஏப்ரலில் இத்தாலியில் இந்திய தூதரகத்துக்குக் கடிதம் எழுதி விவரங்களைக் கேட்டதே தவிர, விசாரணையில் இறங்கவில்லை. இந்தியாவிடம் ஹெலிகாப்டர்கள் ஆர்டர்களைப் பெற, 362 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்த விவகாரம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலேயே வந்துவிட்டது. இத்தாலியின் புலனாய்வு அமைப்பினர் 568 பக்க அறிக்கையை நீதிமன்றத்திலும் தாக்கல்செய்தனர்.



லஞ்சப் பணத்தின் ஒரு பகுதி இத்தாலி அரசியல்​வாதிகளுக்குச் சென்றது என்றும், மற்றொரு பகுதி இந்தியாவுக்கு வந்தது என்பதும் குற்றச்சாட்டு. பணம் எந்த வழியாக எங்கே போனது என்பதைப் பார்த்துவிட்டு, ஹெலிகாப்டர் வாங்கப்பட்டதில் நடந்த அரசியல் கணக்குக்கு வருவோம்.


அது அடுத்த இதழில்...



- சரோஜ் கண்பத்

READER VIEWS


1. பாவம் இப்போது வெளியே வந்தது பூனை குட்டிதான்....ஆம்..அதிலும் 51 மில்லியன் யூரோ....அதில் கமிஷன் தொகை 8 சதவீதம் ம்ம்ம்ம்ம் சும்மார் 280 கோடி ரூபாய் (இந்திய மதிப்பில்)....

இது வெளி வந்ததில் மிகப்பெரிய பங்கு ரஷ்ய உளவு நிறுவனத்தின் பங்கு அதிகம்....காரணம்.... மிஸ்டர் தியாகி தனது உறவினர்கள் வழியே.....ரஷ்ய மாடல்களை குறித்து அதில் உள்ளவாறு மாற்றங்களை செய்ய சொன்னதுதான்....அவர்கள் பேசியதை பின்மெக்கானிக்கா டேப் செய்தது "லீக்" ஆனதுதான் விபரம் விவகாரமாகிவிட்டது...

அது கிடக்கட்டும்.... சமீபத்திய இங்கிலாந்து பிரதமர் தீடீர் விஜயம்??....

அடுத்து வர இருக்கும் " யானை உழல் " ஆம்..... 126 போர் விமானம் வாங்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது..... 2013-ல் இருந்து 1216 - க்குள்.... 2 பில்லியன் டாலர் மதிப்பிலானது.....

அதிலும் ??!!! ஒரு 8 சதவீதம் என்றால் கணக்கிட்டு கொள்ளுங்கள்.....



2.பிஜேபி என்ன அடக்கி வாசிக்கிறதுன்னு சொல்லுங்க. அவர்கள்தான் தீவிர விசாரணை வேணும்னு சொல்கிறார்கள். காங்கிரசு போலியாக நாடாளுமன்ற விசாரணை போதும்னு சொல்கிறது. ஏன்னா அவங்க அதில் மெஜாரிட்டி. அப்பத்தான் விசாரணையை அமுக்க முடியும். ஹெலிகாப்டர் வாங்க முடிவு எடுத்தது மட்டும்தான் பிஜேபி. அதில் திருத்தங்கள் செய்தத்து காங்கிரஸ் அரசு. அமெரிக்க நிறுவனத்தை நிராகரித்து இத்தாலிய நிறுவனத்துக்கு கொடுத்தது காங்கிரஸ். ஆதாரம் இல்லாமல் எதையாவது பேசாதீர்கள்.

3. இந்த டெண்டர் குறித்த பேச்சுவார்த்தையின் போதும் ஆர்டர் கொடுத்த போதும் பணம் வாங்கிய போதும் பி.ஜே.பி.ஆட்சியில் இல்லையே, அவர்கள் எதற்கு அடக்கி வாசிக்க வேண்டும்? என்ன சொன்னாலும் காங்கிரஸின் உதவியால் வாழும் மைனாரிட்டிகள் மாறப் போவதில்லை. 

THANX - JU VI